நிலாவிற்கு தலையில் முடி வைத்து பின்னல் போடபட்டிருந்தது. எந்தவித வித்யாசமும் இல்லாமல் அது அவளை இன்னும் அழகாக காட்டியது. நலுங்கு வைபவம் ஆரம்பிக்கப்பட வேகமாக சென்றவன் முன்வரிசையில் அமர்ந்துகொண்டான் அவளை ரசிக்க ஏதுவாக. ஆனால் நாராயணன் விட்டால் தானே?
“அவனை அங்கே செல் இவரை கவனி. அவரை அழைத்து சாப்பிட செல்…” என பம்பரமாக சுழலவிட தாங்கமுடியாமல் வடிவிடம்,
“உங்க புருஷனுக்கு இருக்கு நாளைக்கு வேடிக்கை. என் கல்யாணம் மட்டும் முடியட்டும். வச்சிக்கறேன் அவரை…” என கடித்து குதறினான்.
பின் அவனையும் நலுங்கு வைக்க அழைக்க இதற்கு தானே காத்திருந்தாய் என்பது போல வேக எட்டுக்களுடன் நிலாவை அடைந்தான். அவனின் வேகத்தில்,
“அடேய் அடங்குடா. கெத்து மச்சி கெத்து…” என ஸ்டெபி கூற அவளை யார் நீ என்பதை போல பார்த்துவிட்டு கைகளில் சந்தனத்தை அள்ளிக்கொண்டு நிலாவை நோக்கி குனிந்தான். ஆனால் பூசவில்லை.
தன்னருகில் நிற்பது ஆரவ் என்பதை அறிந்திருந்த நிலா நிமிரவே இல்லை. வெட்கம் ஆட்கொண்ட மனதுடன் நாணம் கொடுத்த செம்மையை முகத்தில் பூசியபடி படபடப்போடு இருந்தாள். சில நொடி துளிகள் கடந்த பின்னும் ஆரவ் கைகள் தான்னை தீண்டப்படாமல் அப்படியே இருக்க இப்போது நிமிர்ந்துபார்த்தாள்.
அந்த பார்வையில் இருந்தது என்ன என கண்டுகொள்ளமுடியாமல் உள்ளம் தத்தளிக்க ஸ்தம்பித்து அமர்ந்திருந்தாள்.
அவனின் கண்களின் பாஷைகள் காட்டிய வித்தைகள் புரியாமல் அவனின் விழிவீச்சை சில நொடிகளுக்கு மேல் தாங்கி நிற்கமுடியாமல் இமை தாழ்த்தி நாணக்குடைபிடித்தாள் ஆரவ்வின் நிலவவள்.
அவளின் இந்த பரிமாணம் கூட ஆரவ்விற்கு பிடிக்கத்தான் செய்தது. இதற்கு மேலும் தாங்கமாட்டாள் என்பதை உணர்ந்தவன் அவளின் கன்னங்களில் சந்தனத்தை பூச நிலாவிற்கு தான் நடுக்கமாக இருந்தது.
முதல்நாள் அவனின் அணைப்பில் அடங்கியிருந்த போது உணர்ந்ததென்ன? இப்போது இருக்கும் உணர்வு அவளுக்கு புதிதாய் எதையோ உணர்த்தியது. அவஸ்தையாக அமர்ந்திருந்தவளை பார்த்தவனின் முகத்தில் இளம் புன்முறுவல்.
நிலாவின் முகமோ அப்படி ஒரு ஜொலிப்பை காட்டியது. அவளருகில் வண்ணமதியும் ஜீவாவும், ஸ்டெபியும் உடன் நிற்க ஆரவ்வை காண்பித்து அவளை கிண்டல் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திகொண்டிருந்தனர்.
இதையெல்லாம் சேகரன் பார்த்துக்கொண்டுதான் இருந்தார். பெண் சேரவேண்டிய இடத்தில் சேர்ந்தாலும் ஏனோ அவரால் முழுதாக மகிழ முடியவில்லை. வந்ததிலிருந்து அவரும் ராகவ்வை பார்த்துக்கொண்டே தான் இருந்தார்.
யாராவது யார் பெண்ணின் தகப்பனார் என்று கேட்டால் தயங்காமல் அழைத்துவரும் ராகவ் சேகரனை அறிமுகப்படுத்தியதோடு நகன்றுவிடுவார். ஒரு வார்த்தை கூட ராகவ்வும் பேசவில்லை. சேகரன் பேச அவர் இடம் கொடுக்கவும் இல்லை. அதுவே சேகரனின் மனதை வாள்கொண்டு அறுத்தது.
வள்ளியம்மை குடும்பத்துடன் வந்திருந்தாலும் ஒரு ஓரத்தில் அமர்ந்துவிட்டார் கார்த்திக்கின் கண்காணிப்பில். கார்த்திக் அவரை ஒரு கைதி போல நடத்தியது அவரை பெரும் கோபத்திற்குள் ஆக்கியது. ஆனாலும் அவரால் எதுவும் செய்யமுடியவில்லை. அர்ஜூன் இவர்களை கண்டதும் ஒரு மிரட்டல் மிரட்டித்தான் அமரவைத்தான்.
