தயாளன் தான் தங்களிடம் தகவல் சொல்லியது என்று கூற தோன்றவில்லை அர்ஜூனிற்கு. அனைத்தையும் கேட்டு முத்தழகியும் முத்தையாவும் திகைத்து நின்றனர். அமுதா அற்பமான பார்வை பார்த்தார் கணவனை. வள்ளியம்மையோ,
“அப்போ எல்லா விஷயமும் தெரிஞ்சு தான் வந்திருக்காங்களா?…” கப்பென வாயை மூடிக்கொண்டு ஒதுங்க நினைக்க,
“உங்களுக்கு இந்த விஷயம் எப்படி?…” சேகரன் மெல்லிய குரலில் கேட்டார். அதன் மேலும் பொறுமை காட்டாமல்,
“நான் தான் மாமா வர சொன்னேன்…” என்ற தயாளனின் குரலில் மேலும் அதிர்ச்சியை வெளிப்படுத்திய சேகரன் தயாளனை பார்க்க, வள்ளியம்மைக்கு தலையில் அடித்துகொள்ளலாம் போல இருந்தது.
“இப்படி காரியத்தையே கெடுத்து ஒன்றுமில்லாமல் செய்துவிட்டானே?” என பொறுமியவர் அனைவரின் முன்பும் மகனை திட்டமுடியாமல் மௌனமானார். அதற்குள் தர்ஷினியும் ஜீவாவும் வெளியில் வந்து நின்றனர்.
“மாமா நான் நேரடியா விஷயத்துக்கு வரேன். எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லை. அம்மாக்கிட்ட வேண்டாம்னு போன்லயே சொல்லிட்டேன். என்னை மிரட்டி இங்க வரவச்சாங்க. ஆனாலும் என்னால இதை ஒத்துக்க முடியலை…”
“எப்படி இந்த ஏற்பாடுகளை நிறுத்தறதுன்னு தெரியாம தான் நான் இவங்களுக்கு போன் செஞ்சு விஷயத்தை சொன்னேன்…” என கூறியவன் ஜீவாவை பார்க்க அவள் அவனை நன்றி செலுத்தும் பார்வை பார்த்தாள்.
“இன்னொரு விஷயமும் சொல்லிடறேன். நான் வேற ஒரு பொண்ணை விரும்பறேன். என்னால அவளை தவிர வேற ஒரு பொண்ணை கல்யாணம் செஞ்சுக்க முடியாது. அம்மாகிட்ட சொல்ல எனக்கு…” என இழுக்க,
“அடப்பாவி மகனே, இப்படி என் தலையில கல்லை தூக்கி போட்டுட்டியேடா. உன் மனசை கலைச்சவ யார்ரா?…” என கூச்சல் போட,
“நீ முதல்ல இதைத்தான் செஞ்சிருக்கனும் தயா. உன் அம்மா தலையில கல்லை தூக்கி போட்டு கொன்றிருந்தாலும் தப்பே இல்லை…” என ஆரவ் நக்கலாக கூறவும் வள்ளியம்மை அவனை முறைத்தார்.
“கொஞ்சம் அமைதியா இருடா பேராண்டி…” என ஆரவ்வை அமர்த்திய வடிவு,
“தம்பி நீ உன் விஷயத்தை சொல்லுப்பா…” என, ஜீவாவையே பார்த்தவன்,
“நான் ஜீவாவை விரும்பறேன். எனக்கு அவளைத்தான் கல்யாணம் செய்துக்கனும். அவளை தவிர வேற யாரையும் நான் கட்டிக்க மாட்டேன்…” என மனதில் நினைத்ததை கூறிவிட்டு ஜீவாவை பார்க்க அவளோ நெருப்பாய் பார்த்தாள் இவனை.
யாரும் எதுவும் பேசாமல் நிற்க வள்ளியம்மைக்கு எது நடக்க கூடாது என நினைத்தாரோ அது நடந்து அனைவருக்கும் தெரிந்தும் விட்டதை எண்ணி பதறினார்.
“இல்லை….இல்லை… இதை நான் நடக்க விடமாட்டேன். என் உயிரே போனாலும் இதுக்கு நான் சம்மதிக்கமாட்டேன். எனக்கு நிலா தான் மருமகளா வரனும். அப்போதான் எனக்கு என் பிள்ளை கிடைப்பான். என்னால உன்னை விட்டு இருக்க முடியாதுடா. சொல்றதை கேளு…” என தன்னிலை மறந்து உளற அனைவரின் பார்வையும் வள்ளியம்மையை கூர்மையாக பார்த்தது.
