நெஞ்சில் உறைந்த தேடல் – 2 (1)

தேடல் – 2

          மண்டபவாசலுக்கு தன்னுடைய காரில் வந்திறங்கிய முத்தையா அங்கிருந்த அலங்காரங்களையும், உற்றார் உறவினர்களின் மகிழ்ச்சி நிறைந்த முகங்களையும்  நிமிர்ந்துபார்த்தவர் தான் செய்யவிருக்கும் காரியத்தை நினைத்து கொஞ்சம் கலங்கித்தான் போனார்.

தான் செய்யவிருப்பது சரிதானா? என்னும் யோசனைகளில் அப்படியே அவர் நின்றுவிட முத்தையாவின் வரவை அறிந்த குணசேகரன் வாசலுக்கே வந்து அவரை வரவேற்றார்.

அதோடு நில்லாமல் தனது சம்பந்தகாரர்களிடமும் முத்தையாவை யார் என்றும் தனக்கு குடும்ப நண்பரென்றும் அறிமுகம் செய்து வைத்தவர் அவரை முன் வரிசையில் அமர்த்திவிட்டு தானும் அருகே அமர்ந்துகொண்டார்.

சிறிது நேரம் அவரோடு பேசியபடி அமர்ந்திருந்த குணசேகரனின் பேச்சை கேட்க கேட்க முத்தையாவிற்கு குற்ற உணர்ச்சி அதிகரிக்க,

“மச்சான் நீ போய் ஆகவேண்டிய வேலையை பாருய்யா. இது நம்ம வீட்டு விசேஷம். நான் இங்க தான இருப்பேன்…”

“அதில்லைங்க மாமா, அக்காவும் தினகரன் தம்பியும் வரலை. நீங்க வேற தனியா இருப்பீங்க. அதான்…”  என தனது தயக்கத்தையும், அவரது குடும்ப உறுப்பினர்களது வரவின்மையையும் நாசூக்காக தெரிவித்தார்.

“நல்லா சொன்ன போ. உனக்கு தெரியாதா உன் அக்காவோட உடல்நிலை. இப்போ கொஞ்ச நாளாவே அவளுக்கு சுகமில்லைன்னு. அதை விட தம்பியை பத்தி தெரிஞ்சுமா நீ இப்படி கேட்கிற? அவருதான் இது போல விசேஷங்கள்ள கலந்துக்க மாட்டாருல…”

என்னதான் மகனாக இருந்தாலும் அடுத்தவர்களிடம் தினகரனை பற்றி பேசும் போது மரியாதையாகத்தான் விளிப்பார் முத்தையா.

“புரியுதுங்க மாமா. சரி நான் உள்ளாற போய் ஒரு பார்வை பார்த்துட்டு வாறேன்…” என நகர போக அவ்விடம் வந்து சேர்ந்தார் அமுதா.

“வாங்கண்ணே இப்போதான் வந்து சேராதா? உங்க பொண்ணு விசேஷத்துக்கு நீங்க இவ்வளோ தாமதமா வரது நல்லா இல்ல. மதினிக்கு வேற உடம்புக்கு முடியலைன்னு சொன்னாவ. அதான் தம்பிக்கும், மதினிக்கும் சாப்பாடு குடுத்தனுப்பிட்டேன்…”

வெள்ளந்தியாக சிரித்த முகத்தோடு பேசிய அமுதாவை பார்த்த முத்தையா,

“நல்லதும்மா, உன் புருஷன்கிட்டையும் கொஞ்சம் சொல்லு. முத்தழகும், தம்பியும் வரலைன்னு கொஞ்சம் சடவுல இருக்கான் இவன்…”

“என்னது?… சடவா?…. ஏங்க மதினிக்கு மட்டும் உடம்பு சரியா இருந்தா அவுக காலு அங்கிட்டு நிக்குமா? தம்பியை பத்தி நமக்கு தெரியாதா? சும்மா வந்தவருக்கிட்ட போய் இப்படியா முகத்த தூக்கி வச்சுப்பீங்க.கொஞ்சம் கூட நல்லா இல்ல ஆமா…”

முத்தையாவிடம் கேள்வியில் ஆரம்பித்து குணசேகரனிடம் மிரட்டலாக கொஞ்சம் கண்டிப்போடு முடித்தார் அமுதா.

