நெஞ்சில் உறைந்த தேடல் – 20 (3)

தயாளனின் முகத்தில் தெரிந்த பயமும் பதட்டமும் கொஞ்சமும் தினகரனை அசைக்கவில்லை. இன்னும் அவன் மேல் ஆத்திரம் தான் எழுந்தது.

“உன்னை எதுக்கு தூக்கிட்டு வந்திருக்கேன்னு தெரியுமா?…” என இல்லை என்பது போல தலையசைத்தான் தயாளன்.

“நான் கேட்கிற கேள்விக்கு உண்மையை மறைக்காம பதில் சொல்லனும். வாயை திறந்து பதில் சொல்லனும். இல்லைனா வாயை கிழிச்சு திறக்கவைப்பேன்…” என்றவனின் பேச்சே சொன்னதை செய்வேன் என மிரட்டியது.

“இல்லைண்ணே, எதுக்குன்னு எனக்கு தெரியலை…” என தந்தியடிக்கும் குரலில் கூற,

“ஆரவ் யார்? நிலாவுக்கு அவர் யார்?…” நேரடியாக கேட்டேவிட்டான் தினகரன். தயாளனின் அதிர்ந்த பார்வையை கண்டுகொள்ளாமல்,

“கேட்டதுக்கு பதில் சொல்லு…” என உறும,

“அ…….அ..து வ……ந்து அ…அம்மா யார்க்கிட்டயும் சொல்லகூடாதுன்னு சொல்லிருக்காங்க…”என்றவனை உறுத்துவிழித்த தினகரனின் பார்வை தயாளனை பீதி கொள்ளச்செய்தது. ஆனாலும் எச்சிலை கூட்டி விழுங்கியவன் அசையாமல் நிற்க,

“நீ இங்க வந்து அரைமணி நேரம் ஆச்சு. இந்நேரம் உன்னை காணோம்னு உன் அம்மா தேடவே ஆரம்பிச்சிருப்பாங்க. அவங்க தேடுதல் வருஷக்கணக்கா தொடரனும்னு நினைக்கிற போல?…” என்பவனை புரியாது தயாளன் பார்க்க,

“தெளிவாவே சொல்றேன். உண்மையை சொன்னா மட்டும் தான் நீ இங்க இருந்து போக முடியும்னு சொல்றேன். உயிரோட. இல்லனா உங்கம்மா தேடிட்டே இருக்கவேண்டியதுதான். நீ இங்க வந்ததும் தெரியாது. மேல போறதும் யாருக்கும் தெரியாது…”என கண்களில் கொலைவெறி மின்ன அழுத்தமாக கூறியவனை பார்த்து கிலி பிடித்தது தயாளனுக்கு.

“அண்ணே…” என அழுதுவிடுபவன் போல கெஞ்சல் குரலில் அழைக்க அவனை துச்சமாக பார்த்தவன்,

“நீ சொல்லித்தான் நான் ஆரவ் பற்றி தெரிஞ்சுக்கனும்னு இல்லை. உன்னை தூக்க தெரிஞ்ச எனக்கு உங்கம்மா, அப்பாவை தூக்க எவ்வளோ நேரம் ஆகும்?…” என சொல்லியது தான் தாமதம்,

“அண்ணே அப்படியெதுவும் செஞ்சுடாதேங்க. நான் சொல்லிடறேன். சொல்லிடறேன்…” என கதறிக்கொண்டு அடுத்த நொடி அனைத்தையும் ஒப்பித்தான். கேட்க கேட்க தினகரனால் தாளமுடியவில்லை.

ஆரவ்வின் காதலை எண்ணி பிரமித்து போனான் தினகரன். எப்படியான உன்னதமான உறவை சிதைத்து அவர்கள் காதலை கொச்சைபடுத்துவது போல இப்படி ஒரு ஏற்பாட்டை எந்தவிதமாக குற்றவுணர்வும் இன்றி நடத்த முயல்கிறார்களே? சேகரனின் மீது அப்படி ஒரு கோபம் கனன்றது தினகரன் உள்ளத்தில். தயாளன் சொல்லி முடித்ததும்,

“இப்போ நீ எதுக்கு வந்திருக்கன்னு  உனக்கு தெரியுமா?…” ஆத்திரத்தை உள்ளடக்கிய குரலில் பல்லைக்கடித்தபடி வார்த்தைகளை வெளியிட,

“தெரியும் அண்ணே. எனக்கும் நிலாவுக்கும் கல்யாணப்பேச்…” தினகரன் பாளாரென செவிளில் அறைந்திருந்தான்  தயாளனை. சுருண்டு விழுந்தான் அவன்.

