தேடல் – 25
வள்ளியம்மை வீட்டிலிருந்து கிளம்பிய சேகரன் வரும் வழியெல்லாம் வெளியை வெறித்தபடி அமர்ந்துவந்தார். தன் வீட்டிலிருந்து ஆரவ் அழைத்துக்கொண்டு கிளம்பும் பொழுது முகத்தில் இருந்த அருள் இழந்து இருண்டு காணப்பட்டது அவருக்கு.
ஆரவ்வும் அர்ஜூனும் இதை கவனித்தாலும் ஒன்றும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் அவருக்காக மனதளவில் பரிதாபம் கொள்ளத்தான் செய்தனர்.
“இவருக்கு இது தேவைதான்” என வேண்டாம் என்றாலும் தோன்றும் எண்ணத்தை விரட்டியடிக்க முயன்றான் ஆரவ். சேகரனை ஓரவிழியால் தொடர்ந்தாலும் பேசவோ ஆறுதல் கூறவோ விருப்பமில்லை அவனுக்கு.
“என்ன மாதிரி லேடி இது? மை காட்…. இவ்வளோ நடந்தும் கொஞ்சமும் தான் செஞ்சதை ரியலைஸ் பண்ணிக்காம சாபம் குடுக்குதே? டிஸ்கஸ்டிங்” பல்லைக்கடித்தபடி வரும் வழியெல்லாம் மனதினுள் வள்ளியம்மையை தாளித்து தான் வந்தான் அர்ஜூன்.
வீடு வந்து சேர்ந்தனர். முத்தழகியும் அமுதாவும் மதிய விருந்துக்கு சமைத்துக்கொண்டிருக்க வண்ணமதியும், ஜீவாவும் நிலாவோடும் ஸ்டெபியோடும் பேசிக்கொண்டே அதற்கு உதவியாக இருந்தனர்.
இவர்களை அனைவரும் என்ன என்று பார்க்க யாருக்கும் எந்த விளக்கமும் கூறவில்லை. ஆரவ்வை ஆராயும் பார்வை பார்த்த நிலாவிற்கு அவனின் இறுக்கம் சுமந்த முகம் கவலையளித்தது. தன்னையே பார்த்துக்கொண்டிருந்த மனைவியின் புறம் திரும்பினான்.
மேலுதட்டிலும் நெற்றியிலும் வியர்வைப்பூக்கள் மின்ன ஒருவித தேஜஸுடன் நின்றிருந்தவளின் தோற்றம் தன்னை கொஞ்சம் இலகுவாக்கி அந்த சூழலிலும் அவனை கட்டிஇழுத்தது. சற்றுமுன் நடந்த அனைத்தும் பின்னுக்கு செல்ல அவளை பார்த்து குறும்புடன் கண்ணடித்தான்.
திகைத்து நின்றாள் நிலாமுகி. கோபத்துடன் வந்தவன் நொடியில் மாறிய விந்தையென்ன என்பது அவளுக்கு புரியவே இல்லை. அவனின் சிரிப்பில் தன்னுடைய சஞ்சலங்கள் அனைத்தும் பனி போல விலகுவதை சுகமாக உணர்ந்தாள்.
அக்னி ஜுவாலையாக தகித்துக்கொண்டிருந்தாலும் தன் அருகாமையில் நொடியில் குளிர்ந்துவிடுபவன் அவளவன் என்பதை விரைவில் உணரும் தருணங்கள் நீண்டு கிடக்கின்றன அவளுக்கு.
அவளுடன் இருக்கும் பொழுதுகள் அனைத்தையும் அவளுக்கானதாகவே மாற்றிகொள்பவன் தான் அவள் கணவன் என்பதை அவள் அறிய இன்னும் காலங்கள் பிடிக்கும் அவளுக்கு.
முதலில் திகைத்து பின் வியந்து வெட்கி சிவந்து அவனை நோக்க அதை கண்டு அழகாய் புன்னகைத்தான் ஆரவ். அடர்த்தியான மீசைக்கு கீழே அளவான புன்னகை. அவளுக்கு மட்டுமே உரிய பிரத்யோக புன்னகை. அவனுக்கு அது அப்படி ஒரு வசீகரத்தை அள்ளி வழங்கியது.
