நெஞ்சில் உறைந்த தேடல் – 3 (1)

தேடல் – 3

                 சென்னை மாநகரத்தின் சாலை நெரிசலில் சிக்கி வாகனங்கள் ஆமையின் வேகத்தில் மெதுவாக நகர்ந்துகொண்டிருக்க பொறுமையிழந்து கத்திக்கொண்டிருந்தான் ஆரவ்.

“நான் கேட்டேனா? இந்த ரிசப்ஷனுக்கு வரேன்னு. ஏன்டா டக்கு சொல்றதை கேட்கவே மாட்டேன்னு பிடிவாதமா இருக்க? பாரு நாம ஏர்போர்ட்ல இருந்து கிளம்பி இரண்டுமணி நேரம் ஆகுது. இன்னும் ஹோட்டலுக்கு போய் சேர முடியலை…”

அவனது பொங்குதலை கண்டுகொள்ளாமல் சாலையிலேயே கவனமாக இருந்தான் அர்ஜூன். இதனாலே ஆரவ்வின் உஷ்ணம் இன்னமும் அதிகமாகியது. இனி அர்ஜூனிடம் பேசி எந்த பயனும் இல்லாததால் தானும் சாலையை வெறிக்க ஆரம்பித்தான்.

ஐந்து நிமிடம் கூட முடியவில்லை. மீண்டும் ஆரவ்வின் தொனதொனப்பு அர்ஜூனின் காதுகளை மீண்டும் பதம் பார்க்க ஆரம்பித்தது.

“ஏன்டா இப்டி படுத்தற? ஈவ்னிங் ரிசப்ஷனுக்கு இப்படி மெனக்கெட்டு நாம ரெண்டு பேரும் வரனுமா? எல்லாம் இந்த ராகவ்னால வந்தது. போய் வச்சுக்கறேன் அந்த மனுஷனை…”

“இன்னைக்கு நைட் பெங்களூர் வேற போகனும். நீ மட்டும் இந்த பங்க்ஷனை அட்டென் பண்ணிருந்தா நான் நேரா ஹாயா பெங்களூர்க்கு வந்திருப்பேன். இப்படி என்னை சுத்தல்ல விடற உன்னை நான் சும்மா விடமாட்டேன்டா…”

இப்படி பலவிதமாக  தனது மனப்புகைச்சலை எல்லாம் அர்ஜூனை நோக்கி அள்ளி வீசிக்கொண்டிருந்தான் ஆரவ்.

இதையெல்லாம் கேட்டும் கேட்காதவனாக காதில் விழாதது போன்ற பாவனையை மட்டும் முகத்தில் காண்பித்து கொண்டிருந்த அர்ஜூனை அந்த கால் டாக்சி ட்ரைவர் பெரும் பொறுமை பூஷணம் என்னும் ரேஞ்சிற்கு வைத்து பார்த்து பிரமித்தார்.

ஒருவழியாக ஹோட்டல் வந்து சேர அதிலிருந்து இறங்கிய ஆரவ் விடுவிடுவென உள்ளே சென்றுவிட்டான்.

லக்கேஜை துக்கி கீழே வைத்த ட்ரைவர், “ச்சே, என்ன மனுஷன் சார் நீங்க? உங்களை போல ஒரு பொறுமையான ஆளை நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்லை…” என சில்லாகிக்க,

“அதான் இப்போ பார்த்துட்டீங்களே, பேசாம கோவில் கட்டி கும்பிடவேண்டியது தானே?…”

அவரின் பின்னால் இருந்து ஆரவ் கிண்டலாக கூற அவனை பார்த்ததும் இவன் எப்போது இங்கே திரும்பி வந்தான் என  தலைதெறிக்க காரை கிளப்பிக்கொண்டு சென்றுவிட்டார் டாக்ஸி டிரைவர்.

