நெஞ்சில் உறைந்த தேடல் – 4 (2)

“இது என்னோட அப்பான்றதுக்காகவோ, உங்களை காப்பாத்தறதுக்காக இல்லை. பெத்த பொண்ணை தொலைச்சிட்டு நிக்கிற மனுஷன்கிட்ட போய் உன்னோட பொண்ணை நீ உயர்வா மதிக்கிற உயிர் நண்பனான நானே என் மகனோட ஆசைக்காக பலி கொடுத்துட்டேன்னு சொல்லி கொஞ்ச நஞ்ச உயிரையும் எடுத்துடாதீங்க. தாங்கமாட்டாரு…”

“அதுக்காக மட்டும் தான் உங்களை நான் சொல்லவேண்டாம்னு தடுத்தேன். நியாபகம் இருக்கட்டும். இதுக்கான தண்டனை உங்களுக்கு நிச்சயம் நானே தருவேன்…” என கூறிவிட்டு சென்றவன் மீண்டும் திரும்பி பார்த்து,

“உங்களுக்கு என்னையும், நிலாவையும் விட உங்க பதவி ரொம்ப முக்கியமா போய்டுச்சுல. பதவி ஆசை, அது கொடுத்த மமதைல தான இத்தனையும் செஞ்சீங்க. மாமா மாமான்னு உங்களை எந்தளவுக்கு பாசத்தோட சுத்தி வருவா. அவளை போய்…” அதற்கு மேல் எதுவும் பேசாமல் வெளியேறிவிட்டான்.

சிலையாக சமைந்துவிட்டார் முத்தையா. யாருக்காக இத்தனையும் செய்தாரோ அவனே அவரை குற்றவாளி கூண்டில் ஏற்றிவிட்டானே. தான் குற்றவாளிதானே. மகன் கேட்கும் கேள்விகளுக்கு தன்னால் ஒரு பதிலும் சொல்லமுடியவில்லையே. தனக்குள்ளேயே குன்றிப்போய்விட்டார்.

———————————————————–

பெங்களூர் மருத்துவமனை.

“ஆரவ் நீ முதல்ல கிளம்பு. நாம நம்ம வீட்டுக்கு போகலாம். இந்த ஹாஸ்பிட்டல் டீன் கிட்ட  நான் பேசிட்டேன். அவங்க அந்த பொண்ணை பத்திரமா பார்த்துப்பாங்க. யூ டோன்ட் வொரி மை சன்…” என்ற ராகவ்வின் சமாதானம் அவரது மகனிடம் எடுபடவில்லை.

“நோ டாடி. நீங்க கிளம்புங்க. நான் வரதா இருந்தா நிலாவோட தான் வருவேன். அது எத்தனை நாளானாலும்…”

அவன் பேசிய தொனியே மறுத்து பேசவிடாமல் ராகவ்வை தேக்கியது. யாரென தெரியாத ஒரு பெண்ணிற்காக இந்தளவிற்கு அவன் தீவிரமாக இருப்பது ஒரு தகப்பனாக அவருக்கு பெரும் கவலையை அளித்தது. அதை உணர்ந்துகொண்டவன் போல,

“அப்பா நான் அவனோட இருந்து பார்த்துக்கறேன். நீங்க கிளம்புங்க…” என்ற அர்ஜூனிடம் தனது முறைப்பை காட்டினார் ராகவ்.

“நீயும் இருந்து அவனை பார்த்துக்கறதுனா அங்க நம்ம ஹாஸ்பிட்டலை யார் பார்த்துப்பாங்க? நிர்வாகப்பொறுப்பை நல்லபடியா நடத்துவீங்கன்னு குடுத்தா இதுதான் நீங்க பார்த்துக்கற லட்சணமா?. ரெண்டு பெரும் டாக்டர். ஆனா அப்படியா இங்க நடந்துக்கறீங்க?…” என்றவர் அமைதியாக நின்ற அர்ஜூனிடம் தணிந்த குரலில்,

“அர்ஜூன் நான் எதுக்காக சொல்றேன்னு உனக்கு புரியலையா? அவன் பேசறதுக்கான அர்த்தம் உனக்கு விளங்குதா இல்லையா? எனக்கு அவன் சொல்றதில கொஞ்சமும் உடன்பாடில்லை. விளையாட்டுத்தனமா பேசிட்டு இருக்கான். இது அவனோட வாழ்க்கை…”

