நெஞ்சில் உறைந்த தேடல் – 4 (1)

தேடல் – 4

          நிலாமுகி காணாமல் போய் மூன்று நாட்கள் ஆகிற்று. குணசேகரனின் குடும்பமே இடிவிழுந்தது போல நொறுங்கிகிடந்தது.

திருமணத்தன்று நிலாமுகியை காணாமல் ஏற்பட்ட பரபரப்பில் மாப்பிள்ளை வீட்டார் கூட நிலாவிற்கு பதில் அவளது தங்கை ஜீவாவை கட்டித்தர கேட்க குணசேகரன் முடியவே முடியாதென மறுத்துவிட்டார்.

இதென்ன வியாபாரமா? ஒரு பெண் இல்லை என்றதும் அடுத்தவளின் கனவுகளை கலைத்து தங்களது கௌரவத்திற்காக பலிகொடுக்க? என தன்னுடைய விருப்பமின்மையை யோசிக்காமல் பட்டென  கூறிவிட்டு மறுப்பதற்கு மன்னிப்பையும் கேட்டுகொண்டார்.

தினகரனுக்கும் அங்கிருந்த அனைவருக்குமே பெரும் வியப்பாகிவிட்டது. தங்களது மரியாதையையும் வறட்டு கௌரவத்தையும் காத்துக்கொள்ள ஏற்பாடு செய்த கல்யாணத்தை நிறுத்தாமல் நடத்த என்னவெல்லாம் செய்வார்கள்.

அப்படி ஒரு இக்கட்டான நிலையிலும் தன்னுடைய கௌரவத்தை கூட பார்க்காமல் மகளின் எதிர்காலத்தை நினைத்து அவளுக்காக மறுத்த குணசேகரனை நினைத்து பெருமைபடாமல் இருக்கமுடியவில்லை அங்கிருந்தவர்களால்.

ஆனாலும் மாப்பிள்ளை வீட்டார்க்கு கூட இதில் பெருமளவு மனவருத்தம் தான். அதனால் வாய்க்கு வந்தபடி வசைபாடிகொண்டே உறவினர்களை அழைத்துகொண்டு சென்றுவிட்டனர்.

விஷயம் கேள்விப்பட்டதிலிருந்து முத்தழகு அங்கேதான் அமுதாவிற்கு உறுதுணையாக இருந்தார்.  நிலாமுகியை காணவில்லை என்று தெரிந்ததும் அந்த ஊரில் ஒருவருக்கும் நிலாவின் மேல் சந்தேகம் கொள்ள தோன்றவில்லை.

நிச்சயம் இது கடத்தல் தான் என உறுதியாக நம்பினார்கள். ஏதோ வெளியூர்க்காரனின் வேலையாகத்தான் இருக்கும் என சந்தேகம் கொண்டனர். அந்தளவிற்கு இருந்தது குணசேகரனின் வளர்ப்பும், நிலா வளர்ந்தவிதமும்.

தினகரனும் தனக்கு தெரிந்த ஆட்களின் மூலம் எல்லாம் தேட சொல்லி தகவல் எதுவும் கிடைக்கிறதா என தேடி அன்னம் ஆகாரமின்றி சுற்றி திரிந்தான்.

காவல் துறையில் தனக்கு தெரிந்தவர்களின் மூலம் விஷயம் வெளியில் தெரியாமல் ரகசியமாக நிலாவை தேட சொல்லி கேட்டுகொண்டிருந்தான். எக்காரணமும் கொண்டு நிலாவை பற்றிய செய்தி பேப்பரிலோ, டிவியிலோ  வெளியில் வந்துவிடக்கூடாது என எச்சரித்தும் இருந்தான்.

திருமணம் நின்ற மறுநாளே முத்தையா வந்து சேர அவரும் தன் பங்கிற்கு நிலாமுகியை தேடுவது போல பாசாங்கு செய்தார். அதுவுமே சிறிது நேரமே. அதன் பின் அவருக்கு வந்த தகவலின் படி உண்மையிலேயே இடிந்துபோனார்.

மூன்றாம் நாள் காலை அமுதாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று முத்தழகு தனது வீட்டில் சமைத்து எடுத்துகொண்டு நிலாமுகியின் வீட்டிற்கு அங்கே செல்ல வாசலிலேயே கேட்ட அழுகுரல் அவரை கோபமூட்டியது. அது குணசேகரனின் அக்கா வள்ளியம்மையின் குரல்.

