நெஞ்சில் உறைந்த தேடல் – 24 (1)

தேடல் -24

          தஞ்சாவூரில் இருந்து பூம்பொழில் திரும்பியவர்கள் அவரவர் வீடுகளுக்கு செல்ல முத்தழகி வண்ணமதியிடம் அமுதாவின் வீட்டை ஒழுங்குபடுத்த உதவிவிட்டு வருமாறு கூறி அனுப்பினார். அமுதா கூட, 

“எதற்கு மதினி. நான் பார்த்துக்கறேன். மதியும் களைச்சு போய் தானே வந்திருக்கு. இப்போ என்ன, அதான் ஜீவா இருக்காளே? நாங்க பார்த்துக்கறோம்…” என கூறியும் முத்தழகி கேட்கவில்லை.

வண்ணமதியோடு சேர்ந்து கலகலத்துக்கொண்டே ஜீவாவும் அமுதாவும் வீட்டை ஒழுங்குசெய்து விரைவில் வேலையை முடிக்க அதற்குள் முத்தழகி உணவு வகைகளுடன் வந்துவிட்டார்.

“நீங்க சும்மாவே இருக்கவே மாட்டீங்களே மதினி? நாங்க செய்துக்க மாட்டோமா?…” என சலித்துக்கொண்டே அனைவருக்கும் சாப்பாட்டை எடுத்து வைத்து பரிமாற ஆரம்பித்தார் அமுதா.

“நான் என்ன ஒத்தையிலயா இத்தனையும் செய்யறேன்? சமையல்கார பொண்ண செய்ய சொல்லி கொஞ்சம் ஒத்தாசை செஞ்சேன் அதுக்கு. நீ எப்ப வேலையை முடிச்சு எந்நேரம் சமைச்சு சாப்பிட?அதான் நானே கொண்டாந்துட்டேன்…”

அமுதாவிற்கு முத்தழகியின் குணம் நன்றாகவே அத்துப்படி. அவர் எப்போதும்  இப்படித்தானே? என நினைத்து சிரித்துக்கொண்டார்.

குணசேகரன் இதையெல்லாம் பார்வையாளராக அமர்ந்து பார்த்தபடி தான் இருந்தார். வண்ணமதி மட்டுமே பேச்சுக்கொடுத்து அவரின் கேள்விகளுக்கு பதில் கூற அமுதாவும், ஜீவாவும் அவரிடம் பாராமுகம் காட்டுதலை நிறுத்தவே இல்லை.

பரிதாபமாக அமர்ந்திருந்த அவரை மதி உண்ண அழைக்க அனைவரோடும் இனி சேர்ந்து உண்ணும் காலம் கிடைக்காமல் போய்விடுமோ என எண்ணி வேகமாக வந்து அமர்ந்தார் சேகரன். அவரின் இந்த செயலில் அமுதாவிற்கு அழுகை பொங்கியது.

ஆனாலும் வெளிக்காட்டாமல் அமைதியாக அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார். ஜீவாவோ தந்தை என்று ஒருவர் தங்களோடு அமர்ந்திருக்கிறார் என்பதை கண்டுகொள்ளாமல் மதியுடனும், முத்தழகியுடனும் வளவளத்துக்கொண்டே உண்டுமுடித்தாள்.

பாத்திரங்களை மறுநாள் கொடுத்தனுப்புவதாக கூறி அமுதா சொல்லிவிட சிறிது நேரம் பேசிவிட்டு மறுநாள் நிலா மறுவீடு வரும் போது என்னெவெல்லாம் முறைகள் செய்யவேண்டும் என்று விவாதித்து விட்டு கிளம்பினர் மாமியாரும், மருமகளும். தங்கள் வீட்டிற்குள் நுழைந்ததுமே தினகரன் வந்துவிட்டதை அறிந்த முத்தழகி,

“நீ போய் புள்ளையை சாப்பிட கூட்டிட்டு வா. நான் எல்லாத்தையும் எடுத்து வைக்கிறேன். இன்னைக்கு என்னமோ சீக்கிரமே வந்தாச்சு போல…” என கூறிக்கொண்டே அடுக்களைக்குள் செல்ல மதி தங்கள் அறைக்கு சென்றாள்.

முத்தையாவும் வந்துவிட தினகரனோடு சேர்ந்து உண்டுமுடித்து சிறிது நேரம் தோட்ட வேலைகளை பற்றி விவாதித்துவிட்டு இருவரும் அறைக்குள் சென்றுவிட்டனர்.

மதி அப்போதும் உறங்க செல்லாமல் முத்தழகியிடம் ஆரவ் வீட்டில் நடந்த சுவாரஸியமான விஷயங்களை ஆவலாக பகிர்ந்துகொண்டாள். இருவரும் நேரம் போவதே தெரியாமல் பேசிக்கொண்டிருக்க முத்தையா தான் எழுந்து வந்து இருவரையும் உறங்க விரட்டினார்.

