தேடல் – 23
அமுதாவை அவர் வீட்டில் சமையல் எதுவும் செய்யவிடாமல் உதவிக்கு ஆள் வைத்துக்கொண்டு முத்தழகியே ஒரு பெரிய விருந்தை தயார் செய்துவிட்டார் ஆரவ் குடும்பத்தினருக்கு.
வள்ளியம்மையும் தயாளனும் வெளியேறியும் ஜீவாவின் பேச்சு ஓயவில்லை. கோவத்தில் என்ன செய்யவென தெரியாமல் அமுதாவிடம் படபடவென பொறிந்துகொண்டே தான் இருந்தாள்.
“இப்படி ஒரு அம்மாவுக்கு மருமகளா நான் போனா என்னை அந்தம்மா ஜோசியர் சொன்னார்ன்னு என்ன வேணும்னாலும் செய்யுமே? எந்த நம்பிக்கையில் அவரை நான் கட்டிப்பேன்னு நினைச்சார்?…” என வாய்க்கு வந்தபடி பேச அது அர்ஜூனிற்கும் ஸ்டெபிக்கும் கேட்கத்தான் செய்தது.
வண்ணமதிதான் ஜீவாவை அரட்டி அவள் வாயிற்கு பூட்டை போட்டு தன் வீட்டிற்கு செல்லுமாறு அனுப்பி வைத்தாள். அங்கே சென்று முத்தழகிக்கு உதவியாக இருக்கும்படி.
இங்கே நிலாவின் வீட்டில் ஸ்டெபியும் வண்ணமதியும் அவளோடு இருந்தனர். அர்ஜூனிற்கும் மற்றவர்களுக்குமே முத்தழகி உணவை கொடுத்தனுப்பி விட்டார்.
முத்தையாவிற்கு சந்தோசம் தாளமுடியவில்லை. நாராயணன் குடும்பத்தை கொண்டாடிவிட்டார். தான் செய்த பாவத்திற்கு பரிகாரமாக இதை அவர் நினைக்கவில்லை. தான் வளர்த்த பெண்ணிற்கு நல்லதொரு வாழ்க்கை அமைந்துவிட்ட மகிழ்ச்சி அவரை புரட்டிபோட்டது.
தன் வயதை மறந்து சிறுபிள்ளை போல அவர்களை கவனித்துக்கொண்டார். அதிலும் ஆரவ்வை நொடிக்கொருதரம் பார்த்து பார்த்து பூரிக்கத்தான் செய்தார். முத்தழகிக்குமே இவரது செயல் வித்தியாசமாக அதிகப்படியாக தான் தோன்றியது. அதை முத்தையா உணர்ந்தாலும் கண்டுகொள்ளவில்லை.
தினகரன் இவர்கள் வரும் நேரத்தில் வெளியூருக்கு சென்றுவிட்டதால் அவனை பார்க்கும் வாய்ப்பு ஆரவ்விற்கு கிடைக்கவில்லை. ஆனாலும் அவன் தயாளன் மூலம் தொடர்பில் இருந்ததை அறிவர் யாருமில்லை.
தினகரன் சேகரன் வீட்டில் நாராயணன் தாத்தா சூழ்நிலையை தனக்கு சாதகமாக மாற்றி பேசியதை அறிந்து மனதில் மெச்சிக்கொண்டான். இவர்கள் சாதாரணப்பட்டவர்கள் இல்லை என நினைக்கையில் உதடுகளில் விரிந்த புன்முறுவல்.
அதே நேரம் நிலா சேகரனிடம் பேசியதை கூற அப்போது அவர் இருந்த நிலை தினகரனுக்கு மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியது. எப்பேர்ப்பட்ட மனிதர், இப்படி சம்பந்தம் கொண்ட இடத்தில் மரியாதை இழந்து நின்றுவிட்டாரே என எண்ணி வேதனை கொண்டான்.
அதைவிட பெரும் கவலை தயாளன் கூறியது. அவன் ஜீவா பேசிய அனைத்தையும் தினகரனுக்கு கூறி புலம்பி தீர்க்க தன் காதலை பற்றி மட்டுமே பேசிய அவனின் பேச்சில் பொறுமை இழந்தவன்,
“தயா நீ ஒன்னும் ஜீவாவை இப்போவே கட்டிக்கனும்னு நினைக்கலையே?…” என அவன் காட்டமாக கேட்க,
“ச்சே ச்சே என்னண்ணே இப்படி கேட்டுட்டீங்க? அவ சின்னபொண்ணு. இப்போதான் காலேஜ் முதல் வருஷம் படிக்கிறா. அவ படிப்பை முடிச்சதும் தான் எங்க கல்யாணம். அதில் உறுதியா நான் இருக்கேன்….”