விடுவிடுவென பாத்திரகூடையுடன் உள்ளே சென்றவர் ஜீவாவை அழைத்து அதை கொடுத்துவிட்டு,

“இந்தா வள்ளியம்மை இதுக்குத்தான் நீ திரும்ப வந்தியா? அதான் முந்தாநாளே அந்த மாப்பிள்ளை வீட்டாளுங்க கிளம்பினப்போவே நீயும் தானே உன் மவனை இழுத்துக்கிட்டு வேகமா கிளம்பி போன? போனவ எதுக்கு இப்போ திரும்ப வந்திருக்க?…” என வெடுக்கென கேட்க,

“என்ன வார்த்தை சொல்லிபோட்டீங்க அக்கா? என்னோட மதினி ராத்தூக்கமில்லாம, சோறு தண்ணி இல்லாம இப்படி நாரா கிடக்கும் போது எனக்கு அங்க இருப்புகொள்ளுமா? அதான் போட்டது போட்டபடி மனசு கேளாம திரும்ப வந்துட்டேன்…” என நீட்டிமுழக்க,

“அதுசரி. ரொம்ப சீக்கிரமே வந்துட்ட. இம்புட்டு அக்கறை இருக்குற மவராசி அன்னைக்கே ஆறுதலா இங்கனயே கிடந்திருக்க வேண்டியதுதானே? இப்போ மட்டும் எங்கருந்து வந்துச்சு இந்த திடீர் அக்கறை?…”

எதை பேசினாலும் நறுக்கு தெறித்தது போல  பதில் கூறும் முத்தழகிடம் தன்னுடைய சாமர்த்தியம் செல்லுபடி ஆகாமல் போவதை வள்ளியம்மையால் தாளமுடியவில்லை. வேண்டுமென்றே பேச்சை மாற்றி,

“அக்கறை இருக்க வேண்டியவளுக்கு இல்லாம போச்சே? இப்படி ஊர் சனம் மத்தியில உறவுக்காரங்க கூடியிருக்கையில மூக்கருத்தது போல என்னோட தம்பிய தலைகுனிய வச்சிட்டு போய்ட்டாளே? அவ நல்லாவா இருப்பா?…” என நிலாமுகியை தாக்க வெகுண்டெழுந்துவிட்டார் முத்தழகு.

“அடி உன் வாயில வசம்பை வச்சு தேய்க்க. நீயெல்லாம் என்னனு அந்த தம்பி கூட வந்து பொறந்தியோ. இதுக்கு மேல எங்க நிலாப்புள்ளைய பத்தி ஒரு வார்த்தை வாயில இருந்து வரட்டும். இழுத்துவச்சு கிழிச்சு தச்சுப்புடுவேன் பார்த்துக்க…”

“வந்துட்டா வரிஞ்சுகட்டிக்கிட்டு. நீ வரலைன்னு யாராச்சும் இங்க அழுதாங்களா? என்னத்துக்கு இப்படி வந்து ஒப்பாரி பாடி எல்லாரையும் படுத்தற? நாங்களே புள்ளைய தொலைச்சுட்டு அரைஉசுரா இருக்கோம். ஆறுதலா இல்லாட்டிலும் வாயமூடிட்டு பேசாம போயிரு…”

முத்தழகுவின் இந்த சீற்றம் வள்ளியம்மையே எதிர்பார்க்காதது. எப்போவாவது தம்பி வீட்டிற்கு வரும் போது ஓரிரு வார்த்தைகளுடன் பேச்சை முடித்துகொண்டு சென்றுவிடுவார் முத்தழகு.

இன்றைக்கு இப்படி பேசுவார் என எதிர்பாராததோடு அவரை மறுத்து ஒருவார்த்தை கூட பேசாத தனது தம்பியையும் தம்பி மனைவியையும் நினைத்து பொருமிவிட்டார்.  ஜீவாவோ அதற்குமேல் ஒரு படி சென்று,

“அத்தை, நீங்க கிளம்புங்க. அன்னைக்கே மாமாவுக்கு உடம்பு சரியில்லைன்னு தானே கிளம்பினதா சொன்னீங்க. இப்போ போய் அவரை பாருங்க. உங்களுக்கு நிறைய வேலை இருக்கும்…” என கிளப்ப நொந்தே போனார்.

