“நிலா உனக்கு இப்போ உடம்பு பரவாயில்லையா? தலைவலி இது போல எதாச்சும் சிம்டம்ஸ் வந்துச்சா?…” ஏன் கேட்கிறார் என புரியாவிட்டாலும் அதற்கு மறுக்காமல் பதிலளித்தாள்.
“இல்லையே அத்தை. ஹ்ம் அம்மா…” என உளற,
“உனக்கு எப்படி தோணுதோ அப்படியே கூப்பிடு. கன்ப்யூஸ் ஆகிக்காதே…” என்றவர்,
“நீ உங்க ஊருல எதாச்சும் டாக்டரை பார்த்தாங்களா உனக்கு?…” என அதற்குள் பொறுமையின்றி இடையிட்ட ஆரவ்,
“நிலா இந்த ப்ரிஸ்க்ரிப்ஷனை பார்த்ததும் டென்ஷன் ஆகிட்டேன். திரும்ப உனக்கு உடம்பு முடியலையோன்னு. இதைப்பத்தி உங்கப்பா எதுவும் சொல்லலை. அதைத்தான் கேட்காங்க மாம்…” என சொல்லி தர்ஷினியிடம்,
“சும்மா ஏன் சுத்தி வளைச்சிட்டு இருக்கீங்க மாம்?…” என்றுவிட்டு நிலா என்ன கூறுகிறாள் என அவளையே பார்த்தபடி இருந்தான்.
அந்த மருந்துசீட்டை வாங்கி பார்த்த நிலாவிற்கு முதலில் ஞாபகம் வரவில்லை என்றாலும் அடுத்த நொடி மூளை அவளுக்கு அதை எடுத்துக்கொடுக்க,
“இது எங்க ஊர்ல உள்ள லேடி டாக்டர்கிட்ட போனப்போ அவங்க எழுதிகொடுத்த விட்டமின் டேப்லட் சீட்…” என தர்ஷினியும் ஆரவ்வும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
“என்ன விட்டமின் டேப்லட்டா?…” முயன்று தன் உணர்வுகளை கட்டுக்குள் வைத்து முகத்தில் மாற்றத்தை காண்பிக்காமல் போராடி அடுத்த கேள்வியை கேட்டான் ஆரவ். ஆனால் உள்ளுக்குள் துடியாய் துடித்துக்கொண்டிருந்தான்.
“எதுக்கு விட்டமின் டேப்லட்ஸ்? உனக்கான மருந்து மாத்திரைகள் எல்லாமே நாங்க அனுப்பிட்டு இருந்தோமே. அதுவும் இல்லாம உன்னை பக்கத்து ஊர்ல உள்ள பெரிய ஹாஸ்பிட்டல்ல தானே செக்கப்க்கு கூட்டிட்டு போவாங்க உன் அப்பா. அவங்களை தானே பார்க்க சொல்லி சொல்லிருந்தோம் அவர்கிட்ட. இதுக்கு யாரோட போன?…” கொஞ்சம் வேகமாகவே.
“இது அப்பாவுக்கும், அம்மாவுக்கும் தெரியாது. நான் வள்ளியத்தை கூட போனேன். அவங்க தான் கூட்டிட்டு போனாங்க…” என அப்பாவியாக கூற அவளின் அறியாத்தனம் தர்ஷினிக்கு பாவமாக போனது.
“தெளிவா என்ன நடந்ததுன்னு சொல்லு நிலா. இந்த டேப்லட் எதுவும் நீ சாப்ட்டியா?…” படபடப்பாக கேட்க அவனின் உயிரே அதற்குள் உறைந்துவிட்டிருந்தது. சாப்பிடவில்லை என்பது புரிந்தாலும் அறிந்துகொள்ளவேண்டி இருந்தது அவனுக்கு.
“கொஞ்ச நாள் முன்னாடி அம்மா கோவிலுக்கு போய்ருந்தப்போ அத்தை வீட்டுக்கு வந்திருந்தாங்க. எனக்கு திடீர்னு வாமிட் வந்து ரொம்ப டயர்ட் ஆகிட்டேன். அப்போ அத்தை பார்த்துட்டு ரொம்ப பதறினாங்க. ஹாஸ்பிட்டல் போய் பார்ப்போம்னு சொன்னாங்க…”
“நீ ஏன் இதை உங்க அம்மாகிட்ட சொல்லலை?…” தர்ஷினி கொஞ்சம் குரலை உயர்த்திவிட அதில் பயந்தவள்,
“அத்தை தான் சொல்லவேண்டாம்னு சொன்னாங்க. இப்போதான் அம்மாவும் அப்பாவும் கொஞ்சம் நிம்மதியா இருக்காங்க. இப்போ உடம்பு சரியில்லைன்னு சொன்னா ரொம்ப பதறுவாங்க. முதல்ல டாக்டர்க்கிட்ட காமிச்சு விஷயம் பெரிசில்லைன்னு சொன்னா அப்படியே விட்டிடலாம்னு சொன்னாங்க…”
அப்படியே நிலாவை அறையலாம் போல இருந்தது தர்ஷினிக்கு. ஒரு பெண் தன் உடல் மாற்றத்தை கூடவா உணராமல் இருப்பாள்? என கோவம் பொங்கியது.
