நெஞ்சில் உறைந்த தேடல் – 23 (3)

அனைத்து சடங்குகளும் நிறைவுற்று நிலாவின் ஊர் உறவுகள் கிளம்பி பஸில் ஏறி அமர அமுதாவிற்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. மீண்டும் மகளின் பிரிவு. துக்கத்தில் தொண்டை அடைக்க வெகு பிரயத்தனப்பட்டு அடக்கினார்.

தான் கலங்கினால் நிலா அதைவிட கலங்கிவிடுவாள் என முத்தழகி ஏற்கனவே கூறியிருந்ததால் ஓரளவிற்கு தன்னை சமன்படுத்திக்கொண்டார். மற்றவர்களிடம் சொல்லிவிட்டு நிலாவை நெருங்கியவர் அமைதியாக அணைத்துக்கொண்டார்.

“நிலாம்மா இது உன்னோட வாழ்க்கை. இதை நாங்களோ, இல்லை நீயோ தேடினது இல்லை. இறைவனா உனக்கு அமைச்சு குடுத்த வாழ்க்கை. இதை வாழ்க்கைன்னு சொல்றதை விட வரம்னு தான் சொல்லனும். இல்லைனா உன் கையை விட்டு போக இருந்தது திரும்ப உனக்கு கிடைச்சிருக்கே.  அதை நீ கடைசி வரைக்கும் காப்பாத்திக்கனும்…” அமுதாவின் உணர்ச்சிவசப்பட்ட பேச்சில் சுதாரித்த ஆரவ்,

“ஆண்டி இப்போ இந்த சுச்சுவேஷன்ல என்ன பேசனும்னு எனக்கு தெரியலை. ஆனா ஒண்ணு மட்டும் சொல்றேன். நீங்க கவலைபடாதீங்க. நிலாவை நான் நல்லா பார்த்துப்பேன்…” என்றவனை பார்த்து அமுதா கை கூப்ப,

“ஐயோ என்ன வேலை செய்யறீங்க?…” என்றபடி தர்ஷினி பதற,

“இல்லைங்க சம்பந்தியம்மா. நிச்சயமா நான் உங்களை உங்க குடும்பத்தை கை எடுத்து கும்பிடத்தான் செய்யனும். என் பொண்ணுக்கு ரெண்டு தடவை உயிர் கொடுத்திருக்கீங்க. அப்படிப்பட்ட நீங்க எல்லாரும் எங்களுக்கு சாமி மாதிரி. இதுக்கு கடைசி மூச்சு வரைக்கும் உண்மையா இருப்பேன்…” என அமுதா கண்ணீரோடு கூறினார்.

“அழுகையை நிறுத்தும்மா அமுதா. நாம விரும்பாத விஷயங்கள் நடந்து முடிஞ்சாலும் இப்போ அது நல்லதா தான முடிஞ்சிருக்கு. அதுக்காக நீ வருத்தபடாத. பாரு உன் பொண்ணும் அழறா இல்லையா. சந்தோஷமா அவளை வாழ்த்திட்டு கிளம்புமா…” என வடிவு கூற அவரின் முகத்தை தயக்கத்தோடு பார்ப்பதும் ஆரவ்வை பார்ப்பதுமாக அமுதா இருந்தார்.

“இப்போ என்ன மறுவீட்டுக்கு உன் பொண்ணும் மாப்பிள்ளையும் வரனும். அதானே? கண்டிப்பா நாளைக்கு நானே அனுப்பிவைக்கிறேன். இப்போ சந்தோஷமா?…” என வடிவு அமுதாவின் வயிற்றில் பாலை வார்த்தார்.

அவர் கூறியது ஆரவ்விற்கு பிடிக்கவில்லை என்றாலும் அந்த சூழ்நிலையில் மறுக்க விரும்பாமல் அமைதியாக நின்றான்.

“ரொம்ப நன்றிங்கம்மா. எந்த முகத்தை வச்சுக்கிட்டு இதை நான் கேட்கன்னு நினைச்சேன். ஆனா நீங்களே சொல்லிட்டீங்க. இப்போதான் எனக்கு நிம்மதியா இருக்கு…” என்றபடி கண்ணீரை துடைத்துவிட்டு நிலாவிற்கு அறிவுரைகளை கூறிவிட்டு கிளம்பினார்.

தினகரன் குடும்பத்தினரும் விடைபெற்று கிளம்ப சேகரன் தயங்கி நின்றார். அவருக்கு மகளிடம் பேசவேண்டும் என்ற ஆவல் நெட்டித்தள்ளியது. ஆனால் தன்னிடம் பேசுவாளோ என்னவோ என்று நினைத்தபடி நிற்க பார்க்கவே பரிதாபமாக போனது வடிவிற்கும் நாராயணனிற்கும்.