“இது அவனோட வாழ்க்கைன்னு அவனுக்குமே தெரியுமேப்பா. அந்த பொண்ணு உயிரை காப்பாத்தியாச்சுன்னு டாக்டர் வந்து சொல்றவரைக்கும் அவன் தவிச்ச தவிப்பை நேர்ல பார்த்தவன் நான். நிச்சயம் எந்த ஒரு தவறான முடிவு அவன் எடுக்கமாட்டான். எனக்கு அவன் மேல முழுமையான நம்பிக்கை இருக்கு…”

எனக்கிருக்கும் நம்பிக்கை உங்களுக்கில்லையா? என கேட்பது போல இருந்தது ராகவனுக்கு. இதெல்லாம் சாத்தியமில்லாதது என மகனுக்கு எப்படி புரியவைக்கவென குழம்பி நின்றார்.

ஆரவ்வை பார்க்க அவனோ தனது சட்டையில் தெறித்திருந்த ரத்தத்துளிகளை பார்த்து கண்கலங்கிகொண்டிருந்தான். அவனது இந்த நிலை பொறுக்காமல் அவரை அறியாமலேயே அவனருகில் அமர்ந்து,

“நிலாவுக்கு எதுவும் ஆகாது. பத்திரமா திரும்பி வருவா.  டோன்ட் வொரி…” என அவனது தோள் மேல் தட்டிகொடுக்க ராகவனுக்கே புரியவில்லை. தன் வாயிலிருந்தா இந்த வார்த்தைகள் உதிர்ந்தன என்று. தான் எப்படி இவ்வாறு பேசினோம் என்று.

“டாடி…” என நொடியில் அவர் தோள் சாய்ந்தவன்,

“சென்னைல இருந்து கிளம்பறப்போ தான் அவளை நான் பார்த்தேன் டாடி. ஏனோ பார்த்ததுமே எனக்குள்ள ஒரு படபடப்பு. அந்த நிமிஷமே அவ எனக்குத்தான் அப்டின்ற நினைப்பு எனக்குள்ள ஆழமா பதிஞ்சிருச்சு. ஆனாலும் என்னால அவகிட்ட அப்போ போகமுடியலை…”

“கண்டுபிடிச்சிடலாம், நிச்சயம் அவளே எனக்கிட்ட வந்து சேருவான்ற ஒரு நம்பிக்கை எனக்கு எங்கிருந்து வந்ததுன்னே தெரியலை. சென்னையை விட்டு கிளம்பி வர வழியெல்லாம் அவளை என் கண்ணுல சிக்கிடமாட்டாளான்னு தேடினேன். நானே எதிர்பாராத நேரத்துல அவ என்கிட்டே வந்தா…”

“வந்த அவளை எந்த சூழ்நிலையிலும் திரும்ப நழுவவிடகூடாதுன்னு நினச்சிட்டு இருந்தப்போ தான் இப்படி நடந்துபோச்சு.  எங்க கூட பேசும் போது அவளோட கண்ணெல்லாம் அழுது முகமெல்லாம் வியர்த்து பயத்துல நடுங்கிட்டு இருந்தா. கண்ணுல அப்படி ஒரு பயம்…”

“உடனே அவளோட பயத்தை போக்கி எனக்குள்ள அவளை ஒளிச்சுவச்சு காப்பாத்தனும்னு ஒரு வெறியே வந்திடுச்சு. இனி அவளை அழவிடகூடாதுன்னு முடிவே பண்ணினப்போ  தான். இப்படி… இப்படி… அவளை அடிச்சு…. பாருங்க, அவ பிளட்…  எவ்வளோ பிளட்…. ஐயோ டாடி என்னால தாங்கமுடியலையே…”

தனது சட்டையை காட்டி அதுவரை அடக்கிவைத்திருந்த அழுகையை தந்தையின் தோளில் சாய்ந்து கதறித்தீர்த்தான். ராகவ் மிரண்டுவிட்டார். தனது மகன் இதுவரை எதற்கும் கண் கலங்கியது கூட இல்லையே.

அவனது வாடிய முகத்தை கூட பார்த்ததில்லை எனும் போது இப்படி அழுவதை அவரால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. அப்போது அவருக்கு புரிந்தது. அப்பெண் எந்தளவிற்கு தன் மகனை பாதித்திருக்கிறாள் என்று. அவரும் காதல் திருமணம் புரிந்தவர் தானே?

