நெஞ்சில் உறைந்த தேடல் – 2 (3)

“அதெப்படி அங்கிள் அவ்வளோ சீக்கிரம் விடமுடியும். நான் என்னோட சின்ன வயசுல இருந்தே அப்படித்தானே அவனை கூப்பிடுவேன்…”

“நானும் என்னோட சின்ன வயசுல இருந்தே அப்படி கூப்பிடாதேன்னும் சொல்லிட்டேன்ல உன்கிட்ட…” என ஆரவ் சண்டைக்கு வரிந்துகட்டிக்கொண்டு கிளம்ப,

“பதிமூன்று வயதெல்லாம் சின்னவயசுன்னு யாருமே சொல்லிக்க மாட்டாங்க. அதுக்கு முதல்ல இருந்தே நான் உன்னை அப்டி தானே கூப்பிடுவேன். என்னால மாத்திக்க முடியாது…” என்றவன்,

“நான் கிளம்பறேன் அங்கிள். உங்க பொண்ணை கான்ஃபரென்ஸ்க்கு ப்ரிப்பேர் பண்ண சொல்லுங்க…” என்றவன் ஸ்டெபிக்ஷாவிடம் ஒரு நொடி  பார்வையை நிலைக்கவிட்டு பின் விடை பெற்றான்.

ஆரவ் இதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஆட வேகமாக வெளியேறிய அர்ஜூன் தனது பைக் சாவியை எடுக்க மீண்டும் உள்ளே வந்தவன்,

“ஒழுங்கா வீட்டுக்கு கிளம்பு சக்கு. போய் தேவையானதை பேக் பண்ணு. நீதான் செய்யனும். இங்க இருந்து அரட்டை அடிச்சிட்டு லாஸ்ட் டைம் அங்க போய் தாம் தூம்னு குதிச்சு தர்ஷிம்மாவை டென்ஷன் பண்ணினன்னு தெரிஞ்சது தொலைச்சிடுவேன் பார்த்துக்கோ…”

ஸ்டெபிக்ஷாவை அழுத்தமாக பார்த்துவிட்டு, “ஆஷா வரமாட்டா. புரியுதா? இன்னும் த்ரீ ஹவர்ஸ்ல நீ ஏர்போர்ட் வந்தாகனும். கிளம்பு…” என அவனை மிரட்டிவிட்டு விடுவிடுவென வெளியேறியவனை பார்த்து கருவிய ஆரவ்,

“ஆஷாவாம் ஆஷா. இங்க பாரு பேப் இனிமே அவன் உன்னை அப்படி கூப்பிடட்டும். என்ன நடக்கும்னு பார்த்துட்டே இரு. அவன் சொல்லிட்டான்னு வரமாட்டேன்னு சொல்லிட்டல. இருக்கட்டும் உன்னை வந்து கவனிச்சுக்கிறேன்…”

பொறுமலோடு கிளம்பியவன் மீண்டும் ஸ்டெபியை நெருங்க அவள் புரியாமல் பார்த்தாள்.

“என்ன முழிக்கிற, டீயை முழுசா குடிச்சு முடிக்கலை. குடிச்சுட்டு போறேன்…” தன்னுடைய கோப்பையில் மிச்சமிருந்த டீயை குடித்துவிட்டே சென்றான்.

அவன் சென்றதும் அலையடித்து ஓய்ந்தது போலானது ஆண்டனிக்கும் ஸ்டெபிக்ஷாவிற்கும். அவனை எண்ணி சிரித்துக்கொண்டே,

“ரொம்பத்தான் பன்றான் உன் டார்லிங். என்னமோ உன்னை விட்டு இருக்க முடியாதுன்னு ஓவரா சீன் போடறான்…”

“அட நீங்க வேற டாடி, போற வழியில எதாச்சும் ஒரு பொண்ணை பார்த்துட்டா போதும் சார் என்னை மறந்திடுவார். அவ்வளோ பாசம். நாம கவலைபடனும்னா அது அர்ஜூனை பத்திதான்…”

“ஏன் ஸ்டெபி?…” என மகளிடம் பேச்சை வளர்க்க காரணம் அவருக்கு தெரிந்திருந்தாலும் கேட்டார்.

“பின்ன என்னை கூட்டிட்டு வரவிடலைன்ற காண்டுல வேணும்னே அர்ஜூனை எக்ஸ்ட்ரீம்க்கு டென்ஷன் பண்ணுவான் இந்த ஆரவ். ஆனா இந்த வாலை அர்ஜூன் சமாளிச்சிடுவார்…”

புன்னகையோடு சொன்னவளை மென்னகையோடு பார்த்தார் ஆண்டனி. அவரது எண்ணம் போகும் திசையை அறிந்தவளால் அதற்கு மேல் அங்கிருக்க முடியவில்லை.