“என்ன சொல்றீங்கமா? இவ்வளோ நடந்த பின்னாலையும் உங்களால எப்படி வாய் கூசாம இப்படி பேச முடியுது?…” என தயாளன் குரலை உயர்த்த,
“பார்த்தியா, பார்த்தியா நிலா உனக்கு இல்லைன்னதும் அம்மாவை வெறுக்க ஆரம்பிச்சுட்ட பார்த்தியா. அதுக்குத்தான் சொல்றேன். என் பேச்சை கேளு. நிலாவை கட்டிக்கோ. இந்த ஜீவா உனக்கு வேண்டாம். நிலா வந்தா தான் நீ எப்பவும் எனக்கு மகனா இருப்ப…” என மீண்டும் பயத்தோடு பிதற்ற,
“யார் சொன்னாங்க அப்படி? கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லுங்க. இப்போ நீங்க உண்மையை சொல்லலைனா நிஜமாவே நான் உங்களை வெறுத்து எங்காவது போய்டுவேன்…” மிரட்டல் குரலில் தயாளன் கூறியது வள்ளியம்மையை அசைக்க மெதுவாக கூற ஆரம்பித்தார்.
“எனக்கு என் தம்பிக்கு சம்பந்தி ஆகனும்னு ஆசை. அமுதாவுக்கு தெரியாம நிலா ஜாதகத்தை எடுத்துபோய் நம்ம சாமிட்ட காண்பிச்சேன். அவர் தான் சொன்னாரு இந்த பொண்ணை கட்டிவச்சா உங்க பையன் பிடி உங்க கைல காலத்துக்கும் இருக்கும்னு சொன்னாரு…”
“எதுக்கும் இருக்கட்டும்னு தான் ஜீவா ஜாதகத்தையும் எடுத்து போனேன். அவளை கட்டினா உன் பையனை நீ மறந்துட வேண்டியது தான். உன் தம்பி வீட்டுக்கு உன் பிள்ளையை தத்துகொடுத்த மாதிரி எதுலையும் உரிமையில்லாம ஆகிடுவ அப்டின்னு சொன்னாரு. அவர் சொன்னா எல்லாமே அப்படியே நடக்கும்…”
“அதான் நான் முதல்ல தம்பிக்கிட்ட கேட்க அவன் சம்மதிக்கலை. ஏன்னு கேட்டதுக்கு சொந்தத்துல பண்ணமுடியாதுன்னு கண்டிப்போட முடிவா சொல்லிட்டான். வேற வழியில்லாம அமைதியா இருக்கவேண்டியதா போச்சு. அப்போதான் நிலாவுக்கு சம்பந்தம் வந்து கல்யாணம் வரைக்கும் வந்துடுச்சு…”
“அப்போ நிலாவை கடத்தி இந்த கல்யாணத்தை நிறுத்தினது நீங்கதானா?…” என ஆக்ரோஷமாக கேட்ட ஜீவாவை திகைத்து பார்த்தவர்,
“இல்லடிமா சத்தியமா இல்லை…” என பதட்டமாக கூற,
“இவ்வளோ வேலைகள் எங்களுக்கு தெரியாமலே செஞ்ச நீங்க இதை செஞ்சிருக்கமாட்டீங்களா? எனக்கு உங்க மேலதான் சந்தேகமா இருக்கு…” என குற்றம் சாட்டவும் திமிராக பார்த்தவர்,
“நான் செஞ்சா செஞ்சேன்னு சொல்லிடுவேன். அதை நான் செய்யலை. ஆனா இப்போ நடக்கற விஷயம் என்னாலதான். இந்த கல்யாணத்துக்கு உன் அப்பாவை மிரட்டித்தான் சம்மதிக்க வச்சேன்…” என எகத்தாளமாக கூற சேகரன் குனிந்த தலை நிமிரவே இல்லை.
