“நோ மாம். நிலாவோட அப்பாவையும், அந்த லேடியையும் சும்மா விட சொல்றீங்களா? என்னால முடியாது. நேர்ல வச்சிக்கறேன் அவங்களை…” விழிகள் சிவக்க கர்ஜித்தவனை கண்டு மிரளத்தான் செய்தார் தர்ஷினி.
ஸ்டெபிக்குமே ஆரவ்வின் இந்த அதீத கோபம் அச்சமூட்டியதுதான். ஆனாலும் அவனின் கோவத்தில் இருந்த நியாயம் ஸ்டெபியை ஆரவ்வின் புறமே நிறுத்தியது. அவன் எதுவும் செய்தால் கூட தவறில்லை என நினைக்க தூண்டியது.
“ஆரவ் கண்ட்ரோல் யுவர் செல்ப். இந்த கோபம் அவங்களோட சேர்த்து நம்ம நிலாவையும் பாதிக்கும். அதுவும் இல்லாம அவங்க அளவுக்கு நாம இறங்கி போகவேண்டாம். முடிந்தளவுக்கு நாம நிதானத்தை கைவிடாமல் இருப்பதே நல்லது…” என,
“ஆமாம் ஆரவ். முதல்ல நிலாவுக்கு உண்மையை புரியவச்சு நம்மோட அழைச்சிட்டு வரதை மட்டும் நாம நினைப்போம். அவங்க எதாச்சும் பிரச்சனை செய்தா அதை எப்படி பேஸ் பண்ணனும்னு அந்த நேரம் முடிவெடுப்போம்…” என ஸ்டெபியும் அவனை அடக்கிவைத்தனர். ஆனாலும் அர்ஜூனிடம் வந்த ஸ்டெபி,
“அஜூ முடிஞ்சளவுக்கு நீங்க ஆரவ் கூடவே இருங்க. அவன் நிலா அப்பா மேல தான் ரொம்பவும் கோவமா இருக்கான். எந்த அசம்பாவிதமும் நடக்காம நல்லபடியா நிலாவை கூட்டிட்டு வரனும்…”
“புரியுது ஆஷா. தர்ஷிமா இதெல்லாம் யோசிச்சுதான் கார்த்திக்கை நம்மோட அழைச்சுட்டு போக முடிவெடுத்திருக்காங்க…” என கூறியும் ஸ்டெபியின் முகம் யோசனை படர,
“என்னோட பேரன்ட்ஸ் என்ன சொல்வாங்களோன்னு பயப்படறியா?…” சரியாக தன்னை கணித்து கேட்டவனை காதலோடு ஏறிட்டவள்,
“அஜூ யூ ஆர் சான்ஸ்லெஸ் மை மேன்…” என சில்லாகிக்க,
“ஹ்ம், போதும் போதும். அம்மாக்கிட்ட கார்த்திக் பேசிப்பான். அதை நினைச்சு நீ ஃபீல் பண்ணாதே. போய் தர்ஷிமாக்கு ஹெல்ப் பண்ணு. இப்போவே டைம் ஆச்சு. நாம இப்போ வீட்டுக்கு கிளம்ப முடியாது…”
“அப்போ நம்மோட பேக்கிங்?…” என இழுக்க,
“அதை நான் பார்த்துப்பேன் ஆஷா மேடம். நீங்க கிளம்பினா மட்டும் போதும்…”என புன்னகைக்க அவனோடு தன்னையும் இணைத்துக்கொண்டாள்.
ஆரவ் தான் வரும் தகவலை தயாளனுக்கு தெரிவிக்க அவன் தினகரனுக்கு தெரிவித்துவிட்டான். அடுத்து என்ன செய்யவேண்டும் என கேட்க,
“தயா. நீ எதுவும் செய்யவேண்டாம். நிலா குடும்பம் வரும் போது அவங்களுக்கு முன்னவே உன் அம்மாவை கூட்டிட்டு சேகரன் மாமா வீட்டுக்கு வந்திடு. அது எதார்த்தமா இருக்கட்டும். ஆரவ் வீட்ல இருக்கிறவங்க அவங்களுக்கு நீ தான் தகவல் சொன்னதுன்னு அவங்களா சொல்ற வரை நீயா எதுவும் பேசிக்காதே…”
“சரிங்கண்ணா. அப்படியே செஞ்சிடறேன்…” என்றவனின் குரல் உள்ளடங்கி இருக்க,
“உன் அம்மாவை நினைச்சு பயப்படறியா தயா?…” என கேட்கும் போதே அவமானத்தில் கன்றிப்போனான் தயாளன்.
“உண்மை தானே. தானும் அதை எண்ணித்தானே கவலையில் உள்ளேன். தாய் என்ன செய்வாரோ? என்ன பேசுவாரோ? என எண்ணி பயந்துதானே இருக்கிறேன்” என நினைத்து மருகினான் தயாளன்.