“பொறுக்கி நாயே. உனக்கு கொஞ்சம் கூட வெட்கமா இல்லை. அடுத்தவன் பொண்டாட்டிக்கு தாலிகட்ட இப்படி கிளம்பிவந்துட்ட. உன்னையெல்லாம் கொன்னா கூட என் ஆத்திரம் அடங்காதுடா…” என கீழே கிடந்தவனை மீண்டும் எழுப்பி நிற்கவைக்க,

“அண்ணே நான் சொல்றதை கேளுங்கண்ணே…” என்ற கெஞ்சல் எதுவும் தினகரனின் காதுகளை எட்டவில்லை.

“உன் அம்மா என்னனா நிலா வயித்துல இருக்கிற சிசுவை அழிச்சு உனக்கு கட்டிவைக்க பார்க்கா. அவளாம் ஒரு பொம்பளையா. குடும்பமாடா நீங்க? த்தூ…”   என முகத்தில் உமிழ அதிர்ந்து நின்றான் தயாளன்.

அடுத்து தினகரன் அடித்த அடி அனைத்தையும் அமைதியாக வாங்கியவன் ஒருகட்டத்தில் தொய்ந்தமர்ந்தான். குரல் தழுதழுக்க,

“சத்தியமா சொல்றேன் அண்ணே. எனக்கு இந்த கல்யாணத்தில விருப்பமே இல்லை. அம்மாக்கிட்ட எவ்வளவோ சொல்லி அது கேட்கலை. அதான் நேரா சொல்லி புரியவைப்போம்னு கிளம்பி வந்தேன்…” என்றவனை நம்பாத பார்வை பார்த்தான் தினகரன்.

அந்த பார்வையில் தான் அத்தனை உஷ்ணம். விட்டால் தயாளனை பார்வையாலேயே சுட்டெரிக்கும் ஆவேசம் வேகமாக கிளர்ந்தெழுந்தது.

“உண்மைதான் அண்ணே. நா வேற ஒரு பொண்ணை விரும்பறேன். அந்த பொண்ணுக்கிட்ட இன்னும் என்னோட விருப்பத்தை சொல்லலை…” என்றவன் தனது பர்ஸில் வைத்திருந்த தான் காதலிக்கும் பெண்ணின் போட்டோவை காட்ட தினகரனுக்கு வியப்பானது.

ஆனாலும் வள்ளியம்மையின் செயல் அவனின் கோபத்தை மட்டுப்பட விடவில்லை. அவரை ஏதாவது செய்தே ஆகவேண்டும் என கொதித்தான்.

“அண்ணே நிலா உண்டாகிருக்கிறது நீங்க சொல்லித்தான் எனக்கே தெரியும். எங்கம்மா இப்படி ஒரு காரியம் செய்ய துணிவாங்கன்னு எனக்கே தெரியாது. இப்போவும் நான் என்ன செய்யனும்னு எனக்கு தெரியலைண்ணே. மாமாக்கிட்ட நான் பேசறேண்ணே…”

அவனையே பார்த்துக்கொண்டிருந்த மறுப்பாக தலையசைத்து தினகரன் அவனருகில் நெருங்கி,

“நீ  உன் மாமாக்கிட்ட பேசவேண்டாம். இங்க யார்க்கிட்டயும் பேசவேண்டாம்…” என அவன் என்ன சொல்கிறான் என புரியாமல் நின்றான் தயாளன்.

“நீ நிலா மாப்பிள்ளைக்கிட்ட பேசு. அடுத்து என்ன செய்யனும்னு அவங்க முடிவெடுக்கட்டும். நீ ஒதுங்கி நின்னு அமைதியா வேடிக்கை மட்டும் பாரு…” என்றவனுக்கு தலையசைக்க,

“என்னிடம் சொல்லியதையும் இங்க நடந்ததையும் வெளில சொல்லமாட்டேன்னு நினைக்கேன்…” என தினகரன் கூற,

“நீங்க என்ன சொல்லவறேங்கன்னு எனக்கு புரியுதுண்ணே. சத்தியமா சொல்ல மாட்டேண்ணே. ஏன்னா விஷயம் வெளில தெரிஞ்சா நிலா தாயான விஷயமும் எப்படியாச்சும் பரவிடும். எங்கம்மாவே எதாச்சும் செய்ய நினைக்கும்…” என்றான் தாயின் அபாண்டமான செயல் தெரிந்த வெறுப்போடு.