தங்களறைக்குள் நுழைந்து தாழிட்டவள் அப்போது வரை தினகரன் தூங்காமல் அமர்ந்திருப்பதை பார்த்தி அதிசயித்தவள்,

“என்ன மாமா இன்னும் தூங்காம இருக்கீங்க? தூங்கிருப்பீங்கன்னு நினச்சேன் நான்…” என்றபடி தண்ணீர் சொம்பை மேஜையில் வைத்துவிட்டு அங்கிருத்த பேப்பர்களை எடுத்து அடுக்கி வைத்தவள் கணவனிடமிருந்து எந்த பதிலும் வராமலிருக்க திரும்பினாள்.

“என்ன கேட்டுட்டே இருக்கேன், பதிலே சொல்லாம?…” என்றபடி திரும்பி அவனை பார்த்தவளிடம் வார்த்தைகள் வெளிவர போராடி மீண்டும் தொண்டைக்குள் அடைபட்டுக்கொண்டது.

“என்ன பார்வைடா சாமி இது? உயிரோட உயிர குடிக்கிற பார்வை. இதுவரை கணவனிடம் இதுபோன்ற பார்வைகளை கண்டதில்லையே. இதுதான் கணவனின் பார்வையோ?” என்றபடி உள்மனது அங்குமிங்கும் ஒரு நிலையில் இல்லாமல் எகிறி குதிக்க திணறிப்போனாள் வண்ணமதி.

“வாயை மூடு மூடுன்னு அத்தனை தடவை சொன்னேனே கேட்டியா மதி? இப்போ பேசேன். ஏன் வாயடைச்சு நிக்கிற?…” என்றபடி தன்னருகில் வந்து நின்றவனை ஒருவித எதிர்பார்ப்போடு விழிவிரித்து பார்த்திருந்தாள்.

பேச முயலவில்லை. பேச முடியவில்லை அதுதான் உண்மை. பாவி ஒத்த பார்வையில இந்த மதியையே வாயடைச்சு நிக்கவச்சுட்டானே? பதிலுக்கு துடுக்காக பேச முயன்றாலும் வார்த்தை வெளிவரவில்லை.

அவனின் மூச்சுக்காற்று தன் நெற்றியில் பரவ அதை உணர்ந்து சிலிர்த்து நின்றாள். இவனுக்கு இதெல்லாம் தெரியுமா? என்றபடி.

“நான் எதுக்கெல்லாம் சரிப்பட்டு வருவேன்னு இன்னைக்கு பார்த்திடலாமா மதி?…” என குறுஞ்சிரிப்போடு கைகட்டிக்கொண்டு கேட்க அப்போது அவளை விரல் நுனி கூட தீண்டாமல் உரசியும் உரசாமல் தன் அருகாமையை அவளுக்கு உணர்த்தி நின்றான்.

“இப்போவும் கேள்வி? செயல்ல ஒண்ணுத்தையும் காணோம்? இதுல சரிபட்டு வருவேனா இல்லையான்னு பார்க்காராம்?. நீங்க எதுக்குமே சரிப்பட்டு வரமாட்டீங்க மாமா…”  என முணுமுணுத்துவிட்டு நகர அடுத்த நொடி கொடுத்த அவனின் அணைப்பில் கிறங்கி நின்றாள்.

“இப்போ சொல்லு…” என தினகரன் கேட்க,

“இன்னும் கேள்வித்தாளே குடுக்கலை மாமா. அதுக்குள்ளே விடை எழுத சொன்னா எப்படி?…” என நிமிராமல் வாயாட அதற்கு மேலும் தாமதம் இல்லாமல் கேள்வி எழுப்பியவனே அதற்கான விடையை அவளுக்கு சொல்லிக்கொடுத்து தன்னை முழுவதுமாக ஒப்புவித்துக்கொண்டிருந்தான்.

———————————————————————–

விடிந்து சிறிது நேரம் ஆகியும் இன்னும் எழாமல் படுக்கையிலேயே சுகமாக உருண்டுகொண்டிருந்தான் ஆரவ். அந்த காலை அவனுக்கு அப்படி ஒரு உற்சாகத்தை அளித்தது.

பாத்ரூமில் இருந்து வெளியே வந்த நிலா இங்குமங்குமாக தன்னுடைய பெட்டிகளை புரட்டிக்கொண்டிருந்தாள். ஒரு அரைமணி நேரம் பொறுத்தவன் அவளிடம் என்னவென கேட்க,

“அம்மா குங்குமம் குடுத்திருந்தாங்க. அதை மதி அக்கா ஒரு பெட்டில வச்சிருக்கிறதா சொன்னாங்க. அதான் தேடிட்டு இருக்கேன்…” என்றபடி அவனை பார்க்காமல் கூறி பார்த்துக்கொண்டிருந்த பெட்டியில் இருந்த பொருட்களை மொத்தமாக சோபாவில் எடுத்து வைத்தாள்.

