“பெரியவங்க தவறா நினைச்சுட கூடாது. நீங்கலாம் யார்னே தெரியலையே?…” என அமுதா கேட்க ஆரவ் எழுந்து நின்றான் கம்பீரமாய். வந்ததிலிருந்து அவ்வீட்டை பார்வையால் துளைத்து தன்னிலவை தேடி தவித்தாலும் அதை காட்டிக்கொள்ளாமல் நிமிர்ந்து நின்றவன்,
“நான் ஆரவ் சக்கரவர்த்தி. நிலாவோட ஹஸ்பன்ட்…” என பிசிறில்லா குரலில் கூற ஜீவாவிற்கு புரிந்துவிட்டது.
நாராயணனின் உள்ளம் நெகிழ்ந்தது. சக்கரவர்த்தி என கூறும் போதும் உண்மையிலேயே இந்த ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாகவே தெரிந்தான் ஆரவ் அவர் கண்களுக்கு.
ஆக தான் நினைத்தது போல ஆரவ் நிலாவின் காதலன் இல்லை. கணவன் இவன் என எண்ணியபடி ஜீவா தன் தந்தையை வெறுப்பாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு நிலாவை தேடி செல்ல அங்கு நிலாவின் நிலையோ அதைவிட மோசமாக இருந்தது.
ஆரவ்வை பார்த்ததும் உண்டான நெருக்கமான உணர்வில் காரணம் புரியாமல் சிலிர்த்தவள், அவன் தன் பெயரை கூறியதும் ஏற்பட்ட அதிர்ச்சி அடுத்து கணவன் என கூறியதும் அதிர்ச்சி பன்மடங்காக பெருகி அவளை மொத்தமாக உலுக்கிபோட்டது.
ஆழியலையாய் தன்னை சுருட்டிச்செல்லும் உணர்ச்சி பிரவாகத்தில் மூச்சுத்திணறி போனாள். நின்ற இடத்திலேயே மடிந்து அமர்ந்தவள் அப்படியே சமைந்துவிட்டாள். அவளை அன்னையாய் மடிதாங்கிய வண்ணமதி ஜீவாவை தாண்டி வரவேற்பறையை பார்த்தாள்.
அங்கே ஆரவ் கூறியதை கேட்டதும் அதிர்ந்து நின்ற அமுதா தன் கணவனை பார்க்க அவரோ எதையும் மறுத்துக்கூற முடியாமல் தலைகவிழ்ந்து நின்றார். இதை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை. மனைவியின் முன்பு தலைகுனியும் நிலைக்கு ஆளானதை எண்ணி வெட்கினார் சேகரன்.
மேலும் பேசும் முன் அந்த ஊரின் அப்போதைய சேர்மனும், சில பெரியவர்களும் வந்துவிட அவர்களை கண்டதும் இன்னும் அதிர்ந்தார் சேகரன். வந்தவர்களிடம் நடந்ததை ஆரவ் குடும்பம் கூறிவிட்டால் தன் கௌரவம் என்னாவது என பதைபதைத்து நின்றார்.
அதை விட ஊரில் நடந்த உண்மையை மறைத்து ஆரவ் குடும்பத்தையும் அவர்களை ஏமாற்றியதை அறிந்தால் ஊரில் காரி உமிழ்ந்துவிட மாட்டார்களா? என நினைத்து முள் படுக்கையில் படுத்திருப்பதை போன்ற அவஸ்தையை உணர்ந்துகொண்டிருந்தவரை கண்டதுமே அவரின் நிலையை புரிந்துகொண்டான் ஆரவ்.
வந்தவர்களில் ஒருவர் தர்ஷினி வைத்திருந்த தட்டில் இருந்தவைகளை கண்டு,
“அடடே நீங்கதான் எங்க ஊர் பொண்ணை நிச்சயம் செய்ய வந்திருக்கிற மாப்பிள்ளை வீட்டாளுங்களா?…” என கேட்டதும் அனைவரும் திகைத்துவிட்டனர் ஆரவ் உட்பட. அவனுக்கு இதை எப்படி கையாள்வது என்று ஒரு கணம் புரியவில்லை.
“சேகரன் ஏற்கனவே சொன்னான். நிலா புள்ளைக்கு சம்பந்தம் பேசிருக்குன்னு. ஆனா யாரு என்னனு எங்களுக்கு தெரியலை. இப்போதான் பார்க்கிறோம். நிச்சயதார்த்தம் நடத்த நாளாகும்னு சொன்னானே சேகரன்…” என இன்னொரு பெரியவர் பேசினார்.
