தேடல் – 21
வீடே நிசப்தமாக இருக்க தர்ஷினி ராகவ்வின் முகத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்தார். ராகவ் யோசனையில் தான் இருந்தார்.
இரவின் குளுமை கொஞ்சமும் தீண்டாமல் ஆரவ்வின் நெஞ்சம் உலைகலனாக கொதித்துக்கொண்டிருந்தது. உடலெல்லாம் தீப்பற்றிக்கொண்டது போல பற்றி எரிந்தது.
அவனின் முகத்தில் நிமிடத்திற்கு நிமிடம் கோபம் அதிகரிக்க அடக்கமுடியாத ஆக்ரோஷம் கொண்டவனாக நிலைகொள்ளாமல் அமர்ந்திருந்தான். சேகரனையும், வள்ளியம்மையையும் அப்போதே கொன்று புதைத்துவிடும் ஆவேச அலை வேகமாக பொங்கி எழுந்தது அவனுள்.
தயாளன் ஆரவ்விடம் பேசிமுடித்து அரைமணிநேரம் ஆகியிருந்தது. ஆண்டனி, அர்ஜூன் ஸ்டெபி என அனைவரையும் உடனடியாக வரசொல்லி அழைப்புவிடுத்த தர்ஷினிக்கு ஆரவ்வை பார்க்க பார்க்க அழுகை முட்டிக்கொண்டு வந்தது. ஆனாலும் அழுதுகரையும் நேரம் இதுவல்லவே.
முன்பு மகனை எண்ணி கலங்கிக்கொண்டிருந்தவர் அவ்வப்போது யாருக்கும் தனக்குள் உடைந்து கண்ணீரில் தன் துக்கத்தை துடைத்தவர் இன்று இப்பெரும் துரோக செயலை அறிந்தபின் நிமிர்ந்துவிட்டார்.
அவர்களின் மானம் மரியாதைக்காக தன் மகனின் சந்தோஷத்தை இத்தனைநாள் விட்டுக்கொடுத்தால் தங்களின் முதுகிலேயே குத்த துணிந்த அந்த பேடிகளை இனியும் விட்டுவைப்பதில் அர்த்தமில்லை.
“என்ன ஒரு கயமைத்தனம்?” ரத்தம் கொதிக்க வெகுண்டெழுந்தார். இனியும் பொறுமை காப்பதில் நியாயமே இல்லை என ராகவ்வை வார்த்தைகளால் போட்டு தாளிக்க அவர் அப்போதும் யோசனையாகவே இருந்தார்.
ஆண்டனியும் அர்ஜூனும் விஷயம் கேள்விப்பட்டு கொதித்துவிட்டனர். ஸ்டெபி ராகவ்விடம்,
“என்ன அநியாயம் பார்த்தீங்களாப்பா?. இதை கேட்டும் நீங்க அமைதியா இருக்கீங்களே?…” என,
“ஸ்டெபி அந்த பையன் தயாளன் சொல்றதை எந்தளவுக்கு நம்பமுடியும்? இப்பவும் நான் நிலாவோட அப்பாவை நம்பறேன். அதனால கொஞ்சம் பொறுமையா இருங்க. நானே அவர்க்கிட்ட பக்குவமா பேசறேன்…” என்று கூற,
“போதும் நீங்க பொறுமையா இருந்தது. அந்த பையன் நமக்கு போன் பண்ணி இப்படி பொய் சொல்ல எந்த அவசியமும் இல்லையேப்பா. நீங்க இன்னும் எப்படி அவங்களை நம்பறீங்க? நீங்க கேட்டா மட்டும் உண்மையை சொல்லிடுவாங்களா என்ன?…” என அர்ஜூன் கூற ஆரவ் எழுந்துவிட்டான்.