அவளது பேச்சை யாருமே மறுத்துகூறாமலிருக்க இதற்கு மேலும் இங்கே இருக்கவேண்டாம் என மனம் கடுகடுக்க கிளம்ப முத்தழகு தான் கொண்டுவந்திருந்த சாப்பாட்டை எடுத்து அமுதாவிற்கு வைத்து கொடுத்து அவரை சாப்பிட வற்புறுத்திக்கொண்டிருந்தார்.

விட்டத்தை வெறித்தபடி அமர்ந்திருந்த தனது தம்பியை நினைத்து ஒருபுறம் மனம் கலங்கினாலும் இது அவனுக்கு தேவைதான் எனவும் நினைத்தபடி வேண்டுமென்றே ஒரு கேவலுடனே புறப்பட்டார்.

அமுதாவை ஒருவழியாக சாப்பிட வைத்து ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து சென்றார் முத்தழகு. அவரது அதட்டல் குணசேகரனிடமும் அமுதாவிடமும் வேலை செய்தது.

அவர்கள் இருவரையும் ஒருவழியாக தேற்றியவர் ஜீவாவை வீட்டில் இருக்க செய்துவிட்டு அமுதாவை அழைத்துகொண்டு ஹாஸ்பிட்டல் சென்றார்.

அதேநேரம் தெரிந்த நண்பன் ஒருவன் அவசர தேவைக்காக தினகரனிடம் பணம் வேண்ட அதை எடுப்பதற்காக வீட்டிற்கு சென்றான் தினகரன்.

வீட்டிற்குள் நுழைந்ததுமே தந்தை உள்ளே யாரோடோ பேசிக்கொண்டிருப்பது தெரிய இந்நேரம் அவர் வீட்டில் இருப்பதை கண்டு பேசுவதற்காக உள்ளே சென்றான். அப்போது,

“நீங்க இப்படியெல்லாம் சொல்லகூடாது தலைவரே. உங்க பொறுப்புல இருக்கட்டும்னு தானே நான் என்னோட மருமகளை நம்பிக்கையா உங்ககிட்ட ஒப்படைச்சேன். இப்படி கையை விரிக்கிறீங்களே? என்னோட மகனோட வாழ்க்கை இது. என்ன செய்வீங்களோ எனக்கு தெரியாது. எங்க வீட்டு பொண்ணு இன்னும் ரெண்டு நாளைக்குள்ள வந்தாகனும்…”

கொஞ்சம் அதிகாரத்தோடு மன்றாடும் குரலில் மொபைலில் பேசிகொண்டிருக்க  தினகரனுக்கு இதயமே நின்று துடித்தது. இன்னும் அவனை துடிக்க வைக்க,

“எப்படியாவது கண்டுபிடிச்சு குடுத்திடுங்க. இங்க எல்லோருமே பித்துபிடிச்சது  போல இருக்கிறாங்க. என்னோட புள்ளையை சொல்லவே வேண்டாம். என் மகனோட உசுரு என் மருமககிட்ட தான் இருக்கு. அதுக்காக தான் நான் அவளை கடத்த சொன்னேன்…” எனும் போதே,

“அப்பா…” என அலறிவிட்டான் தினகரன். அவனது வருகையை எதிர்பார்க்காத முத்தையாவோ திகைத்துபோய் கையில் வைத்திருந்த மொபைலை கீழே நழுவவிட்டார்.

“என்ன பண்ணி வச்சிருக்கீங்கப்பா? நிலா எங்க?…” என தோளை பிடித்து தினகரன் உலுக்க அவனுக்கு என்ன பதிலை கூற என விழிபிதுங்கி நின்றார் முத்தையா.

“நிலா காணாம போனதுக்கு நீங்கதான் காரணமா?…” அவனது குரலில் ஆவேசமும் ஆத்திரமும் சரிசமமாக இருக்க அதே விகிதத்தில் தனது தந்தையா இப்படி என்கிற ஆற்றாமையும் வேதனையும் கூட மிதமிஞ்சிபோய் இருந்தது.

