தன் முன்னாலே ஆஷாவை பேசுகிறான் இந்த விக்ரம்? எவ்வளவு தைரியமிருக்கும் இவனுக்கு? தன்னால் எதுவும் செய்யமுடியாமல் அமைந்துவிட்ட சூழ்நிலையை எண்ணி தன்னையே வெறுத்தான்.
இதெற்கெல்லாம் ஒருவகையில் தானே காரணம் ஆகிவிட்டோமோ என குமைந்தவனுக்கு அங்கிருக்கவே பிடிக்கவில்லை. ஆனாலும் ராகவ் கேட்டுகொண்டதற்காக இங்கே வந்துவிட்டு வந்ததும் கிளம்பினால் அவருக்கு அவருடைய சொல்லுக்கு மரியாதையாக இருக்காதே என கொஞ்சம் பொறுமை காத்தான்.
தூரத்தில் பார்த்தால் ஆரவ் விக்ரமிடம் ஏதோ சொல்வதும் அதற்கு விக்ரம் பவ்யமாக தலையசைப்பதும் மட்டுமே தெரிந்தது. ஆரவ் என்ன சொல்லியிருக்க கூடும் என ஊகித்தவன்,
“இவன் இருக்கிறானே? பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் ரகம்” என எண்ணினான். நண்பனை நினைத்து அர்ஜூனின் இதழ்கள் புன்னகையில் நெளிந்தன.
பின் ஆரவ் மட்டும் இரண்டு ப்ளேட்களுடன் தன்னிடம் வந்து,
“ஓவரா சீன போடாத டக்கு. என் பேபியை அவன் விசாரிச்சா உனக்கு என்னவாம்? ஒதுங்கி போய்டு. உரசி பார்க்காத. மீறின பட்டர் நாண் கிடைக்காது…” என டயலாக் அடித்துவிடவும் அவனது பாவனையில் அர்ஜூன் முகம் மலர்ந்து சிரித்தவாறே ஆரவ்வின் முதுகில் ஒரு அடி வைத்தான்.
“அடங்கமாட்டியாடா நீ?…” என பொங்கி சிரிக்கவும்,
“ஹப்பா சிரிச்சாச்சா. இப்போ சாப்பிடு. எனக்கு ரொம்ப பசிக்குது. எங்க நீ கோவத்துல கொட்டிக்காம போய்டுவியோன்னு நினச்சேன்…”
அர்ஜூனுக்கு ஒரு தட்டை நகர்த்தியவாறே தானும் சாப்பிட ஆரம்பித்த நண்பனின் மேல் எப்போதும் போல அன்பு கட்டுகடங்காமல் பெருகியது.
தன்னுடைய வாழ்க்கைக்கு இன்றியமையாதவன் ஆரவ். தனக்கொரு உயிர்ப்பை கொடுத்தவன். எந்த சூழ்நிலையிலும் தன்னை விட்டுகொடுக்காதவன், அதே நேரம் தான் செய்யும் தவறை முகத்திற்கு நேரே எடுத்துக்காண்பித்து அதற்கான தண்டனையும் அளிப்பவன் என்றும் இதே புன்னகையோடு இருக்கவேண்டும் என பிராத்தித்துக்கொண்டான் அர்ஜூன்.
சிறிது நேரம் இருவரும் அளவளாவிக்கொண்டே உண்டு முடித்திருக்க விக்ரம் அவர்களிடையே வந்தமர்ந்தான். அர்ஜூனிடம் பார்வையாலேயே வருத்தத்தை தெரிவித்துவிட்டு,
“ஆரவ் ராகவ் அங்கிள் இப்போதான் அப்பாக்கிட்ட பேசினாங்க. நீங்க கிளம்பியாச்சான்னு கேட்டாங்க…”
“ஓஹ் இதோ கிளம்பவேண்டியது தான் விக்ரம்…” என்றவனிடம் அப்படியே விட்டிருக்கலாம் இந்த விக்ரம்.
“ஏன் ஆரவ் கேட்கிறேன்னு தப்பா நினச்சுக்காத. சில வருஷத்துக்கு பின்னால தமிழ்நாட்டு பக்கம் வந்திருக்கிற. இந்த நேரத்துலயாவது தஞ்சாவூர் போகலாமில்லையா? இன்னும் உனக்கென்ன பிடிவாதம் ஆரவ்?…”
அவ்வளவு தான் அதுவரை சகஜமாக பேசிக்கொண்டிருந்த ஆரவ்வின் முகம் கோபக்கனலை கொட்டியது. பேச விருப்பமில்லாதவன் போல ஒரு விரலை நீட்டி விக்ரமை எச்சரித்தவன் தனது கையை பிடிக்கவந்த விக்ரமின் கரத்தை உதறிவிட்டு வெளியேறிவிட்டான்.
