நெஞ்சில் உறைந்த தேடல் – 2 (2)

அவருக்கு தெரியும் மகனுக்கு தான் செய்யவிருக்கும் காரியத்தில் சிறிதும் உடன்பாடு இருக்காது என்பது. விஷயம் கேள்விப்பட்டு தன்னை ஒதுக்கிவைத்தாலும் ஆச்சரியமில்லை அவருக்கு.

எதுவாகிடும் தினகரனுக்கு அவன் விரும்பிய வாழ்க்கை கிடைத்தாலே போதும். அவன் சந்தோஷமாக வாழ்ந்தாலே தனக்கு ஜென்மபலன் கிடைத்தது போல தான் என எண்ணிக்கொண்டார்.

தந்தையின் அணைப்பிலிருந்து விடுபட்டு சிறு தலையசைப்புடன் தன்னறைக்கு சென்று மறைந்தான்.

முத்தையாவும் ஒரு பெருமூச்சினை வெளியிட்டு முத்தழகை தேடி செல்ல அவரோ வாய்க்கு வந்தபடி தனது புலம்பலை முணுமுணுப்போடு வெளியனுப்பிகொண்டிருந்தார்.

“ஏன் அழகு இப்படி புலம்பிட்டு இருக்க? உன்னோட ரத்த அழுத்தம் கூட போவுது தாயி. போய் முதல்ல மாத்திரை போட்டுக்க. இதை நான் எடுத்து வச்சுக்கறேன்…”

“ம்க்கும். மாத்திரை போட்டா மட்டும் என்னோட விசனம் தீர்ந்திடுமா? உமக்கு வாக்கப்பட்டு வந்தத இப்போ நினச்சு என்ன நானே வசவாடிட்டி இருக்கேன். போயிரும். அப்பறம் எதாச்சும் சொல்லிபோடபோறேன்…” என எரிந்து விழ,

“இப்போ நான் சேகரன் வீட்டுவிசேஷத்துக்கு போனது குத்தம்னு பேசிட்டு இருக்கியே. போவாம இருந்தா ஊருமக்க என்ன பேசுவானுவன்னு உனக்கு நான் சொல்லி தெரியனுமா?…”

“எனக்கு ஒன்னும் தெரிய வேண்டாம்னுதேன் சொல்லுதேன். மவனோட மனசு கண்ணாடி சில்லாட்டம் நொறுங்கி போய் கிடக்குதே. அவனுக்கு ஆறுதலா இருப்போம்னு இல்லாம பதவிதேன் முக்கியமா போயிட்டுல்ல…”

முத்தழகின் கோவத்திற்கான காரணம் முழுதாக புரிபட கொஞ்சம் மனம் தெளிந்தார்.

“இது நம்ம எல்லாரோட நல்லதுக்காவத்தேன் அழகு. அது இப்போ உனக்கு புரியாது. சரி நீ போய் மாத்திரையை எடுத்துக்கோ. நம்ம அய்யாவுக்கு நாம மட்டும் தான் இருக்கோம். நீயும் மாத்திரை போடாம சண்டித்தனம் பண்ணி உன் பங்குக்கு புள்ளைய படுத்திடாத…”

சாதாரணமாக சொன்னால் நிச்சயம் முத்தழகு கேட்கும் ரகம் இல்லை என்பதால் கொஞ்சம் கண்டிப்புடன் மகனையும் இழுத்து வைத்து பேசி அனுப்பினார். முத்தழகு அப்போதும் நொடிப்புடனே விலகி சென்றார்.

என்னதான் தன்னை திட்டிக்கொண்டிருந்தாலும் தனக்கு தேவையான பொருட்களை பார்த்து பார்த்து எடுத்து வைத்திருந்த மனைவியின் மேல் இன்னமும் அன்பு பெருகியது முத்தையாவிற்கு.

படுக்கும் முன்னர் மீண்டும் ஒரு முறை மொபைலில் அவர்களுக்கு அழைத்து அனைத்தையும் உறுதிபடுத்திக்கொண்டு உறங்க எத்தனித்தார். உறக்கம் தான் வந்தபாடில்லை. சிறிது நேரம் அப்படியே புரண்டு படுத்தவர் பின்பு எழுந்து கிளம்ப ஆரம்பித்து விட்டார்.

எப்படியும் இரண்டு மணிவாக்கில் கிளம்ப வேண்டியது தான். ஆனாலும் அதற்கு முன்பே கிளம்பி பூஜையறையின் வந்து நின்று கண்ணீர் மல்க இறைவனை வேண்டிக்கொண்டார் அனைத்தையும் நல்லவிதமாக நடத்திகொடுக்கும் படி.

அவரது அரவம் கேட்டு முத்தழகும் எழுந்துவந்து எதுவும் பேசாமல் காபி போட்டுகொடுக்க வாங்கி பருகியவர் மொபைலை எடுத்து அதிலிருந்த குறுஞ்செய்தியை படித்துவிட்டு கண்களை மூடி  சிறிது நொடி அமர்ந்திருந்தார்.