நடு சத்திரத்தில் வைத்துக்கொண்டு வழக்காடிக்கொண்டிருந்த இருவரையும் பார்த்தவர் அவர்களது அன்பில் மனம் கசிய நின்றார். அவர்களை விட்டால் பேச்சு நீண்டுகொண்டே செல்லும் என அறிந்த முத்தையா,

“அட போதும்வே போய் ஆகுற சோலிய பாருங்க. தங்கச்சி நீ போய் வந்தவங்களை கவனி…” என அதட்டல் போட்டதும் குணசேகரன் நகரப்பார்த்தார். அதை பார்த்து தலையில் அடித்துக்கொண்ட அமுதா,

“ஐயோ கொஞ்சமாச்சும் கூறு  இருக்கா உங்களுக்கு?…” என வார்த்தைகளை கடித்து துப்பியவரை பரிதாபமாக பார்த்தார் குணசேகரன்.

என்ன செய்வதென அவருக்கும் புரியவில்லை. பார்த்துகொண்டிருந்த முத்தையாவிற்கும் புரியவில்லை.

“முதல்ல அண்ணனை கூட்டிட்டு போய் புள்ளைய ஆசிர்வாதம் செய்ய சொல்லுங்க. அதை விட்டுட்டு வேற என்ன வேலை இருக்குன்னு நடைய கட்டுறீங்க? பேருதான் ஊருக்கு பெரியமனுஷன். ஒண்ணொண்ணும் நான் சொல்லவேண்டி இருக்கு…”

பெரிதாக அங்கலாய்த்துகொண்டவரை முறைத்த சேகரன் முத்தையாவை அழைக்க அவரோ பிறகு பார்த்துகொள்ளலாம் என தட்டிக்கழிக்க விடாமல் மேடைக்கு இழுத்து சென்றனர் அமுதாவும், சேகரனும்.

மறுக்கமுடியாமல் மனத்தாங்கலோடும் தான் செய்யவிருக்கும் திட்டத்தின் செயலை எண்ணி குறுகுறுத்த மனதோடும் தான் மேடையேறினார். அதுவும் அங்கே நிலாமுகியின் சிரித்த முகத்தை பார்க்கும் வரை மட்டுமே.

“வாங்க மாமா…” என முகம் கொள்ளா புன்னகையோடு முத்தையாவை அழைத்தவளை பார்த்ததுமே தினகரனின் கலங்கிய முகம் தான் கண்முன் தோன்றியது முத்தையாவிற்கு. அதுவரை குற்ற உணர்வில் தவித்துகொண்டிருந்தவறது மனம் கடினமுற்றது.

நிலாமுகியிடம் மனதிற்குள்  மன்னிப்பொன்றை யாசித்துவிட்டு தனது காலில் விழுந்த அவளை ஆசிர்வதித்தார். தனது வீட்டு மருமகளாக தன் மகனோடு நன்றாக வாழவேண்டும் என்று.

சிறிது நொடி கூட அதன் பின் அங்கே நிற்கவில்லை. அமுதாவிடமும் சொல்லிக்கொண்டு அங்கிருந்து இறங்கியவர் குணசேகரனை அழைத்துகொண்டு வாயிற்புரம் நகர்ந்துகொண்டே,

“அப்போ நான் கிளம்பறேன் மச்சான்…” என முத்தையா விடைபெற,

“மாப்பிள்ளையை பார்த்திட்டு போகலாமே மாமா…” என மாப்பிள்ளையாகப்பட்டவனை எங்கே என பார்வையால் அலசிக்கொண்டே கேட்ட சேகரனை நிமிர்ந்து பார்த்தவர்,

“அதுக்கென்ன மச்சான், இப்போ ஒன்னும் அவசரமில்லை. இன்னொருநாள் பார்த்துட்டா போகுது…”

“அதென்ன இன்னொரு நாள் மாமா? நாளைக்கு காலையில முகூர்த்த நேரத்துக்கு முன்னாலையே வந்து நீங்கதான் உங்க மருமக கல்யாணத்தை முன்ன நின்னு நடத்தி குடுக்கனும். சொல்லிட்டேன்…”

குணசேகரனின் உரிமையான பேச்சில் சங்கடமடைந்த முத்தையா,

“உனக்கு தெரியாததா மச்சான், நாளைக்கு MLA சீட் விஷயமா சென்னை வரைக்கும் போகவேண்டியதிருக்கு. தலைவரை பார்க்கபோகனுமே. அதனால விடியலிலேயே நான் அங்க இருந்தாகனும். அதனால சாமத்துல புறப்பட வேண்டியதாகிருக்கும்…”

“என்ன மாமா, இப்படி சொல்லிட்டீங்க?…” என சுரத்தில்லா குரலில் வினவ,

“நானும் என்ன பன்றது மச்சான். வேற வழியில்லை. இப்போ என்ன உன் அக்கா நாளைக்கு வருவாளே. இங்க தானே இருக்க போறோம். நீ விசனப்படாம இரு. போய்ட்டு நாளை மறுநாளே வந்திடறேன். இதை தள்ளிபோட முடியாதுன்னு தான் போறேன்…”