அர்ஜூனின் முன்னால் தனக்கும் ஆரவ்விற்கும் நெருக்கத்தை காண்பிக்க முயன்று மூக்குடைபட்டான் விக்ரம்.
ஆரவ்வின் மனநிலை இப்போது எப்படி இருக்குமென அர்ஜூனால் உணரமுடிந்தது. செய்வதறியாது திகைத்து நின்ற விக்ரமை பார்க்கும் போது சிறிது நேரத்திற்கு முன்னால் அவன் ஆஷாவை பற்றி பேசியதையும் ஞாபகத்தில் கொண்டுவந்த அர்ஜூன்,
“மிஸ்டர் விக்ரம் உங்களுக்கு எப்போதுமே அடுத்தவங்களோட உணர்வுகளை புரிஞ்சுக்காம அவங்களை ஹர்ட் பன்றது தான் பொழுதுபோக்கா?…” எனவும்,
“நோ நோ அர்ஜூன் ஸார். நான் அப்படி நினைக்கலை. அது ஆரவ்வின் மேல உள்ள அக்கறையில தான் பேசினேன்…” குரல் கம்மிப்போய் வந்தது.
“ரொம்ப அக்கறை தான் உங்களுக்கு. நானும் கொஞ்ச நாளா உங்களை வாட்ச் பண்ணிட்டு தான் இருக்கேன். நீங்க செய்யிற எதுவும் சரியில்லை. முதல்ல அடுத்தவங்க பர்சனல் விஷயத்துல தலையிடற பழக்கத்தை நீங்க நிறுத்திக்கோங்க. புரிஞ்சிருக்கும்னு நினைக்கேன்…”
“எனக்கு ஆஷாவும், ஆரவ்வும் வேற வேற இல்லை. உங்களால அவங்க கஷ்டபட்டாங்கன்னு தெரிஞ்சது இந்த அர்ஜூனோட இன்னொரு முகத்தை நீங்க பார்க்கவேண்டியதிருக்கும். அது உங்களுக்கும் உங்க ஃபீல்டுக்கும் நல்லதில்லை…”
“எல்லை மீறி போனா எழுந்துக்க முடியாத அளவுக்கு அடிச்சிட்டு போய்ட்டே இருப்பேன். ஆரவ்க்கு என்ன செய்யனும், தஞ்சாவூர்க்கு அவனை எப்போ எப்படி கூட்டிட்டு போகனும்னு எங்களுக்கு தெரியும். அதுக்கு அவனோட குடும்பத்து ஆளுங்க நாங்க இருக்கோம்…”
அர்ஜூனின் பேச்சில் வெடவெடத்து போய் நின்றான் விக்ரம். ஆரவ்வையும் அர்ஜூனையும் அனுப்ப வந்த விக்ரமின் தந்தை இதையனைத்தையும் கேட்டுகொண்டு தான் இருந்தார்.
“இல்லை மிஸ்டர் அர்ஜூன். இனி என்னோட பையன் உங்க வீட்டு விஷயத்துல தலையிடவே மாட்டான். என்னை நம்பலாம் நீங்க. நான் சொல்லிவைக்கிறேன் அவன்கிட்ட…”
திடீரென வந்த அவரை பார்த்ததும் அர்ஜூனிற்கு சங்கடமாக தான் போனது. ஆனாலும் அதை வெளிக்காட்டிகொண்டால் அவன் அர்ஜூன் அல்லவே.
“புரிஞ்சதுக்கு தேங்க்ஸ். நாங்க கிளம்பறோம்…” என கூறிவிட்டு நகர,
“இருங்க அர்ஜூன். ராகவ் சார் கால் பண்ணினாங்க. உங்களுக்கு ஒரு கார் அரேஞ்ச் பண்ணி குடுத்துவிட்ட சொன்னாங்க பெங்களூர் கிளம்பறதுக்கு. கார் ரெடியா இருக்கு…” என்றவரிடம் எப்படி மறுப்பது என யோசிக்கையில் ஆரவ் மீண்டும் உள்ளே வந்தான்.
“நமக்கு எந்த காரும் வேண்டாம் அஜூ. வா கிளம்பலாம். டாடிகிட்ட நான் பேசிப்பேன்…” என வம்படியாக அவனை இழுக்க அதே நேரம் ஆரவ்விற்கு ராகவ் மொபைலில் அழைத்தார்.
அதை அட்டென் செய்யாமல் அர்ஜூனின் கைகளில் திணித்துவிட்டு வெளியேறிவிட்டான். அவனிற்கு தெரியும் தாங்கள் காரில் தான் செல்லபோகிறோம் என்று. அதனால் ஒன்றும் பேசாமலே வெளியில் சென்று நின்றுகொண்டான்.