கண் சிமிட்டாமல் ரசித்து ரசித்து பார்க்க, “மாயக்காரன்” வெட்கமின்றி அவள் மனதில் தோன்றியது இதுதான். தன் வாழ்வில் மாயங்கள் பல புரிந்து வண்ணமாக ஜொலிக்க செய்துவிட்டானே.
அச்சிறு புன்னகை மனதை அலையென அள்ளிச்சென்றது அவன் பின்னே. இருவரும் தங்களுலகத்தில் சஞ்சரிக்க சேகரனை கவனிக்க மறந்தனர்.
ஆனால் அமுதா அப்படி இருக்கமுடியாதே. கணவனின் முகத்தில் உணர்ச்சிகள் சுரத்தின்றி செத்துக்கிடக்க இவர் உள்ளம் அரற்றியது.
“கடவுளே ஏன் இப்படி வருகிறார்?. அங்கே என்ன நடந்திருக்கும்?” என பதறினார்.
கணவரின் மேலிருந்த பிணக்கை மறந்து தாயாய் மடிதாங்க சேகரனை நெருங்கும் முன் சேகரனே தாளமாட்டாமல் பூஜையறையை தள்ளாடி தடுமாறியபடி தஞ்சமடைந்தார்.
உள்ளே நுழைந்ததும் சாஷ்டாங்கமாக இறைவனடி சரணடைந்தவர் எழுந்தமர்ந்து ஓஹ்வென்ற ஓங்கார குரலில் நெஞ்சிலடித்துக்கொண்டு பதறி அழ அக்கதறலில் வீடே ஸ்தம்பித்தது. யாராலும் அவரின் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.
நிலாமுகிக்கு புரிந்தது தந்தை உண்மையை தெரிந்துகொண்டார் என்று. அவர் மீதான பாசத்தில் மனம் கசிய அவரை பார்த்தபடி நின்றாள். அழுகை அவளுக்குமே கட்டுக்கடங்காமல் பெருக உதட்டை கடித்து அடக்கமுற்பட்டாள்.
மீறி விசும்பல் ஒலி சேகரனின் காதுகளுக்கு தப்பாமல் சென்றடைய அவளை பார்த்ததும் தலையிலடித்துக்கொண்டு ஐயோவென மேலும் கலங்கி கதறினார். வேகமாக எழுந்து மகளை அணைத்துக்கொண்டவர்,
“மன்னிச்சிடு ஆத்தா. என்ன பெத்த எங்கம்மா. உனக்கு எப்பேர்பட்ட பாவத்தை செஞ்சிட்டேனே…” தவறை உணர்ந்து உள்ளம் நொந்து மன்னிப்பை யாசித்து நிற்கும் தந்தையை மேலும் நோகடிக்காது அவர் நெஞ்சில் சாய்ந்து விம்மினாள்.
“இப்போ என்ன விஷயம்னு சொல்லபோறீங்களா இல்லையா?…” மற்றவர்கள் புரியாது நிற்க அமுதா வெடித்தே விட்டார். சேகரனால் பேசவே முடியவில்லை. மகளை அணைத்துக்கொண்டே நின்றவர் வாயிலிருந்து விழுந்தது மன்னிச்சிடுமா என்பது மட்டுமே.
அர்ஜூன் நடந்ததை விவரிக்க நெஞ்சில் கைவைத்த அமுதா, “தெய்வமே” என முணங்கி அதிர்ச்சியில் உறைந்து நிற்க முத்தழகியும் வண்ணமதியும் மாற்றி மாற்றி அவரை சமாதானம் செய்ய அமுதாவின் மனம் அமைதிகொள்ளவே இல்லை. நிலாவை இழுத்து அணைத்துக்கொண்ட அமுதா உடல் நடுங்கியது.
“எனக்கொண்ணுமில்லைம்மா. நீங்க அமைதியாகுங்க…” என தேற்ற அவளின் எந்த தேறுதலுக்கும் பயனில்லை.