இவர்களின் கெடுபிடிகள் தளர்த்தப்பட்ட ஒரே ஆள் தயாளன் தான். அவன் வீட்டு திருமணம் போல அர்ஜூனோடு சேர்ந்துகொண்டு வேலைகளில் பங்கெடுத்து அப்படியாவது ஜீவாவிற்கு தன் மீதான கோபம் குறையுமென்று பார்த்தான். ஆனால் அதை ஜீவா கண்டுகொள்ளவே இல்லை.
முத்தழகியையும் அமுதாவையும் கைகளில் பிடிக்கமுடியவில்லை. அப்படி ஒரு உற்சாகம். முகத்திலும் செய்யும் வேலையிலும் அது அப்படியே பிரதிபலித்தது. இடையிடையே நிலாவை கண்டு பூரித்து போயினர். முத்தையா தினகரனோடு வந்துவிடுவதாக கூறிவிட்டார்.
ஒருவழியாக நலுங்கு வைபவம் முடிந்து மறுநாள் அழகாக விடிந்தது. காலையிலேயே வேஷ்டி கட்ட மூக்கால் அழுது, மூச்சுவிடாமல் முணங்கி, சத்தமாக சண்டையிட்டு என அர்ஜூனை கடுப்பேற்றி ராகவ்வை பாடாய் படுத்தி வேஷ்டியை கட்டிக்கொண்டு வந்திருந்தான் ஆரவ்.
அதுவும் ஒரு கண்டீஷனோடு. இடையில் வேஷ்டி அவிழ்ந்து விட்டால் உடனடியாக அர்ஜூனின் வேஷ்டியை உருவிகொடுத்துவிட வேண்டும் என்ற நிபந்தனையில் அர்ஜூனை பல்லை கடிக்கவைத்தான்.
உற்றார் உறவினர் புடை சூழ ஏற்கனவே மனைவியானவளை அக்னி வலம் வந்து மங்களநாண் கோர்க்கப்பட்ட மஞ்சள் கயிற்றை பெண்ணவளுக்கு அணிவித்து மூன்று முடிச்சிட்டு தன் இணையாக்கிக்கொண்டான்.
அப்படி ஒரு நிறைவு ஆரவ்வின் முகத்தில். தர்ஷினிக்கு சொல்ல வார்த்தைகளே இல்லை. தாங்கள் செய்துவைத்த திருமணத்தை விட இத்திருமணம் அவரின் மனதை நிறைத்திருந்தது.
அவருக்கு நிலாமுகி அவளும் மீண்டு வந்து தன் மகனின் சந்தோஷத்தையும் மீட்டுடுத்திருக்கிறாள் என்று தான் தோன்றியது. அவளை தவிர வேறு யாராலும் ஆரவ்விற்கு இப்படி ஒரு ஆனந்தத்தை வழங்க முடியாது என்றே தர்ஷினிக்கு தோன்றியது.
தன் கைகளில் இருந்த பூக்களை தூவி மணமக்களை ஆசிர்வதித்த நாராயணன் தாத்தா அமைதியாக இல்லாமல்,
“இதுதாண்டா நம்ம கலாச்சாரம். இதுதான் நம்ம பாரம்பரியம். இதுதாண்டா நம்ம பண்பாடு…” என மீசையை தடவியபடி நீட்டிமுழக்க ஆரவ் அவரை பார்த்து முறைத்தான். அதில் அசடு வழிந்தவர்,
“ஏலே செல்லப்பா வாழைத்தாரை கொண்டுபோய் குடுக்க சொன்னேனே எங்க போன?…” என்றபடி பேச்சை மாற்றி நகர அங்கே சிரிப்பு சத்தம் அலையாக மண்டபத்தை நிரப்பியது.
“உன் தாத்தாவுக்கு எதாச்சும் சொல்லலைனா இன்னைக்கு பொழுது சாயாது. வெளிலதான் புலி. உன்கிட்ட மட்டும் எலி…” என வடிவு கேலிபேச அவ்விடமே மகிழ்ச்சியால் கிடுகிடுத்தது.
திருமணம் நல்லவிதமாக முடிய மணமக்களை அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வந்து வாழ்த்த ஆரம்பித்தனர். அவர்களுடன் தினகரனும் வண்ணமதியோடு இணைந்துகொண்டான். சரியாக முகூர்த்த நேரத்திற்கு வந்துவிட்டவன் முத்தையாவோடு அமர்ந்துகொண்டன்.
ஹாஸ்பிட்டலில் வைத்து நிலாவை கண்டதும் அவனின் காதல் கொண்டிருந்த நெஞ்சம் ஒருகணம் அதிரத்தான் செய்தது. ஆனால் இன்று அவளை இன்னொருவனின் மனைவியாக இக்கோலத்தில் காணும் போது கொஞ்சமும் தடுமாறவில்லை.