அனைவரின் முன்பும் சேகரனை நாக்கை பிடுங்கிக்கொள்வது போல கேட்கவேண்டிய கேள்விகள் ஆயிரம் வரிசைகட்ட தொண்டை வரை முட்டிக்கொண்டு நின்ற வார்த்தைகளை அப்படியே விழுங்கி அவரை அற்பமாய் ஒரு பார்வை பார்த்தான்.
“எங்க ஊர்ல இப்படின்னு விஷயத்தை யார்க்கிட்ட சொன்னாலும் நம்பமாட்டாங்க. என் பொண்ணு பேர்ல இருக்கிற மரியாதை தான் போகும்” என கெஞ்சி கேட்ட சேகரனின் வார்த்தைகள் நினைவடுக்கில் வலம் வர கொஞ்சம் நிதானித்தான்.
இவரை அசிங்கப்படுத்துவதால் எந்த நன்மையையும் இல்லை, நிலாவின் மேல் தான் தேவையில்லாத பேச்சுக்கள் பாயும் என்பதை உணர்ந்தவன் நாராயணனை பார்க்க அவர் விழிமூடி திறந்து தான் பேச ஆரம்பித்தார்.
“ஆமாம். நாங்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க தான்…” என ஆமோதித்து கூற நொடியில் அவரின் பாதையை பின்பற்றி வடிவும் தங்கள் அனைவரையும் பற்றி அறிமுகத்தை கொடுத்துவிட அனைவரும் வியந்துவிட்டனர்.
“அம்மாடி ஸ்டெபி, நீயும் என் மருமகளும் போய் என் பேத்தியை பாருங்க. இங்க நாங்க பேசி முடிக்கிறோம்…” என இருவரையும் நிலாவை காண அனுப்ப ஆரவ் பரபரப்பானான். அதுவரை இருந்த நிதானம் காற்றில் கரைந்து அலைபாய ஆரம்பித்தான் தன்னவளை காண. அவர்கள் சென்றதும் நாராயணன் பேச ஆரம்பித்தார்.
“விஷயம் வேற ஒண்ணுமில்லைங்க. இந்த வார கடைசியில நிச்சயம் செஞ்சிடலாம்னு நாங்களும் நிலாவோட அப்பாவும் முடிவு பண்ணிருந்தோம். ஆனா பாருங்க நாம நினைக்கிறது ஒண்ணு. தெய்வ சங்கல்பம் ஒண்ணா இல்ல இருக்கு…” என்று உச்சுக்கொட்ட,
“என்னங்கைய்யா எதுனாலும் வில்லங்கமான விசயமுங்களா?…” என உண்மையான கவலையோடு கூட்டத்தில் ஒருவர் கேட்க,
“அட நீங்க ஒன்னும் சுணங்கிடாதீங்க. விஷயம் பெருசில்லை. எல்லாம் நம்ம முடிவு பன்றதுல தான் இருக்குது. அதாகபட்டதுங்க, என் பேரனுக்கு அடுத்த வாரத்துல இருந்து ஏதோ நேரம் நல்லா இல்லைங்கலாம்…”
நாராயணன் என்னதான் கூற வருகிறார் என புரியாமல் அவர் பேச ஆரம்பித்ததிலிருந்து ரத்த அழுத்தம் ஏறி இறங்கி பாடாய் படுத்தியது. கொஞ்சமும் யோசிக்காத ஒரு விஷயத்தை பேசிக்கொண்டிருப்பவரை பயம் கவ்விப்பிடிக்க பார்த்தபடியே அப்போதும் நின்றுக்கொண்டிருந்தார்.
அமுதாவோ நடப்பவை எதையும் நம்பமுடியாமல் திறந்தவாய் மூடாமல் அதிர்ச்சியில் இருந்தார். பேசும் அனைத்தும் காதில் விழுந்தாலும் அவரால் எதையும் எதிர்த்து கேட்க முடியவில்லை. தவறு தங்கள் புறம் என்பது சேகரனின் அமைதியிலும் தவிப்பிலுமே தெரிந்துவிட்டதே.
முத்தையாவும் முத்தழகியும் இவையனைத்தையும் வேடிக்கை பார்க்கும் பார்வையாளர்களாக இருந்தனர். புயலுக்கு முன் இருக்கும் அமைதி போல நாராயணனின் முகத்தில் அடக்கப்பட்ட கோவம் இருப்பது போன்ற ஒரு பிரம்மை ஏற்பட்டது முத்தையாவிற்கு. இவர்கள் யாரயும் கண்டுகொள்ளாத நாராயணன்,
“அதனால இன்னும் ரெண்டே நாள்ல கல்யாணத்தை வச்சுபுடனும்னு வீட்டுல எல்லாரும் பிரியப்படறாங்க. அதான் நேத்தே இதை இவருக்கிட்ட போன்ல சொல்லிட்டேன்…” என குணசேகரனை காட்டி நாராயணன் கூற அனைவரின் பார்வையும் அவரை தொட்டு மீண்டது.