சேகரனை கூறுபோட ஆயிரம் வார்த்தைகள் வசம் இருந்தாலும் கலங்கி நிற்கும் கணவனை மேலும் துவம்சம் செய்ய மனம் வராத அவரின் இயலாமையால் தன்னை எண்ணியே ஆற்றாற்று போனார் அமுதா.
“பாதகத்தி, என்ன காரியம் செய்திருக்கிறா அந்த கடன்காரி. இப்படி சும்மா விட்டுட்டு வந்திருக்காரே மதினி. இந்த மனுஷனை என்னால இப்பக்கூட எதுவும் சொல்ல முடியலையே?…” என தன்னையே நிந்தித்து பேசியவர்,
“சேதி கேட்டதுமே அவ சிண்டுமுடிய நறுக்கியிருக்க வேண்டாமா? என் குலத்தையே கருவறுக்க நினச்ச அவளை நான் உசுரோட விடமாட்டேன்…” என வீறுகொண்டு எழுந்தவரை அடக்கவே முடியாது போனது எவராலும். அதன் மேலும் ஒதுங்கி இராமல்,
“அத்தை ப்ளீஸ். எல்லாம் பேசிட்டோம். அவங்களோட எந்த உறவும் வேண்டாம்னு வந்துட்டாங்க நிலா அப்பா. இதோட விஷயத்தை விடுங்க. இனி நடக்கவேண்டியதை பார்ப்போம்…” என்ற ஆரவ்வின் குரலுக்கு தான் கட்டுண்டு நின்றார் அவனின் மாமியார்.
ஜீவா அப்போதும் எதுவும் பேசாமல் ஒதுங்கியே நின்றாள். தகப்பன் செய்த செயலின் வீரியம், அதனால் நடக்கவிருந்த விபரீதம் தடுக்கப்பட்டிருந்தாலும் இந்த நொடி மொத்தமாக அவளை சாய்த்தது போட்டது. சேகரனை கசப்பான பார்வை பார்த்தாள்.
“என்னை மன்னிச்சிடுமா நிலா…” மீண்டும் அதையே கூற,
“விடுங்கப்பா. நீங்க இப்படி மன்னிப்பு கேட்கிறதயே என்னால தாங்க முடியலைப்பா…” என பொங்கிய அழுகையை அடக்கியபடி கூறியவளின் குரலில் பாசமே விஞ்சி நின்றது.
ஆரவ்வின் புறம் திரும்பியவர் அவனிடமும் குறுகி சிறுத்து போய் மன்னிப்பை கேட்க அவர் நிலை கண்டு அனைவரின் மனமுமே விண்டு போனது. ஆரவ்வின் கண்களுக்கு முதன் முதலில் ஹாஸ்பிட்டலில் அவரை தான் சந்தித்த நாள் நினைவு வந்தது.
அன்று அவர் தவித்த தவிப்பையும் மகள் மீதான அன்பையும் பார்த்துக்கொண்டு தானே இருந்தான். அவரின் மேலுள்ள கோபத்தை பின்னுக்கு தள்ளியவன் இப்போது மனதளவில் தளர்ந்து இருப்பவரை தன்னுடைய பாராமுகத்தால் வேதனையில் தள்ளவேண்டாம் என எண்ணினான்.
“எனக்கு உங்க மேல கோவம் இருக்கு. ஆனா அதை காட்டும் நேரம் இது இல்லை. நடந்ததை விட்டுடுங்க…” என தன்மையாக பேச அவர் மேலும் எதையோ எதிர்பார்த்து முகம்பார்த்து நின்றார். அவனுக்கே நெஞ்சை பிசைந்தது அவர் ஏக்கப்பார்வை. அவரின் எண்ணம் புரிந்தவனாய்,
“மாமா முதல்ல அழுகையை நிறுத்துங்க…” என கைகளால் அவரின் கரங்களை பிடிக்க அகமகிழ்ந்து போனாலும் உள்ளுக்குள் இன்னும் சிறுமையாக உணர்ந்தார்.