“பூஜை ரூம்ல குங்குமம் இருக்கும்டா நிலா. இரு நான் குளிச்சிட்டு போய் எடுத்து வரேன்…” என

“இல்லை, இல்லை. அது அம்மா எனக்காக பூஜை செஞ்சு வாங்கினது. எங்க குலதெய்வம் கோவில்ல. அம்மா மதி அக்காகிட்ட குடுத்துவிட்டதா சொல்லிட்டுபோனாங்க…” என சிறு தயக்கத்தோடு கூற,

“அடடா இதுக்கென்ன தயக்கம் உனக்கு? இப்போ என்ன நானும் சேர்ந்தே தேடி தரேன்…” தேட ஆரம்பித்துவிட்டான்.

இரண்டு பெட்டிகளிலும் இல்லாமல் போக அப்போதுதான் இன்னொரு பேக் ஒன்று வண்ணமதி அமுதா கொண்டு வந்ததாக தர்ஷினியிடம் கொடுத்தனுப்பியது ஞாபகம் வர அதை போய் எடுத்துவந்தான்.

அதில் சில புதிய பட்டுப்புடவைகளும் கொஞ்சம் நகைகளும் இருந்தது. எதற்கு இதெல்லாம் கொடுத்தனர் என தோன்றினாலும் நிலாவிடம் ஒன்றும் கூறவில்லை. அதற்குள் அமுதா ஆரவ்வின் மொபைலுக்கு அழைத்திருந்தார்.

நிலாவிடம் அதை பேச கொடுத்துவிட்டு தானே தேடினான். கையில் அவளின் ஹேண்ட்பேக் கிடைக்க அதற்குள் பார்க்க சில குங்கும விபூதி பொட்டலங்களுடன் அவளின் ஸ்டிக்கர் பொட்டு, ஹேர்பின் இத்யாதிகளுடன் கிடைக்க அதை எடுத்து வெளியே வைத்தவனின் கையில் அடுத்து கிடைத்தது  டாக்டர் ப்ரிஸ்க்ரிப்ஷன்.

அதுவும் நிலாவின் ஊரில் உள்ள ஹாஸ்பிட்டல் அது. பார்த்ததும் படித்தவன் அதிர்ந்துவிட்டான். ஒரு மருத்துவனான அவனுக்கு அதில் குறிப்பிட்டிருந்த மாத்திரைகளின் விபரம் புரியாமலில்லை.

திரும்பி நிலாவை பார்க்க முகம் நிறைய புன்னகையுடன் வெட்கசிவப்போடு பேசிக்கொண்டிருந்தாள். மறுபுறம் பேசுவது ஜீவா என புரிந்தது இவனுக்கு. அவளையே சில நிமிடம் ஆழ்ந்து பார்த்திருந்தவன் மெல்ல வெளியேறி தர்ஷினியை கையோடு அழைத்துவந்தான்.

அதற்குள் நிலாவும் பேசி முடித்திருக்க கையில் குங்குமத்துடன் திரும்பி பார்த்தாள். தர்ஷினி வந்ததன் காரணம் புரியாமல்,

“வாங்க அத்தை…” வரவேற்கும் விதமாக அழைக்க ஆரவ் முகத்தில் அடக்கப்பட்ட கோவம் தென்பட்டது. தன் வீட்டில் தான் பார்த்தாளே அவனின் ஆவேசத்தை.  அவனின் மாற்றம் சரியாக புலப்பட்டது அவளின் விழிகளில்.

திடீரென எதற்கு இந்த கோவம் என்பதை புரியாமலே அவனையே பார்த்திருக்க அவள் முகத்தில் தெரிந்த கலவரம் ஆரவ்வை நிதானிக்க செய்தது. உடனே தன் முகபாவனையை முயன்று மாற்றியவன் அவளை பார்த்து லேசாக இதழ் விரித்தான்.

இப்போது நிலாவிற்கும்  கொஞ்சம் ஆசுவாசமானது. தர்ஷினியை பார்க்க அவர் இயல்பாக,

“என்ன நிலா, எப்பவும் அம்மான்னு தானே கூப்பிடுவ? என்ன திடீர்னு அத்தை?…” என சிரித்துக்கொண்டே கேட்டவாறு அவளின் கைப்பற்றி சோபாவில் அமரவைத்தார். அவளின்  கையை சிறிதுநேரம் பிடித்திருந்தவர் ஆரவ்விடம் திரும்பி கண்கள் கலங்க ஆம் என்பது போல தலையசைத்தார்.

ஆரவ்விற்குள் எதுவோ பொங்கி பூரித்தது. நிலாவை தூக்கிக்கொண்டு சுற்றவேண்டும் போல எழுந்த பேராவலை அடக்கியபடி தெரிந்துகொள்ளவேண்டியதை பேச சொல்லி தாயிடம் கண் ஜாடை காண்பித்தான்.

பின் எடுத்துவைத்திருந்த துணிகள், பொருட்கள் அனைத்தையும் ஒதுக்கி தாயின் அருகில் தன்னையும் அமர்த்திக்கொண்டான் ஆரவ். அவனை வெளியில் செல்லும்படி தர்ஷினி பார்க்க பிடிவாதமாக அமர்ந்திருந்தான்.

பின்னர் தலையை உலுக்கிக்கொண்ட தர்ஷினி பேச்சை ஆரம்பித்தார்.

error: Content is protected !!