தேடல் – 22
குணசேகரனின் வீட்டில் அனைவரும் ஒவ்வொரு மனநிலையில் இருக்க ஆரவ் மட்டுமே நிலாவை எண்ணி தவித்தான். இந்த அதிர்ச்சியினால் அவளுக்கு எதுவும் பாதிப்பு வருமோ என கவலையாக அமர்ந்திருந்தவனால் எழுந்து உள்ளே செல்லமுடியாது போனது.
உள்ளே சென்ற ஸ்டெபியும் தர்ஷினியும் நிலாவிடம் நடந்ததை மெதுவாக எடுத்து கூற அதை கேட்டவளுக்கு மெய்சிலிர்த்து போனது ஆரவ்வின் அளப்பறியா காதலில். யாரென்று தெரியாத தன் மீது இத்தனை காதலா?
இப்போது புரிந்தது நிலாவிற்கு. தான் ஹாஸ்பிட்டலில் இருந்த போது அவனின் முகத்தில் இருந்த உணர்வுகள் அனைத்தும் இப்போது நிலாவினால் புரிந்துகொள்ளமுடிந்தது.
எத்தனை எதிர்பார்ப்புகள்? எத்தனை தவிப்பு? எத்தனை வேதனை? எவ்வளவு காத்திருப்புகள்? எத்தனை அனுசரிப்புகள்?
ஆரவ் யாரென்று தெரியாமலே அவனோடு வாழ்ந்த இனிமையான வாழ்க்கையின் அடையாளங்களை இன்னமும் தன் மனது சுமந்து கொண்டுதானே இருக்கின்றது. நாளும் அது தரும் சுகத்தையும் அது ஏனென்று அறியமுடியாத துக்கத்தையும் அனுபவித்துகொண்டுதானே இருந்தாள்.
இவை அனைத்தையும் தனக்கு புரியவைத்து தன் வாழ்க்கையை திருப்பி கொடுத்திருக்க வேண்டிய தன்னை சேர்ந்தவர்களே அதை அர்த்தமில்லாமல் ஆக்க துணிந்தார்களே?
எத்தனை காதல் தன்மீது அவனுக்கு? இத்தனைக்கும் தான் பொருத்தமானவளா? பின் ஏன் தன்னிடம் எதையும் கூறாமல் தந்தையோடு அனுப்பி வைத்தனர்? அதை வாய்விட்டு கேட்கவும் செய்தாள். தர்ஷினியும் தயங்காமல் அதை கூறியும் விட்டார்.
ஆக திட்டமிட்டே தன்னை இங்கு அழைத்து வந்திருக்கிறார்கள். அதுவுமில்லாமல் தன்னிடம் எந்த ஒரு உண்மையையும் கூறாமல் இன்னொரு திருமண ஏற்பாட்டையும் கொஞ்சமும் குற்றவுணர்வின்றி செய்திருக்கின்றனரே?
அதுவும் பெற்ற தந்தையானவரே இப்படி ஒரு காரியத்தை செய்திருப்பது அவளால் ஏற்க முடியவில்லை. எத்தனை நம்பினேன்? மனம் கசந்துபோனது நிலாவிற்கு.
தானும் தானே அவர் சொன்னதும் ஒத்துக்கொண்டோம். அப்போ தான் ஆரவ்வை உண்மையாக நேசிக்கவில்லையோ? அப்படி இருந்தால் போராடியாவது இதை நிறுத்தியிருப்பேனே? ஏன் அப்படி செய்ய தன் மனம் உந்தவில்லை.
காதல் பயத்திற்கும் அப்பாற்பட்டது தானே? தந்தை மீதிருக்கும் பயமும் மரியாதையும் காதலை மறக்கசெய்தால் அது என்னவகையான காதல்? தன் மீதுதான் தவறோ? தான் சரியில்லையோ?
