நெஞ்சில் உறைந்த தேடல் – 20 (1)

தேடல் – 20

       பூம்பொழில் முழுவதும் நிலாவிற்கு திருமண ஏற்பாடுகள் நடப்பதாக அங்குமிங்குமாக கசிந்து பரவியது. நல்லவிதமாக ஒரு வாழ்க்கை அவளுக்கு அமையட்டும் என ஒருமித்த கருத்தே அவ்வூரின் அனைத்து மக்களின் மனதிலும்.

ஊருக்குள் அனைவருக்கும் நிலாவின் திருமண ஏற்பாடு ஆரம்பித்திருப்பது மட்டுமே அறிந்திருக்க மாப்பிள்ளை தயாளன் என்பது இன்னமும் தெரியாமலே இருந்தது.

குணசேகரனும் அதை தெரியப்படுத்த முயலவில்லை. அவருக்கு ஏதாவது ஒரு திருப்புமுனை ஏற்பட்டு இத்திருமண பேச்சு தடைபட்டு நின்றுவிடாதா என்னும் பேராவல் மனதின் அடியாழத்தில் நெருப்பாக எரிந்துகொண்டுதான் இருந்தது. அதை அவர் வெளிக்காட்டிக்கொள்ளாமல் கொடுத்த வாக்கிற்காக ஊமையாக இருந்தார்.

வீட்டில் விஷயத்தை கூறிய பின்னால் நிலாமுகியை நேருக்கு நேர் பார்க்கும் தருணங்களை முடிந்தளவு தவிர்க்கவே நினைத்தார். பரிதவிப்போடு தன்னை பார்க்கும் மகளின் முகத்தை கண்டு எங்கே உண்மையை கூறிவிடுவோமோ என அஞ்சியே தள்ளி நின்றார்.

தினகரனுக்கும் முதலில் இச்செய்தி அதிர்ச்சிதான். வீட்டில் யாரும் இதுபற்றி தன்னிடம் ஏன் கூறவில்லை என நினைத்தாலும் கூறினாலும் இதில் தான் தலையிட என்ன இருக்கிறது? பெற்றவர் முடிவை மாற்றும் அளவிற்கு தான் முக்கியத்துவமானவன் இல்லையே என எண்ணி ஒதுங்கி நின்றான்.

வீட்டில் யாரிடமும் இதுபற்றி கேட்டுக்கொள்ளவிரும்பவில்லை அவன். இப்படியே ஒதுங்கி நிற்க அவன் நினைத்தாலும் சூழ்நிலை அவனை நிலாவின் வாழ்க்கையில் தலையிட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கியது.

இரண்டுநாட்களாக கொட்டித்தீர்த்த மழை அன்று காலைதான் சற்று குறைந்து சிறு தூறல்களாக தூவி மண்மகளை இன்னும் குளிர்வித்துக்கொண்டிருந்தது. விடியலிலேயே வயலிற்கு கிளம்பியவன் வீட்டிற்கு பதினோரு மணி போல வர அங்கு யாருமில்லாமல் வீடே நிசப்தமாக இருந்தது.

பின்னால் வேலையாளின் அரவம் கேட்டு சென்றவன் அங்கிருந்த உதவி பெண் அருகில் செல்ல தினரகரனின் வருகையை உணர்ந்த அப்பெண்,

“வாங்கயா. அம்மாவும் மதியக்காவும் ஆஸ்பத்திரிக்கு போய்ருக்காக. அக்காவுக்கு ஜூரமாம். நீங்க வந்ததும் உங்ககிட்ட சேதியை சொல்ல சொல்லிருந்தாக. நம்ம லலிதாக்கா ஆஸ்பத்திரிதான்…” தன் வேலை முடிந்தது போல நகன்றுவிட்டாள்.

என்ன மதிக்கு காய்ச்சலா? ஏன் என்னிடம் சொல்லவில்லை. என நினைத்தாலும் கால்கள் வீட்டை விட்டு வெளியேறி கைகள் பைக்கை எடுத்து ஹாஸ்பிட்டல் நோக்கி வண்டியை செலுத்தியது அவனின் அனுமதி இன்றியே.

ஹாஸ்பிட்டல் சென்றதுமே அங்கே மதி மட்டும் காத்திருப்பாளர் இருக்கையில் அமர்ந்திருக்க முத்தழகி தனக்கு தெரிந்த பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தார். அதை பார்த்துவிட்டு மனைவியை நெருங்கியவன்,

“மதி…” அவனின் அழைப்பில் திரும்பியவள் முகத்தில் இருந்த சோர்வையும் தாண்டிய மலர்ச்சியை பார்த்ததும் தினகரனுக்கு உருகிவிட்டது. அந்த மலர்ச்சி தன்னை கண்டதால் உருவானதென்று அவனுக்குத்தான் தெரியுமே.