“தயா இது உனக்கொரு நல்ல வாய்ப்பா நினைச்சுக்கோ. உன்னோட காதல் பற்றி உன் குடும்பத்தாரிடம் தெரிவிக்க இதை விட நல்ல சந்தர்ப்பம் உனக்கு வாய்க்குமோ இல்லையோ? உன் வாழ்க்கைக்காக நீ தான் போராடனும்…”
“அம்மாவா? காதலான்னு நீ தான் முடிவெடுக்கனும். இந்த நிமிஷம் பிரச்சனையை எதிர்க்கொள்ள நினைத்து பயந்தால் காலம் முழுக்க காதலை இழந்து வாழவேண்டியது தான். முடிவை நீ தான் எடுக்கனும்…”
“முதல்ல நீ ஒரு ஆண்பிள்ளை. எத்தனை எதிர்ப்பு வந்தாலும் எந்த சூழ்நிலையிலையும் அவளை கைவிடாம தைரியமா இருந்து அவளை காப்பாத்தனும். உன்னை நம்பி வர பொண்ணு நீ குடுக்கிற நம்பிக்கை இதுதான். உன்னால உன் அம்மாவையே எதிர்த்து துணிந்து பேச முடியலைன்னா காதல்ல எப்படி ஜெயிப்ப?…”
தினகரன் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் தயாளனின் தலையில் சம்மட்டியாய் இறங்கியது. இன்னொருத்தர் தன்னை கோழை என சொல்லாமல் சொல்லியதை தாங்க முடியாமல் வேதனையில் துடித்தான் தயாளன்.
தான் துடிக்க துடிக்க கேட்கவேண்டிய பேச்சுக்கள் இன்னும் ஏராளம் பாக்கியிருக்கிறது என்பதை அறியாமல் இச்சிறு விஷயத்திற்கே துவண்டு நின்றான்.
“சரிங்கண்ணா. நான் பார்த்துக்கறேன். உங்களுக்கு அப்பப்போ விஷயத்தை சொல்லிடறேன்…” என கூறிவிட்டு தயாளன் போனை கட் செய்துவிட்டு விட்டத்தை வெறித்தபடி கட்டிலில் படுத்திருந்தான்.
ஊரிலிருந்து வந்ததிலிருந்தே வள்ளியம்மையிடம் பட்டுக்கொள்ளாமல் நடக்க அவரோ அதை கவனிக்கும் மனநிலையில் இல்லை. அவராக பேசி அவராகவே அதற்கு பதிலும் கூறிவிட்டு நகர தயாளன் உள்ளுக்குள் குமைந்து போவான்.
சிறு கேள்விக்கு கூட தன்னை பதிலளிக்கவிடாமல் தனக்கும் சேர்த்து அவரே முடிவெடுத்துக்கொள்வது ஏனோ இப்போதுதான் புத்தியில் உறைத்தது.
தினகரனின் வார்த்தைகளே மூளையையும் மனதையும் ஆக்ரமிக்க யோசித்து யோசித்து கொஞ்சம் கொஞ்சமாக தெளிய ஆரம்பித்தான். அடுத்து செய்யவேண்டியதையும் முடிவெடுத்தான்.
மறுநாள் எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியாகவே கழிய வண்ணமதியும் ஜீவாவும் ஆள் மாற்றி ஆள் நிலாவோடே ஒட்டுப்புல் போல ஒட்டிக்கொண்டே திரிந்தனர் தினகரனின் சொல்படி. வள்ளியம்மையால் நிலாவிடம் கேட்க நினைத்ததை கேட்கமுடியாமலே அதற்கடுத்த நாளும் விடிந்தது.
காலை உணவுக்காக பரபரப்பாக சமைத்துக்கொண்டிருந்த அமுதாவின் உள்ளத்தில் வள்ளியம்மை ஏன் இன்று விடிந்தும் விடியாமல் வந்திருக்கிறார்? அதுவும் தயாளனோடு என்ற கேள்வி நெஞ்சை அரிக்க அதை கேட்டுவிடமுடியாமல் வாயை மூடியபடி வேலையில் இருந்தார்.
குணசேகரனோடு வள்ளியம்மை வரவேற்பறையில் அமர்ந்து நிச்சயதார்த்த வேலைகள் பற்றி பேசிக்கொண்டிருக்க தயாளன் தான் நெருப்புமேல் அமர்ந்திருப்பதை போல உணர்ந்தான். அமுதா வாங்க தம்பி என்பதோடு நிறுத்திவிட ஜீவாவிடம் அதற்கும் பஞ்சமாகி போனது.
பெரும் முறைப்போடு அவனை வெறித்தவள் வள்ளியம்மையையும் கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டாள். இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த வள்ளியம்மை,
“இந்த கல்யாணம் மட்டும் முடியட்டும். இருடி உன்னை வச்சிக்கறேன்” என உள்ளுக்குள் கருவிக்கொண்டிருக்க வெளியில் தெருவே பரப்பரப்பானது போல தெரிந்தது. சிறிது நேரத்தில் முத்தையா, முத்தழகியோடு யாரோ வீட்டிற்குள் நுழைவது தெரிய குணசேகரன் எழுந்து நின்றார்.
யார் இந்த பெரியவர் என புரியாமல் பார்த்தவர் விழிகள் அவரின் பின்னால் வந்தவர்களை கண்டு பயத்தில் நிலைகுத்தி நின்றது.