“நிலா எங்க இருக்கா, எப்படி இருக்கான்ற தகவலை என் பையன் வந்து என்னிடம் சொல்ல அப்பவே நான் என்ன செய்யனும்னு முடிவு பண்ணிட்டேன். எனக்கு என் பிள்ளை தான் முக்கியம். அவனுக்கு வரவ எங்களை பிரிக்க நினைக்கிறதை என்னால தாங்க முடியாது. அதுக்குத்தான் நல்லா யோசிச்சு ஒரு முடிவெடுத்தேன்…”
“சேகரனை குலதெய்வம் கோவிலுக்கு வர சொன்னேன். பொண்ணு பத்தின தகவல் தெரியனும்னா என் பிள்ளைக்கு அவளை கட்டிக்குடுக்கிறதா சூடம் அடிச்சு சத்தியம் செஞ்சு தரனும்னு சொன்னேன். அப்போ நிலாவுக்கு கல்யாணம் ஆனது அவனுக்கு தெரியாது. அவனும் பொண்ணு கிடைச்சா போதும்னு வாக்கு குடுத்தான். இது என் பையனுக்கு தெரியாது…”
“அதுக்கப்பறமா என் வீட்டுக்கு அழைச்சிட்டு போய் மத்த விஷயங்களை சொல்லவும் என்கிட்டே முடியாதுன்னு மறுத்தான். வாக்கை காப்பாத்தலைனா உன் பொண்ணு ஓடி போனதா தான் நான் ஊர்ல சொல்லுவேன்னு சொல்லி மிரட்டினேன். குலசாமி சத்தியத்தை மீறினா சாமி தண்டிச்சிடும்ன்ற நம்பிக்கை அவனுக்கு நிறைய. அதுக்கப்றமா தான் நான் சொல்றதுக்கெல்லாம் தலையசைச்சான்…”
“எனக்கு சாதகமா நாங்க வரப்போ நிலாவுக்கு எங்க ஞாபகங்கள் எல்லாமே வந்து தனக்கு நடந்த கல்யாண விபரங்களை மறந்துட்டா. எனக்கு ரொம்ப வசதியா போச்சு. அதுக்கு பின்னால நடந்தது தான் உங்க எல்லாருக்கும் தெரியுமே…” என கூறி முடிக்க ஆரவ் வள்ளியம்மையை அடிக்கவே பாய்ந்துவிட்டான்.
“கேவலம் ஏதோ ஒரு சாமியார் சொன்னாரு. ஜாதகம் சொல்லுதுன்னு நம்பி எங்க வாழ்க்கையோட விளையாட நினச்ச உன்னை கொன்னா கூட தப்பில்லை…” என திமிறிக்கொண்டு கர்ஜிக்க அவனை இழுத்து நிறுத்திய அர்ஜூன்,
“நீயெல்லாம் ஒரு பொம்பளையா? வெக்கமா இல்லை உனக்கு?…” என வள்ளியம்மையை ஏச ஏற்கனவே ஆரவ்வின் கோவத்தில் மிரண்டவர் இப்போது அர்ஜூனின் வார்த்தைகளில் அவமானத்தில் தலை குனிந்தார்.
அதுவும் தவறை உணர்ந்து அல்ல. இத்தனை பேர் முன்பும் தன்னை ஒரு சிறுவன் பேசிவிட்டான்? அனைவரின் முன்பும் தன் குட்டு வெளிப்பட்டுவிட்டதே என அசிங்கப்பட்டு தான்.
“நீங்க ஒரு பெரிய மனுஷன்னு சொல்லாதீங்க சார். ராகவப்பா இந்த ஊருக்கு வர வரைக்கும் கூட தயாவை தான் சந்தேகமா பேசினாரு. உங்களை விட்டுகுடுக்கவே இல்லை. இப்படி ஒரு துரோகம் செய்ய உங்களுக்கு எவ்வளவு துணிச்சல் இருக்கனும்?. நாங்க எதுவும் கேட்க மாட்டோம்னு நினச்சீங்களா? எங்களை அவ்வளவு சாதாரணமாவா நினைச்சுட்டீங்க?…” என அர்ஜூன் கேட்க,
“வாயை திறந்து பேசுங்கப்பா. இப்போ கூட அமைதியாவே இருந்து நல்லவராகிடலாம்னு பார்க்கறீங்களா என்ன?. பெத்த பொண்ணுக்கே துரோகம் நினைச்ச உங்களை அப்பான்னு கூப்பிடவே கஷ்டமா இருக்கு…” என ஜீவா கத்த,
“அப்படி சொல்லாதமா. நான் தப்பு செஞ்சேன் தான். எனக்கு அப்போ என்ன செய்யன்னே தெரியலை. என் பொண்ணு கிடைச்சா போதும்னு மட்டும் தான் இருந்தேன்…” என்றவர்,
“கல்யாணம் முடிஞ்சுட்டா இவங்களால உண்மையை நிலாக்கிட்ட சொல்லமுடியாது. நிலாவோட எதிர்காலம் நல்லா இருக்கனும்னு அவக்கிட்ட சொல்லவும் மாட்டாங்க. நிலாவும் தயாவோட நிம்மதியா இருப்பான்னு அக்கா சொல்லுச்சு. அதான் நானும்…” என மேலும் பேசமுடியாமல் கூனிக்குறுகி நின்றார் எவரையும் ஏறெடுத்து பார்க்கமுடியாமல்.
அனைத்தையும் கேட்டுகொண்டிருந்த நிலா அதன் மேலும் பொறுமையாக இல்லாமல் எழுந்து வெளியே வந்தாள். அவளை கண்டதுமே ஆரவ்வின் விழிகள் கலங்கி நின்றன.
இருவரது விழிகளும் மோதி நிற்க சில நொடிகள் பேச்சு எதுவுமின்றி நிலா ஆரவ்வை மட்டுமே பார்த்தாள்.
