நெஞ்சில் உறைந்த தேடல் – 19 (2)

அதன் பின்னான நாட்களில் உடலளவில் நிலாவும் ஓரளவு தெளிவானாள் தான். ஆனாலும் மனதில் எழும் சில உணர்வுகளை யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாதபடி சில நேரங்களில் தன்னை தனிமைப்படுத்திகொண்டாள்.

மனதில் எதையோ எதிர்பார்த்தாள். சிந்தனை முழுவதும் சலவை செய்யப்பட்டது போல சுத்தமாக இருந்தது. மூளையில் பதியாமல் போன பக்கங்களை இருட்டில் தேடுவது போல இருந்தது அவளின் தேடல்.

அது போன்ற நேரங்களில் உள்ளுக்குள் ஒருவித ஆவேசம் எழும். அதை அடக்கமுடியாமல் தான் எதை தேடுகிறோம், யாரை நாடுகிறோம் என்றே தெரியாமல் தேடி தேடி களைத்துப்போய் ஓய்ந்துபோனாள்.

இதை யாரும் கண்டுகொள்ளாமல் இருக்க தன்னை தானே ஒதுக்கிக்கொள்ள ஆரம்பித்தாள். அவளின் இந்த ஒதுக்கத்தை உணர்ந்த மதி நிலாவை கொஞ்சம் கவனமாக கவனிக்க ஆரம்பித்தாள்.

ஜீவாவின் மூலம் நிலாவின் திருமணம் நின்ற விதத்தைப்பற்றி அறிந்துகொண்டாள் நிலா. ஜீவா அவளிடம் இதை கூறும் போது நிலாவின் முகத்தில் கவலையோ, வருத்தமோ எந்தவித மாறுதல்களும் இல்லை.

“ஓ…” என ஒற்றை வார்த்தையில் முடித்துவிட்டாள் நிலா. அவளாக வேறெதுவும் கேட்டுக்கொள்ளவே இல்லை. இதை மதியிடம் ஜீவாவும் பேச்சுவாக்கில் கூறி வைத்தாள்.

தான் இல்லாத நேரங்களில் ஜீவாவிடம் நிலாவின் நடவடிக்கைகளை கேட்டறியும் மதிக்கு குழப்பமே மிஞ்சியது. இப்படியே மேலும் இரண்டு மாதங்கள் கழிய நிலாவை பற்றி ஒரு முடிவுக்கு வரமுடியாமல் எதுவும் புரியாமல் யாரிடமும் ஒன்றும் சொல்லவேண்டாம் என மதி அமைதி காக்க விஷயம் கை மீறியது.

—————————————————————————-

கோபத்தோடு அமர்ந்திருந்தார் நாராயணன். வடிவால் கூட அவரை சமாதானம் செய்யமுடியவில்லை. தர்ஷினி அமைதியாக ஒதுங்கி நிற்க, ராகவ் தலைகுனிந்து அமர்ந்திருக்க, அங்கு நடப்பதற்கும் தனக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்னும் பாவனையில் அமர்ந்திருந்தான் ஆரவ்.

“நான் என்ன செத்தா போய்ட்டேன்…”என்று இரைந்த தகப்பனை கண்டு திகைத்த ராகவ்,

“என்ன வார்த்தைப்பா பேசறீங்க? நாங்க தான் எங்க சூழ்நிலையை சொன்னோமே? யாருக்குமே அப்போ எதுவும் யோசிக்கிற நிலைமை இல்லை. எல்லாமே வேகமா நடந்து முடிஞ்சிருச்சு. இன்னும் கொஞ்ச நாள் தான்…”என,

“என்னத்த கொஞ்ச நாள்? நிலா நம்ம வீட்டு பொண்ணுடா. அதுக்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம இருக்கிறது எனக்கு சரியா படலை. நீ முதல்ல கிளம்பு. நாம அங்க போய்ட்டு வந்துடுவோம்…” என எழும்ப,

“அப்பா ப்ளீஸ். இப்போ நிலாவோட உடல்நிலை அப்படி தான் இருக்குது. கொஞ்ச நாள் போகட்டும் கண்டிப்பா நாமலே போய் அழைச்சிட்டு வந்துடலாம். நாங்க தினமும் அவர்க்கிட்ட பேசிட்டுதான் இருக்கோம்…” என இறைஞ்சுதளுடன் பேசிய மகனை பார்த்த நாராயணன்.