அவளையே பார்த்தபடி தன்னை மறந்து அவளருகில் அமர்ந்தவன் மதியின் தளிர்விரல்களை எடுத்து தன் முரட்டு கைகளுக்குள் பொத்திவைத்தவன்,

“காலையிலேயே சொல்லியிருக்கலாமே உனக்கு முடியலைன்னு. நானே அழைச்சிட்டு வந்திருப்பேனே? ஒரு போனாவது பண்ணியிருக்கலாமே மதிம்மா?…” என கரகரப்பான குரலில் குற்றவுணர்வு மேலிட பேசியவனை கண்டு  மதிக்குத்தான் ஆச்சர்யமாக போனது.

அவன் இப்படி பொது இடங்களில் நடந்துகொள்பவன் அல்ல. தாய் தந்தையாக இருந்தாலும் கூட வெளியிடங்களிலும் மற்றவர் முன்னிலையிலும் இரண்டடி தள்ளி நின்றே பேசுபவன். அதிலும் வார்த்தைகளை அளந்தே பேசுபவன்.

இன்றைய அவனின் பார்வையும் பேச்சும் அவளுக்குமே சற்று கூச்சத்தை ஏற்படுத்த,

“மாமா இது ஆஸ்பத்திரி. பாருங்க உங்களையே எல்லாரும் பார்க்காங்க…” என கிசுகிசுப்பாக கூற பட்டென அவளின் கையை விட்டவன் சுற்றிலும் பார்வையை விட இவர்களை தவிர்த்து இன்னும் இரண்டுபேரே இருந்தனர் அந்த மதியவேளையில். உடனே மதியை திரும்பி முறைக்க,

“இல்ல உங்களுக்கு தான் பொது இடத்துல இப்படி இருந்தா பிடிக்காதுல. அதை சொன்னா உடனே உங்க அக்மார்க் லுக் காமிக்கிறீங்க. இதுக்குத்தான் நல்லதுக்கே காலமில்லைன்னு சொல்றாங்க போல…”

அப்பாவியாக முகத்தை வைத்து வாயடிப்பவளை மீண்டும் முறைக்க முயன்று மெலிதாக சிரித்தவன்,

“ரொம்ப முடியலையா மதி?. டாக்டரை பார்த்தாச்சா?…” என,

“இனிதான் பார்க்கணும். மாத்திரையை முழுங்கி நானே சமாளிச்சிருப்பேன். அத்தை தான் கேட்கவே இல்லை. இங்க வந்தாலே ஆச்சுன்னு கூட்டிட்டு வந்துட்டாங்க…” என்றவளின் குரலில் மாமியார் தன்மீது கொண்ட பாசத்தினால் உண்டான  பெருமிதம் பொங்கியது.

தினகரனும், “அம்மா செஞ்சா சரியாதான் இருக்கும்…” எனும் போதே முத்தழகி வந்துவிட்டார்.

“வாய்யா, இந்த புள்ளைய பாரேன். நேத்துல இருந்தே ஜூரம் இருந்திருக்கு. சொல்லாமலே விட்டுட்டா. காலையில முகம் செனசெனப்பா செவந்து கிடந்துச்சா. பாத்ததுமே பதறிட்டேன். அதான் ஒரு ஆட்டோவை அமத்தி கைய்யோட கூட்டியாந்துட்டேன்…”

“எனக்கு தகவல் சொல்லிருக்கலாமேம்மா. இந்த மழையில நீங்க அலையனுமா?…”

“அதுக்கென்னய்யா. மருமவளுக்குத்தானே. சரி. லலிதா புள்ள வேற சோலியா இருக்கு போல. அதான் லட்சுமிட்ட காட்ட சொல்லி நர்ஸ் பொண்ணுட்ட சொல்லிவிட்ருக்கு. நீ இங்கயே இரு. நாங்க பார்த்துட்டு வரோம்…” என கூறி மதியை அழைத்துசென்றார்.

தினகரன் அங்கேயே ஒரு நாளிதழை எடுத்துக்கொண்டு அமர்ந்துவிட சிறிது நேரத்தில் லலிதாவின் அறை திறக்கப்பட நாளிதழை அடுத்தபக்கத்திற்கு திருப்பியவன் எதார்த்தமாக நிமிர்ந்துபார்க்க அவனின் கண்கள் நிலைகுத்தி நின்றுவிட்டன.

அங்கே தலையில் சுடிதாரின் துப்பட்டாவினால் முக்காடிட்டு நிலாமுகி வள்ளியம்மையுடன் வெளிவந்தாள். நிலாவை பற்றி கேள்விப்படும்போது கூட இயல்பாக எடுத்துக்கொண்டவன்  இப்போது நேரில் அவளை கண்டதும் விக்கித்து நின்றான்.

அவளின் கோலம் முற்றிலுமாக அவனை நிலைகுலைய செய்தது. கண்கள் கலங்க பார்த்தவன் அடுத்தநொடி தன்னை நிதானித்துக்கொண்டான். அவள் மீதான நேசம் மரித்துவிட்டதாக எண்ணிக்கொண்டிருப்பவனின் மனதை அவளின் தோற்றம் ஒரு கணம் உலுக்கிப்போட்டாலும் அடுத்த நிமிடம் தன்னை மீட்டுக்கொண்டான்.

