தன்னைத்தானே கடிந்துகொண்ட ஜீவா அதன் பின்னான நாட்களில் சத்தமில்லாமல் நிலாவின் பிதற்றல்களை கவனமாக கேட்டுக்கொண்டாள். அவளுக்கு அமுதாவிடம் கூற பயம். குணசேகரனிடம் ஏனோ கூற தோன்றவில்லை. அதற்கும் காரணம் இருந்தது.
முதல் நாள் உளறியதாக குணசேகரனிடம் மெதுவாக கூற அவர் அளவிற்கு அதிகமாக பதறி ஜீவாவின் சந்தேகத்திற்கு ஆளானார்.
நிலா ஏதாவது சொன்னாளா? என்ன பேசினாள்? என மீண்டும் மீண்டும் அழுத்தி அழுத்தி கேட்க ஜீவாவின் சந்தேகம் வலுபெற்றது. அவரிடம் நிலா பேசியது புரியவில்லை என்றுமட்டும் சொல்ல குணசேகரன் கொஞ்சம் சமாதானம் அடைந்தது போல தோன்றியது.
எப்போதும் இப்படி நடந்துகொள்ளாத தன் தந்தையின் வித்யாசமான நடவடிக்கை ஜீவாவிற்குள் ஏதேதோ கற்பனைகளை தோன்றுவிக்க மெல்ல நிலாவிடம் பேச்சுக்கொடுத்தாள்.
“அக்கா உனக்கு ஆரவ் அப்டின்னு யாரையாச்சும் தெரியுமா?…” என வீட்டில் யாருமில்லாத சமயம் கேட்க நிலா திகைத்தாள்.
“ஏன் ஜீவா?…” என்றவள், “ஆரவ்…” என பெயரை உச்சரிக்க அந்த ஓசை அவளுக்குள் ஊடுருவி இதயத்தை வருடியது. கனவில் இருப்பவள் போல கண்மூடி ஒருவித லயிப்போடு அமர்ந்திருந்தவளை பார்த்த ஜீவாவினுள் பயப்பந்து சுழன்றது.
நிலாவின் இந்த மெய்மறந்த செயலே ஆரவ் என்பவன் அவளுக்கு எந்தளவிற்கு முக்கியமானவனாக இருந்திருப்பான் என்று புரிந்தது. யாராக இருக்கும் என அறிந்துகொள்ள மீண்டும் அவளை உலுக்கினாள்.
“நிலா நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம என்ன செய்யற?. ஆரவ் உனக்கு தெரிஞ்சவங்களா?…” திடுக்கிட்டு விழித்த நிலா,
“எனக்கு தெரியலையே ஜீவா. யார்ன்னு புரியலையே…” என ஜீவாவிடம் மொழிந்தவள்,
‘ஆனா ஆனா அந்த பேர் எனக்குள்ள என்னவோ பண்ணுது. என்னால அந்த உணர்வை தாங்க முடியலை. யார்க்கிட்ட இதை கேட்பேன்?’ என இதை தனக்குள் மட்டும் கூறிக்கொண்டாள். நிலாவின் பரிதவிப்பான முகத்தை பார்த்த ஜீவா,
“நீ எங்க தங்கியிருந்த? அப்பா முழுசா எதுவும் சொல்லமாட்டேன்றாங்க. பழசை பேசவேண்டாம்னு சொல்லி சொல்லியே விஷயத்தை முடிச்சிடறாங்க…”
ஆற்றாமையோடு பேசிய தங்கையை பார்த்த நிலாவிற்கும் இது மனதில் இருக்கிறது தான். குணசேகரனிடம் ஒருமுறை நிலா பேசவும் செய்தாள். தன்னை பாதுகாத்த அந்த ஆசிரமத்திற்கு நன்றி சொல்லவேண்டும் என கேட்க,
“அதெல்லாம் வேண்டாம் நிலாம்மா. பழசை எல்லாம் கனவா நினைச்சு மறந்திடு. இனி அதை பத்தி நீ நினைக்கவே கூடாது…” என்று கூறிவிட்டார்.
அவர் வெளிப்பார்வைக்கு அன்பாக கூறியது போல தெரிந்தாலும் என் பேச்சை நீ என்றும் மீறாமல் இரு என்னும் கட்டளையே அதில் அப்பட்டமாக நிறைந்திருந்தது.
ஜீவாவை போல் நிலாவால் எதையும் வெளிப்படையாக பேசி பழக்கமில்லாததால் அவளால் எதிர்த்து எந்த கேள்வியும் கேட்கமுடியவில்லை.
நெஞ்சம் முழுவதும் முட்டிக்கொண்டு நின்ற கேள்விகள் வெளிவர வழி தெரியாமல் உள்ளுக்குள்ளேயே அடைபட்டு புதைந்தே போனது. இப்போது மீண்டும் அந்த கேள்விகளுக்கு உயிர்ப்பு வந்தாலும் தந்தையிடம் கேட்க தைரியம் வரவில்லை.