அவள் இதையெல்லாம் உணரும் மனநிலையில் இல்லை என்பது தர்ஷினிக்கு தெரிந்தாலும் மனது கேட்கவில்லை.
“அந்த டாக்டர்கிட்ட போறப்போ அத்தைக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லி அம்மாக்கிட்ட கூட போய்ட்டுவரதா நானே சொல்லவும் அம்மாவும் அனுப்பிவச்சாங்க. அந்த டாக்டர் எழுதிக்கொடுத்தது தான் இது…”
“அந்த மாத்திரை எங்க?…”
“அதுதான் தெரியலை. மாத்திரை எல்லாம் என்னோட பேக்ல தான் வச்சிருந்தேன். அத்தை யாருக்கும் தெரியாம மறக்காம போடனும்னு சொல்லிட்டு போனாங்க. நான் ஹாஸ்பிட்டல் போய்ட்டு வந்ததும் டயர்டா இருக்குன்னு சொல்லி படுத்துட்டேன். திரும்ப ஹேண்ட்பேக் எடுத்துப்பார்த்தா அதை காணோம்…”
“அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னு கொஞ்சம் தெளிவா சொல்றியா?. வேற ஏதாவது உன் வீட்ல அந்த அத்தை பேசினாங்களா?…” ஆரவ்விற்கு வள்ளியம்மை பற்றி நன்றாக தெரிந்திருந்தது. நடந்த அனைத்தும் அவனுக்கு தெரியவேண்டி இருந்தது. சில நொடிகள் யோசித்தவள்,
“ஹ்ம் ஆமா, அன்னைக்கு அத்தை திரும்ப கல்யாணத்தை சீக்கிரமே வைக்க சொல்லி அப்பாட்ட பேசிருக்காங்க. வண்ணமதி அக்கா கூட வள்ளியத்தையை திட்டிட்டு இருந்தாங்க…”
“உன் அத்தை கேட்கலையா நீ மாத்திரை சாப்ட்டியா இல்லையான்னு?…” என தர்ஷினி பேச,
“இல்லை என்னால அத்தை கூட பேசமுடியலை. ஜீவாவும் மதி அக்காவும் கூடவே இருந்தாங்க. அத்தை எதுவும் கேட்கலை. நானும் விட்டுட்டேன்…” இப்போது நிலாவின் முகம் கலக்கத்தை சுமந்திருந்தது.
ஆரவ்விற்கு தெரிந்தது தினகரன் தான் தன் வம்சத்தை காப்பாற்றி தந்திருக்கிறான் என. அவனுக்கு மானசீகமாக மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்தான் மனதிற்குள். ஆனால் இதை தன்னிடம் கூறியிருக்கலாமே எனவும் தோன்றாமல் இல்லை.
வள்ளியம்மையை துண்டுதுண்டாக வெட்டிபோடும் அளவிற்கு அடங்கா வெறி கிளர்ந்தது. நிலாவின் குரல் அவனை திசைதிருப்ப அவளை பார்த்தான்.
“எனக்கு திரும்ப எதுவும் பிரச்சனையாங்க? நான் இன்னும் சரியாகலையா?…” கேட்டு முடிக்கும் முன் கண்களில் கண்ணீர் பொங்கி வழிந்தது. அவளை அணைத்துக்கொண்ட தர்ஷினி,
“நத்திங்டா. உனக்கு ஒண்ணுமே இல்லை. பர்பெக்ட்லி ஆல்ரைட். ஆரவ் உன்கிட்ட சொல்வான். நான் கிளம்பறேன்…”தர்ஷினி கிளம்பிவிட்டார்.
அவர் சென்றும் ஆரவ் அப்படியே அமர்ந்திருக்க தயங்கியபடி அவனை நெருங்கியவள் தோளில் கை வைத்தாள்.
“ஏதாவது பிரச்சனையாங்க? என்னனு சொல்லுங்களேன்…” என கேட்டவளை வளைத்து பிடித்து தன் மடியில் அமர்த்திக்கொண்டவன் முத்தங்களால் அவளை நிறைத்துவிட்டான்.
அவனின் திடீர் தாக்குதலில் முதலில் நிலைகுலைந்தவள் அவனின் முத்தயுத்தத்தில் வெட்கி விலகமுயன்றாள். அவன் விட்டால் தானே? என்னதான் அவனோடு இணைந்து வாழ்ந்திருந்தாலும் அதன் நினைவுகள் இழந்து நிற்பவளுக்கு இது புது அனுபவம் தானே? தடுமாறி போனாள் பெண்ணவள்.
“தேங்க்ஸ் நிலாம்மா. தேங்க் யூ சோ மச்…” என பிதற்றிக்கொண்டே அவளை திணறடித்துக்கொண்டிருந்தான் அவள் கணவன். கணவனின் முத்தம் தந்த மயக்கம் அவளை எங்கோ இழுத்துச்செல்ல குழைந்து நின்றாள்.