“அஜூ நீ டாடியை விடு. அவர் நம்பிட்டே இருக்கட்டும். நான் போறேன். என் நிலாவை பார்க்க. வரும் போது அவளோட தான் வருவேன்…” என ஆரவ் கிளம்பவும் ராகவ் தடுத்தார்.
“அவசரப்படாதே ஆரவ். அங்க போய் பிரச்சனை எதுவும் பண்ணிடவேண்டாம். கண்டிப்பா நாம போகலாம். ஆனா அதுக்கு இது சரியான நேரமில்லைன்னு தோணுது. முதல்ல நல்லா யோசிச்சு…”
“போதும் ராகவ். அவனை விடு. எனக்கு ஆரவ் சொல்றதுதான் சரியாபடுது. ஆரவ் மட்டும் தனியா போகவேண்டாம். நாமளும் போவோம். அங்க நிலா குடும்பத்தார் எதுவும் பிரச்சனை செஞ்சா ஊர்ல உள்ளவங்ககிட்ட பேசி உண்மையை புரியவைப்போம்…” என்றார் ஆண்டனி.
“இல்லைப்பா ஆண்டனி. நான் தயாளன் சொன்னதை நம்பமாட்டேன். அதுவுமில்லாமல் திடீர்னு நாம போய் அங்க உண்மையை சொல்லி நிலாவுக்கு எதுவும் ஆகிட்டா…” என ராகவ் மறுக்க,
“ஒரு டாக்டர் மாதிரி பேசுங்கப்பா. அவளுக்கு இப்படி அவசர அவசரமா கல்யாண ஏற்பாடு நடக்குது. அதுவும் நமக்கு தெரியாமலே செய்யனும்னு நினைக்கிறாங்கனா நிலா இப்போ ரொம்ப நல்லா இருக்கான்னு தானே அர்த்தம்…” என அர்ஜூன் கடுமையாகவே கூற,
“ஆமாம்ப்பா, அஜூ சொல்றதுபோல தான் இருக்கனும். இதுல எல்லோரையும் விட அதிகமா பாதிக்கப்பட போறது நம்ம ஆரவ்வும் நிலாவும் தான். இதை நாம தடுத்தே ஆகனும்…” என ஸ்டெபியும் பேசினாள்.
“அப்பா நீங்க சொல்றது போலவே அவரை நம்புங்க. தயாளன் சொல்றது உண்மையா இல்லையான்னு நாம அங்க போனதும் தெரிஞ்சிடும். அப்படி அது பொய்யாவே இருந்தாலும் இனியும் நிலாவையும் ஆரவ்வையும் பிரிச்சு வைக்கிறதில் எந்த அர்த்தமும் இல்லை. நாம கண்டிப்பா போறோம். தட்ஸ் இட்…” என அர்ஜூன் முடிவாக கூறினான்.
அப்போதும் சிலை போல நின்றிருந்தவரின் முகத்தில் இவர்கள் அனைவரும் கூறுவதை ஏற்றுக்கொள்ளும் அறிகுறிகள் எதுவும் தென்படாததால் தர்ஷினி பொறுமை இழந்தார்.
வேகமாக தனதறைக்கு சென்று கதவை அடைத்துவிட எல்லோரும் திகைத்து நின்றனர். ஸ்டெபி பின்னால் செல்ல போக,
“வெய்ட் ஆஷா. தர்ஷிமா வருவாங்க. நீ டிஸ்டர்ப் செய்யாதே. போய் ஆரவ்க்கும் நமக்கும் குடிக்க ஏதாவது எடுத்துவா…” என அவளை அனுப்ப ஸ்டெபியோ தர்ஷினியின் அறைக்கதவை திரும்பி திரும்பி பார்த்தபடி சென்றாள்.
ஆரவ்வின் அருகில் அமர்ந்த அர்ஜூன் ஆறுதலாக அவனின் கையை பற்ற கரங்கள் அந்தளவிற்கு இறுக்கமாக இறுகி இருந்தது.