ஆனாலும் பெண் யார் எவரென விசாரிக்க வேண்டுமே. முதலில் அவளுக்கு நினைவு திரும்பட்டும். அதன் பின் மற்றவைகளை பார்த்துக்கொள்ளலாம் என விட்டுவிட்டார். அவரது தோளில் சாய்ந்திருந்த ஆரவ் அன்றைய நிகழ்வை தன் கண்முன் நிறுத்தினான்.

தன்னை காப்பாற்றும் படி மன்றாடிக்கொண்டிருந்த நிலாமுகிடம் மட்டுமே இருவரது முழு கவனமும் இருந்தபடியால் எதிரே தங்களை நெருங்கி வந்துகொண்டிருந்த வாகனங்களை கவனிக்காமல் அவளது பேச்சில் கவனம் வைத்திருந்தனர் அர்ஜூனும், ஆரவ்வும்.

சுதாரிக்கும் முன் நிலாமுகியின் பின்னந்தலையில் சாலையில் கடந்து  சென்ற காரில் இருந்தவனது கைகளில் இருந்த இரும்பு தடி பலம் கொண்டு தாக்கியது.

நொடியில் நிகழ்ந்துவிட்ட இந்த நிகழ்வை எதிர்கொள்ளமுடியாமல் அதிர்ந்து பின் யார் என்னவென பார்க்கும் முன்  அந்த கார் அவர்களது பார்வையை விட்டு கடந்து சென்றது. அர்ஜூன் முடிந்தளவிற்கு காரை  துரத்த அவனோ மறைந்துவிட்டான்.

தாக்கப்பட்டவுடன் மூர்ச்சையாகி நிலைகுத்திய விழிகளுடன் கீழே சரிந்த  நிலாவை நொடியில் தன்னுடைய கைகளில் தாங்கிய ஆரவ்,

“நிலா, என்னை பாரு. நிலா … நிலா…” என எத்தனை அழைத்தும் பலனின்றி போக ஆரவ்விற்கு உடலெல்லாம் வெடவெடக்க ஆரம்பித்தது.

“அஜூ…” என அலற வேகமாக வந்த அர்ஜூன் நிலைமையினை சுதாரித்து தங்களிடம் இருந்த பர்ஸ்ட் எய்ட் பாக்ஸில் உள்ள பொருட்களை வைத்து அவளுக்கு முதலுதவி அளித்தவன் உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று நிலாவை சேர்த்து ஆம்புலன்ஸில் அங்கிருந்து பெங்களூர் வந்தடைந்தனர்.

உயிருக்கு ஆபத்தில்லை என்றும் பின் தலையில் பலமாக தாக்கப்பட்டிருப்பதாகவும் மயக்கம் தெளிந்த பின் தான் எதுவும் சொல்லமுடியும் என்றுவிட்டனர் டாக்டர்கள். மூன்று நாட்கள் ஆகினும் இன்னமும் சுயநினைவு திரும்பாமல் இருந்தது.  மூன்று நாட்களும் ஆரவ் அங்கிருந்து நகரவும் மறுத்துவிட்டான்.

அவனது இந்த நிலை அர்ஜூனையே பயம் கொள்ள செய்ய ராகவனை உடனே புறப்பட்டு வர செய்தும் பலனின்றி போனது.

அதன் பின் நிலாவின் உடல்நிலையில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டன.  கண் விழித்து பார்ப்பதும் மீண்டும் மயக்கத்திற்கு செல்வதுமாக இருந்தவள் இரண்டொரு நாளில் முழுமையாக தெளிய அவளிடம் எந்த கேள்விகளுக்கும் விடை இல்லாமல் போனது.

பேசவும் முடியாமல் யாரையும் அடையாளம்  தெரியாமல் குழந்தையென விழித்தவளை பார்த்து ஆரவ் நொறுங்கிபோனான்.

தங்களின் பிசக்கு இது. அவள் வந்ததுமே அவளை காரில் அமரவைத்து பேசியிருந்திருக்க வேண்டுமோ என காலம் தாழ்த்தி யோசித்து தன்னையே நிந்தித்துக்கொண்டான்.