உண்மையை அறியாமல் அவன் யாரென தெரியாத போதே ஆரவ்வின் நேசம் உள்ளுக்குள் வேரோடி இருக்க எப்படி நிச்சயதார்த்தம் வரை பேச அனுமதித்தேன்?
தான் சேகரனிடம் இத்திருமணம் வேண்டாம் என்று மறுத்ததை மறந்து நிஜத்திற்கும் நினைவுகளுக்கும் இடையில் போராடியதை மறந்து தன்னையே நிந்தித்துக்கொண்டிருந்தாள் நிலாமுகி.
இவர்கள் வராமல் இத்திருமணம் மட்டும் நடந்திருந்தால்? நினைக்கவே அருவருத்துபோனது. அதன் பின்னான வாழ்க்கையில் தனக்கு ஆரவ் பற்றி தெரியவந்தால் நிச்சயம் உயிரோடிருந்திருப்போமா? உடல் கூச அமர்ந்திருந்தவள்,
“மதியக்கா நான் தப்பான பொண்ணா?…” என அழுகை முட்ட பரிதவிப்பாக வண்ணமதியிடம் கேட்க அழுதேவிட்டாள் அவள்.
“ஏன் புள்ள இப்படி பேசற? உன்னோட போராட்டத்தை நாங்களும் பார்த்துட்டு தானே இருந்தோம். நீ தப்புனா இங்க எல்லாருமே தப்புதான் புள்ள. விசனப்படாத…” என தேம்பலுடன் ஆறுதல் கூற,
“இல்லை மதியக்கா, இவங்க சொல்றதை போல நானும் அவங்களும் விரும்பி கல்யாணம் செய்திருந்தா நான் அப்பாக்கிட்ட சண்டையில போட்ருக்கனும். ஆனா அப்பா சொல்லவும் நான் சரின்னு சொல்லிட்டேனே? அப்போ நான் தானே தப்பு?…” என வெடித்து அழ ஆரம்பித்தாள்.
அவளின் அழுகை வெளியில் கேட்காமலிருக்க வேகமாக எழுந்து சென்று கதவை பூட்டினாள் வண்ணமதி.
“இவ அழுது வெளியில இருக்கிறவங்களை உள்ள கூட்டிருவா போலேயே. இந்தா புள்ள. சத்தத்தை குறை. வெளில பேசினதை கேட்ட தானே? இந்த விஷயம் ஊர்காரகளுக்கு தெரியக்கூடாதுன்னு உன்னோட குடும்பமே விஷயத்தை சுளுவா முடிக்க நினைச்சு வந்திருக்காக…”
“நீ அழறதை பார்த்து வெளில என்ன ஏதுன்னு கேட்டா உன் அத்தைக்காரி விஷத்தை கக்க ஆரம்பிச்சுடும். ஏற்கனவே நினச்சது நடக்கலைன்னு கொந்தளிச்சு கிடக்கும் அது. கொஞ்சம் அழறதை நிறுத்து. பாரு உன் அத்தையும் இந்தக்காவும் எவ்வளோ வருந்துறாகன்னு. கண்ணை துடச்சிக்கோ புள்ள…”
தர்ஷினியும் ஸ்டெபியும் மதியை பார்த்து அசந்து போயினர். எவ்வளவு தெளிவு இந்த பெண்? என அவளையே பார்க்க,
“என்னை என்னத்த பார்க்கீங்க? முதல்ல உங்க மருமவளை சமாதானம் செய்ங்க…” என தர்ஷினியை இழுக்க அவர்,
“இங்க பாரு நிலா. இதுல உன்னோட தவறு எதுவுமே இல்லை. உன் அப்பாவும் அத்தையும் இந்தளவுக்கு நடந்துப்பாங்கன்னு எங்களுக்கு தெரியாம போச்சு. இல்லைனா அப்போவே உன்னை நாங்க அனுப்பிருக்கமாட்டோம். என் பிள்ளை முதல்ல வேண்டாம்னு சொன்னான்…”
“உன் அப்பா மேல இருந்த நம்பிக்கை. உன் மாமனார் தான் உங்கப்பா பேச்சை கேட்டு அனுப்பினார். அதுவும் நாங்க ஒன்னும் உன்னை அப்படியே விட்டுடலை. தினமும் நாங்க ஒருத்தர் மாத்தி ஒருத்தர் உங்கப்பாட்ட பேசிட்டுதான் இருந்தோம்…” என இதை கேட்டதும் நிலாவுக்கு ஆச்சர்யமாகி போனது.