“அது…” என கெத்தாக பார்த்தவன் திரும்பி அர்ஜூனை பார்த்து,

“இந்த உலகம் உன்னையும் பொறுமைசாலி, அமைதியானவன்னு நம்புது பாரு. எல்லாம் நீ போடற சீன் அப்படி. கோவத்துக்கான மொத்த அடையாளமான  ஒரிஜினல் பீஸ் நீ இருக்கும் போது என்னை போய்  கோவக்காரன்னு நினைச்சுட்டான் பாரு. என்னத்தை  சொல்ல?…”

நொந்துகொண்டே பேசிய ஆரவ்வை பார்த்து, “அது அப்படி இல்லை சக்கு. உன்னையும் ஒருத்தன் கோவக்காரனா நினச்சுட்டான் பாரேன்? அப்படி சொல்லனும். புரியுதா?…” என நமுட்டுச்சிரிப்போடு கூற,

“எல்லாம் என் நேரம்டா. போய் முதல்ல ரெஸ்ட் எடுத்துட்டு அப்டியே ஈவ்னிங் ரிசப்ஷன் போய்ட்டு சீக்கிரமே கிளம்பிடுவோம்…” என கூறியவாறே அர்ஜூனையும் இழுத்துக்கொண்டு உள்ளே சென்றான் ஆரவ்.

மாலை நெருங்கிய நேரம் ரிசப்ஷனுக்கு தயாராகி கீழே வந்ததுமே இவர்களுக்காக காத்திருந்த டிரைவர்,

“சார், விக்ரம் சார் அனுப்பினார். உங்களை ரிசப்ஷன் ஹாலுக்கு பிக்கப் பண்ணிட்டு வரசொன்னார்…” எனவும் அர்ஜூனின் முகம் கடுகடுத்தது.

அதை கண்டுகொண்ட ஆரவ்விற்கோ உற்சாகம் பீறிட, “நண்பன்டா, நட்புடா, ப்ரெண்ட்ஷிப்டா…” என அளந்துகொண்டிருக்க,

“நீ வாய மூடுடா. இப்போ கிளம்ப போறயா? இல்ல இங்க உள்ளவங்களுக்கு எல்லாம் ஃப்லிம் காட்ட போறயா?…” என பல்லிடுக்கில் வார்த்தைகளை கடுத்து துப்ப இதற்குமேல் அவனை சோதிக்கவேண்டாம் என சிறு தோள் குலுக்கலுடன் காரை நோக்கி நடந்தான் ஆரவ்.

காரில் ஏறி அமர்ந்ததிலிருந்து அர்ஜூனின் மனம் ஒரு நிலையில் இல்லை. அதை உணர்ந்த ஆரவ் ட்ரைவரிடம் பேச்சுக்கொடுத்துக்கொண்டே வர அர்ஜூனுக்கு தான் தலைவலி அதிகமாகியது.

“ஏன்டா எப்போ பார்த்தாலும் பேசிட்டே இருக்க? கொஞ்ச நேரம் அமைதியா வாயேன். தலைவலி தாங்கமுடியலை…”

இதையெல்லாம் ஆரவ் கண்டுகொண்டால் தானே? தனக்கும் இதற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்பது போல கர்மசிரத்தையாக டிரைவரிடம் மீண்டும் பேச்சை வளர்க்க,

“உன்னை யார் அவன்கிட்ட  கார்க்கு சொல்ல சொன்னது? நமக்கு வேற காரே  கிடைக்காதா?…”

“சிங்கம் ஓவரா சீறுதே? சிக்கிடாத ஆரவ்…” என தனக்குள் முணுமுணுக்க,

“கேட்டா பதில் சொல்லனும்…” என மீண்டும் உறும,

“நான் ஒன்னும் விக்ரம்கிட்ட கேட்கலை. நாம வரோம்னு பேப் தான் சொல்லிருக்கா. உனக்கு வேணும்னா அவகிட்டையே கேட்டுக்கோ. சும்மா என்னை போட்டு பிறாண்டாதே. சின்னப்பையன்னு கூட பார்க்காம இப்படி படுத்துற என்னை?…” எனவும் அவனது நடிப்பை பொறுக்கமுடியாமல் பல்லை கடிக்க மட்டுமே முடிந்தது அர்ஜூனிற்கு.

இவனோட அலும்புக்கு ஒரு அளவே இல்லாம போய்ட்டு இருக்கே என தனக்குள்ளே புலம்பியவன் மறந்தும் வாய்விட்டுவிடவில்லை. இல்லையென்றால் அதற்கும் ஆரவ் ஆடிவிடுவானே.

சிக்னலில் கார் நிற்க தனது பார்வைகளை வெளியே அலையவிட்டிருந்த ஆரவ்வின் விழிகளில் ரசனையுடன் கூடிய உற்சாகம் ததும்பியது.

“வாவ்… வாட் எ க்ளாசிக்கல் ப்யூட்டி?…” என கூச்சலிட அவனின் சத்தத்தில் அர்ஜூன் என்னவென பார்த்தான்.

