“இன்னும் தன்னை நான்கு வார்த்தைகள் கடுமையாக திட்டினால் தேவலை” என்பது போல இருந்தது அவருக்கு.
அழுகை முடிந்து ஆறுதல்களில் பயணித்து ஆனந்தமாக நிலாவை, புதுவரவான சிசுவை கொண்டாட வந்து சேர்ந்தனர். அனைவரும் நிலாவை சூழ்ந்து நிற்க அர்ஜூனும் ஆரவ்வும் நகர்ந்து சென்று மூங்கில் நாற்காலியில் அமர்ந்துகொண்டனர்.
“டக்கு, ஒரு முக்கிய விஷயம் பேசனும்…” என கைகளை சுரண்டியவனின் முகத்தில் இருந்த தெளிவில் கண்களில் கொட்டிய குறும்பில் டக்கு என்ற அழைப்பில் அர்ஜூன் ஆயாசமானான்.
“ஓஹ் காட். ஆரவ் பேக் டூ பெவிலியன். இனி இவன் அட்டகாசம் தாங்காதே…” என சந்தோஷமாக அலுத்துக்கொண்டவன்,
“சொல்லு, காதுல விழும்…” என அசுவாரசியமாக கேட்க ஆரம்பித்தான்.
“டக்கு, நம்ம ஹாஸ்பிட்டல்ல வச்சு என் மாமனாரை பார்த்தப்போ எதிரே போய் மாமான்னு கூப்பிட்டு அவரோட ஃபேஸ் ரியாக்ஷன் எப்டி இருக்கும்னு டெஸ்ட் பண்ண நினச்சேன்டா. ஆனா மிஸ் பண்ணிட்டேன். ப்ச்…” என உச்சுக்கொட்டி தன்னுடைய இயல்பில் வம்படிக்க,
“அடப்பாவி, அடேய் அன்னைக்கு இருந்த சுச்வேஷன்ல கூட உனக்கு எப்டிலாம் மைன்ட் போய்ருக்கு பாரு?.உன்னை…” என அர்ஜூன் பல்லை கடிக்க,
“அன்னைக்கே நான் மாமான்னு கூப்டிருந்தா அவரோட எக்ஸ்ப்ரெஷன்ஸ் எப்டி இருந்திருக்கும்? என்னால இமாஜின் கூட பண்ணமுடியலையே? ச்சே. ஆனா ஒன்னு தெரியும்….” அவனின் கடுப்பை கண்டுகொள்ளாமல் தன் போக்கில் பேசிக்கொண்டே தான் இருந்தான் ஆரவ்.
“என் மாமனார் இன்னைக்கு நான் மாமான்னு கூப்பிடுவேனான்னு முகத்தை பார்த்து நிக்கிறார். ஆனா அன்னைக்கு என்னை அக்ஸப்ட் பண்ணிருந்திருப்பாரா? உனக்கு என்ன தோணுது?. சொல்லு சொல்லு…” என விடாமல் அர்ஜூனை பிடித்து உலுக்க அவன் தலையில் நறுக்கென ஒரு குட்டுவைத்தாள் ஸ்டெபி.
“டேய் உன்னையெல்லாம் திருத்தவே முடியாது. நிலா பாவம்…” என ஸ்டெபி கூற ஜீவாவும் அவளோடு இணைந்துகொண்டு ஆரவ்வை ஓட்டினாள். வண்ணமதியும் நிலாவை இழுத்துக்கொண்டு அவர்களோடு சேர அப்பட்டாளமே சிரிப்பு மழையால் வீட்டை நனைத்தது.
அனைவரின் கிண்டலுக்கும் தாக்குப்பிடித்த ஆரவ் சகட்டுமேனிக்கு தன் வாய்ஜாலத்தை அணையின் வெள்ளமென திறந்துவிட அவன் ஒருவனின் பேச்சை சமாளிக்கமுடியாமல் மற்றவர்கள் தான் திணறிப்போயினர்.
அர்ஜூனும் நிலாவும் நிறைவான புன்னகையோடு அப்பேச்சுக்கச்சேரியை ரசிக்க ஆரவ்வின் பேச்சில் தோற்ற ஜீவாவும் வண்ணமதியும் விடா முயற்சியோடு அவனை எப்படியும் ஜெயித்துவிடும் உத்வேகத்தோடு மீண்டும் மீண்டும் படையெடுத்து வெற்றிகரமாக தோல்வியையே தழுவினர் களைத்துப்போய்.