இப்படி தினமும் பேசி நலம் விசாரித்து தான் அவர்களுடைய உரிமை என்று உணர்த்தியும் தன் தந்தை இப்படி ஒரு கேவலமான செயலை எவ்வாறு செய்ய துணிந்தார்?
தன்னை காத்து தன் கணவனிடம் ஒப்படைக்கவேண்டிய தகப்பனே தன்னை இன்னொருவனுக்கு தாரைவார்க்கும் அவலத்தை செய்ய நினைத்த பின் இனி அவரை அப்பா என்று எப்படி அழைப்பது என இறுகிபோனாள்.
அவளுக்கு மீண்டும் ஆரவ்வை பார்க்கவேண்டும் என்ற உணர்வு எழ அதை தயக்கம் வந்து தடுத்தது. அவனின் காதலை தாங்கள் வாழ்ந்த வாழ்க்கையை பற்றி அறிந்த பின்னும் ஏனோ அவளால் முழுதாக ஒன்றமுடியாமல் ஏதோ ஒன்று அவளை தடுத்தது.
ஸ்டெபி தர்ஷினி வண்ணமதி என மூவரும் மாற்றி மாற்றி பேசிக்கொண்டிருக்க நிலா அதை கேட்டுக்கொண்டு மட்டுமே அமர்ந்திருந்தாள். நிலா அமைதியானதும் வண்ணமதி கதவை திறந்து வைக்க வெளியில் ஊர் பெரியவர்கள் கிளம்பும் அரவம் கேட்டது.
ஆரவ்வோ வீட்டில் அனைவரும் தன்னை சூழ்ந்திருக்க இப்போது அவளை சென்று பார்ப்பது இயலாதது. இங்கும் பேசி முடிக்கவேண்டிய விஷயங்கள் ஏராளம் இருக்கின்றதே? அதை நினைத்து தன்னை அடக்கினான்.
“அப்போ நாங்க கிளம்பறோம். நீங்க மத்த விஷயங்களை பேசி முடிங்க. நல்லபடியா கல்யாணத்தை எல்லோருமே சேர்ந்தே நடத்திடுவோம். சரிதானுங்களே?…” என்று கூறி சேர்மனும் மற்றவர்களும் அங்கிருந்து எழுந்தனர்.
“இந்தத்தா அமுதா. வந்துருக்கவகளுக்கு முதல்ல சாப்பிட பலகாரம் செய். இப்படியே மச மசன்னு நிக்கிறவ…” அவர்களில் ஒருவர் கூறிவிட்டு நாராயணனிடமும் மற்றவர்களிடமும் விடைபெற்று சென்றனர்.
அவர்கள் சென்றதும் வீட்டில் சலசலப்பு நின்று நிசப்தம் குடிகொண்டது. யாரும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தனர். சேகரன் வாயை திறப்பது போன்ற எந்த அறிகுறியும் தெரியாததால் நாராயணனே பேசினார்.
