“நீங்கலாம் உட்காருங்க. முதல்ல எதாச்சும் சாப்பிடலாம்…” என வந்திருப்பவர்களை அமர சொல்லி அமுதாவை அழைத்துக்கொண்டு அடுக்கறைக்குள் நுழைய முற்பட,
“கொஞ்சம் நில்லுங்கம்மா…” என தடுத்தது ராகவ்வின் குரல். யாரையும் பார்க்காமல் குனிந்த தலை நிமிராமல் இருந்த சேகரன் அப்போதுதான் ராகவ்வை நிமிர்ந்து பார்த்தார். திரும்பி பார்த்தவர்களிடம்,
“இந்த வீட்ல நாங்க சாப்பிடறதா இல்லை. நம்பிக்கை துரோகம் செஞ்சவங்க வீட்ல கை நனைக்கிற பழக்கம் எங்களுக்கு இல்லை. அதனால் நாங்க வெளில பார்த்துப்போம்…”
“அடியாத்தாடி. என்ன இப்படி சொல்லிட்டீங்க? இது உங்க மருமக வீடுங்கைய்யா. விட்டுபோற உறவா இது? சம்பந்தம் செஞ்ச இடத்துல இப்படி சொல்லகூடாதுங்க…” என முத்தழகி கூற,
“இல்லைங்கம்மா. தவறாவே இருந்தாலும் எங்களுக்கு இங்க சாப்பிட எதுவும் வேண்டாம். எங்க மருமக மட்டும் போதும்…” என கைகூப்ப,
“அட என்னங்க நீங்க? இதுக்கெல்லாம் போய் கையை உயர்த்திட்டு. எம்புட்டு பெரிய மனுஷங்க நீங்க? எவ்வளோ பெரிய மனசுக்காரங்க. இப்போ என்ன இங்க தான சாப்பிட மாட்டீங்க? நம்ம வீட்டுக்கு வாங்க. அதுவும் நிலா வளர்ந்த வீடுதானுங்க…” என முத்தையா கூறவும்,
“ஆமா வாங்க நாம்ம வீட்டுக்கு போவோம். அமுதா நீ பொறவாட்டி வா. நான் நம்ம சம்பந்தகாரங்களை கூட்டிட்டு போறேன்…” என்றவர் வாசலை நோக்கி நகர,
“ஒரு நிமிஷம்…” என்ற ஆரவ் நிலாவின் அருகில் செல்ல அவனின் அருகாமை அவளை பின்னால் செல்லவைத்தது.
“நிலா ப்ளீஸ்…” என்றவன் அவளை இழுத்து அணைத்துக்கொண்டான்.
அந்த இறுகிய அணைப்பிலேயே தன் இத்தனை நாள் தவிப்பு, ஏக்கம், அவளுக்கான காத்திருப்பு என அவனின் ஒவ்வொரு உணர்வுகளையும் அவளுக்கு உணர்த்திவிட்டான்.
அவனின் கைகளுக்குள் அடங்கியவள் கொஞ்சமும் திமிறாமல் விலகாமல் அவனுள் வாகாய் அடங்கி நின்றாள். அவனின் செயலை ஏனோ தடுக்க தோன்றவில்லை.
அந்த நேரத்தில் அவளுக்கும் தேவையாக இருந்திருக்கிறது போன்ற ஒரு உணர்வை அனுபவித்தாள். அது தந்த பாதுகாப்பில் மெய்மறந்து நின்றவளுக்கு சுற்றமும் சொந்தமும் மறந்தது. ஆரவ் தானாகவே அவளை விலக்கி நிறுத்தி,
“சீக்கிரமே வந்திருடா. இதுக்கு மேல வெய்ட் செய்ய முடியாது. நான் இப்படிலாம் இருந்ததே இல்லை. ரொம்ப மிஸ் பண்ணினேன் உன்னை…” என அவளின் கன்னங்களை தாங்கியபடி பேச அவனையே விழி விரித்து பார்த்திருந்தாள்.
வள்ளியம்மைக்கு தான் புகைச்சல் அதிகமாகியது அவர்களின் சம்பாஷனையும் நெருக்கத்தையும் பார்த்து.