தன்னால் முடிந்தளவிற்கு குணசேகரனை சமாதானம் செய்ய அவர் நொடியில் முகத்தை மலர்ச்சியாக வைத்துக்கொண்டு,

“பரவாயில்லை மாமா, உங்களுக்கு அந்த சீட் கிடைச்சா நம்ம ஊர்மக்களுக்கு தானே நல்லது. தாராளமா போய்ட்டுவாங்க…”

குணசேகரனை ஆழ்ந்து பார்த்தவர் நிலாமுகியை திரும்பி ஒரு பார்வை பார்த்தார். பின் ஒன்றும் பேசாமல் குணசேகரனின் தோளில் தட்டிவிட்டு  மெலிதான சிரிப்போடு விடைபெற்றார். அவரது புன்னகையில் இருந்த வேதனையை சேகரன் அறியாமல் தனக்குள் புதைத்துகொண்டார்.

அவருக்கு தெரியும் இது தனது நட்பிற்க்கு செய்யவிருக்கும் துரோகம் என்று. நட்பா பெற்ற பாசமா என வரும் போது தினகரனின் மீது இருக்கும் பாசமே வென்றது.

நடப்பது நடக்கட்டும். தான் நினைத்தவாறு நடந்ததும் குணசேகரனின் காலில் வேண்டுமென்றாலும் விழுந்து மன்னிப்பை கேட்டுகொள்வோம் என எண்ணிக்கொண்டே மண்டபத்தை விட்டு வெளியேறினார்.

மனதில் நினைத்ததை அப்போதே செயல்படுத்த தனது மொபைலில் இருந்து சில உத்தரவுகளை பிறப்பித்துவிட்டு வீடு திரும்பினார்.  யாருமில்லாத முன்னைறையை தாண்டி மகனையும் மனைவியையும் தேடி மகனது அறைக்குள் சென்றவர் கண்கள் கலங்கிவிட்டன.

தினகரனை மடியில் தாங்கியவாறு அமர்ந்திருந்த முத்தழகின் முகத்தில் வழிந்த கண்ணீர் தடங்கள் நடந்ததை எடுத்துக்காட்டியது.

நாளையோடு இந்த வலிகளுக்கு வழிகிடைத்துவிடும் என்னும் தெளிவில் அவர்களை நெருங்கியவர்,

“தம்பி சாப்பிட்டாச்சா அழகு?…”

பதில் பேசாது கணவனை நிமிர்ந்து பார்த்து இல்லை என தலையசைத்தார். அவரது மௌனம் முத்தையாவை கவலை கொள்ள செய்தது.

ஏற்கனவே முத்தழகிற்கு உடல் உபாதைகள் அதிகம். இதில் மகன் சாப்பிடாமல் நிச்சயம் அவர் சாப்பிட்டிருக்க வாய்ப்பில்லை என்பது முத்தையாவின் திண்ணம். சாப்பிடாமல் எந்த மருந்து, மாத்திரைகளும் அவரால் எடுத்துகொள்ள முடியாதே.

உள்ளடங்கி போன குரலை முயன்று சற்று உயர்த்தியவர், “தம்பி, சாப்பிட போகலாம். எழுந்துக்கய்யா…”

அவரது பேச்சை ஏனோ தட்டமுடியாமல் தினகரனும் எழுந்துகொண்டான். தன்னுடைய வேதனையால் அவர்களையும் எதற்காக வருத்தவேண்டும் என எண்ணிக்கொண்டே.

உணவு மேஜையில் மூவருமே ஏதோ பெயருக்கு உண்டுமுடிக்க தினகரன் எழுந்துகொள்ளும் போது அவனை அழைத்தவர்,

“தம்பி, நாளைக்கு சென்னைக்கு போகவேண்டிய சோலி இருக்குது…” என தயக்கமாக இழுத்தவாறு கூற முத்தழகு அவரை முறைத்துக்கொண்டே அவருக்கு தேவையானதை எடுத்துவைக்க உள்ளே சென்றுவிட்டார்.

“ஆமா நீங்க இன்னும் கொஞ்ச நேரத்திலே கிளம்பனுமேப்பா. தாராளமா போய்ட்டு வாங்க. எதையும் நினைச்சு மனசை போட்டு உழட்டிக்காதீங்க. கண்டிப்பா உங்களுக்கு தான் சீட் கிடைக்கும்…”

அன்போடு கூறியவனை இழுத்து அணைத்துகொண்டவர், “எல்லாமே சரியாகிடும் அய்யா…” என மனதிற்குள்ளேயே சொல்லிகொண்டார்.

error: Content is protected !!