நெஞ்சில் உறைந்த தேடல் – 20 (2)

அப்போதும் நகராமல் திண்ணக்கமாக அமர்ந்திருந்தவனை ஆயாசத்தோடு பார்த்த லலிதா வேறு வழியின்றி கூற ஆரம்பித்தார். கேட்க கேட்க தினகரனின் நாடி நரம்பெங்கும் கோபத்தீ பரவ கொதித்துப்போனான்.

தான் கேட்கவேண்டிய விஷயங்களை கேட்டறிந்துவிட்டு இதை தானும் யாரிடமும் கூறமாட்டேன் என்னும் வாக்குறுதியையும் அளித்துவிட்டு வேகமாக வெளியேறினான். அவனின் முகமே பயங்கரமாக மாறி இருந்தது.

வெளியில் சில வேலைகளை முடித்துவிட்டு ஒருமணி நேரம் கழித்து வீட்டிற்குள் நுழைந்தவனை ஜீவாவின் குரலே வரவேற்றது. அவளை பார்த்து தலையசைத்தவன் மதியிடம்,

“அம்மா எங்க மதி?…” என கேட்டுக்கொண்டே அமர,

“அத்தை எங்கவீட்ல தான் இருக்காங்க மாமா. மதியக்கா ரெண்டு நாளா வீட்டுக்கு வரலை. காய்ச்சல்னு அத்தை சொன்னாங்க. அதான் பார்க்க வந்தேன்…” என ஜீவா கூறினாள்.

“காபி கொண்டு வாயேன் மதி…” எனவும் அவளும் எழுந்து செல்ல ஜீவாவிடம் திரும்பியவன்,

“உனக்கு காலேஜ் இல்லையா ஜீவா?…”

“இல்லை மாமா. ரெண்டுநாளா அடைமழை. காலேஜ் லீவ் விட்டுட்டாங்க…” என முடித்துக்கொள்ள,

“நிலா எப்படி இருக்கா ஜீவா?…” என்று தினகரன் ஆரம்பிக்க அவனை வியப்பாக பார்க்க அவனோ என் கேள்விக்கு பதில் கூறு என்பதுபோல அவளையே பார்த்திருந்தான்.

“ஹ்ம், இப்போ பரவாயில்லை மாமா. நல்லாத்தான் இருக்கா…”

“நிலா ஹாஸ்பிட்டல் வந்திருந்தா. உடம்பு சரியில்லையா?…” மதியும் வந்துவிட அவளிடம் காபியை வாங்கி  பருகியபடி கேட்டான்.

“அவளுக்கு ஒண்ணுமில்லை மாமா. வள்ளியத்தைக்கு தான் கொஞ்சம் முடியலை போல. அதான் கூட கூட்டிட்டு போனாங்க துணைக்கு…” தினகரனும் மதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள அவர்களின் பார்வைக்கான அர்த்தம் புரிந்தது போல,

“அம்மா அனுப்பமாட்டேன்னுதான் சொன்னாங்க. என்னமோ நிலாவே போய்ட்டு வரேன்னு சொல்லவும் அனுப்பி வச்சாங்க. இப்போலாம் அம்மா பேச்சுக்கு என்ன மதிப்பிருக்கு? வீட்ல எங்க விருப்பப்படி என்னதான் நடக்குது?…” என அங்கலாய்ப்பாக கூறினாள்.

“எனக்கு நிலாவை பத்தி கொஞ்சம் தெரியனும். அவ எங்க தங்கியிருந்தா? அங்க இருந்தவங்க யாரை பத்தியாச்சும் உன்கிட்ட பேசியிருக்காளா?…” என,

“என்னங்க இது திடீர்னு கேட்கறீங்க? உங்க முகமும் சரியில்லையே?…” என மதி கேட்க,

“அவசியம் வந்திருக்கு மதி. அவ நல்லதுக்குத்தான் கேட்கிறேன்…” என்றவனின் முகத்தில் தெரிந்த தீவிரபாவம் ஜீவாவை அனைத்தையும் சொல்லவைத்தது.

தந்தையிடம் கூட கூறியிராத ஆரவ் பற்றிய நிலாவின் பிதற்றல்களையும் சேர்த்தே கூறினாள் ஜீவா.

“எனக்கு முன்னேவே கொஞ்சம் சந்தேகம் தாங்க. நிலாகிட்ட எதுவோ மாற்றம்னு…”

“அப்போவே நீ என்னிடமாவது சொல்லியிருக்கலாமே மதி…” என தினகரன் கவலையாக கூற,

“நானா எதுவாச்சும் கற்பனை பண்ணிட்டு சொல்லி பின்னால என்னோட சந்தேகம் உண்மையில்லைன்னு ஆனா பிரச்சனைகள் வருமே. யாராச்சும் தேவையில்லாம பேசிட்டா என்ன செய்யன்னுதான் முழுசா தெரியாம எதுவும் பேசவேண்டாம்னு தான் சொல்லலை…”