“எம்மாடியோ!!! இந்தா பாரு நிலா புள்ள. உன் புருஷனை சமாளிக்க ஊருப்பட்ட வாயே வந்தாலும் முடியாது சாமி. இந்த மதியையே வாரிப்புட்டாரே?…” என விளையாட்டாய் அங்கலாய்க்க,
“மாமா, உங்க ஸ்பீடுக்கு என் அக்கா சரிப்பட்டு வரமாட்டா. அவ அஞ்சு வார்த்தை சேர்ந்தா போல பேசவே ஆயிரம் தடவை யோசிப்பா நீங்க அசால்ட்டா அள்ளி விடறீங்க. என்னனு செட் ஆகுச்சோ?…” என ஜீவா தன் பங்குக்கு பேச,
“அவ பேசலைனா என்ன? அவளுக்கு ஏத்தது போல நான் மாறிட்டு போறேன். ரொம்ப அமைதியானவனா…”என்றவன் மற்றவர்களிடம் ஒருநொடி பாவம் போல முகத்தை வைத்து அமைதியாகி காண்பித்து பின் நிலாவை பார்த்து, “எப்படி?” என புருவம் உயர்த்தி காலரை தூக்கிவிட்டு அமர்த்தலாக பார்த்தான்.
அவனின் அலும்பில் ஹைய்யோடா என்றானது அர்ஜூனுக்கும், ஸ்டெபிக்கும். இவனாவது அமைதியா மாறுவதாவது என்பது போல லுக் விட அதையே பிரதிபலித்தனர் ஜீவாவும், மதியும்.
அனைத்தையும் நிறைவாக பார்த்தபடி இருந்தார் சேகரன். அவருக்கு தெரியும் ஆரவ்வின் உயரம். அவன் லெவலுக்கு தன் குடும்பம் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. தன் மகள் மீது கொண்ட விருப்பத்தால் மட்டுமே இது சாத்திப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்துதான் இருந்தார்.
அன்றைய பொழுதுகள் அனைத்தும் தேனில் மிதக்கும் பலாச்சுளையாய் தித்திப்பாய் கடக்க இதயத்தில் இதமாய் உணர்ந்தார் சேகரன். மறுவீட்டு விசேஷம் கேலியும் கிண்டலுமாக சந்தோஷமாகவே நகர்ந்தது.
மாலை முத்தழகி வீட்டிற்கு செல்ல இரவு விருந்து அங்கே என்றுவிட தினகரனும் விரைவிலேயே வந்துவிட்டான். இளைஞர் பட்டாளத்தின் கலாட்டாவில் ஆரவ்வின் குறும்பு பேச்சில் முத்தையாவின் வீடே சந்தோஷத்தில் அலமலந்து போனது.
அங்கிருந்து கிளம்பும் வரை பேச்சும் சிரிப்பும் மட்டுமே வீட்டை நிறைத்துக்கொண்டிருக்க பெரியவர்களையும் மிக இலகுவாக தங்களோடு இணைத்துக்கொண்ட பெருமையையும் தட்டிச்சென்ற ஆரவ் தன்னை பற்றிய நல்லபிமானக்கொடியை மிக ஆழமாக நட்டுசென்றான் அனைவரின் மனதிலும்.
அனைத்தையும் ஒருவித ஆத்மார்த்தமான நிறைவுடன் ரசித்தது தினகரனின் நெஞ்சம். ஏனோ அப்படி ஒரு நிம்மதி அவனுள். ஆரவ் தன் இயல்பால் அவனை கவர்ந்திழுத்தான்.
“இவன் கிடைக்க நிலா பெரும் பாக்கியம் செய்திருக்கவேண்டும்…” புன்னகையோடு எண்ணிக்கொண்டான் தினகரன். அவன் கண்களில் தெரிந்த நிம்மதியை புரிந்த வண்ணமதியின் உள்ளம் அதை உவகையோடு உள்வாங்கிக்கொண்டது.