“எனக்கு புரியவே இல்லைங்க. எதுக்கு இந்த தேங்க்ஸ்? கொஞ்சம் முன்ன கோபமா இருந்தீங்களே?…” அவனின் தோள்வளைவில் இருந்தபடியே கேட்க தன்னருகில் அமரவைத்து,
“நம்மோட அடுத்த ஜெனரேஷன் வந்தாச்சு. நீ அம்மாவாக போற நிலா…” குரல் கரகரக்க உணர்ச்சிமயமாக பேசியவனை திகைத்து பார்த்தாள்.
தனக்கு ஏன் இது தெரியவில்லை? இயல்பாகவே சில உடல் மாற்றங்கள், வாந்தி மயக்கம் என கர்ப்ப காலங்களில் தோன்றும் சில சங்கடங்கள் என எதுவும் நிலாவிற்கு ஏற்படவில்லையே.
நிலா வீட்டிற்கு தூரம் ஆகாததை கூட கவனியாத நிலையில் இருந்தார் அமுதா. அவருக்கு மகள் வந்து சேர்ந்ததே பெரும் சந்தோஷத்தில் மிதக்கவைக்க அடுத்ததை யோசிக்கமுடியாமல் தயாளனோடு திருமண பேச்சு என ஆரம்பிக்க யாராலும் நிலாவின் மாற்றத்தை கண்டுபிடிக்கமுடியாமல் போனது.
இதுவே வள்ளியம்மைக்கு சாதகமாக போயிற்று. யாருக்கும் தெரியாமல் இதை முடித்தவிட நினைத்து அவளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல விதி அதன் பின்னாலே தினகரனையும் அனுப்பிவைத்து வள்ளியம்மை சாதகத்தை பாதகமாக மாற்றிவிட்டது.
இப்போது நிலாவிற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. தாம்பத்யம் என்ற ஒன்றை உணராமலே தாய்மை அடைந்திருக்கும் தன் நிலை அவளுக்கு பெரும் சோதனையை குடுத்தது. அவளை அறியாமலே ஒருவித பரவசம் உடல் முழுவதும் பரவ கண்கள் கலங்க தன் வயிற்றை கைகள் நடுங்க தடவிப்பார்த்தாள்.
அவளின் உணர்வுகள் புரிந்தவன் போல் ஆறுதலாக அணைத்துக்கொண்டவன் சில நொடிகள் அந்த அமைதியை உள்வாங்கி நின்றான். யாரும் எதுவும் வேறொன்றும் பேச தோன்றா மோனநிலை.
அதில் விடுபட்ட நிலா, “அப்போ இது?…” என அந்த மருந்துசீட்டை காண்பிக்க முகம் இறுகினான் ஆரவ்.
“யார் என்ன சொன்னாலும் நம்பி போய்டுவியா நிலாடா? அந்த டேப்லட்ஸ் மட்டும் நீ எடுத்திட்டுருந்தா நம்ம குழந்தை?…” தொண்டையடைக்க அவளை மீண்டும் தன் அணைப்பால் இறுக்கினான்.
வள்ளியம்மை செய்திருக்கும் சூழ்ச்சியை அவளுக்கு விளக்க அதிர்ந்தே போனாள் நிலா. உடல் நடுங்க தன்னவனிடம் கோழிக்குஞ்சாய் ஒண்டி அமர தன்னையே அரணாக்கிய ஆரவ் தனக்குள் அவளை அடக்கி ஆதுரமாக அவளை வருடிக்கொண்டிருந்தான்.
ஆனாலும் வெளியில் அமைதியாக காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் எரிமலையாக வெடித்து சிதறிக்கொண்டிருந்தான். பின் இருவருமாக தயாராகி கீழே வர தர்ஷினியும் ராகவ்வும் கிளம்பிக்கொண்டிருந்தனர் டெல்லிக்கு.
ஏற்கனவே பேசி எடுத்திருந்த முடிவு தான். திருமணம் முடிந்ததுமே கிளம்பவேண்டும் என. அர்ஜூனும் ஸ்டெபியும் ஆரவ் நிலாவை அழைத்துக்கொண்டு நான்கு நாட்கள் கழித்து கிளம்ப ஏற்பாடாகி இருந்தது.
கீழே இவர்கள் செல்லும் போதே வடிவிடமும் நாராயணன் தாத்தாவிடமும் விஷயத்தை கூறியிருந்தார் தர்ஷினி. இவர்களுக்காகவே காத்திருந்து இருவருக்கும் இனிப்பை ஊட்டிவிட்டனர் தாத்தாவும், பாட்டியும்.
அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்க தர்ஷினி கூற அதன் படி விழுந்து எழுந்ததும் நிலாவின் முகத்தை நெட்டிமுறித்தார் வடிவு. அர்ஜூன் ஸ்டெபி சொல்லவே வேண்டாம். ஆரவ்வை தூக்கி சுற்றிவிட்டான் அர்ஜூன்.