முத்தையாவை எண்ணி தான் பேசாமல் இருந்தார். உள்ளிருந்து வெளியில் வந்த தயாளன் பேசுமாறு கண்ணை காண்பிக்க ஆரவ் முத்தையாவை பார்க்க,
“வந்த விஷயத்தை பேசுங்க தாத்தா. இங்க இருக்கிற எல்லோருமே நம்மை சேர்ந்தவங்க தான். முக்கியமா முத்தையா ஐயாவும், முத்தழகி அம்மாவும் நம்ம குடும்பம் தான். நீங்க தயங்க இதில் எதுவும் இல்லை…” என தயாளன் எடுத்துக்கொடுக்க,
“நல்லது தம்பி. இந்தாப்பா சேகரா, இப்போ உன்னோட பொண்ணை நாங்க அழைச்சிட்டு போறதுல உனக்கு எந்த தயக்கமும் இல்லை தானே? இந்த ஊர் பெரிய மனுஷங்கக்கிட்ட உன்னோட கௌரவத்துக்கு எந்த வித பங்கமும் வராம பேசி உன் கவலையை போக்கியாச்சு. இனி நீ நிம்மதியா மரியாதையோட உன் பொண்ணை எங்க வீட்டுக்கு அனுப்பிவைக்கலாம் தானே?…”
“ஏற்கனவே கல்யாணம் ஆகியிருந்தாலும் உங்களுக்காக உங்க திருப்திக்காக இன்னொரு முறை கல்யாணம் செஞ்சே நாங்க முறையா அழைச்சுட்டு போகலாம்னு முடிவு செய்துட்டோம். இப்போ சொல்லு. உனக்கு சந்தோசம் தானே?…”
நாராயணன் பேசியதை வைத்து தாங்கள் நிலாவுக்கு ஏற்பாடு செய்த திருமணம் பற்றி தெரிந்திருக்கவில்லை போல என நினைத்த வள்ளியம்மை இப்போதும் இதை எப்படி தடுப்பது என யோசிக்க ஆரம்பித்தார்.
மகனுக்கும் நிலாவுக்கும் திருமணமென்று ஆகிவிட்டால் மரியாதை தெரிந்தவர்கள் நிலாவின் நலனுக்காகவேனும் நாசூக்காக விலகிவிடுவார்கள் என்ற ஒரு நம்பிக்கை வள்ளியம்மைக்கு.
வரிசையாக நாராயணன் கேட்க கேட்க சேகரனுக்கு தலையே சுற்றியது. கேட்பவர்களுக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் திருதிருத்தார்.
எதை சொல்லி தன் பெண்ணை அவர்களிடம் இருந்து பிரித்தாரோ அந்த கௌரவத்தையே காப்பாற்றி கொடுத்து இப்போது பெண்ணை கொடு என வந்து நிற்பவர்களிடம் எதை கூறி மறுக்க என யோசனையோடு இருந்தார்.
“நீங்க சொல்றது எல்லாம் சரிதானுங்க. ஆனா பாருங்க பொண்ணை பெத்தவங்களுக்கு கொஞ்சம் அவகாசமும் குடுக்கனும் நீங்க. இப்படி திடுதிப்புன்னு வந்து நின்னா என் தம்பி என்ன செய்வான்? எங்க புள்ளைக்கு சீர்வரிசையெல்லாம் வகையா செய்யனும்ல. அதுக்கு கொஞ்சம்…” என வள்ளியம்மை பேசக்கொண்டே செல்ல எழுந்துவிட்டான் ஆரவ்.
“எதுக்குங்க டைம்? நாங்க கிளம்பவும் உங்க பையனுக்கு என்னோட மனைவியை கட்டி வைக்கவா?…” என கோபம் கொப்பளிக்க கண்கள் சிவக்க கேட்டதும் அதிர்ந்துவிட்டார் வள்ளியம்மை.
அமுதாவோ எதுவும் விளங்காமல் பரிதாபமாக அனைவரின் முகத்தையும் மாறி மாறி பார்க்க அர்ஜூன் தான் முன்வந்து நடந்த அனைத்தையும் கூறினான். நிலா தங்களிடம் கிடைத்தது முதல் இப்போது தயாளனுடன் நடக்கும் திருமண ஏற்பாடு வரை சொல்லியவன் தயாளனை காட்டிகொடுக்கவில்லை.