மறுநாள் தஞ்சாவூர் கிளம்ப விடைபெற அமுதாவிற்கு மனதே இல்லை. மசக்கையாக இருக்கும் பெண்ணை கவனித்துக்கொள்ளும் பேராவல் மனதினுள் பொங்கிய போதும் அவர்களின் பயணத்தை தடுக்க நினைக்கவில்லை.
அனைவரிடமும் விடைபெற்று டெல்லிக்கு அனைவரையும் வரும்படி கேட்டுக்கொண்டு கிளம்பிவிட்டனர். அங்கு மேலும் மூன்று நாட்கள் தங்கி இருந்து பின் நிலாவின் சூழ்நிலையை முன்னிட்டு ப்ளைட்டில் அல்லாது ட்ரெயினில் பயணப்பட்டனர் தர்ஷினியின் கட்டளையின் படி.
டெல்லி சென்ற நிலாவின் பிரமிப்பு குறைந்தபாடில்லை. அவனோடான தன்னுடைய முந்தைய வாழ்க்கையை அவனறையில் புகைப்படங்களின் வாயிலாக கண்டவளுக்கு பெரும் போராட்டமாக போனது.
புகைப்படத்தில் தெரிந்த நிலாவின் விழிகளில் அருவியென கொட்டிக்கிடந்த காதல் இப்போதைய நிலாவிற்கு பெரும் சவாலாக தோன்றியது. அன்றைய நாட்கள் ஒரு நொடியாவது அவளுக்கு ஞாபகத்தில் வந்துவிட கூடாதா என்று ஏங்கினாள். ஆரவ்வின் மேல் கொண்ட காதலை உணர்வதற்காக.
தானே தனக்கு அந்நியமாக தெரிவதை புகைப்படத்தில் கண்டுகொண்டாள். தன் மீதே பொறாமை கொண்டவளின் உள்ளம் புசுபுசுவென புகைந்தது. இப்படி ஒரு காதலை தன்னால் ஆரவ்விற்கு மீண்டும் கொடுக்கமுடியுமா என்னும் அச்சமே அவளுள் வியாப்பிக்க ஆரம்பித்தது.
அதையெல்லாம் இலகுவாக போக்கிய ஆரவ் அவளுக்கு காதலிக்க கற்றுக்கொடுத்தான். அளவில்லா காதலை அள்ளி வழங்க அவள் மீதான அவளின் பொறாமையும், பயமும் ஆரவ்வின் காதலில் இளகி உருகி வழிந்தோடி காற்றில் கரைந்து போய் அவளை தெளிவாக்கியது.
ஒவ்வொரு நாளும் அவனின் பார்வையை விழிகளால் பருகி, அதில் பிரவாகம் எடுக்கும் காதலை இதயத்தில் நிறைத்து நாளும் பொழுதுமாக குளிர்ந்து சந்தோஷத்தில் அவனையும் பனியாய் உறைய வைத்தாள்.
ஐந்தாவது மாதத்தில் அமுதா குடும்பத்தினர் வந்து ஒருவாரம் போல் தங்கியிருந்தனர். மகளுக்கு விதவிதமாக சமைத்துப்போட்டு தன்னை சமாதானம் செய்துகொண்டார் அமுதா. அவர்களின் வருகை நேரத்தில் நாராயணனும், வடிவும் வந்துவிட வீடே சொந்தகளால் நிறைந்தது.
தர்ஷினி சேகரனிடம் இயல்பாகவே பேசி பழக ராகவ் வழக்கம் போல் அவரிடம் மட்டும் மௌனத்தை கடைபிடித்தார். ஆனால் ஒரு சம்பந்திக்கு கொடுக்கும் மரியாதையில் எந்த குறைவுமே வைத்துவிடவில்லை. அவரை புரிந்த சேகரன் அவருக்கு சங்கடம் தராமல் தானே ஒதுங்கி நின்றார்.
ஏழு ஆண்டுகள் கழித்து….
ஏ.ஆர் ஹாஸ்பிட்டல் ஆப்பரேஷன் தியேட்டர் முன்பு கார்த்திக் கைகளை பிசைந்தபடி நிற்க உள்ளங்கை வியர்வையில் பிசுபிசுத்து போனது அவனுக்கு. தவிப்பாக கதவை பார்த்துக்கொண்டு நிலையில்லாமல் நடந்தான்.