தன்னை மறந்த நிலையில் இருந்தவளது கோலம் அவனை அடி ஆழம் வரை உலுக்கியது. ஆண்மகனான அவனையே கலங்கவைத்தது அவளின் நிலை. இவையெல்லாம் விட வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை அவள்.

இனியும் அங்கிருக்க அவசியமில்லை என்று அவளது பரிசோதனை குறிப்புகள், அவளுக்கு தரப்பட்ட சிகிச்சைகள் அடங்கிய குறிப்புகள் என அனைத்தையும் எடுத்துகொண்டு டெல்லி செல்ல திட்டமிட்டனர்.

நிலாமுகியை தனது பொறுப்பில் எடுத்துக்கொண்ட ராகவ் நிலாவை பற்றிய தகவலை யாரிடமும் கூறவேண்டாம் என்றும் யாராவது அவளை தேடி வந்தால் தன்னை தொடர்புகொள்ளும் படியும் கூறிவிட்டு டெல்லி வந்துவிட்டார். அனைவரையும் அழைத்துக்கொண்டு.

ஒரு மாதம் முழுமையாக ஆகிற்று. நிலாமுகியும் அவர்களது ஹாஸ்பிட்டலில் தான் இருந்தாள். பழைய நினைவுகளின் சுவடுகள் சுத்தமாக இழந்த நிலையில் அவ்வப்போது ஸ்டெபிக்ஷாவிடம் மட்டும் ஓரிரு வார்த்தைகள் பேசிக்கொண்டு.

தர்ஷினியும், ஆண்டனியும் கூட நிலாவை வந்து பார்த்துவிட்டு சென்றனர். தர்ஷினிக்கு ஆரவ்வின் மனம் தன் கணவனின் மூலம் அறியப்பட்டிருக்க அவரோ கொஞ்சம் காலம் கடக்கட்டும். பொறுமையாக இருப்போம் என கணவனுக்கு ஆறுதலளித்தார்.

இதில் ஸ்டெபியின் நிலை தான் பரிதாபமாக போனது. ஆரவ்வின் தொல்லை அந்தளவிற்கு அவளை படுத்தியது.

ஆரவ்விற்கு எப்போதும் நிலாவின் பேச்சுக்கள் பேச்சுக்கள் பேச்சுக்கள் மட்டும் தான். இவனை கண்டாலே ஒதுங்கும் அவளிடம் கொஞ்சமும் தள்ளியிறாமல் ஏதாவது பேசி வம்பளந்து கொண்டே இருந்தான் ஆரவ்.

ஸ்டெபிக்கும் அவனது நிலை புரியாமலில்லை. ஆனாலும் நிலாவின் சூழ்நிலையையும் பார்க்கவேண்டுமே. அது புரியாமல் இவன் அவளிடம் ஆட அவள் இவன்  வந்தாலே ஓட. போதாக்குறைக்கு என்னுடை காதலை சொல் சொல் என ஸ்டெபியை வேறு பாடாய் படுத்திவைத்தான்.

“ஆரவ். முதல்ல அந்த பொண்ணு குணமாகட்டும். அதுக்கப்பறமா உன்னோட காதலை சொல்லலாம். இப்போதைக்கு உன் அவசரத்தை அந்த பொண்ணுக்கிட்ட காட்டிடாத.  பயந்திடபோகுது…” என அவனது காதை திருகியவளிடம்,

“பேப், அவ என்னை ஏத்துக்குவா தானே? இல்லைனாலும்  நான் விடமாட்டேன். அவ எனக்குதான். எதுக்காகவும் அவளை நான் விட்டுகொடுக்க மாட்டேன்…”

ஆரவ்வின் முகத்தில் காதலையும் தாண்டிய ஒரு தீவிரமும் தீர்க்கமும் கலந்து விகசிக்க அவனது இந்த பிடிவாதம் நன்மை தானா என ஸ்டெபியின் மனம் கலங்கியது.

“ஏசப்பா என் நண்பனது காதலை நிறைவேற்றிவிடுங்கள்…” என அப்போதிருந்தே ஜெபிக்க ஆரம்பித்திருந்தாள்.

ஸ்டெபி  கடவுளின் மேல் நம்பிக்கை வைக்க ஆரவ் தன் காதலின் மேல் நம்பிக்கை வைத்தான். தன் காதல் விரைவில் கைகூடுமென.

error: Content is protected !!