“தர்ஷினி கூட அவர்க்கிட்ட பேசினா. ஆனா அவர் இன்னும் கொஞ்ச நாள் நிலா இருக்கட்டும்னு சொல்றாங்க போல. ரொம்ப கெஞ்சி கேட்டுட்டாங்க. அதான்…” என இழுக்க,

“கட்டிக்கிட்டவனை அடையாளம் காட்டினா என்னவாகிடும் அந்த பொண்ணுக்கு? என் பேரன் எதுல குறைஞ்சுட்டான். அந்த குடும்பம் தேடினாலும் கிடைக்குமா நம்ம போல சம்பந்தம்?…” என்றவரிடம் பதில் பேசாமல் மௌனம் காத்தார் ராகவ்.

“ம்ஹூம் இது சரிப்பட்டுவராது. வடிவு கிளம்பு போகலாம். இந்த வீட்ல நமக்கு நம்ம பேச்சுக்கு மதிப்பில்லாதப்போ நாம இங்க இருக்கனும்னு எந்த அவசியமும் இல்லை…” என எழுந்துகொண்டவரை பதறிபோய் தடுத்த ராகவ்,

“அப்பா புரிஞ்சிக்கோங்க ப்ளீஸ். நாங்க பண்ணினது தப்புதான். நிலாவுக்கு இப்படி ஆனதுமே நாங்க உங்களுக்கு தகவல் சொல்லிருந்திருக்கனும். அதுக்காக மன்னிப்பு கேட்டுக்கறோம்…”

“உன் மன்னிப்பு எனக்கு தேவையில்லை…” பிடிவாதமாக மறுத்தார் நாராயணன்.

“அம்மா நீங்களாவது அப்பாக்கிட்ட எடுத்து சொல்லுங்களேன்…”  என தாயிடம் கெஞ்ச அவர் இப்படியான தருணங்களில் என்றைக்கும் கணவனை மறுத்து பேசமாட்டார்.

கலக்கமாக மகன் பார்க்கும் பார்வையில் கொஞ்சம் மனம் இறங்கியவர் ஆரவ்வை ஒரு பார்வை பார்த்துவிட்டு,

“மனசு தாங்கல ராசா. என் பேரன் முகத்துல அருளே இல்லாம இருளடஞ்சு போய் கிடக்கு. இத பார்த்துட்டு என்னால இங்க இருக்கமுடியாது. நான் என்ன ஒரேடியாவா போகபோறேன். என் பேத்தியை எப்போ கூட்டிட்டு வரேன்னு சொல்றியோ அன்னைக்கு நான் வரேன் இங்க…”

ராகவ்வின் கையை பிடித்து அழுத்திவிட்டு கிளம்பிவிட்டார் நாராயணன். ஆரவ் அனைத்தையும் பார்த்துக்கொண்டு தான் இருந்தான். தர்ஷினியின் புறம் நாராயணன் திரும்பவே இல்லை. வடிவு மட்டும் சொல்லிக்கொண்டு கிளம்பினார்.

அதே நேரம் அர்ஜூனும் ஸ்டெபியும் வந்துவிட அவர்களையும் முறைத்துவிட்டே வாசலில் இருந்த காரிலேறி கிளம்பினார் நாராயணன்.

உள்ளே வந்த அர்ஜூன், “தாத்தா ஏன் இவ்வளவு கோவமா கிளம்பறாங்க தர்ஷிமா?…” என கேட்டதும் நடந்ததை ஒன்றுவிடாமல் கூறிய தர்ஷினி,

“நிலாவோட அப்பா என்னனா பிடிகுடுத்தே பேசமாட்டேன்றார். நான் என்ன சொன்னாலும் புரிஞ்சுக்காமலே இருக்கார். இங்க ராகவ் நிலா அப்பா சொல்றது தான் சரின்னு பேசறார். எனக்கென்னவோ மாமா சொல்றது தான் கரெக்ட்னு தோணுது…”

தர்ஷினியை பார்த்திருந்த ஸ்டெபியின் முகமும் அதையே பிரதிபலிக்க ராகவ் மறுப்பாக தலையசைத்தார்.