புரிதலோடு பேசியவனை தோளில் தட்டிக்கொடுத்த  தினகரன், “நீ இப்போவே போன் பண்ணு அவங்களுக்கு…” என தயாளனை அங்கிருந்த இன்னொரு நாற்காலியில் அமரசெய்து தானும் உடன் அமர்ந்தான் அருகில்.

ஆரவ்வின் தொலைபேசி எண்ணை எதற்கும் இருக்கட்டும் என ஸ்டெபி தான் தயாளனிடம் கொடுத்திருந்தாள். நிலாவிற்கு ஆரவ்வின் நினைவுகள் திரும்பியதும் ஆரவ்விற்கு தான் முதலில் அவன் அழைத்து சொல்லவேண்டும் என்று.

ஆரவ்வின் எண்ணிற்கு அழைப்பு விட இரண்டுமுறை முழுதாக அழைப்பு சென்று எடுக்கபடாமலே போக மீண்டும் அழைக்கசொன்னான் தினகரன்.

“விடாமல் கூப்ட்டுட்டே இரு. கண்டிப்பா எடுப்பார்…” என கூறியவனை ஆச்சர்யத்தோடு பார்த்தான் தயாளன்.

“உங்களுக்கு ஆரவ் யாருன்னு முன்னமே தெரியுமாண்ணே? ஆரம்பத்தில் என்கிட்டே கேட்கும் போதும் ரொம்ப மரியாதையா தான் கேட்டீங்க…”

“நிலாவுக்கு ரொம்ப வேண்டியவங்களா இருக்கும்னு நினைச்சேன். அவளுக்கு முக்கியமானவங்கனா அவங்க நமக்கும் அப்படித்தானே?…” என புன்முறுவலோடு கூற தயாளனும் ஆமோதிப்பாக தலையசைத்தான்.

நான்கைந்துமுறை முயன்று அதன் பின்னே அழைப்பு ஏற்கப்பட்டது.

“ஹலோ ஆரவ் ஸ்பீக்கிங்…” என,

“நா…. நான் நா…ன் தயாளன் பேசறேன்…” வார்த்தைகள் வராமல் திணற ஆரவ்விற்கு யாரென முதலில் தெரியவில்லை.

“தயாளன்?…” என கேள்வியாக கேட்க,

“நிலாமுகி அத்தை பையன்…” எனவும் ஆரவ் மூச்சுவிடவும் மறந்தவனாக  அப்படியே சமைந்து நின்றான்.

“ஒஹ் சாரி. நீங்களா? சொல்லுங்க. நிலா எப்படி இருக்கா? அவளுக்கு என் நினைவு வந்ததா? என்னை பத்தி எதாச்சும் கேட்டாளா?. அவளை நான் வந்து என்னோட கூட்டிட்டு போகமுடியுமா?…” என காதல் பொங்க உணர்ச்சி கொந்தளிப்பில் படபடவென பேசினான் ஆரவ்.

தயாளனால் அவனிடம் அதற்குமேல் பேசமுடியாம துக்கம் பீறிட்டது. உன் மனைவியை எனக்கு மணமுடிக்க முயற்சிக்கிறார்கள் என கணவனவனிடமே எப்படி சொல்வது என கூசிப்போனான்.

“ஹலோ ஹலோ மிஸ்டர் தயாளன், லைன்ல இருக்கீங்களா?…” என்றவனின் குரலில் பரிதவிப்பும் பதட்டமும் போட்டிபோட தவிப்பான குரலை தினகரனும் கேட்டுக்கொண்டு தான் இருந்தான் ஸ்பீக்கரில்.

ஆரவ்வை நினைத்து பெரும் துயரம் எழுந்தது தினகரனுக்கு. இவ்விஷயத்தை கேட்டு அவன் என்னமாதிரி முடிவெடுப்பான் என ஊகிக்க முடியவில்லை.

தன் மனைவியின் வரவுக்காக நெஞ்சம் நிறைய காதலை சுமந்துகொண்டிருப்பவனுக்கு எப்பேற்பட்ட துரோகத்தை இழைக்க காத்திருந்திருக்கிறார்கள் சேகரனும் வள்ளியம்மையும். நினைக்க நினைக்க கொலைவெறியே கிளம்பியது அவர்கள் மேல்.

error: Content is protected !!