“டேய் ரிலாக்ஸ்டா. எல்லாம் சரிபண்ணிடலாம்…” என்றவன் மீண்டும் தயாளன் என்ன பேசினான் என்று கேட்டு ஆரவ் கூற கூற உன்னிப்பாக கேட்டுக்கொண்டான்.
அறைக்குள் சென்ற தர்ஷினிக்கு முதலில் என்ன செய்வதென புரியாமல் குறுக்கும் நெடுக்குமாக நடந்தவர் பின் அமைதியாக ஓரிடத்தில் கண்மூடி அமர்ந்தார். ஐந்து நிமிடங்கள் அசையாமல் அப்படியே இருக்க சட்டென்று பொறி தட்டியது அவரின் மூளையில்.
இதுதான் சரியான வழி. ராகவ்வையும் சமாளிக்க அவர்களால் மட்டுமே முடியும் என முடிவெடுத்தவரின் முகத்தில் சட்டென்று வெளிச்சம் பரவ தனது மொபைலை எடுத்து எண்களை அழுத்தி அழைப்பை விடுத்தார். மறுபுறம் அழைப்பு ஏற்கப்பட்டதும்,
“மாமா நான் உங்க மருமகள் தர்ஷினி ராகவ்சக்கரவர்த்தி பேசறேன்…” என கம்பீரமாக கூற மறுமுனையில் இருந்த நாராயணன் வியந்து போனார்.
ராகவ் தர்ஷினிக்கு திருமணமான இத்தனை வருடத்தில் தான் பேசாவிட்டாலும் வாங்க மாமா என்பதோடு முடித்துக்கொள்ளும் தர்ஷினி இன்று முதன் முதலாக தனக்கழைத்து பேசுவது அவருக்கு ஆச்சர்யமே.
“மாமா லைன்ல இருக்கீங்களா?…” என மீண்டும் தர்ஷினி கேட்க மேலும் மௌனம் காக்காமல்,
“சொல்லுமா, இருக்கேன். என்ன விஷயம்?…” என தழுதழுக்கும் குரலில் பாசமும் இழையோட கேட்க அதை உணர்ந்த தர்ஷினிக்கு கண்கள் கலங்கியது.
குரலிலேயே இத்தனை அன்பை காண்பிக்க முடியுமா? அவர் ஒன்றும் குசலம் விசாரிக்கவில்லை தான். ஆனால் சிறு வார்த்தைகளிலேயே தெரிகிறதே?
அவர் தான் இத்தனை வருடம் பேசாமல் இருந்தாலும் தானாவது தன்னை உணர்த்தி அவரிடம் சுமூகமாக பேசி இருந்திருக்கலாமோ? அவர் ஒதுக்குகிறார் என்று நினைத்து தானே ஒதுங்கி நின்று இப்படிப்பட்ட அன்பை இத்தனை வருடம் இழந்துவிட்டோமே என வருந்தினார்.
இப்போது இதை யோசிக்கும் நேரமல்ல இது என தன்னை மீட்டவர் நாராயணனிடம் தயாளன் பேசியவற்றை கூறியவர் அப்போது அங்கும் நடந்துகொண்டிருக்கும் நிலவரத்தையும் எடுத்துரைக்க அனைத்தையும் கேட்டு கிரகித்துக்கொண்டார் நாராயணன்.
“நீ வருத்தபடாதேம்மா. நாளைக்கு ப்ளைன் இருக்கான்னு பார்த்து உடனே கிளம்புங்க. நாம பூம்பொழில் போறோம். இதை நான் சொன்னேன்னு உன் புருஷன்கிட்டே சொல்லிடு. உங்களுக்காக பூம்பொழில் ஊர் எல்லையில நாங்க காத்துட்டு இருப்போம்…”
“சரிங்க மாமா…”
“நீங்க எல்லோரும் கிளம்பியதும் எனக்கொரு தகவல் சொல்லிடு. அதை அனுசரிச்சு நாங்க வந்திடறோம்…” என நாராயணன் வைத்துவிட அப்போதுதான் தர்ஷினிக்கு நிம்மதியானது.