“இவரு ஊர்ல இன்னும் விஷயத்தை சொல்லலைன்னு சொன்னாரு. அதான் இன்னைக்கு நேர்ல வந்து பேசிட்டு அப்டியே பொண்ணையும் அழைச்சுட்டு போய்டலாம்னு வந்தோம். கல்யாண ஏற்பாடெல்லாம் எங்க ஊர்ல தடபுடலா நடந்துட்டு இருக்குது. நாளைக்கு ராத்திரி இங்க உங்க எல்லாருக்கும் பஸ் அனுப்ப ஏற்பாடு பண்ணிட்டேன்…”
“அய்யா சேகரு. என்னதான் நம்ம மனசுக்கு ஒப்பாத சில சம்பவங்கள் இடையில நடந்துபோனாலும் இப்படி ஒரு நல்ல சம்பந்தம் தகஞ்சிருக்கு பாரு. எல்லாம் உன் பொண்ணோட அதிர்ஷ்டம்….” என ஒருவர் பெருமைகொள்ள,
“ஓஹ் அதான் சேகரன் தங்கச்சி விடியலிலேயே கிளம்பி வந்துடுச்சா? வள்ளியம்மை என்னதான் குணத்துல முன்னபின்ன இருந்தாலும் தம்பி மகளுக்கு ஒரு நல்லதுன்னதும் உடனே புறப்பட்டு வந்துருச்சு பாருங்க. அதான்யா ரத்த சொந்தம்…” என சேர்மன் கூற மற்றவர்கள் அதை ஆமோதிக்க அர்ஜூன் வள்ளியம்மையை முறைத்தான்.
அதை கண்டுகொள்ளாது நாராயணன் தன் பேச்சை தொடர்ந்தார். மறந்தும் சேகரனையோ வள்ளியம்மையையோ அவர் பார்க்கவே இல்லை. பார்க்க விரும்பவில்லை என்பது தான் உண்மை.
“இப்படி சொல்றோம்னு வருத்தபடாம உங்க வீட்டு பொண்ணு கல்யாணத்துக்கு கண்டிப்பா எல்லாருமே வந்துடனும். எல்லோரையுமே நாங்க எதிர்பார்த்துட்டு இருப்போம். வீட்டுக்கு வந்து அழைச்சா தான் வரனும்னு நினைச்சா இன்னைக்கு சாயங்காலம் தான் கிளம்புவோம். அதுக்குள்ள எல்லோர் வீட்டுக்கும் வந்து கூப்பிட்டுடறோம். பெரியவங்க தான் சொல்லனும்…”
நாராயணன் பேச்சில் கவனமாக இருக்க ஆரவ்விற்குமே இது அதிர்ச்சிதான். கல்யாண ஏற்பாட்டை பற்றி தன்னிடம் கூட ஒரு வார்த்தையும் கூறாமல் எல்லா விஷயத்தையும் செய்திருக்கிறாரே என நினைத்து பூரித்தான். அர்ஜூன்,
“டேய் சக்கு, நீ உன் பேரை சொன்னதிலையே நான் ஷாக் ஆகிட்டேன். உன் தாத்தா என்னடான்னா சும்மா பொளந்து கட்டுறாரே. இன்னொருக்க கல்யாணமா? எங்களுக்கு இப்படி ஒரு சான்ஸ் கிடைக்கலைடா…” என கேலி செய்ய,
“அண்ணா நீங்க ரொம்ப லக்கி. அண்ணி கூட இன்னொருக்க கல்யாணம். உங்களுக்கு வேணும்னா இது ரெண்டாவது முறையா நடக்கிற மேரேஜ். ஆனா இப்போ இருக்கிற அண்ணிக்கு இதுதானே பர்ஸ்ட். இது இன்னுமொரு ஃபீலிங் தான் இல்லை…” என கார்த்திக் தன் பங்கிற்கு ஓட்டினான்.
அப்போதுதான் நிலாவின் மனநிலை என்னவாக இருக்கும். தன்னை ஏற்றுகொள்வாளா? இங்கு நடந்ததை எல்லாம் கேட்டிருப்பாளா? எப்படியெல்லாம் துடித்தாளோ? என எண்ணியவன் அவளை இப்போதே பார்த்து அணைத்துக்கொள்ள தவித்தான்.
ஆனால் அவனின் நிலவு துடிக்கத்தான் செய்தது. வேறு ஒன்றை நினைத்து…