அவரது மௌனமே உண்மையை உணர்த்த இனி அந்த கேள்வி அபத்தம் என்பது புரிந்து,

“இப்போ நிலா எங்கப்பா? எங்க மறைச்சு வச்சிருக்கீங்க? ஆனா நீங்க போன்ல பேசினதை பார்த்தா நிலா இப்போ . இப்போ…” என உயிரை விழிகளில் தேக்கி கலங்கிய குரலில் கேட்டவன் அதன் பின் வார்த்தைகள் வராமல் தவிக்க ஆரம்பித்தான்.

அப்போதும் முத்தையா ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைதியாகவே இருக்க, “அப்பா என்ன நடந்துச்சுன்னு இப்போ சொல்லபோறீங்களா இல்லையா?…” மீண்டும் அதட்டி கேட்க முத்தையாவின் கண்களுக்கு இப்போது தனது மகன் ருத்ரமூர்த்தியாக காட்சியளித்தான்.

அரண்டு போனவர்,

“நான் தான் அய்யா இதை செய்ய சொன்னேன். நிலாவை கடத்தி வச்சு ரெண்டு மூணு நாள்ல நாமலே கண்டுபிடிச்சத போல கூட்டிட்டு வந்து உனக்கே கட்டிவச்சிடலாம்னு நினைச்சுதான் இதை செஞ்சேன்…”

“இதை சொல்ல உங்களுக்கு வெக்கமா இல்லையாப்பா? சேகரன் மாமா குடும்பத்தை அவமானப்படுத்தி நிலாவை அசிங்கப்படுத்தி தான் என்னோட வாழ்க்கையை நீங்க காப்பாத்தனுமா?…” தினகரனின் கேள்விகள் சம்மட்டியால் அடித்தது போன்ற ஒரு வலியை குடுத்தது முத்தையாவிற்கு.

“அப்படி நீங்க செஞ்சா அந்த வாழ்க்கையை நான் நிம்மதியா எந்தவிதமான குற்ற உணர்வும் இல்லாம வாழ்ந்திட என்னால முடியுமா? என்னை பத்தி அந்தளவுக்கா நீங்க கீழா நினைச்சிட்டீங்க?…”

“அவ தான் வேணும்னு நான் முடிவு பண்ண ஒரு நொடி போதும். என்னால நிலாவை அடையமுடியாதுன்னா நினைச்சுட்டீங்க? நான் எதுக்காக ஒதுங்கி இருக்கேன்னு உங்களுக்கே தெரியுமே? தெரிஞ்சும் நீங்க. ச்சே…” என தலையில் அடித்துகொண்டவன்,

“இனி இதை பேசி பிரயோஜனமில்லை. சொல்லுங்க. யார் கடத்தினது? எங்க வச்சிருந்தாங்க? இப்போ என்ன பிரச்சனை?…”

கேள்விகள் சரமாரியாக தாக்க அதில் நிலைகுலைந்து போனார் முத்தையா. இனி மறைக்க என்ன இருக்கிறது?

“கடத்திட்டு போனது தலைவரோட ஆளுங்க தான். அவர்க்கிட்ட தான் நான் உதவி கேட்டிருந்தேன். சென்னைக்கு கடத்திட்டு போனவங்க அங்கிருந்து ஊருக்கு வெளில இருக்கிற தலைவரோட நண்பர் கெஸ்ட்ஹவுஸ்க்கு கூட்டிட்டு போய்ருக்காங்க. நிலா கூட துணைக்கு ஒரு அம்மாவும் கூட போய்ருந்தாங்க…”  

“கார்ல போய்ட்டு இருக்கும் போது வழில அவசரத்துக்கு அங்க ரோட்டோரத்துல இருந்த  மறைவுக்கு போனப்போ அந்த செடிகளுக்கு ஊடால இருந்து நிலா தப்பிச்சு ஓடிருக்கா…” எனவுமே தினகரனின் இதயம் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது.

“சத்தியமா உங்ககிட்ட இப்படி ஒரு செயலை நான் எதிர்பார்க்கவே இல்லைப்பா. நீங்க இதை செஞ்சிருக்கவே கூடாது. அவ இல்லைனா நான் என்ன செத்தா போவேன்?…”

கண்களில் தீப்பொறி பறக்க ஆக்ரோஷமாக பேசிய தினகரனிடம் எதிர்த்து பேசமுடியாமல் மௌனமாக தலைகுனிந்து அமர்ந்திருந்தார் முத்தையா.