“இவங்க ரெண்டு பேரையும் கொன்னுபோட்டுட தான் தோணுது நிலா. ஆனாலும் உனக்காக மட்டுமே இவங்களை சும்மா விட்டுட்டு போறேன். என் அம்மாவோட வார்த்தைக்காகவும் தான். ஆனா எந்த காலத்திலையும் இவங்களை நான் மன்னிக்கவே மாட்டேன்…” என கூறியபடி சேகரனையும் வள்ளியம்மையையும் அழுத்தமாக பார்த்தான்.
“இப்போ நான் எது செஞ்சாலும் நமக்குதான் கஷ்டம். உன்னால இவங்க பிழைச்சாங்க. நம்ம கல்யாணம் முடியட்டும். அப்பறம் வச்சிருக்கேன் இதுக்கு வேடிக்கை…” என வள்ளியம்மையை உறுத்து விழித்தபடி உறுமினான் ஆரவ்.
அவனின் விழிகளில் தெரிந்த கொலைவெறியில் வெலவெலத்துப்போனார் வள்ளியம்மை.
‘இதற்கே இப்படி கொதிக்கிறானே? தான் நிலாவின் கருவை அழிக்க நினைத்தது தெரிந்தால் என்ன செய்வான் இவன்?’ என பயத்துடன் நினைத்தார்.
“நல்ல வேலை இவனுக்கு அது தெரியவர வாய்ப்பே இல்லை. நிலாவிற்கே தான் கர்பமாகியிருக்கும் விஷயம் தெரியாதபோது இவனுக்கெங்கே தெரியபோகிறது?” என எண்ணி கொஞ்சம் நிம்மதியானார்.
அவரின் நிம்மதிக்கு ஆயுள் குறைவு என்று அப்போது அவருக்கு தெரிந்திருக்கவில்லை.
“கிளம்பலாம் ஆரவ். தேவையில்லாத விஷயங்களை பத்தி நாம பேசவேண்டாம்…” என்ற ராகவ் ஒற்றை வார்த்தையிலேயே உணர்த்திவிட்டார் சேகரன் தேவையில்லாதவர் என்று. அவரின் வார்த்தையில் துடித்துப்போய் பார்த்தவர்,
“ஐயோ என்னை மன்னிச்சிடுங்க…” என்றபடி ராகவ்வின் கைகளை பற்ற சேகரன் நெருங்க அவரின் வருகை அறிந்து பின்னால் தன்னை தொடவிடாமல் நகர்ந்து நின்றவர்,
“இதோ பாருங்க. நாங்க எங்க வீட்டு பொண்ணை கூட்டிட்டு போக வந்திருக்கோம். அதுவும் உங்க மரியாதை கௌரவம் பாதிக்காமல். இதுக்கு மேல உங்ககிட்ட பேச எனக்கு எதுவும் இல்லை. இதுவே நீங்க என்கிட்டே பேச நினைக்கிறது கடைசியா இருக்கட்டும்…”
“சாயங்காலம் பொண்ணை அனுப்பி வைங்க. ஊருக்காக தகப்பனா இந்த கல்யாணத்துக்கு வந்து நாளைக்கு நில்லுங்க. அது போதும். உங்ககிட்ட நாங்க வேற எதுவும் எதிர்பார்க்கலை…” என சேகரன் முகம் பாராமல் கூறிவிட்டு ராகவ் வெளியேறிவிட்டார்.
அவரின் புறக்கணிப்பை ஜீரணிக்கமுடியாமல் விக்கித்து நின்றார் குணசேகரன். இப்படி ஒரு தண்டனையை வேறு யாராலும் வழங்க முடியாது. அவருக்கு ராகவ் மேல் அப்படி ஒரு மரியாதையும் நட்பும் இருந்தது.
தன் மீது நம்பிக்கை கொண்ட ஒருவரது உன்னதமான நட்பை பெற்று அதை மிக கேவலமான செயலால் இழந்து நின்றார். ஆமாம் நிலாவை அழைத்து வந்த பின் அவரிடம் போனில் உரையாட அதில் சிறிது நட்பும் இழையோடிதான் இருந்தது.