அவனின் மனம் சில மணித்துளிகளுக்கு பின் மனைவியவளை தேடி தவிக்க ஆரம்பித்தது. வண்ணமதியும் வந்துவிட கூட்டம் குறையவும் நிதானமாக மனைவியோடு வந்து தன் வாழ்த்தை தெரிவிக்க சென்றான்.
“இவர் தான் என்னோட மாமா. முத்தையா மாமாவோட மகன்…” என நிலா மெல்லிய குரலில் அறிமுகப்படுத்த ஆரவ் உடனே தினகரனை அன்போடு அணைத்து பின் விடுவித்தான். தினகரனை பார்த்ததும் பிடித்துவிட்டது ஆரவ்விற்கு.
அவனின் முகத்தில் இருந்த ஆளுமைக்கு ஆரவ் ரசிகனாகவே மாறினான் அக்கணம். ஏற்கனவே தயாளன் கூறியதில் அப்படி ஒரு மரியாதை இருந்தது தினகரன் மீது. இப்போது அது இன்னும் அதிகமாகியது அவனை பார்த்ததும்.
“தேங்க்ஸ்…” என்றான் உளமார. தினகரனுக்கு புரிந்துபோனது ஏனென்று. மென் சிரிப்போடு தினகரன் அதை ஏற்க,
“எதுக்கு தேங்க்ஸ்?…” என வண்ணமதி ஆரவ்விடம் கேட்க,
“மதி. வா போகலாம்…” என தினகரன் அவளை அழைத்தான். அதற்குள் ஆரவ்,
“நிலா என்னோடு திரும்பவும் வந்து சேர இவர் தானே காரணம். அதுக்கு என்னோட நன்றியை சொன்னேன் சிஸ்டர்…” என நிலா அவனை பார்த்து திகைத்தாள். தன் வாழ்வை காப்பாற்றி கொடுத்தது இவரா என்று தினகரனை நன்றிப்பார்வை பார்த்தாள்.
“ஐய்ய இதுக்கெல்லாம் தேங்க்ஸ் சொல்லுவாங்களா அண்ணே? நிலா புள்ளைக்கு இவங்க செய்யாம வேற யார் செய்வாங்களாம்? இவரோட கடமை அது…” மேலும் மதி என்ன கூறியிருப்பாளோ? மேடையென்றும் பாராமல் தினகரன் அவளை அருகில் இழுத்து,
“அடங்கமாட்டியா நீ? பேச ஆரம்பிச்சா நிறுத்தறதே இல்லை. வாயை மூடு மதி…” என கிசுகிசுப்பாக கூற அவர்களை சுவாரஸ்யமாக ஆரவ் பார்த்திருக்க நிலா அதிசயமாக பார்த்தாள்.
பின்னே தினகரன் எவரிடமும் இப்படி தழைந்து பேசுபவன் இல்லையே. இவர்களை கண்டுகொள்ளாமல் மதியோ,
“ஏன் அடங்கனும்? உங்களால முடிஞ்சா என்னை அடக்கிப்பாருங்களேன்…” என சவாலாக கூற,
“ஊருக்கு வா நீ. அப்போ தெரியும். என்னால உன்னை அடக்கமுடியுமா முடியாதான்னு…”என்க அப்போதும் விடாமல்,
“அட போங்க மாமா. நீங்க அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டீங்க…” என்ற மதி இதை சப்தமாக கூறி வைக்க இதை கேட்டு ஆரவ் வாய்விட்டே சிரித்துவிட்டான். அவனின் சிரிப்பில் அனைவரும் ஒருமுறை இவர்களை திரும்பி பார்த்தனர்.
“சூப்பர் பாஸ். உங்களை பத்தி தயாளன் சொன்னது வேற. ஆனா சிஸ்டர் பக்கத்துல டோட்டலா வேற ஆளா இருக்கீங்களே?…” என தினகரனை வார அவனிற்கு வெட்கம் பிடுங்கி தின்றது. மதியை முறைக்க முயன்று தோற்றான் தினகரன்.
“சத்தியமா மாமா நீங்கதானா? நம்ம ஊர்ல நீங்க வெட்கப்பட்டீங்கன்னு சொன்னா கூட நீ லூஸான்னு என்னைத்தான் பார்ப்பாங்க. அப்டியே இருங்களேன். உங்களை ஒரு போட்டோ எடுத்துக்கறேன்…” என ஜீவா தன் பங்கிற்கு அவனை கேலி செய்தாள்.
முகத்தை மறைக்க அரும்பாடுபட்டு தோற்றவன் விட்டால் போதும் என்பதை போல நிலா, ஆரவ்விடம் ஒரு தலையசைப்பை கொடுத்துவிட்டு வண்ணமதியை இழுத்துக்கொண்டு கீழே இறங்கிவிட்டான். அவர்களை தொடர்ந்தது மேடையிலிருந்தவர்களின் புன்னகை கூச்சல்.