அழைப்பை ஏற்று பேசிய அர்ஜூன்,” ஓகேப்பா, நாங்க கார்லயே கிளம்பறோம். நத்திங். நான் நேர்ல வந்து பேசறேனேப்பா…” எனவும் ராகவ் அதற்கு மேல் எதுவும் பேசாமல் தொடர்பை துண்டித்துவிட்டார்.
தன்னிடம் ஆரவ் பேசாமல் அர்ஜூன் பேசுவதை வைத்து புரிந்துகொண்ட ராகவ் ஏதோ பிரச்சனை என்று மட்டும் உணர்ந்துகொண்டார். மகன் மனம் வருத்தப்படும் படி ஏதோ நடந்திருக்கிறது, இப்போது கேட்டாலும் சொல்லமாட்டான். அர்ஜூன் வரவும் பேசிகொள்வோம் என எண்ணிகொண்டார்.
கோவமாக இருக்கும் போது மட்டும் தன் மகன் தன்னிடம் பேசுவதை எப்போதுமே தவிர்த்துவிடுவான். அவனுக்கு பதிலாக அர்ஜூன் தான் பேசுவான். சிறுவயதிலிருந்து இன்றுவரை அதை தொடர்ந்துகொண்டிருப்பவனை நினைத்து சிரித்துகொண்டார் ராகவ்.
விக்ரமின் தந்தையிடம் கார் சாவியை பெற்றுக்கொண்ட அர்ஜூன் அவனை முறைத்துவிட்டு வெளியில் செல்ல அவனோடு விக்ரமின் தந்தையும் பின்தொடர்ந்து வந்தார்.
“மனசுல எதையும் வச்சுக்காதீங்க தம்பி. அவன் சின்னபையன் ஏதோ தெரியாம உளறிட்டான். நான் சொல்லிவைக்கிறேன் ப்ளீஸ்…” என்றவரிடம்,
“அச்சோ அங்கிள் நீங்க ஏன் அவனுக்காக ப்ளீஸ் சொல்றீங்க? இனிமே அவனை கவனமா இருக்க சொல்லுங்க. விடுங்க. நாங்க கிளம்பறோம்…” என்று காரில் ஏறியவன் அவரிடம் ஒரு தலையசைப்பை காட்டிவிட்டு மறந்தும் விக்ரமின் பக்கம் திரும்பவில்லை.
இதுதான் அர்ஜூனிற்கும் ஆரவ்விற்கும் உள்ள வித்யாசம். விக்ரம் போன்ற ஆட்கள் யாரிடமும் தவறு தன் மீதே இருந்தாலும் தழைந்து போக விரும்பமாட்டான் அர்ஜூன். ஆனால் ஆரவ் தவறு தன் மீதென்றால் யாராகின் இருப்பினும் மன்னிப்பை கேட்க தவற மாட்டான்.
இருவரும் ஹோட்டலை அடைந்து அங்கிருக்கும் தங்களுடைய உடமைகளை எடுத்துக்கொண்டு தங்கியிருந்த ரூமை செக்அவுட் செய்துவிட்டு பத்தரை மணிபோல வெளியேறியவர்கள் சென்னை சாலைபோக்குவரத்தில் கலந்து பெங்களூர் செல்லும் நெடுஞ்சாலை நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.
ரிசப்ஷன் ஹாலை விட்டு கிளம்பிய சில நிமிஷங்களிலேயே தன் இயல்பிற்கு திரும்பிய ஆரவ் மீண்டும் சலசலத்துகொண்டே வர அதில் நிம்மதியுற்றான் அர்ஜூன்.
காரை ஓட்டிகொண்டிருந்த ஆரவ் என்னதான் சாலையில் கவனத்தை வைத்திருந்தாலும் ஒவ்வொரு சிக்னலிலும் தனது விழிகளை சுழற்றி மாலை தான் பார்த்த அந்த காரும் காரில் இருந்த பெண்ணும் தென்படுகின்றனரா என தேடி துழாவினான்.
தன் மனம் போகும் திசையை அவனாலேயே உணரமுடியவில்லை. ஏன் அவளை இப்படி தேடுகிறோம் என்னும் கேள்விக்கு விடை தெரியாமலேயே தனது தேடலை தொடர்ந்தான்.
அர்ஜூனும் அவனை கவனித்தவண்ணம் தான் வந்தான். ஆரவ்வை தெரியாதா அவனுக்கு. காரில் பார்த்த பெண் ஏதோ ஒரு விதத்தில் ஆரவ்வின் மனதில் ஈர்ப்பை உண்டாக்கியிருக்கிறாள். அவளால் ஆரவ் சலனப்படிருக்கிறான். அதை அவனாக சொல்லட்டும் என அமைதிகாத்தான்.