அவனும் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்து நின்றான். முன்பு போல் இல்லாது கொஞ்சம் பூசிய உடல்வாகோடு நின்றவளின் முகத்தில் அலையலையாய் தோன்றிய உணர்வுகளை அணு அணுவாக அளவிட்டான்.
அவனின் பார்வையை தாங்கி நின்றவள் அவன் கண்களில் வழிந்த காதலை இமை மூடாது கண்டபடி கட்டுண்டு நின்றாள். அவளின் முகத்தில் தனக்கான தேடலும் இருப்பதை கண்டு வெகுவாக கலங்கினான்.
தான் ஹாஸ்பிட்டலை விட்டு கிளம்பு நாள் அவனின் முகத்தில் தெரிந்த அதே காதல். அளவில்லா நேசம். இன்றும் அவனின் முகத்தில் நிலா கண்டாள். அன்று அது எதுவென புரியாமல் பார்த்தவள் இன்று அறிந்துகொண்டாள்.
இருவருக்கும் வார்த்தைகள் தேவையிருக்கவில்லை. ஒரு பார்வையிலேயே தன்னை தன் காதலை உணர்த்திவிட துடித்து நின்றான். அவனின் துடிப்பை அறிந்தவள் போல அவளும் உணரத்தான் செய்தாள் அவனின் நேசத்தை.
ஜீவா அவளருகில் வந்து, “நிலா…” என அழைத்ததும் அவளிடம் திரும்பியவள் பின் தன் தந்தையை பார்த்து,
“ஏன் ஜீவா, வாக்கு குடுத்திட்டோம்னு எந்த அப்பாவச்சும் தன்னோட பெண்ணை அதுவும் கல்யாணமாகி இன்னொருவருக்கு சொந்தமான பெண்ணை அந்த வாக்கிற்காக விற்க நினைப்பாங்களா? நான் அந்த மாதிரி பொண்ணா ஜீவா?…”
கேள்வி ஜீவாவிடம் என்றாலும் பார்வை சேகரனிடம் தான் இருந்தது. அவள் வார்த்தையின் சாரம்சத்தை புரிந்த சேகரன் செத்தே போனார். அமுதா ஓடிவந்து மகளை அணைத்துகொண்டவர்,
“என்ன வார்த்தைடி பேசற? என்கிட்டே கூட இந்த மனுஷன் உண்மையை மறைச்சுட்டாரே?…” என கூறி ஸ்டெபியை காண்பித்து,
“இந்த பொண்ணு வந்தப்போவே யார் என்னனு கேட்டேனே. ஒரு வார்த்தை சொல்லலையே. தெரிஞ்சிருந்தா இப்படி நீ தவிக்க நான் விட்ருப்பேனா? இப்படி எல்லார் முன்னாலையும் கூனி குறுக வச்சுட்டாரே. இதுக்கு பதில் சாப்பாட்டுல இம்புட்டு விஷத்த வச்சு நம்மளை கொன்னுருக்கலாமே?…” என கதறியபடி இரு மகள்களையும் கட்டியணைத்து அழ ஆரம்பித்தார்.
“அமுதா…” என்றபடி சேகரன் வர,
“போதும். கிட்ட வராதீங்க. என் பொண்ணுங்களை உங்களை நம்பி எப்படி விடுவேன்? அவங்க வாழ்க்கையை முடிவெடுக்க இனி உங்களுக்கு என்ன தகுதியும் இல்லை. உங்க அக்கா பையனுக்கு என்னோட சின்னபொண்ணை கட்டி வைக்கனும்னு எண்ணம் எதாச்சும் மனசுல ஒட்டிட்டு இருந்தா அதை இப்பயோட அழிச்சுடுங்க…”
“அமுதா அழாதம்மா. இனி நடக்கிறதாச்சும் நல்லதா நடக்கும். பாரு உன் பொண்ணு வாழ்க்கைப்பட்ட இடம் வெகுமதியானது. அதான் உன் பொண்ணை தேடி உரியவங்க வந்துட்டாங்க. அதுவும் உன் குடும்பத்தை மரியாதையை காப்பாத்தி குடுத்து அவங்க மேம்பட்டவங்கன்னு நிருபிச்சுட்டாங்க…”
“இப்போ நீ அழவேண்டிய நேரம் இல்லை அமுதா. சந்தோஷப்படு. உன் மகளுக்கு வாய்ச்ச குடும்பம் அந்த ஆண்டவனால நிர்ணயிக்கபட்டிருக்கு. அதை யார் மாத்த நினச்சாலும் நடக்காத ஒண்ணுன்னு இப்போ இவங்களுக்கெல்லாம் புரிஞ்சிருக்கும். முதல்ல வந்தவங்களுக்கு குடிக்க எதாச்சும் கலந்துட்டு வருவோம் வா…”