“அஜூ அங்க பாரேன். அந்த பொண்ணு செம அழகுல?…” தனக்கு பக்கவாட்டில் நின்றிருந்த காரை அர்ஜூனிடம் காண்பித்தான்.

“உன் கண்ணுக்கு யார் தான்டா  அழகா தெரியலை சக்கு?…” என கேட்டுக்கொண்டே அங்கே பார்த்தான்.

காரின் உள்ளே ஒரு பெண் இன்னொரு பெண்ணின் தோளில் தலைசாய்ந்து உறங்கிக்கொண்டிருக்க ஆரவ் சொன்னது போல அவள் அழகுதான் என தோன்றியது அர்ஜூனிற்கும்.

அப்போதுதான் அவளது கோலம் கண்ணில் பட அதில் துணுக்குற்றவன்,

“லூஸு சக்கு, அது கல்யாணப்பொண்ணு போல இருக்குடா. என்ன பழக்கம் இது? திரும்பு நீ முதல்ல…” என கடிய ஏனோ ஆரவ்வினால் அவ்வளவு எளிதாக விழிகளை அகற்ற முடியவில்லை.

“ஏன்டா டக்கு அப்படி நினைக்கிற? அது எதாச்சும் டான்ஸ் காம்படீஷன்க்கு கூட இது போல மேக்கப் பண்ணிருக்கலாமே?…” தனக்கு சாதகமாக வாதாட,

“சிக்னல் போட்டாச்சு. பேசாம வா…” என அதற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்க ஆரவ்விற்கு மனமே தாளவில்லை. ஆனாலும் ஏனோ அமைதியாகிவிட்டான்.

அவனது இயல்பிற்கு மாறான இந்த அமைதி அர்ஜூனை யோசனைக்குள்ளாக்கியது. ஆரவ் எப்போதும் பெண்களை ரசிப்பவன். அதை அவர்களிடமே நேர்மையாக வெளிப்படுத்தவும் செய்வான்.

பெண்களிடத்தில் நட்புடன் பழகினாலும் அதை ஒரு எல்லைக்குள் நிறுத்தி வைப்பனிடத்தில் அதற்கு மேல் ஒரு வழிசல்களையோ  வார்த்தைகளையோ அவனிடமிருந்து எதிர்பார்க்கமுடியாது.

அப்படிப்பட்டவன் இன்று ஒரு பெண்ணை பார்த்ததுமே அழகு என்று சொன்னது வரைக்கும் சரி. அதற்கு மேல் அவளை கல்யாணபெண்ணாக ஏற்றுக்கொள்ளாமலும், அப்படி இருக்காது என வாதிட்டதும், இப்போது அமைதியாகிவிட்டதும் அர்ஜூனின் மனதில் நெருடியது.

ரிசப்ஷன் போனதும் தானாக சரியாகிவிடுவான் என எண்ணியவனது நினைவில் விக்ரம் வந்து அமர இவனிற்கும் முகம் இறுகியது. எத்தனை முறை சொன்னாலும் கேட்காமல் பிடிவாதம் பிடிக்கிறானே என்று.

ரிசப்ஷன் ஹாலுக்கு வெளியே விக்ரம் நிற்க, “தங்களுக்காக தான் காத்திருக்கிறானோ? தாங்கள் வந்து இறங்கியதுமே இப்படி வரவேற்கிறானே?”

இதை எண்ணிக்கொண்டே விக்ரமை பார்க்க அவனோ ஆரவ்வை தழுவி விட்டு இவனையும் அணைத்து விடுவிக்க ஏனோ அவனை போல சிரித்தமுகமாக அதை ஏற்க முடியாமல் பெயருக்கு சிரித்துவைத்தான் அர்ஜூன்.

“எப்டி இருக்கடா ஆரவ்?… என்றவன் அர்ஜூனிடம் திரும்பி,

“நீங்க எப்படி இருக்கீங்க அர்ஜூன் ஸார்?. நேத்து கல்யாணத்துக்கே வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்…” என நலம் விசாரிக்க முகம் கடுத்தாலும் அதை காட்டிக்கொள்ளாமல் இருக்க பிரயத்தனப்பட்டுகொண்டே தலையை ஆட்டினான்.