நிலாவே அவரின் தவிப்பை புரிந்தது போல தானே முன்வந்து, “அம்மாவையும் ஜீவாவையும் பார்த்துக்கோங்கப்பா. நீங்க கிளம்புங்க…” என கூற அவளை பார்த்து திகைத்தார்.

அப்போதுதான் அவருக்கு உரைத்தது. அமுதாவிடமும் ஜீவாவிடமும் ஏன் தினகரன் குடும்பத்திடமும் பேசும் போது நிலாவின் கண்களில் தெரிந்த அளவில்லா அன்பு நதி சேகரனிடம் பேசும் போது பாலைவனமாக வற்றியிருந்தது. செய்வதறியாமல் கண்கலங்கியபடியே தலையசைத்து அங்கிருந்து நகர்ந்தார்.

அவரையே பார்த்துக்கொண்டிருந்த நிலாவினால் அழுகையை கட்டுபடுத்த முடியவில்லை. ஊரே மெச்ச எப்படி இருந்த தன் தந்தை? இன்று கூனிக்குறுகி நிற்கிறாரே? என நினைக்க நினைக்க உள்ளம் வலித்தது.

அவளின் எண்ணம் புரிந்ததை போல தர்ஷினி ஆதரவாக அணைத்துக்கொண்டார். பின் அனைவரும் மண்டபத்தை காலிசெய்யும் வேலையை மற்றவர்களிடம் ஒப்படைத்துவிட்டு வீடு திரும்பினர்.

மாலையும் மயங்கி இரவும் கவிழ்ந்தது. உறவினர் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கலைய ஆரம்பிக்க அப்போதும் ஆரவ்வால் நிலாவை நெருங்க முடியவில்லை. இரவின் தனிமையில் அவளுக்காக காத்திருந்தான்.

அந்த அறையில் முதலிரவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் அழகாக செய்யபட்டிருந்தது. பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அறையின் ஏகாந்தம் அவனை மயக்கியது. மலர்களின் நறுமணத்தை ஆழ்ந்து சுவாசித்தவன் உடலெங்கும் புதுரத்தம் பாய நிலாவை தேடி அலைப்புற்றது அவனின் இதயம்.

ஆனால் நாராயணன் தாத்தாவோ நிலாவிடம் பேசினார் பேசினார் பேசிக்கொண்டே இருந்தார். ஆரவ் வந்து பார்க்கும் வரை பேச்சுக்கள் நீண்டுகொண்டே இருந்தது. ஒருவழியாக வடிவு வந்து நிலாவை அறைக்கு அனுப்பிவைக்க அறையின் வாசலில் ஆரவ் முறைப்போடு நின்றிருந்தான்.

காலையில் இருந்து அவனின் புன்னகை முகத்தையே பார்த்திருந்தவள் இந்த முறைப்பின் காரணம் புரியாமல் அவளின் இயல்பான பயந்த சுபாவம் தலைதூக்க மிரட்சியாக அவனை பார்த்தாள். அவளின் முகமாற்றம் கண்டதும்,

“ஹேய் பொண்டாட்டி. கூல். சும்மா இதுக்கெல்லாம் போய் பயப்படலாமா?…” என அவளின் கை பிடித்து அறைக்குள் அழைத்துச்செல்ல அவனோடு இணைந்தே நடந்தாள்.

உள்ளே சென்றதும் அவளை கட்டிலில் அமரவைத்தவன் அவளின் எதிரமர்ந்து,

“ம்ஹூம் இது சரியில்லை நிலா. இன்னைக்கு நமக்கு என்ன நாள்ன்னு தெரியும் தானே? இன்னைக்கு போய் நீ தாத்தாவோட அரட்டை அடிச்சிட்டு இருக்க. அதான் கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன்…”

அவனின் சமாதானத்தில் இயல்பிற்கு திரும்பிய நிலா மெதுவாக புன்னகைத்தாள்.  அவளின் இப்புன்னகை முகத்தை நிதானமாக ரசித்தவன்,

“என்னோட நிலா இந்த சின்ன விஷயத்துக்கெல்லாம் பயப்படமாட்டாளே? நான் முறைச்சா என்னனு கேட்டு என்னோடு சண்டை பிடிக்கிற நிலா எனக்கு திரும்ப எப்போ கிடைப்பா?…” என்றவனின் குரலில் காதல் தேனாக சொட்டியது.

அடுத்த அவனின் பேச்சுக்கள் அனைத்தும் நிலாவோடு தான் வாழ்ந்த வாழ்க்கையை பற்றியே இருந்தது. அவளை பிரிந்த இத்தனை நாட்களும் பேசாத பேச்சுக்களை அவளுக்காகவே காத்திருந்தது போல கொட்டி தீர்த்தான்.