நேசத்தையும் தாண்டி அவளின் மேல் எப்போதும் இருக்கும் அன்பில், அக்கறையில் அவளுக்கு உடம்பிற்கு முடியவில்லையோ என ஆராயும் பார்வை பார்த்தவன் வள்ளியம்மையின் முகத்தில் தெரிந்த கள்ளத்தனத்தில் துணுக்குற்றான்.

எதுவோ சரியில்லை என அவனின் மனம் எடுத்துரைக்க உள்ளுக்குள் ஒரு நெருப்பு தீயாய் பரவியது. அவர்கள் தினகரனை கவனிக்காமல் வெளியேற நிலாவின் சோர்ந்த தோற்றத்தை கவனத்தில் வைத்தவன் கையில் இருந்த நாளிதழை வைத்துவிட்டு யோசனையானான்.

சிறிது நேரத்தில் மதி வெளிவர அவளை கண்டு வேகமாக எழுந்தவன் அருகில் வந்து கேட்கும் முன்,

“ஊசி போட்ருக்காங்க மாமா. சாதா காய்ச்சல் தானாம். பயப்பட வேண்டாம்னு சொன்னாங்க. மாத்திரை குடுத்துருக்காங்க. ரெண்டு நாள்ல சரியாகிடுமாம். அத்தை தான் அவங்ககிட்ட அது இதுன்னு கேள்வி மேல கேள்வி கேட்டுட்டே இருந்தாங்க…” என அவளாகவே கூறியபடி வாசலுக்கு செல்ல,

“அம்மா ஆட்டோ வர சொல்லனுமா?…” என,

“இல்லைய்யா நாங்க வந்த ஆட்டோவை நிப்பாட்டித்தான் வச்சிருக்கோம். அதுல வந்துடுறோம். வண்டிய இங்கனயே நிறுத்திட்டு நீயும் வாயேன். மழை நின்னதும் பொறவு  எடுத்தாந்துக்கலாம்…”

“இல்லம்மா, எனக்கு லலிதா டாக்டர்கிட்ட பேசவேண்டியதிருக்கு. நீங்க கிளம்புங்க…” என்றவனை மதி கேள்வியாக பார்க்க கண்களை மூட்டி திறந்தவன் அவளை கிளம்புமாறு விழிகளால் கூற தலையாட்டியபடி முத்தழகியை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள்.

அவர்கள் ஆட்டோவில் ஏறி கிளம்பியதும் மீண்டும் ஹாஸ்பிட்டல் உள்ளே வந்தவன் அங்கிருந்த நர்ஸிடம் தான் வந்திருப்பதாக லலிதா டாக்டரிடம் கூறுமாறு செய்தியனுப்பிவிட்டு அமர்ந்துகொண்டான்.

சில நிமிடத்தில் அவனை டாக்டர் அழைப்பதாக நர்ஸ் கூற எழுந்து உள்ளே சென்றான். அவனை கண்ட லலிதாவின் முகம் தாமரையென மலர,

“வாப்பா தினகர். எப்படி இருக்க?…” என ஆச்சர்யம் கலந்த அன்போடு கேட்க,

“நான் நல்லாயிருக்கேன் டாக்டர். ஒரு முக்கியமான விஷயமா உங்ககிட்ட பேசலாம்னு வந்தேன்…”  எனவும்,

“என்ன இது டாக்டர்ன்னு சொல்லிட்டு? எப்போவும் போல பேர் சொல்லியே கூப்பிடு. உனக்கு அக்கா தானே?…” என்றவள்,

“அம்மாவோட உன் வொய்ப் வந்திருந்தா. நான் வேற ஒரு பேஷன்ட் கூட  இருந்ததால பார்க்கமுடியலை. அதான் லட்சுமிட்ட காட்ட சொன்னேன். அது பத்தி ஏதாவது கேட்கனுமா?…” என்றவளை கூர்மையாக பார்த்தவன்,

“இல்லை. நான் பேச வந்தது குணசேகரன் மாமா பொண்ணு நிலாமுகி பற்றி. பேசலாமா?…” அழுத்தமான குரலில் பேசியவனை அதை விட அழுத்தமாக பார்த்தவள்,

“இத பாரு தினகர். வேற ஒரு பேஷன்ட் பத்தி நான் உன்கிட்ட சொல்வேன்னு எப்படி எதிர்பார்த்த? பேச்சு நிலாவை பத்திதான்னா நீ கிளம்பலாம்…” என கறாராக கூற தினகரன் இருக்கையில் அழுத்தமாக சாய்ந்தமர்ந்தவன்,

“நீங்க சொல்லித்தான் ஆகனும் லலிதாக்கா. இது ஒரு பொண்ணோட வாழ்க்கை…”

“நானும் அதுக்காகத்தான் மாட்டேன்னு சொல்றேன். அந்த பொண்ணுக்கு கல்யாணம் முடிவு பண்ணிருக்காங்க. அவ எதிர்காலத்தை மனசுல வச்சுதான் சொல்றேன். வேண்டாம், நீ கிளம்பு…”

error: Content is protected !!