“நிலா சொன்ன ஆரவ் யாருன்னு அவக்கிட்ட கேட்டியா ஜீவா?…” என்ற மதியை பார்த்து,

“நீங்க வேற மதியக்கா. அந்த பேர் யாருன்னே தெரியலைன்னு சொல்ற நிலா அந்த பேரை கேட்டாலே மெய்மறந்து போய்டறா. அந்நேரம் அப்படி ஒரு சந்தோசம் அவளோட முகத்துல தெரியுது. உடனே எதையோ நினச்சு அழ ஆரம்பிக்கிறா….”என மதியிடம் கூறி தினகரனை பார்த்து,

“அவளுக்கே ஏன்னு காரணம் தெரியலை. அவ பாவம் மாமா. அப்பாக்கிட்ட கேட்டா அவளுக்கு எந்த பதிலும் சொல்லமாட்டிக்காங்க. அவளை ஒரு பார்வையில் அப்பா அடக்கிடறாங்க. நிலாவை இங்க கூட்டிட்டு வரப்போ கூட வந்த அந்த அக்காவை பத்தி அம்மா கேட்டதுக்கு இப்போ வரைக்கும் எந்த பதிலும் சொல்லாம சாதிக்கிறார் அப்பா…” ஆற்றாமையும் கோபமும் கலந்த குரலில் கூறிய ஜீவா,

“அவ இருக்கிற நிலையில இப்போ கல்யாணம்னு சொல்லி இன்னும் கஷ்டபடுத்தறாங்க. நிலாவுக்கு இந்த கல்யாண ஏற்பாட்டில் கொஞ்சமும் உடன்பாடில்லை மாமா. என்னைக்குமே மறுத்து பேசாத நிலா அப்பாக்கிட்ட முதல் முதலா இந்த கல்யாணம் வேண்டாம்னு தைரியமா சொன்னா…”

இதை கேட்டு தினகரனுமே திகைத்துத்தான் போனான். அப்பாவை மீறி யாரும் இல்லை என அவரின் சொல்லே வேதமென இருந்தவள் இதை எதிர்க்கிறாளா? அவனால் நம்பமுடியவில்லை. இதன் பின் இன்னும் என்னவெல்லாம் இருக்கிறதோ என எண்ணி கொஞ்சம் பயந்துதான் இருந்தான்.

“வள்ளியத்தைக்கிட்ட பேசவே முடியலை. சும்மாவே அவங்க ரொம்ப பண்ணுவாங்க. இப்போ அப்பாவே அவங்க பேச்சுக்கு கட்டுப்பட்டு இருக்கும்போது அவங்க ஆட்டத்தை சொல்லவா வேணும்…” மனம் கசந்து பேசும் அச்சிறுபெண்ணை இரக்கத்தோடு பார்த்தாள் மதி.

“இப்போ என்னனா நிச்சயத்தை உடனே வைக்கனும்னு பிடிவாதமா அப்பாக்கிட்ட சொல்லி அதுக்கு சம்மதிக்கவும் வச்சுட்டாங்க. நிலாவுக்கு இது இன்னும் தெரியாது. ஹாஸ்பிட்டல் போய்ட்டு வந்து முடியலைன்னு படுத்துட்டா…”

“அத்தை வரதுக்கு அரைமணிநேரம் முன்னாடிதான் இந்த பேச்சுவார்த்தை நடந்துச்சு. இன்னும் ஒரு வாரத்துல நிச்சயதார்த்தம்னு சொல்றாங்க. கல்யாணத்தையும் சீக்கிரமே சிம்பிளா வச்சுக்கனுமாம். அந்த தயாளனை நாளைக்கே கிளம்பி வரசொல்லிருக்காங்க…”

“அதுக்கு முன்ன அந்த தயாளன்கிட்ட நிலா இருந்த இடத்தை பத்தி கேட்கனும்னா அத்தைக்கும் அப்பாவுக்கும் எப்படியும் தெரிஞ்சிடும். அதுவே உங்க பொண்ணு இப்படி கேட்டான்னு சொல்லிடும். அதுக்கப்பறம் அப்பாவை சமாளிக்கமுடியாது. அப்பா சரியில்லை மாமா. எங்ககிட்ட எதையோ மறைக்கிறார்…” என சந்தேகத்துடன் சலிப்போடு கூற தினகரனின் கை முஷ்டி இறுகியது.

அவனால் உள்ளுக்குள் புசுபுசுவென எழுந்த கோபக்கனலை கொஞ்சமும் குறைக்க முடியவில்லை. விழிகள் ரத்தமென சிவக்க தன்னை கட்டுப்படுத்த முயன்று ஓரளவு வெற்றியும் பெற்றான்.