“ஹ்ம். அப்போ நீ பொறுமையா இருக்கிறது தான் நல்லது. உன்னோட காதலை பத்தி நான் சொல்ல சொன்னதுக்கான காரணம் உன் மனசுல என்ன இருக்குன்னு உன் அம்மாவும் தெரிஞ்சிக்க தான்…”
“ஆனா ஜீவா…”
“காலம் நீண்டுகிடக்கு தயா. யார் மனசும் எப்போ வேணாலும் மாறலாம். நீதான் காத்திருக்கனும். நீ சொன்னதும் ஜீவா உன்னை ஏத்துக்கனும்னு நினைக்கிறது பைத்தியக்காரத்தனம். அவளுக்கும் யோசிக்க கொஞ்சம் டைம் குடு…” என பொறுமையாக எடுத்து கூற,
“அம்மா மேல இருக்கிற கோவத்துல நான் வேண்டாம்னு முடிவெடுத்துட்டா என்ன செய்ய?…” என மீண்டும் ஆரம்பித்த இடத்திலேயே வந்து நிற்க,
“அதுக்காக அவளை கட்டாயப்படுத்த போறியா? உன் அம்மாவால அவ அக்கா பாதிக்கப்பட்டவ. அப்படித்தான் பேசுவா. உன்னோட காதலை அமைதியா அவளுக்கு புரியவை. உண்மையான காதல் விரும்பினவங்களை கஷ்டபடுத்தாது…” இதை மனதின் அடி ஆழத்திலிருந்து உணர்ந்து தான் கூறினான் தினகரன். அவனும் உண்மையாக காதலித்தவன் ஆகிற்றே.
தினகரனின் சொல்படி கேட்டு சரியென கூறினான். ஜீவாவிற்காக அவளின் காதலுக்காக காத்திருக்க முடிவெடுத்தான். அவனின் காதல் கைகூடுமா என்பது தினகரன் கூறியது போல காலத்தின் மாற்றத்தில் இல்லை. ஜீவாவின் முடிவில் தான் உள்ளது.
சில காயங்கள் காலப்போக்கில் காணாமல் போககூடியவை. ஆனால் மனதின் ரணம் ஆராதிருந்தால் எத்தனை காலங்கள் ஓடினாலும் மறையாத வடுவாக தங்கிவிடும் என்பதை தயாளன் உணராமல் விட்டுவிட்டான்.
ராகவ் காலை உணவை முடித்ததும் முத்தையாவை அழைத்துக்கொண்டு அர்ஜூனோடு சேர்ந்து ஊரில் வேண்டியவர்களுக்கு எல்லாம் அழைப்பு விடுக்க சென்றனர். உடன் சேகரனும். வருகிறாயா என்று முத்தையா கேட்டதுமே மறுக்காமல் ஓடிவந்தார் சேகரன்.
ஆனால் அவரை ராகவ் தான் கண்டுகொள்ளவே இல்லை. ஒதுங்கியே நின்றார். ஆனால் மற்றவர்களிடம் திருமணத்திற்கு அழைக்கும்போது மென்புன்னகையோடே குறையில்லாமல் அழைத்தார்.
அன்று மாலையே நிலாவை அழைத்துக்கொண்டு தஞ்சாவூர் நோக்கி சென்றனர் நாராயணன் குடும்பத்தினர். மறுநாள் மாலை நலுங்கு வைபவமும், அதற்கடுத்த நாள் காலை கல்யாணம் என முடிவாகியதால் அவர்கள் கிளம்பும் முன்பே ஊரில் உள்ளவர்களுக்கு வந்து செல்ல பஸ் ஏற்பாடு செய்யப்பட்டது முத்தையாவின் மூலம்.
இதிலும் சேகரன் நுழைந்து தான் அந்த பொறுப்பை ஏற்றுகொள்வதாக கூற ஆரவ் பிடிவாதமாக மறுத்துவிட்டான். குணசேகரனிடம் இருந்து எதையும் பெற அவன் விரும்பவில்லை. அவனின் கூற்றை அவனின் குடும்பத்தாரும் ஆதரித்தனர்.
அதையே நிலாவின் குடும்பத்தாரும் ஆதரிக்க துவண்டு போனார் சேகரன். அமுதா எதுவும் வாய்திறந்து சொல்லவில்லை என்றாலும் ஜீவா அவருக்கும் சேர்த்து பேசிவைத்தாள்.