அவனின் வார்த்தைகளில் நிலாவும் அவனும் வாழ்ந்த காதல் வாழ்க்கை இந்த நிலாமுகியை முற்றிலும் புரட்டிப்போட்டது. ஒவ்வொரு வாக்கியங்களும் அவளின் மனதை கனமாக்கியது. கணவன் என கூறியதுமே அவனோடான பந்தத்தை உணர்ந்தவள் காதலை உணரமுடியாமல் தவித்தாள்.

தான்தான் அவள். அவள் தான் தான். ஆனால்… ஆனால் இப்போது அந்த நிலாவின் காதல் தனக்குள் இல்லையே? தன்னால் அது போல காதலிக்க முடியுமா என்ற பெரும் சந்தேகம் அவளை ஆட்டிப்படைக்க ஆரம்பித்தது. அவளின் முகமாற்றம் கண்டவன்,

“நிலா என்னாச்சுடா?…” என பதற,

“உங்களுக்கு அந்த நிலாவை தான் பிடிக்குமா?…” உதடுகள் துடிக்க கலங்கிய விழிகளோடு கேட்டு ஆதரவற்ற குழந்தை போல் அவளுள்ளம் பரிதவித்தது.  ஒருஷணம் துணுக்குற்று பின் தன்னையே கடிந்துகொண்ட ஆரவ்,

“அவளும் நீயும் ஒண்ணுதாண்டா. உன்கிட்ட நாம வாழ்ந்த வாழ்க்கையை பகிர்ந்துக்கனும்னு தோணுச்சு. அவ்வளோதான். ஆனா எனக்கு இந்த நிலாவை அதைவிட பிடிக்குதே…” என கண்களில் மையலுடன் குறும்பாக பேசினான்.

மீண்டும் அதே பார்வை. எத்தனை எத்தனை ஏக்கங்கள். அவளுக்கான அவனின் தேடல் இன்றுவரை முற்றுபெறாமலே தொடர்கிறதே. அவளை ஆளவேண்டும் என்கிற ஆசை அவனுள் பிரவாகம் எடுக்க அவளை தன் அணைப்பிற்குள் முழுவதுமாக கொண்டுவந்தான்.

அதன் வேகம் தாளாமல் நிலாவின் தளிர்மேனி அதிர்ந்து தயங்கி தடுமாற தன் பிடியை தளர்த்தி அவளை பார்த்தான். அவனுக்கு அவள் தன் மனைவி நிலா என்றாலும் அவளுக்கு ஆரவ் புதிது தானே. இயல்பான கூச்சம் அவளை தடுக்க அவனை விட்டு விலக முயன்றாள்.

அவள் உடனே வேண்டுமென்று மனதில் பேயாட்டத்தை கட்டுக்குள் கொண்டுவந்து, “ஊப்ஸ்” என காற்றை இழுத்து விட்டவன் பின் மென்மையாக அவளை அணைத்துக்கொண்டான். நிலாவின் பார்வையை உணர்ந்து,

“தூங்குடா நிலா. எனக்கு நீ பக்கத்தில இருந்தாலே போதும். மெதுவா பார்த்துப்போம்…” என்று நெற்றியில் இதழ் பதித்து அவளை தன் நெஞ்சோடு சாய்த்து உறங்கவைத்தான்.

அவனின் இச்செயலே நிலாவின் மனதில் அவனின் மீதான நேசத்தை மொட்டுவிட செய்தது. நிச்சயம் ஒரு நாள் ஆரவ்வின் காதல் அதை மலர்ந்து விரிந்து பூக்க செய்யும்.

ஆரவ்வின் அணைப்பில் முதலில் தயங்கி நெளிந்தவள் அவனை விலக்கமுடியாமல் பின் அடங்கி உறங்க ஆரம்பித்தாள். அவளின் அவஸ்தை ஆரவ்விற்கு புரிந்தாலும் அவளை விலக அனுமதிக்கவில்லை அவன் பிடிவாதம்.

“எத்தனை நாள் என்னை விட்டு தள்ளியே இருப்பன்னு நானும் பார்க்கறேன் மிசஸ் ஆரவ்…” என மனதிற்குள் சவால் விட்டுக்கொண்டவன் தானும் வெகுநாட்களுக்கு பின் நிம்மதியாக தூங்கிப்போனான் இதழ்களில் உறைந்த புன்னகையோடு.

அவனுக்கு விடியலில் காத்திருக்கும் அதிர்ச்சி அறியாமல்…

error: Content is protected !!