இது புரியவைக்க கூடிய விஷயமில்லை. அவனாக உணரவேண்டியது. இது வெறும் ஈர்ப்பா? இல்லை அதற்கும் மேலானதா என அவனே ஆராய்ந்து தானாக தெளியவேண்டிய விஷயம். இதில் தான் தலையிட்டு எதையும் குழப்பவேண்டாம் என நினைத்து அவனிடம் பேச்சுகொடுத்தவாறே வந்தான்.
நள்ளிரவை நெருங்கும் வேளையில் ஆள் அரவமற்ற அந்த சாலையில் ஒருசில வாகனங்கள் சென்றுகொண்டுதான் இருந்தன. காரின் லைட் வெளிச்சத்தில் தூரத்தில் தனது பார்வையை அர்ஜூன் கூர்மையாக்க,
“டேய் டக்கு அந்த பொண்ணை பார்த்தாலும் பார்த்தேன். எல்லா இடத்திலையும் அவ என்னை பார்த்து ஓடி வரமாதிரியே பீல் ஆகுதுடா…”
“என்னடா உளர்ற?…” அர்ஜூனின் முகத்தில் இருந்த அதிர்ச்சியை கவனியாத ஆரவ்,
“அங்க பாரேன். அவ நம்ம காரை பார்த்து ஸ்லோமோஷன்ல ஓடி வரா…”
“டேய், அந்த பொண்ணு நிஜமாவே தலைதெறிக்க ஓடிவருதுடா மடையா, காரை நிறுத்து…” என ஆரவ்வை பிடித்து உலுக்க அர்ஜூன் சொன்னது போல அவளும் முகம் முழுவதும் பரவிய கிலியோடு காரை நெருங்கிவிட்டாள்.
காரை நிறுத்திவிட்டு இருவருமே வேகமாக கீழிறங்க அந்த பெண் மூச்சிறைக்க இருவரையும் மாறி மாறி பார்த்தவள்,
“அண்ணா…” என திணறிக்கொண்டே அழைக்க அந்த அழைப்பு தன்னை பார்த்தோ என பயந்த ஆரவ் வேகமாக அர்ஜூனை அவளின் முன்னால் இழுத்து நிறுத்தி தான் பக்கவாட்டில் நின்றுகொண்டான்.
“டக்கு உன்னை தான் உன் தங்கச்சி அண்ணான்னு கூப்பிடுது…” என படபடப்பாக கூறியவனை பார்த்து அந்த நேரத்திலும் அர்ஜூனிற்கு சிரிப்பு வந்தது.
சூழ்நிலை சரியில்லை என்பதை உணர்ந்து, “முதல்ல தண்ணி எடுத்துட்டு வாடா, பேசமுடியாம இருக்குது பாரு…”
“எனக்கு எதுவும் வேண்டாம். என்னை துரத்துறாங்க. காப்பாத்துங்க அண்ணா ப்ளீஸ்…” கண்ணீரோடு கை கூப்பியவளை அள்ளி அணைத்துக்கொள்ள ஆறுதல் சொல்ல துடித்தான் ஆரவ்.
மாலை பார்த்த அதே கல்யாணக்கோலத்தில் தான் இன்னமும் இருந்தாள்.
“முதல்ல நீ யாரும்மா? யார் உன்னை துரத்துறது? நீ எங்க போகனும்?…” என கேள்விகளை அடுக்கியவனை விடுத்து பார்வையால் சுற்றுபுறம் பார்த்தவளது விழிகளில் ஏகத்துக்கும் பீதி நிறைந்திருந்தது.
“என்னோட பேர் நிலாமுகி…”
அவளது பெயரை தனக்குள் கூறிப்பார்த்தான் ஆரவ். உள்ளம் வரை இனித்தது. அவனது முகபாவனைகளை கவனியாமல் அர்ஜூன் நிலாமுகியிடம் மட்டுமே கவனம் வைத்திருந்தான்.
“இன்னைக்கு காலையில எனக்கு கல்யாணம் நடக்கவேண்டியது. அதுக்குள்ளே என்னை கடத்திட்டாங்க அண்ணா…” எனவும்,
ஆரவ் மனதினுள், “நல்லவேளை கல்யாணம் ஆகலை. பரவாயில்லை நமக்காகவே பயபுள்ளைங்க கன்பாய்ன்ட்ல தூக்கிருக்கானுங்க. ஆனாலும் என் டார்லியை இப்டி பயம் காட்டினதுக்கு வச்சிக்கறேன் அவனுங்களை…” என சபதமெடுத்துக்கொள்ள,
“கடத்தினது யார்ன்னு எனக்கு தெரியலை. என்னோட ஊர்…” என கூறி அடுத்த வார்த்தை பேசும் முன் “நங்” என்னும் சத்தத்துடன் ஆரவ்வின் முகத்தில் சூடான ரத்தத்துளிகள் தெறித்தன.