ஜீவாவாக இருந்தால் பட்டென்று கேட்டுவிடுவாள். நிலாவினால் அது எப்போதும் முடிந்ததில்லை என்பதை விட அவளை கட்டுக்குள்ளே வைத்து வளர்த்ததனால் உண்டான சுபாவம். எதையும் வாய்விட்டு கேட்காமல் கிடைப்பதை வைத்து நிறைவுகொள்ளும் மனப்பான்மை.
குணசேகரனுக்கு திருமணமாகி ஆண்டுகள் பல கடந்த பின்னால் கிடைத்த குழந்தை செல்வமே நிலா. அதன் பின்னால் ஜீவா பிறந்துவிட்டாலும் நிலாவிடம் அதிக கவனம் வைத்திருப்பார் குணசேகரன்.
அவளுக்கு ஒன்றும் தெரியாது தான்தான் அவளை வழிநடத்த வேண்டும் என சொல்லி சொல்லியே கூட்டிற்குள் அடைத்தது போல நினைத்ததை பேசவிடாமல் மற்றவர்களின் மனம் கோணாமல் சொல் கேட்டு நடக்க பழக்கிவிட்டார்.
அமுதாவிடமும் ஜீவாவிடம் ஓரளவிற்கு பேசும் நிலாவால் குணசேகரனிடம் மறுபேச்சே பேசமுடியாது. அவரின் அன்பான ஒரு பார்வையிலேயே தலையாட்டிவிட்டு போகும் ஊமை பெண்ணாகவே வளர்ந்துவிட்டாள்.
“இப்படியே உட்கார்ந்திருந்தா எப்படி? அப்பாக்கிட்ட இன்னொருதடவை கேட்டுப்பாரேன். எனக்கு என்னவோ எதுவும் சரியாப்படலை…” என ஜீவா கூற,
“எப்படி கேட்க முடியும் ஜீவா? எனக்கு பயமா இருக்கே?…” உதடுகள் துடிக்க முகம் சிவந்து பயத்தோடு கூற,
“பயந்து பயந்தே கொஞ்சம் கொஞ்சமா செத்துருவ போல. உன்னை முழுசா சாகடிக்கத்தான் அந்த தயாவுக்கு கட்டிவைக்க போறாங்க. அப்போவும் ஊமையாவே இரு நீ…” என எரிந்துவிழ மழுக்கென்று கண்ணீர் பந்து நிலாவின் விழிகளில் இருந்து உருண்டு விழுந்தது.
அவள் அழுவதை கண்டு வேதனையுற்ற ஜீவா, “சும்மா சும்மா அழாதே. அழுதா எல்லாம் சரியாகிடுமா?…”
“எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் ஜீவா? கேட்கவே அசிங்கமா இருக்கு. என்னால தயா அத்தானை யோசிக்க கூட முடியலை. நான் என்ன செய்ய?…” என தேம்பியவள் இன்னும் அதிகமாக அழ,
“அழாதே. அழாதே. அப்பாக்கிட்ட பேசமுடியும்னு தோணலை. வேற யோசிப்போம். அந்தாளை கட்டிக்கிறதுக்கு நீ பேசாம இப்படியே இருந்திடலாம். அது ஒரு அம்மா கோண்டு…” என தயாளனை எண்ணி கோவத்தில் பொரிந்தாள் ஜீவா.
ஜீவா பேசிக்கொண்டிருக்கும் போதே நிலா மயங்கி விழுந்தாள். பதட்டமான ஜீவா தண்ணீரை தெளித்து அவளை எழுப்ப மெல்ல நிலா கண்விழித்தாள்.
“என்னாச்சு உனக்கு? பாரு அழுதழுது உனக்கு மயக்கமே வந்திடுச்சு. ஏற்கனவே உடம்பு சரியில்லாம இருக்க. எழுந்து ரூம்ல வந்து படு. உனக்கு குடிக்க எதாச்சும் எடுத்துட்டு வரேன்…” என நிலாவை கைத்தாங்கலாக பிடித்த ஜீவா அவளை அழைத்துசென்று படுக்கவைத்தாள்.
அயர்வில் படுத்ததுமே நிலா உறங்கிவிட ஜீவாவிற்கு தான் அவளை பார்க்க பாவமாக இருந்தது. தலையில் முடி வளர்ந்திருக்க இந்த மூன்று மாதத்தில் அமுதாவின் கவனிப்பில் உடல் தேறி கொஞ்சம் சதைபிடிப்பாக பூசியவாறு மினுமினுப்போடு பொலிவாக இருந்தாலும் முகத்தில் ஏனோ களையில்லாமல் வெறுமையாகவே தோன்றியது.
இரண்டு நாட்களாக நிலா இப்படித்தான் இருக்கிறாள். அதுவும் திருமணப்பேச்சை எடுத்ததிலிருந்து. எப்போதும் எதையாவது வெறிப்பதும் படுக்கையிலேயே சோர்ந்து சோர்ந்து படுத்துக்கொள்வதும் எப்போதையும் விட பேச்சுக்கள் குறைந்து ஒதுங்கியே இருப்பதும் என நிலாவிடம் ஏகப்பட்ட மாற்றங்கள்.