நாராயணன், வடிவு, ராகவ், தர்ஷினி, அர்ஜூன், ஸ்டெபி, கார்த்திக் அவர்களுடன் ஆரவ் வந்து நிற்க மின்சாரம் தாக்கியதை போல அதிர்ந்து நின்றார் சேகரன்.
“வாங்கய்யா, வாங்க. இதுதான் நீங்க கேட்ட வீடு. சேகரன் என்னோட நண்பன் தான்…” என்றபடி ஆர்பாட்டமாக வரவேற்று நாராயணனை அமரவைத்து அங்கிருந்த அனைவரையும் உபசரித்து அமர்த்திவைத்தார் முத்தையா.
சேகரனுக்கும் வள்ளியம்மைக்கும் சர்வநாடியும் அடங்கிப்போனது. வள்ளியம்மை ஆரவ் தன்னை பார்த்த பார்வையில் திக் பிரம்மை பிடித்தது போல அப்படியே நின்றார். அப்படி ஒரு தீ ஜுவாலை ஆரவ்வின் விழிகளில் கொப்பளிக்க அதில் பயந்து மெல்ல பின்னால் சென்று நின்றார்.
அதிலும் சேகரனுக்கு ‘அப்பாடா’ என்னும் உணர்வும் ‘ஐயோ’ என்னும் உணர்வும் ஒரே சேர எழுந்து அவரை அசையாமல் நிற்கசெய்தது.
அதற்குள் வீட்டினுள் இருந்து அமுதா வெளி வந்து பார்க்க தயாளன் உள்ளே சென்று நிலாவை வெளியில் வரவிடாமல் நிறுத்திவைத்தான்.
“ஹலோ எங்க வீட்டுக்கு வந்திருக்கிறவங்க யார்னு நாங்க தெரிஞ்சுக்க கூடாதா? நீங்க யார் எங்களுக்கு ஆடர் போட?…” என ஜீவா வம்பிற்கு நிற்க வண்ணமதி ஜீவாவை அனுப்பிவிட்டு நிலாவோடு இருந்துகொண்டாள்.
ஆனாலும் நிலாவோடு வெளியில் யார் கண்களிலும் படாமல் எட்டி பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள் இருவரும். நிலாவிற்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் இதயம் மட்டும் ஏறுக்குமாறாக அதிகமாக துடித்தது.
மனதில் இனம்புரியாத உணர்வொன்று ஆட்டிப்படைக்க ஆனந்த அலைகள் பொங்கியது அவளுள். இன்னதென்று புரியாமலே விழித்தவள் வண்ணமதியோடு ஒட்டி நின்றாள். அவளை உணர்ந்து மதியும் அரவணைத்துகொண்டாள்.
தினகரனின் ஏற்பாடே இதுவும். ஆரவ் ஊர் எல்லையை தொட்டதுமே தயாளன் தினகரனுக்கு சொல்ல அவன் தன் குடும்பத்தை அனுப்பிவைத்தான்.
அவர்களுக்கு வருபவர்கள் நிலாவின் குடும்பம் என்று மட்டும் கூற மூவரும் திகைத்து போயினர். முத்தழகிக்கு இது போதாதா? தான் பார்த்துகொள்வதாக கூறி சென்றார்.
என்ன விஷயம் என முத்தையா கேட்டதற்கு அங்கு போய் தெரிந்துகொள்ளுங்கள் என கூறி தாயிடம் கண்ணை காண்பிக்க முத்தழகிக்கு முழு விபரமும் தெரியவில்லை என்றாலும் புரிந்துகொண்டு சென்றார்.
இன்னமும் வந்தவர்களை வரவேற்காமல் அதிர்ச்சியிலிருந்து வெளிவராமலே நின்றுகொண்டிருந்தார் சேகரன். வந்திருப்பவர்கள் யாரென தெரியவில்லை என்றாலும் அனைவரையும் வாய்நிறைய வரவேற்றார் அமுதா.
ஆனாலும் கையில் பூ புடவை, நகை இத்தியாதிகள் நிறைந்த சீர் தட்டுகளோடு இருப்பவர்களை பார்த்து புரியாது விழிக்க யார் என்னவென கேட்கும் முன்,
“அம்மாடி மருமகளே இந்த தட்டை எடுத்து உன் சம்பந்தியம்மாக்கிட்ட குடுமா…” என நாராயணன் தர்ஷினியை அழைக்க ஆரவ்வினால் நம்பவே முடியவில்லை. கண்கள் பனிக்க தாத்தாவை பார்க்க அவர் இவனை பார்த்து கண்ணடித்தார்.
தன் தாயிற்கான அங்கீகாரம் தாத்தாவின் வாயிலிருந்து கிடைத்துவிட்டதில் மகிழ்ந்து போனான் ஆரவ். சீர் தட்டை வடிவிடம் கூறி எடுத்துவந்தது நாராயணனே. இப்போது எதற்கு இது என புரியவில்லை என்றாலும் மற்றவர்கள் அவர் சொல்படியே நடந்தனர்.