அதை தானே அறுத்தெறிந்து அவரின் நட்பிற்கு கொஞ்சமும் அருகதை அற்றவராக நின்றார் குணசேகரன். இப்படி குடும்பமாக தன்னை ஒதுக்கிவைக்கும் நிலைக்கு தன்னை ஆளாக்கிய வள்ளியம்மையை ஆத்திரத்தோடு பார்த்தார்.
“அர்ஜூன் ஊர்ல உள்ளவங்களுக்கு கல்யாணத்துக்கு அழைப்பு வைக்கனும். அதனால் நீயும் நிலாவோட அப்பாவும் போய்ட்டு வாங்க. நாங்க இவர் வீட்ல இருக்கோம்…” என முத்தையாவை காண்பித்து கூறிய நாராயணனின் குரலில் இதை நீ செய்து தான் ஆகவேண்டும் என்னும் கட்டளை தான் நிரம்பியிருந்தது.
அது குணசேகரனுக்கானது என்பது அனைவருக்குமே புரிந்தது. அவர்கள் கிளம்ப,
“அய்யா ஒரு நிமிஷம்…” என்ற அமுதாவின் குரலில் திரும்பியவர் அவரை பார்க்க,
“உங்க பேத்தியை ஆசிர்வாதம் செய்ங்கய்யா…” என்றவர் நிலாவை பார்த்து காலில் விழுமாறு கண்ஜாடை போட அதை புரிந்து அவளும் நாராயணனின் அருகில் செல்ல நொடியில் ஆரவ் அவளுடன் இணைந்து கொண்டான்.
இருவரும் சேர்ந்தே காலில் விழ அந்த காட்சியே அனைவருக்கும் நிறைவாக இருந்தது.
அதன் பின் அமுதா ஒருமுறை அனைவரிடமும் மன்னிப்பை கேட்டுவிட்டு தர்ஷினி அவரை சமாதானம் செய்து என வீடே ஒரே உணர்ச்சிமயமாக இருந்தது.
பின் அனைவரும் கிளம்பிவிட நிலாவின் வீட்டிலேயே ஸ்டெபி அவளுடன் இருக்கிறேன் என்றுவிட அர்ஜூனை அவளுடன் இருத்திவிட்டே சென்றார் வடிவு. சேகரனுக்கு சாட்டையால் அடித்தது போல இருந்தது இது. நம்பிக்கையின்மையால் தான் இப்படி செய்கின்றனர் என்பது அவரும் புரிந்தே இருந்தார்.
அவர்கள் சென்றதும் மீண்டும் பேச்சு ஆரம்பித்தது. தயாளனின் பேச்சு.
“மாமா என் மேல என்ன கோபம்னாலும் என்னை திட்டிடுங்க. ப்ளீஸ் ஜீவாவை எனக்கு கட்டித்தாங்க. அதுவும் உடனே கேட்கலை. அவளோட படிப்பு முடியவும் தான்…” என கேட்க,
“முடியவே முடியாது. நான் இதுக்கு சம்மதிக்கவே மாட்டேன்…” என வள்ளியம்மை ஆத்திரமாக கூற அர்ஜூனிற்கு பற்றிக்கொண்டு வந்தது.
இந்தம்மா அடங்கவே அடங்காதா என காட்டமாக தோன்றியது. அதுவும் எங்களை வைத்துக்கொண்டே இப்படி பஞ்சாயத்து செய்கிறார்களே என தோன்றியது. ஸ்டெபியும் அதைத்தான் நினைத்து சங்கடமாக நெளிந்தாள்.
“கொஞ்சம் நிறுத்தறீங்களா?…” என்றாள் ஜீவா. அனைவரும் அவளை பார்க்க நேராக தயாவிடம் சென்று நின்றவள்,
“இதபாருங்க. நீங்க என்னோட அக்கா வாழ்க்கையை காப்பாத்தி குடுத்ததுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. ஆனா எனக்கு உங்க பேச்சில் உடன்பாடில்லை. இத்தோட இதை நிறுத்திக்கோங்க…” என கறாராக கூற,
“ஏன் ஜீவா? என்னை பிடிக்கலையா?…”
“சுத்தமா பிடிக்கலை. எனக்கு புருஷனா வரப்போறவரு ஒரு முதுகெலும்புள்ள மனுஷனா சுயமா யோசிக்க தெரிஞ்சவனா இருக்கனும். இன்னும் உங்கம்மா பேச்சுக்கு ஒத்து பாட்டு பாடற உங்களை நான் கல்யாணம் செய்துப்பேன்னு நீங்க எப்படி நினைக்கலாம்?…”
பட்டுகத்தரித்தது போன்ற அவளது பேச்சில் அடிபட்ட பார்வை பார்த்தான் தயாளன். இப்படி அனைவரின் முன்பும் தன்னை தான் விரும்பும் பெண்ணே முதுகெலும்பில்லாத கோழை என்று கூறியதை கேட்டு கதறி துடித்தது அவனின் காதல் கொண்ட இதயம்.