“ஓகே டாடி. நான் ஹாஸ்பிட்டல் கிளம்பறேன். நேரமாகுது. நீங்களும் சீக்கிரமா கிளம்புங்க. இன்னைக்கு உங்களுக்கு ஒரு சர்ஜரி கேஸ் இருக்குல. கமான். க்விக்…” தந்தையை துரிதப்படுத்தியவள் தானும் ஹாஸ்பிட்டல் கிளம்ப தயாரானாள்.

—————————————-

ஏ.ஆர் ஹாஸ்பிட்டல் டெல்லியிலேயே புகழ்பெற்று சிறந்து விளங்கும் ஹாஸ்பிட்டல்களில் ஒன்று. ஆண்டனி, ராகவ் இருவரது பெயரின் முதல் எழுத்தை கொண்டு மிக மிக சிறியளவில் ஆரம்பிக்க பட்ட அந்த மருத்துவமனை இன்று தலை சிறந்த மருத்துவமனைகளில் ஒன்றாக திகழ்கிறது.

இப்போது அந்த ஹாஸ்பிட்டல் பொறுப்பு அதன் வாரிசுகளான ராகவனின் புதல்வன் ஆரவ்விற்கும், ஆண்டனியின் புதல்வி ஸ்டெபிக்ஷாவிற்கும் அளிக்கப்பட்டிருக்கிறது.

ராகவின் மனைவி தர்ஷினி வடநாட்டை சேர்ந்தவர். அவருடன் பயின்ற ஆண்டனியும், அவரது மனைவி ரோஸ்லினும் அவருக்கு உற்ற நண்பர்கள். அவர்களது நட்பில் தர்ஷினியின் மேல் ஏற்பட்ட காதலால் அவர்களது நட்பு கூடாரத்தில் நுழைந்தவர் தான் தமிழ்நாட்டை சேர்ந்த ராகவ் சக்ரவர்த்தி.

அவர்களது நட்பு தலைமுறையை தாண்டி இன்று வரை ஒளிர்ந்துகொண்டிருக்கிறது. அதை பின்பற்றியே அவர்களது பிள்ளைகளும்.

அர்ஜூன், ஆரவ், ஸ்டெபி இருவரும் பால்யகாலத்திலிருந்தே நண்பர்கள். இதில் அர்ஜூனின் குடும்பம் மட்டும் மிக மிக கட்டுக்கோப்பானது. டெல்லியில் ஒரு கவர்மென்ட் உத்தியோகத்தில் இருக்கும் அர்ஜூனின் தந்தை இன்றுவரை ஆண்டனி, ராகவனிடம் ஒட்டாத தன்மையோடே பழகுவார்.

அது அவரது தாழ்வு மனப்பான்மையா, இல்லை அவர்களிடம் எதற்கு பழகவேண்டும் என்னும் தலைக்கனமா என இதுவரை அறிந்தார் யாருமில்லை.

அவரை பற்றி பெரிது பண்ணாமல் அர்ஜூனை குடும்பத்தில் ஒருவனாக தான் நினைப்பார்கள் ராகவனும், ஆண்டனியும். ஆரவ்வை விட தர்ஷினிக்கு அர்ஜூன் என்றால் அவ்வளவு பிடித்தம்.

———————————————

 சென்னை செல்லும் ப்ளைட் இன்னும் ஒரு மணிநேரத்தில் கிளம்பி விடும். அதற்கு முன்பே அர்ஜூன் அங்கே வந்துவிட்டிருந்தான். இன்னும் ஆரவ்வை காணாமல் அவனது எண்ணிற்கு பலமுறை அழைக்க அது துண்டிக்கப்பட்டுகொண்டே இருந்தது.

போதாகுறைக்கு தர்ஷினிக்கும் அழைத்துப்பார்த்துகொண்டே தான் இருந்தான். அதுவும் முழுதாக ரிங் போய் கட் ஆனது. பொறுமை இழந்தவன் வீட்டு எண்ணிற்கு அழைக்க சில நொடிகளில் தர்ஷினி லைனிற்கு வந்தார்.

“தர்ஷினிம்மா சக்கு கிளம்பிட்டானா?…”

“அவன் அப்போவே கிளம்பிட்டானே அஜூ. அவன் வரதுக்கு முன்னமே நான் எல்லாம் பேக் பண்ணி வச்சுட்டேன். வந்ததும் அரைமணி நேரத்துலையே கிளம்பிட்டானே. சார் கிளம்பின வேகத்துல ஏர்போர்ட்க்கு ஒன் ஹவர்க்கு முன்னாலையே வந்திருக்கனும். அங்கேயே தேடிப்பாரு. பத்திரமா போய்ட்டு வாங்க…” என கூறிவிட்டு வைத்துவிட்டார்.