இரண்டு நாட்களுக்கு முன்னால் இரவில் மூவரையும் அழைத்த குணசேகரன் தயாளனுக்கும் நிலாவிற்கும் திருமணம் செய்துவைக்க தானும் வள்ளியம்மையும் சேர்ந்து முடிவெடுத்திருப்பதாகவும் அதை பற்றி பேசவேண்டும் என்றும் `கூற அனைவருக்கும் அதிர்ச்சியானது.
முதலில் மறுப்பு தெரிவித்தது ஜீவாதான். ஆனால் அதை கொஞ்சமும் சட்டைசெய்யாத குணசேகரன் பிடிவாதமாக இருந்தார்.
“இப்போதைக்கு கல்யாணம் வேண்டாமேப்பா. இவ்வளோ நாள் கழிச்சு இப்போதான் நம்ம வீட்டுக்கு நான் வந்திருக்கேன். ப்ளீஸ்…” ஏனோ வாய்திறந்து மறுப்புதெரிவித்த நிலாவை அழுத்தமாக பார்த்தவர்,
“கல்யாணம் உடனேன்னு நான் சொல்லலை நிலா. ஆனா உனக்கு தயாளனுக்கும் தான் கல்யாணம். இது கண்டிப்பா நடக்கும்…” என முடிவாக கூறிவிட திகைத்துப்போய் அமர்ந்திருந்தாள் நிலா.
தகப்பனின் வார்த்தைகள் அதிர்வை கொடுக்க அவர்கள் முன்னே இருக்கமுடியாமல் பிடிக்காமல் எழுந்து உள்ளே விரைந்துவிட்டாள். எப்போதும் இப்படி நடந்துகொள்ளாதவளது வேகமும் பிடித்தமின்மையும் சேகரனுக்கு திகைப்பை கொடுத்தது.
அமுதாவும் குணசேகரனிடம் சண்டையிட்டும் பார்த்தாகிற்று. ஆனால் அவர் அசைந்துகொடுக்கவில்லை.
“காணாம போய் எங்கையோ மாசக்கணக்கில இருந்த பொண்ணை யார் நம்பிக்கையா கல்யாணம் செய்துப்பாங்க அமுதா? தயாளன் என் அக்கா பையன். நிலாவை நல்லா புரிஞ்சவன். நாளைக்கே எதுவும் பிரச்சனைனா கூட நாம தலையிட்டு உரிமையா அதட்டமுடியும். வெளி இடம்னா ஆயிரம் கேள்விகளும் கேலிகளும் வரும். அதை நாம எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்…” என அமுதாவை தன் வார்த்தையில் வாயடைக்க செய்துவிட்டார்.
அமுதாவால் குணசேகரனின் எண்ணப்போக்கை புரிந்துகொண்டாலும் வள்ளியம்மையை நினைத்து ஏனோ மனம் கலங்கியது. எதிர்த்து பேச தெரியாத நிலா எப்படி அவரிடம் பிழைப்பாள் என்ற நினைப்பே அவரை பயமுறுத்தியது.
மனம் தாங்காமல் முத்தழகியிடம் இதை கூற அவர்,
“தம்பி சொல்றதுல தப்பில்லையோன்னு தோணுது அமுதா…”
“என்ன மதினி நீங்களும் இப்படியே சொல்றீங்க? அவுக அக்காவை பத்தி உங்களுக்கு தெரியாதா?…” என கலக்கமாக கேட்க,
“உன் பொண்ணு என்ன அவ கூடவா குடும்பம் நடத்த போறா? தயாளன் நல்லபிள்ளை தானே? கல்யாணம் முடிஞ்சதும் அவனோட கூட்டிட்டு போய்டுவான் தானே? இதுல நீ பயப்பட என்ன இருக்கு?…”
“நீங்க என்ன சொல்லுங்க எனக்கு மனசுக்கு ஒப்பவே இல்லை…” என சொன்னதையே சொல்லி புலம்பிய அமுதாவை பார்க்க பாவமாக இருந்தது முத்தழகிக்கு.
அவரை பொறுத்தவரை நிச்சயம் நிலாவிற்கு பொருத்தமானவன் தயாளன் இல்லை என்பது தான் உண்மை. ஆனால் நிலாவின் விதி இப்படி இருக்க தாங்கள் இதில் என்ன செய்யமுடியும் என வருந்தினார்.
அமுதா கூறிய விஷயத்தை ஏனோ தினகரனிடம் சொல்லாமல் விட்ட முத்தழகி அதை மறந்தும் போனார் வேறு சில வேலையில்.
ஆனால் யாரும் கூறாமல் தானே தெரிந்துகொள்ளும் சூழல் தினகரனுக்கு ஏற்பட அவன் அறிந்த விஷயம் அவனை ருத்ரமூர்த்தியாக மாற்றியது.
யாருமே செய்யத்துணியாத காரியத்தை செய்த வள்ளியம்மை தினகரனிடம் மாட்டிக்கொள்வோம் என நினைத்தும் பார்த்திருப்பாரோ என்னவோ?
விளைவு அடுத்து ஐந்து தினங்களில் தயாளன் சென்னையிலிருந்து வந்திறங்கியதுமே தினகரனின் ஆட்களால் தூக்கப்பட்டான்.