“அப்பா குடுப்பாருன்னுதான் மாமா அக்காவை முன்னாடியே கல்யாணம் செய்துட்டாராக்கும்? அவர் இந்தளவு கல்யாணத்துக்காவது அனுமதிக்கிறாறேன்னு சந்தோஷப்பட்டுக்கட்டும். செய்றத எல்லாம் செஞ்சுட்டு இப்போ வந்து தேவையில்லாம அத செய்றேன் இதை செய்றேன்னு கடுப்பேத்தாம இருக்க சொல்லுங்கம்மா…” எனவும்,
நேரடியாக கூட தன்னிடம் பேச விரும்பாத தன் சின்னபெண்ணின் குத்தல் பேச்சு சேகரனின் புண்பட்ட மனதை மேலும் வலிக்க செய்தது. நிலா அனைத்தையும் கேட்டும் ஊமையாகிவிட்டாள். தன்னிடம் பேச வந்த தகப்பனை ஏறெடுத்தும் பார்க்காமல் புறக்கணித்தாள்.
மாலை நிலா கிளம்பும் முன் ஜீவாவும் வண்ணமதியும் அவளுடன் செல்வதாக ஏற்பாடு செய்யப்பட்டு தினகரனுக்கும் முத்தழகி தகவல் தெரிவித்து விட்டார். அவனிடம் எந்த மறுப்பும் இல்லை.
மற்றவர்கள் மறுநாள் ஊராரை அழைத்துக்கொண்டு கிளம்புவதாக முடிவு செய்யப்பட்டது. அதன் படியே மறுநாள் கிளம்ப தினகரன் திருமணத்தன்று வருவதாக கூறிவிட்டான்.
தஞ்சாவூர் நுழைந்ததும் நாராயணன் தாத்தாவிற்கு உற்சாகம் தாளவில்லை. ஏனோ சந்தோஷத்தில் கண்கள் கலங்கியபடியே இருந்தது. எதற்கும் தர்ஷினியை தான் அழைத்தார். அதை செய், இதை எடு என்று அவரை படுத்தி எடுத்துவிட்டார் நாராயணன் தாத்தா. வடிவுதான் பொறுக்கமாட்டாமல்,
“ஏன் இப்படி போட்டு அவளை வேலை வாங்கறீங்க? புள்ள களைச்சு போய்டும். கொஞ்சம் ஓய்வெடுக்கட்டும்…” என பரிந்துபேச,
“அத்தை எனக்கு எந்த டயர்டும் இல்லை. இது நம்ம வீடு. உங்க பேரன் கல்யாணம். நான் செய்யாம வேற யார் இதை செய்வாங்க?…” என உரிமையோடு சிறு அதட்டல் குரலில் தர்ஷினி கூற நாராயணன் தாத்தாவிற்கு கேட்கவும் வேண்டுமா?
பெரிய திருமணமண்டபத்தை புக் செய்து சமையலுக்கு, வாத்தியங்களுக்கு இதர கவனிப்புகளுக்கும் என அனைத்து பெரும்பான்மையான வேலைகளையும் முடித்திருந்தார். அவர் செய்திருந்த ஏற்பாட்டிலேயே அனைவரும் அசந்துபோயினர்.
எப்படி தான் தகவல் கூறி ஒரே நாளில் இத்தனை கோலாகலமாக ஏற்பாடு செய்திருப்பார் என தர்ஷினியால் வியக்காமல் இருக்கமுடியவில்லை. வீடு முழுவதும் உறவுகளால் நிறைந்திருக்க நெஞ்சை முட்டும் சந்தோஷத்தில் ராகவ்.
பெண்ணை அழைத்து வந்தது முதல் ஆரவ்வின் கண்களிலே காட்டவே இல்லை. அவனும் எப்படியெல்லாமோ முயன்று பார்த்து முடியாமல் வடிவிடம் முறையிட அவரோ தாத்தாவை கேள் என்றுவிட்டார்.
“இந்த தாத்தா கூட்டிட்டு வந்து வில்லன் வேலை பார்க்கறாரே?…” என பல்லை கடித்தான். நிலாவை அழைத்துக்கொண்டு கிளம்பும் போதே அவள் ஒரு காரில் ஆரவ் ஒரு காரில் என பிரித்துவிட்டார் நாராயணன்.
அதிலிருந்தே புகைந்துகொண்டிருந்தவன் மேலும் அவளை பார்க்கமுடியாத தவிப்பில் தன் தாத்தாவை தேட அவர் இவனிடம் அகப்பட்டால் தானே?