“புல்ஷிட்…” என பல்லைகடித்துக்கொண்டே அர்ஜூன் கூற,

“ஆங் எல்லாம் ஷிட் தான். உட்காராம நின்னுட்டா இருப்பாங்க…” என்ற ஆரவ்வின் கேலிகுரல் தனக்கு பின்னால் இருந்து கேட்க வேகமாக திரும்பினான் அர்ஜூன்.

அங்கே கால் மேல் கால் போட்டவாறு மொபைலில் டெம்பிள் ரன் கேம்ஸ் விளையாடியபடி அமர்ந்திருந்த ஆரவ்வை பார்த்து தலையில் அடித்துகொண்டவன்,

“ஏண்டா முதல்லையே சொல்லிதொலைக்க வேண்டியது தானே? எத்தனை தடவை கால் பன்றது?…”

“உன்னை யாரு கால் பண்ண சொன்னா? சொன்ன டயம்க்கு எனக்கு வரதெரியாதா? பெருசா பச்சபுள்ளைய கூட்டிட்டு வரது போல ரொம்பத்தான் பன்ற நீ. வந்தவன் நான் இருக்கேனா இல்லையான்னு என்னை தேடி பார்த்திருக்கனும். குதிரைக்கு கடிவாளம் கட்டினது போல நேரா ஒரே இடத்துல பார்த்துட்டே இருந்தா இப்படித்தான் ஆகும்…” என்றவன் விழிகளில் குறும்பு மின்ன,

“இப்படியெல்லாம் நீ செய்யறதை பார்க்கறப்போ தான் இன்னமும் உன்னை சீண்டிட்டே இருக்கனும்னு தோணுதுடா டக்கு…” என்றவனை முறைத்த அர்ஷூன்,

“தர்ஷிம்மா மொபைல் எங்க?…”

“நான் எதுக்கு அவங்க மொபைலை எடுத்துட்டு வரபோறேன். நீ போன் செய்வன்னு தெரிஞ்சுதான் அவங்க மொபைலை சைலன்ட்ல போட்டு ப்ரிட்ஜ் மேல வச்சுட்டேன். அவங்க ஹைட்க்கு நிச்சயமா எட்டாது. ராகவ் வீட்டுக்கு வரவும் போன் பண்ணி எடுத்து தர சொல்லிடறேன்…”

“எல்லாத்திலையும் விளையாட்டுத்தனம். நீயெல்லாம் ஒரு பொறுப்பான டாக்டராடா? வெளில சொல்லிடாதே…” என பேசிக்கொண்டே அவனுடைய லக்கேஜையும் சேர்த்து இழுத்துகொண்டு முன்னாள் நடந்தான் அர்ஜூன்.

“நான் டாக்டர்னு எனக்கு பாராட்டுவிழா எடுன்னு உன் கிட்ட வந்து சொன்னேன்னா? போடா டேய். இது அம்மாவோட பர்சனல் நம்பர். பேஷண்ட்ஸ் எல்லோருக்கும் குடுத்திருக்கிறது ஹாஸ்பிட்டல் நம்பரும், இன்னொரு மொபைல் நம்பரும். நீ எப்டியும் பர்சனல் நம்பருக்கு மட்டும் தான் கூப்பிடுவ. உன்னை பத்திதான் எனக்கு தெரியுமே?…”

அர்ஜூனின் தோளில் கிடந்த ஷோல்டர் பேக்கை தன் தோளுக்கு மாற்றிக்கொண்டே அவனை பின்பற்றி நடந்தான் ஆரவ்.

“என் டார்லிங்கை வரவிடாம பண்ணினல. அதுக்குதான் உனக்கு சின்னதா ஒரு டென்ஷன். இனிமேலாவது கொஞ்சம் பணிவா நடந்துக்கோ…” என்றவனது தோளில் ஒரு அடி வைத்த அர்ஜூன்,

“நான் எதுக்கு வேண்டாம்னு சொன்னேன்னு உனக்கு தெரியாதா?…”

“ஏன் தெரியாம, உனக்கு  உன்னோட கவலை. இதெல்லாம் முன்னாலையே யோசிக்கனும் தம்பி. இப்போ ப்ளான் பண்ணி நீ என் டார்லிங்கை வரவிடாம பண்ணிட்டாலும் இதை எத்தனை தடவை செய்யமுடியும் உன்னால? விக்ரம் டெல்லிக்கே வந்தா என்ன செய்வ?…”

சாவாகாசமாக ஒரு குண்டை தூக்கிபோட்டு விட்டு எனக்கென்ன என்பது போல முன்னால் சென்றுவிட்டான். ஒருநொடி அர்ஜூனுக்கு உலகமே ஸ்தம்பித்தது.

ஆனாலும் அப்படி நடக்க வாய்ப்பில்லை என்பது அர்ஜூனை கொஞ்சம் சமாதானம் செய்தது. இருவரது சென்னை பயணமும் ஆரம்பித்தது.

error: Content is protected !!