“என்ன வாய் பேசறா பாருடா. இதுக்குத்தான் இவ வேண்டாம்னு சொன்னேன்…” என வள்ளியம்மை மீண்டும் பேச அவரை ஒரு பார்வை பார்த்தான் தயாளன். அந்த பார்வையில் தான் எத்தனை வெறுப்பு? ஆவேசம்?
ஜீவாவிடம் தன் கலங்கிய விழிகளை காட்டாதிருக்க தயாளன் பாடுபடுவது அர்ஜூனை வேதனை கொள்ள செய்தது. தயாளனின் நிலை அவனுக்கு பெரும் வருத்தம் அளித்தது. தயாளன் ஒன்றும் கெட்டவன் இல்லையே. இப்படி பேசியிருக்க வேண்டாம் என்பது போல ஜீவாவை பார்க்க,
“நான் பேசறது உங்களுக்கு கஷ்டமா தான் இருக்கும். ஆனா நான் சொன்னது உண்மை தானே? அப்பறம் தான் இன்னைக்கு இன்னொரு விஷயமும் முடிவு பண்ணிட்டேன். என்னோட வாழ்க்கையை நான் தான் முடிவு செய்வேன். யாரை நம்பியும் அதுக்கான அதிகாரத்தை கொடுக்கிறதா இல்லை. இன்னொரு துரோகத்தை இந்த வீடு தாங்காது…”
இது சேகரனுக்கானது என்பது அவருக்கு புரிந்துபோனது. தளர்ந்துபோய் அமர்ந்துவிட்டார் அவர். இனி தன் குடும்பத்தில் அவர்கள் மனதில் தனக்கென்று ஒரு இடம் இல்லை என்ற உண்மை அவருக்கு உறைத்தது.
அதற்கு மேலும் அங்கு நிற்க விரும்பாமல் தயாளன் கிளம்பிவிட்டான். அவன் செல்லும் திசையையே பார்த்து நின்ற ஜீவா வள்ளியம்மையிடம்,
“உங்களுக்கு தனியா சொல்லனுமா? கிளம்புங்க…” என்றவள்,
“கல்யாணத்துக்கு நீங்க கண்டிப்பா வரனும். குடும்பமா வரனும். என் அக்கா சந்தோஷமா வாழ்க்கையை ஆரம்பிக்கிறதை நீங்க பார்க்கனும். புரிஞ்சதா?…” என மிரட்டல் குரலில் கூற,
“இல்லைனா என்னடி செய்வ?…” என வள்ளியம்மை அப்போதும் ஆணவம் குறையாமலே பேசினார்.
“அவங்க வருவாங்க ஜீவா. வந்து நிலாவுக்கு அத்தையா சபையில நிப்பாங்க. நின்னுதான் ஆகனும்…” என அர்ஜூன் அவரின் முன்பு அழுத்தம் திருத்தமாக கூற அதில் அரண்டுதான் போனார் வள்ளியம்மை.
அவர் செல்ல வழிவிட்டு நின்றான் அர்ஜூன். முகம் கறுக்க விட்டால் போதும் என்பது போல விறுவிறுவென வெளியேறிவிட்டார் அவர்.
ஜீவாவும் அர்ஜூனும் ஒருவரை ஒருவர் சிநேகமாக பார்த்து புன்னகைத்துக்கொண்டனர். அதை இன்னொரு ஜீவனும் விழிகளில் நிரப்பிக்கொண்டு வாசலோடு திரும்பி சென்றது.