“எனக்கு ஏமாற்றம் தான் இல்லைன்னு சொல்லலை. ஆனா நிலா யாரையோ கல்யாணம் செய்துட்டு சந்தோஷமா இருந்திருப்பா. அது இங்க இருக்கிறவங்களுக்கு எல்லாம் ஒருவித நிம்மதியை குடுத்திருக்கும். இப்போ எங்க இருக்காளோ? எப்படி கஷ்டப்படறாளோ?…”

அவளின் பரிதவிப்பான நிலை கண்முன் தோன்றி தினகரனை உயிரோடு கொன்றது. எப்படியாகினும் அவளை தேடி கண்டெடுத்து தன் கைக்குள் வைத்துக்கொள்ளவேண்டும் என்ற ஆவேசம் அவனை துரத்தியது.

“எங்க போனான்னு எதாச்சும் சொன்னாங்களா?…”

“அது வந்து. வந்து…”  என இழுத்து,

“அந்த பக்கமா எதிர்ல வந்த கார்ல யார்க்கிட்டயோ உதவி கேட்டு பேசிட்டு இருக்கும் போது அவ பின்னாலையே காரை திருப்பிட்டு போய் கார்ல இருந்த ஒருத்தன்  நிலாவை அடிச்சுட்டான்…”

“ஏற்கனவே தலைவரோட பேரை சொல்லி கார்ல அந்த பசங்க பேசிட்டு இருந்திருக்காங்க போல. நிலா அதை கேட்டிருக்குமோ, தலைவர் பேர் வெளில வந்திருமோ, அதனால உண்மையை சொல்லிருவாளோன்ற பயத்துல அவ எதுவும் பேசிடகூடாதேன்னு நிலாவோட பின்னந்தலையில இரும்பு கம்பியால ஓங்கி அடிச்சிட்டானாம்…”

 “இப்போ… இப்போ நிலா எப்படி இருக்கா? எனக்கு அது மட்டும் தான் தெரியனும்? இல்லை உங்களை சும்மா விடமாட்டேன்…”

“நானும் அதைத்தான் தம்பி கேட்டேன். அடிச்சு போட்டுட்டு அங்கிருந்து தப்பிச்சுட்டானுங்க அந்த பசங்க. அதுவுமில்லாம அடிச்சதுல நிலா பிழைக்க வாய்ப்பில்லைன்னு…” திக்கி திணறி ஒருவழியாக சொல்லிமுடிக்க,

நொடியில் தந்தையின் சட்டையை கொத்தாக பற்றிவிட்டான் தினகரன். அவனின் மனக்கொதிப்பை அவனால் அடக்கவே முடியவில்லை. அவன் உடலில் ஓடும் ரத்தநாளங்கள் அனைத்தும் உறைந்துவிடும் போலானது.

சட்டென அவரை உதறியவன், “அவளுக்கு மட்டும் ஏதாவது ஆகிருக்கட்டும். உங்களுக்கு உங்க பையன் இல்லை. இனிமே என்னோட முகத்திலையே முழிக்காதீங்க. மகனுக்கும், நட்புக்கும் உண்மையா இல்லை. என்ன மனுஷன் நீங்க?…” என்றதும் முத்தையாவிற்கு அந்த வார்த்தைகள் சுரீரென உரைக்க,

“இப்போவே நான் போய் சேகரனோட கால்ல விழுந்தாவது மன்னிப்பு கேட்டுடறேன் தம்பி…” என அங்கிருந்து நகர போக அவரின் கையை பிடித்து நிறுத்திய தினகரன்,

“நீங்க மன்னிப்பு கேட்டுதான் ஆகனும். இப்போ இல்லை. நிலாவை கண்டுபிடிச்சு கூட்டிட்டு வந்த பிறகு. நானே எல்லார் முன்னாலையும் நிச்சயம் உங்களோட செயலை சொல்லியே தீருவேன். ஆனா அதுவரைக்கும் நீங்க யார்க்கிட்டயும் எந்த உண்மையையும் சொல்லகூடாது. என் உயிரை குடுத்தாவது அவளை நான் கண்டுபிடிப்பேன்…”

error: Content is protected !!