அறையை விட்டு வெளியே வந்த தர்ஷினி ஹாலில் அனைவரும் அமர்ந்து காபி அருந்துவதை பார்த்தபடி வந்தவர்,
“ஸ்டெபி எனக்கும் ஒரு கப்…” என்றபடி ராகவ்விற்கு எதிர் சோபாவில் அமர்ந்தவர்,
“அர்ஜூன் நாம எல்லோரும் நாளைக்கு பூம்பொழில்க்கு போறோம். நாளைக்கு ப்ளைட். டிக்கெட் புக் பண்ணிட்டேன். நம்மோட உன் தம்பி கார்த்திக்கும் வரான். அவன்ட்ட போன்ல பேசிட்டேன்…” என்றவர் ஆண்டனியை பார்த்து,
“அண்ணா நீங்க இங்க இருங்க. ஹாஸ்பிட்டலை பார்த்துக்கனுமே. நாங்க போய்ட்டு அங்க என்ன நடந்ததுன்னு இன்பார்ம் பன்றோம்…” என கூறிவிட்டு ஆரவ்விடம்,
“உனக்கு தேவையான திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணிக்கோ ஆரவ். நாளை நைட் நாம தமிழ்நாட்டுக்கு போய்டுவோம். மறுநாள் மார்னிங் நிலாவை பார்த்திடலாம்…” என பயண திட்டங்களை வேகமாக கூற,
“தர்ஷி. ஸ்டாப் இட். என்னிடம் கேட்காமலே நீ மட்டும் முடிவெடுத்தா என்ன அர்த்தம்? அதுவும் டிக்கெட் போட்டுட்டு வந்து இன்பர்மேஷன் சொல்றது போல இருக்கு உன் ஆக்டிவிட்டீஸ். ஐ டோன்ட் லைக் திஸ்…” கோவத்தை உள்ளடக்கிய குரலில் ராகவ் பொறிய,
“முடிவெடுத்தது நான் இல்லை. என்னோட மாமனார். உங்களோட லைக்கிங் அன்ட் அன்லைக்கிங் பத்திலாம் நீங்க அவங்ககிட்ட சொல்லிக்கலாம். இதுக்கு மேல பேச எதுவுமில்லை…” என்று கூறியவர் ஸ்டெபியை அழைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
ராகவ் செய்வதறியாமல் திகைத்து நின்றார். தர்ஷினியின் இந்த கோபமும் வேகமும் எதில் கொண்டு முடியுமோ என பயந்தார். சேகரனிடம் தான் கூறியதென்ன? இங்கு நடப்பவை என்ன? எதை நம்புவது என புரியாமல் அவரின் பின்னே சென்ற ஆரவ்,
“மாம் டிக்கெட் இன்னைக்கு கிடைக்கலையா? இன்னைக்கே கிளம்பலாமே?. எனக்கு இப்போவே நிலாவை பார்க்கணும் போல இருக்கு மாம்…” தவிப்பாய் கேட்ட மகனை பரிவாக பார்த்த தர்ஷினி,
“இத்தனை நாள் வெய்ட் பண்ணின நீ இன்னும் ஒரு நாள் வெய்ட் பண்ண முடியாதா?…” என சிரித்தபடி கேட்டவர்,
“ஆரவ் இன்னொரு விஷயம். நிலா உன்னை யார்னு தெரிஞ்சுகிட்டதும் எப்படி பிகேவ் பண்ணுவான்னு தெரியாது. எதுவானாலும் நாம அதை ஏத்துக்கற மைண்ட் செட்ல இருக்கனும். நமக்கு நிலா மட்டும் போதும். அங்க வேற எந்த பிரச்சனையும் வேண்டாம்…”