கணவனது செய்கைகளை குழப்பமாக பார்த்துக்கொண்டே அவரது முகத்தில் பரவிய உணர்வலைகளை படிக்கமுயன்று தோற்ற முத்தழகு,

“என்னாச்சுங்க?…” தன்னையே எதிர்பார்ப்போடு பார்த்துகொண்டிருக்கும் மனைவியிடம் ஒன்றுமில்லை என்பது போல தலையை அசைத்துவிட்டு,

“நான் கிளம்பறேன் அழகு. நாளைக்கு விசேஷ வீட்டுக்கு போய்ட்டு வந்திரு. பாவம் அமுதா. ஒத்தையில ஓடிட்டு இருக்குது. நீ கூட இருந்தா அதுக்கும் கொஞ்சம் ஒத்தாசையா இருக்கு…”

இறைஞ்சுதலான குரலில் கேட்டவரிடம் பிடித்தமில்லை என்றாலும் மறுக்காமல் தலையாட்டிவிட்டார் முத்தழகு. அவரிடம் விடைபெற்று வெளியேறியவர் மீண்டும் மகனை தேடி தினகரனின் அறைக்குள் நுழைந்தார்.

முகத்தில் இறுக்கத்துடனே உறங்கும் மகனது மனம் உறக்கத்திலும் அதே மனநிலையில் இருப்பதை உணர்ந்தவர் போல அவனை ஒரு சில நிமிடம் வைத்த கண் வாங்காமல் பார்த்தவர் அதன் பின் கிளம்பியேவிட்டார்.

அவர் கிளம்பியதும் தானும் சென்று உறங்க ஆரம்பித்துவிட்டார் முத்தழகு. அதுவும் சிலமணி நேரமே.

அதிகாலை நாலரை மணிக்கே தன் வீட்டு காவலாளி மூலம் நிலாமுகி காணாமல் போன சேதி வந்தடைய அடித்துபிடித்துக்கொண்டு குணசேகரனின் வீட்டை நோக்கி விரைந்தனர் தினகரனும், முத்தழகும்.

——————————————————

டெல்லி மாநகரம்…

    முக்கியஸ்தர்கள் வகிக்கும் அந்த பிரபலமான குடியிருப்பு பகுதியை ஒட்டிய பார்க்கில் ஜாக்கிங்கை முடித்துக்கொண்டவன் தன்னுடைய இல்லம் நோக்கி செல்லாமல் அதற்கு நான்கு வீடு தள்ளியிருக்கும் வீட்டின் கேட்டை தட்ட அங்கிருந்த கூர்க்கா எட்டி பார்த்தான்.

“நமஸ்தே ஜி. ஆப் கைசே ஹே?…” என தினமும் தன்னிடம் நலம் விசாரிக்கும் கூர்க்காவிடம் பதிலளித்துவிட்டு துள்ளலோடு உள்ளே சென்றான் அவன்.

வீட்டினுள் நுழைந்ததும் ஹாலில் அமர்ந்திருந்த இரு நபர்களையும் பார்த்தும் கண்டுகொள்ளாமல்,

“ஸ்டெபி, வேர் ஆர் யூ மை பேப்?…” என கூச்சலிட,

“ஹே ஆரவ், தீரா போலியே…” என அவனை கண்டித்தபடி முறைப்போடு மாடியில் இருந்து இறங்கி கிட்சனுக்குள் நுழைந்தாள் ஸ்டெபிக்ஷா.

“ஒரு முக்கியமான விஷயம் பேசனும்னு கூப்பிட்டா ரொம்ப தான் சிலுத்துக்கற?…” என அலுத்துக்கொண்டவன் சோபாவில் அமர்ந்திருந்த ஆண்டனியின் அருகில் அமர்ந்துகொண்டு அவர் வைத்திருந்த நாளிதழை பிடுங்கி புரட்ட ஆரம்பித்தான்.

அவனது செயலில் கடுப்பாகாமல் புன்னகைத்த ஆண்டனியை பார்த்து, “வேஸ்ட் வேஸ்ட்…” என தலையில் அடித்துகொண்டான் ஆரவ்.

“உங்களுக்கு இந்த பேரை வச்சு அந்த பெயருக்கே பெரிய அவபெயரை குடுத்திட்டாங்க உங்க பேரன்ட்ஸ்…”

இது ஆரவ்விடம் இருந்து அடிக்கடி கேட்கும் புலம்பல் என்பதால் கண்டுகொள்ளாமல் அமைதியாகவே இருந்தார் ஆண்டனி.

“பாட்ஷா ஃப்லிம் ஆண்டனி. பேரை கேட்கும் போதே சும்மா அதிருது. அவரோட வில்லத்தனத்துல கொஞ்சமாச்சும் இந்த முகத்துல இருக்குதா?…” என அவரது தாடையை பிடித்து இப்படியும் அப்படியும் ஆட்டியபடி வினவ எதிரில் இருந்தவனுக்கு முகம் கடுகடுத்தது.