“சரி ஜீவா, எனக்கு உன்னோட உதவி வேணுமே? ஆனா யாருக்கும் தெரியக்கூடாது. என்ன எதுன்னு கேட்காம செய்வியா? என் மேல் நம்பிக்கை இருந்தா…” என்றவனை இரு பெண்களும் யோசனையாக பார்க்க அடுத்த நிமிடம்,

“எனக்கு உங்கமேல நம்பிக்கை இருக்கு மாமா. நீங்க ஒன்னு செய்ய சொல்றீங்கனா நிச்சயம் அது எங்களுக்கு நல்லதாகத்தான் இருக்கும்னு நான் நம்பறேன். சொல்லுங்க மாமா நான் என்ன செய்யனும்?…” என்ற ஜீவாவை கனிவோடு பார்த்தவன் ஜீவா செய்யவேண்டியதை கூற ஆரம்பித்தான்.  

நிலாவின் வீட்டிற்கு சென்று வந்த முத்தழகியும் அமுதாவின் புலம்பலையும் சேகரனின் பிடிவாதத்தையும் வருத்தத்தோடு கூறினார். இது எங்கு கொண்டு சென்று முடியுமோ என்ற பதைபதைப்பு அவரின் பேச்சில் தெரிந்தது.

வீட்டிற்கு சென்றதும் தினகரன் கூறியதை செய்துமுடித்த ஜீவா மதிக்கு அழைத்து விபரத்தை சொல்லிவிட மதி மூலம் அதை அறிந்துகொண்ட பின்தான் ஓரளவு நிம்மதியானான். தினகரனுக்கு தான் அடுத்து என்ன செய்வது என யோசிக்க ஆரம்பித்தான்.

அன்று மாலையே பஜாரில் எத்தேர்ச்சையாக எதிர்பட்ட குணசேகரனிடம் தானாக சென்று பேச்சுக்கொடுத்தவன் நிலாவை பற்றி ஆறுதலாக பேசி விசாரிக்க அவரோ ஓரிரு வார்த்தையில் நழுவியபடி நிமிர்ந்தும் பாராமல் சென்றுவிட அவனின் சந்தேகம் சேகரனையும் தாக்கியது.

என்றுமே சேகரன் அப்படி செல்பவர் அல்ல. தினகரனே கவனியாமல் கடந்து சென்றாலும் நிறுத்திவைத்து வலிய பேசுபவர் இன்று தன்னை தவிர்ப்பதன் காரணம் நிச்சயம் நிலாவின் விஷயமாக தான் இருக்கும் என்ற எண்ணம் அவனுள் வலுபெற்றது.

“இனி இதில் யாருக்கும் எந்த தயவு தாட்சண்யமும் காட்டக்கூடாது. அது யாராக இருந்தாலும்” என முடிவெடுத்தவன் தன் மொபைலை எடுத்து ஒரு எண்ணிற்கு அழைத்தான். அந்த புறம் அழைப்பு ஏற்கப்பட்டதும்,

“நான் தினகரன் பேசறேன். எனக்கொரு உதவி வேணும்….”

“அண்ணே உதவின்னு ஏன் சொல்றீங்க? என்ன செய்யனும்னு சொல்லுங்க. உடனே செஞ்சுடறேன்…” என பணிவோடு மறுபுறம் இருந்தவன் கூற,

“உன்னோட மொபைலுக்கு ஒரு போட்டோ அனுப்பிருக்கேன். நாளைக்கு அவன் எந்த பஸ்ல எந்நேரம் வருவான்னும் அனுப்பிருக்கேன். அவனை தூக்கிடு…” குரலில் இருந்த இறுக்கத்தில் மறுபுறம் இருந்தவன் மிரண்டு,

“அண்ணே…” என அதிர,

“தூக்கிடுன்னா அவனை நான் சொல்ற இடத்துக்கு கொண்டுவந்து என்கிட்ட ஒப்படைச்சிடு. மத்ததை நான் பார்த்துக்கறேன்…”  என பேசிமுடித்த பின்னாலும் அமைதியாக இருக்கமுடியவில்லை.

மறுநாள் ஊருக்கு வெளியில் உள்ள ஆள் அரவமற்ற தோப்பில் தினகரனின் முன்பு நடுநடுங்கி நின்றுகொண்டிருந்தான் தயாளன்.

எதிரே சிங்கமென கால்மேல் கால் போட்டு கம்பீரத்துடன் அமர்ந்திருந்தவனது முகத்தில் தெரிந்த உக்கிரத்தில் தயாளனின் சர்வமும் அடங்கியது. அவனை பார்வையாலேயே தினகரன் ஊடுருவ அதில் தயாளனின் முதுகுத்தண்டு சில்லிட்டு போனது.

வந்ததிலிருந்து எதுவும் பேசாமல் தன்னை பார்வையாலே பதறவைத்தவனை கேள்விகேட்டால் எழுந்துவந்து அடித்துவிடுவானோ என அஞ்சியே தயாளனும் நின்றுகொண்டே இருந்தான்.

அந்த தோப்பில் தங்களை தவிர வேறு மனித நடமாட்டமே கண்ணுக்கெட்டிய தூரம் வரை இல்லாதிருப்பது தயாளனை மிரட்டியது. அரண்டவனாக தினகரனின் முகத்தை பார்க்கவே அஞ்சினான்.

error: Content is protected !!