திருமணத்திற்கு முதல் நாள் மாலை நலுங்கிற்கு ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்க ஆரவ் தான் அலம்பலை ஆரம்பித்துவிட்டான்.
“மாட்டேன் மாட்டேன். என்னால இந்த காஸ்ட்யூம் எல்லாம் போடமுடியாது. எல்லார் முன்னாடியும் இது கீழே விழுந்தா நான் தான் ப்ரீ ஷோ காமிச்சு ஷேமா நிக்கனும்…” என கையில் மறுநாள் கட்டவேண்டிய வேஷ்டியை வைத்துக்கொண்டு கூப்பாடு போட்டு வீட்டையே அதிரவைத்தான்.
தர்ஷினி, ராகவ், அர்ஜூன், கார்த்திக் என மாற்றி மாற்றி கூறியும் கேட்கும் பாடாக தெரியாததால் வடிவு பாட்டி நாராயணனிடம் கூற தாத்தாவோ,
“வேஷ்டி கட்டினா கல்யாணம். இல்லைனா அவனை மருந்து சீட்டு எழுத டெல்லிக்கு கிளம்ப சொல்லு…” என கறாராக சொல்லியபின் ஆரவ் கப்சிப்.
“ஏன் மாம் இதை எல்லாம் எனக்கு சொல்லிக்குடுத்து வளர்க்கலை? மிஸ்டேக் உங்க மேல தான். வெரி பேட். வெரி பேட்…” என கூறியபடி நடந்ததற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றபடி அந்த அறையை விட்டு வெளியேற மற்றவர்கள் வாய்விட்டு சிரித்தனர்.
“தர்ஷிமா இந்த சேட்டையெல்லாம் என்னனுதான் இத்தனை மாசம் மூட்டைகட்டி வச்சிருந்தானோ? ஒன்னு மட்டும் கன்பார்ம். இனி எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு நம்மை ஒருவழி ஆக்கிடுவான் இவன்…” என்றபடி அர்ஜூன் கூற ராகவ்வும், தர்ஷினியும் அதை ஆமோதித்தனர்.
ஆரவ் மண்டபத்தை வந்தடைந்ததும் விழிகளை சுழலவிட்டு நிலா வந்துவிட்டாளா என தேடி பார்த்தவன் இல்லை என்றதும் ஸ்டெபிக்கு அழைத்தான்.
“பேப் என் டார்லி எங்க?…” என துள்ளல் குரலில் கேட்டவனிடம்,
“பார்ரா, நேத்து வரை பேசாமடந்தையா இருந்துட்டு இன்னைக்கு இப்படி குதிக்கிற? எல்லாம் வருவோம் வருவோம். நீ மொபைலை ஆப் பண்ணு…” என கட் செய்ய கடுப்பாகிவிட்டான்.
மீண்டும் அழைக்க விழைய நிலாவின் ஊரிலிருந்தும், இங்கிருக்கும் உறவினர்களும் வந்துவிட்டிருக்க வந்தவர்களை வரவேற்க ராகவ் அழைத்துச்சென்றுவிட்டார்.
சிறிது நேரம் தெரியாதவர்களிடம் அறிமுகபடலமும் தெரிந்தவர்களிடம் நலம் விசாரிப்பும் என நேரம் கழிய வாசலில் பெண்ணை அழைத்துவந்துவிட்ட சப்தம் கேட்டு பார்வையை அங்கேயே நிலைக்கவிட்டான்.
பிங்க் கலர் பட்டுபுடவையில் தங்க நகைகள் மின்ன அழகு தேவதை என மிதந்துவரும் தன்னவளை நெஞ்சம் தடுமாற கண்கொட்டாமல் பார்த்திருந்தான்.
“யப்பா, செம்ம அழகுடா இந்த பொண்ணு. இந்த புடவையில எக்குத்தப்பா இருக்காளே?. கண்ட்ரோல் ஆரவ்…” என தனக்குத்தானே கூறிகொண்டாலும் அவனின் மனம் வஞ்சனையின்றி ஜொள்ளை வாரி இறைத்துக்கொண்டிருந்தது.
ஆனால் நிலாவோ உறவுகள் சூழ்ந்திருந்ததால் யாரையும் நிமிர்ந்து நோக்காமல் வழியில் நின்றிருந்தவனை கடந்து மேடை நோக்கி அழைத்து செல்லப்பட்டாள். அவள் சென்று மேடையில் அமரும் வரை பார்த்துக்கொண்டே இருந்தவனுக்கு அப்போதுதான் தெரிந்தது வித்யாசம்.