“ஒரு கிலோ மைதா மாவை உருட்டி வச்சது போல ஒரு முகம். அதுல போனா போகுதுன்னு ரெண்டு கண்ணும், ஒரே ஒரு மூக்கும் வச்சு, அதுக்கு கீழே எப்போ பார்த்தாலும் டூத் பேஸ்ட் விளம்பரத்துல நடிக்கிறது போல ஈஈஈன்னு ஒரு சிரிப்பு. என்ன ஆண்ட் நீங்க?…”

“நீங்கலாம் இந்த பேருக்காகவே வேற ரேஞ்ச்ல இருக்க வேண்டாமா?…” என போலியாக அலுத்துக்கொள்ள இதை கண்டு வாய்விட்டு சிரித்த ஆண்டனி,

“உன்னோட பேபி வருது பாரு. என்னை ஆளை விடு…” என கழண்டுகொண்டார்.

“அவ வரத பத்தி தான் பேச வந்தேன். நாங்க இன்னைக்கு சென்னைக்கு கிளம்பறோம். அவளை கூப்பிட்டா வரமாட்டேன்னு சொல்றா. எனக்காக நீங்க தான் பேசனும் ஆண்ட்…” எனவும் மறுப்பாக தலையசைத்தார்.

“நீ சொல்லியே அவ வரலைன்னும் போது நான் சொல்லி கேட்கவா போறா? அதுவும் இல்லாம அர்ஜூன் அதை பத்திதான் பேச வந்திருக்கார். நாளைக்கு ஒரு முக்கியமான கான்ஃபரென்ஸ்  இருக்கு நம்ம ஹாஸ்பிட்டல்ல. அதுக்கு ஸ்டெபி கண்டிப்பா இருக்கனும்னு சொல்றார்…”

வேகமாக திரும்பி எதிரில் அமர்ந்திருந்த அர்ஜூனை முறைத்த ஆரவ்,

“பேப் என்னோட தான் வருவா. ஹாஸ்பிட்டலோட ஒன் ஆஃப் தி எம்டி நீங்களும் தானே. நீங்க அட்டென் பண்ணுங்க. இல்லைனா மிஸ்டர் ராகவை அட்டென் பண்ண சொல்லுங்க கான்ஃபரென்ஸ…” என பிடிவாதம் பிடிக்க,

“சக்கு…” என குரலுயர்த்தினான் அர்ஜூன். அதிலேயே கொதிநிலைக்கு தள்ளப்பட்டான் ஆரவ்.

“என் பேர் ஆரவ். சும்மா சக்கு, புக்குன்னு கூப்பிட்ட பார்த்துக்கோ. காலையிலேயே டென்ஷன் பண்ணிட்டு இருக்க…” என வெடிக்க,

“உன் பேரை சொன்னா உனக்கு இவ்வளோ கோவம் வருதோ? ஆரவ் சக்கரவர்த்தி தானே உன்னோட பேரு. எனக்கு எப்டி தோணுதோ அப்டிதான் என்னால கூப்பிட முடியும்…”

வெகு சுவாதீனமாக கூறிவிட்டு அலட்சியமாக அமர்ந்திருந்தவனது தோரணை  அனைவருக்கும் காலை தேனீர் எடுத்து வந்த ஸ்டெபிக்ஷாவின் மனதில் கல்வெட்டாக பதிந்தது.

ஆனாலும் தன்னை கவர்ந்த அவனின் கம்பீரத்தில் தன் மனம் லயித்ததை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இயல்பாக வந்தமர்ந்தாள் ஆரவ்வின் அருகில்.

அர்ஜூனுக்கு பில்டர் காபியை கொடுத்துவிட்டு தங்கள் மூவருக்கும் டீயை எடுத்துகொண்டாள். தனக்காக பிரத்யோகமாக தயாரிக்க பட்ட காபியின் ருசியை விட அதை தயாரித்தவளை எண்ணி கர்வம் கொண்டான்.

அவனது இறுமாப்பை ஒருவித நக்கல் கலந்த எள்ளல் சிரிப்போடு எதிர்கொண்டான் ஆரவ். அதை பார்த்த அர்ஜூனின் முகம் விழுந்துவிட்டது.

ஸ்டெபியின் முகத்தில் தனக்கான தேடல் எதுவும் தென்படுகிறதா என தேட அவளது முகத்திலோ எந்தவிதமான உணவும் இல்லாத ஒருவித வெறுமை அவனின் மனதை சுட்டது.

“இப்போ எதுக்குப்பா உங்க ரெண்டு பேருக்கும் சண்டை. ஏன் அர்ஜூன் ஆரவ் தான் அப்படி கூப்பிட்டா பிடிக்கலைன்னு சொல்றான்ல. நீங்களாவது விட்டுட வேண்டியது தானே…”

error: Content is protected !!