அவன் மட்டும் ஆரவ், நான் என்ன கிழவனா? என்னை ஸார் சொல்லி தள்ளி வச்சு பேசறான்? என உள்ளுக்குள் பொரும,

“அவன் சகஜமா பேசினா மட்டும் நீ அவனோட கலகலப்பா பேசிடுவியா? இப்போ மரியாதை குடுக்கனுமா? வேண்டாமா? உனக்கு எது இஷ்டம்?…” அவனது மனசாட்சி இடித்துரைத்தது.

“ஏன் விக்ரம், உள்ள வேலையை வச்சிட்டு இங்க எங்களை ரிஸீவ் பன்றது ரொம்ப முக்கியமா? எங்களுக்கு வர வழி தெரியாதா? தங்கச்சி ரிசப்ஷன்ல கொஞ்சமும் பொறுப்பில்லாமல் சைட்டா அடிச்சிட்டு இருக்க?…” என கண்ணடித்து ஆரவ் கேட்டான்.

என்ன விக்ரம் சைட்டடிக்கிறானா? என ஒரு நிமிடம் வானத்துக்கு சந்தோஷமாக எகிறி குதித்த அர்ஜூனின் மனதை அடுத்த நொடி கீழே இழுத்து போட்டது விக்ரமின் பதில்.

“என்னை பத்தி உனக்கு தெரியாதா ஆரவ்? தெரிஞ்சும் நீயே கிண்டல் பன்றியே?…” என அர்ஜூனை சங்கடமாக பார்த்துக்கொண்டே ஒருவித வருத்தத்தோடு பேசினான்.

அர்ஜூனின் முகம் இறுகியதை பார்த்த ஆரவ் இவனுக்கு இன்றைக்கு இது போதும் என நினைத்துக்கொண்டே,

“சரி வா. உள்ளே போகலாம்.  இங்கயே பேசி இப்டியே அனுப்பிடலாம்னு பார்த்தியா என்ன?…” அர்ஜூனையும் இழுத்துக்கொண்டே உள்ளே நுழைய அர்ஜூன் ஆரவ்வை ஆச்சர்யமாக பார்த்தான்.

காரில் இருந்து இறங்கும் வரை வெறித்த பார்வையோடு அமர்ந்திருந்ததென்ன? இப்போது இங்கே வாய் கிழிய பேசுவதென்ன? இவனை புரிஞ்சுக்கவே முடியலையே? என நினைத்தான்.

உள்ளே சென்றவன் மேடைக்கு அழைத்துசென்று மணப்பெண்ணான தன் தங்கைக்கும், தங்கையின் கணவனுக்கு அறிமுகப்படுத்திவைத்தான். அர்ஜூனும் ஆரவ்வும், மணமகனுக்கு கைகுலுக்கிவிட்டு கொண்டுவந்திருந்த பரிசுப்பொருளையும் சேர்ப்பித்துவிட்டு மேடையிறங்கினர்.

சாப்பிடும் இடத்திற்கு வந்து ஆளுக்கொரு ப்ளேட்டை கையில் எடுத்துக்கொண்டு தங்களுக்கு தேவையான உணவுகளை தாங்களே எடுத்துக்கொள்ள ஆரவ் அர்ஜூனை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு விக்ரமிடம் பேச்சை வளர்த்துக்கொண்டே,

“ஹ்ம் அப்புறம் விக்ரம் சார்க்கு எப்போ மேரேஜ்? அடுத்து உன்னோட கல்யாணத்துக்கு தான் நாங்க வருவோம் இல்லையா?…”

ஆரவ் என்னவோ அவனையும் மீறி அதை எதார்த்தமாக தான் கேட்டுவைத்தான். ஆனால் விக்ரம் அதை வில்லங்கமாக பேசிவைத்து அர்ஜூனின் ரத்த அழுத்தத்தை ஏற்றிக்கொண்டே சென்றான். அதில் ஆரவ்விற்கே கோவம் தான்.

“ஏன் ஆரவ்? என்னோட முடிவை நான் தான் ஏற்கனவே சொல்லிட்டேனே? திரும்ப அதை பத்தி ஆரம்பிக்கிற?…” என்றவன் சிறிது யோசித்து,

“ஆரவ் ஸ்டெபிக்ஷா எதாச்சும் சொன்னாங்களா?, இன்னைக்கு வருவாங்கன்னு எதிர்பார்த்தேன்…” என்றதும் கொலைவெறியாகிப்போனான் அர்ஜூன்.

கையில் வைத்திருந்த தட்டை அப்படியே அங்கேயே வைத்துவிட்டு விடுவிடுவென தூரமாக போய் அமர்ந்துவிட்டான்.

error: Content is protected !!