“இல்லை தர்ஷி, நிலா வீட்ல சொல்றதையும் நாம கொஞ்சம் கன்ஸிடர் பண்ணனும்…”

“இதுதான் நிலா வீடு…” என அழுத்தமாக கூறிய தர்ஷினி,

“நீங்க கன்ஸிடர் பண்ணுங்க பண்ணாம போங்க. ஆனா என் பிள்ளையை என்னால இப்படி பார்த்துட்டு இருக்கமுடியாது. நீங்க காலம் தள்ள தள்ள எனக்கு எதுவும் சரியாப்படலை. நிலாவை அங்கேயே விட்டிருக்கிறது எனக்கு அவ நம்ம கைவிட்டு போய்டுவாளோன்னு தோணுது…”

“தர்ஷி, என்ன பேச்சு இது?…” என கண்டிக்க,

“எனக்கு தோணினதை நான் சொன்னேன். தட்ஸ் ஆல்…”

“இன்னும் கொஞ்ச நாள்தான்…”

“இப்படி சொல்லி சொல்லியே டூ மந்த்ஸ் எப்பவோ முடிஞ்சிடுச்சு ராகவ்…”

இருவரும் மாற்றி மாற்றி பேசிக்கொண்டிருக்க ஆரவ் எழுந்து மாடிக்கு சென்றுவிட்டான். ஸ்டெபி அவனை பின்தொடர்ந்து மாடியேற நினைக்க,

“போதும் ரெண்டு பேரும் நிறுத்தறீங்களா? சும்மா உங்களுக்குள்ளையே ஆர்க்யூ பண்ணிட்டு இருந்தா எல்லாமே சரியாகிடுமா? நீங்க உங்களுக்குள்ள சண்டை போட்டு அவனை இன்னும் படுத்திவைக்காதீங்க…”

“ஏற்கனவே நொந்துபோய் இருக்கான். நீங்களும் இப்படி பேசினா தன்னால தானேன்னு இன்னும் உள்ளுக்குள்ள நொறுங்கிபோய்டுவான். அவனுக்கு நாம எல்லாம் பக்கபலமா இருக்கிறதை விட்டுட்டு அவன் முன்னாடி இது போல நடந்துக்கறது சரியா?…”

அர்ஜூனின் கோவத்தில் இருந்த நியாயம் இருவரையும் சுட்டது. அமைதியாக நின்ற தர்ஷினியை ஆதரவாக அணைத்தார் ராகவ்.

“சாரி தர்ஷி, ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர் செல்ப்…” என அவரை ஆசுவாசப்படுத்த முயல ராகவ்வின் தோள் சாய்ந்து தேம்ப ஆரம்பித்தார் தர்ஷினி.

“தர்ஷிமா. ஸ்டாப்இட். சும்மா சும்மா ஏன் அழறீங்க? எப்போவும் தைரியமா இருக்கிற செல்ப் கான்பிடன்ஸ் தர்ஷிமா எங்க போனாங்க? இது நீங்களே இல்லை…” என கூறியவன் அவரை தன்னருகில் அமர்த்திக்கொண்டு,

“நீங்க கவலைப்படாம இருங்க. இன்னும் ஒருமாதம் நாம பொறுமையா இருப்போம். அதுக்குள்ளே அங்க போனா எப்படி நிலாக்கிட்ட உண்மையை சொல்லி அவளுக்கு கெட்டபேர் வராம நம்மளோட அழைச்சிட்டு வரதை பத்தி மட்டும் யோசிப்போம். சரியா?…” என்றவனை பார்த்து தலையசைத்தார் தர்ஷினி.

“ஓகே தாத்தா கோவமா கிளம்பிட்டார். நாளைக்கு கால் பண்ணி அவரை சமாதானம் செய்துடுங்க. பேசலைனா கால்ல கூட விழுந்திடுவோம். தப்பே இல்லை. இப்போ நம்ம தலைவரை போய் மலையிறக்குவோம். சார் என்ன மூட்ல இருப்பாரோ?…”

“ஆஷா நீதான் இதுக்கு சரிப்பட்டு வருவ. போய் உன் ப்ரெண்டை கூட்டிட்டு வா. கொஞ்ச நேரம் சும்மா வெளில எங்கியாச்சும் போய்ட்டு வருவோம்…” என ஸ்டெபியை மாடிக்கு அனுப்பியவன் ராகவ்விடம் பேச ஆரம்பித்தான்.

—————————————-

“ஆரவ் எங்க இருக்கீங்க?… ஆரவ் ப்ளீஸ் நான் உங்களை பார்க்கனும். என்னை ஏன் விட்டுட்டு போனீங்க? …. ஆரவ்… ஆரவ்…” என நிலா கதற,

“நிலா, நிலா என்னாச்சு?…”  என ஜீவா அவளை உலுக்க நிலா பதறியடித்துக்கொண்டு எழுந்தமர்ந்தாள்.

“என்ன ஜீவா?…” என பதட்டமாக கேட்க,

“நீ  ஏதோ உளறிட்டு இருந்தியே அதான் என்னனு கேட்டேன். நீ என்னனா என்னையே திருப்பி கேள்வி கேட்க?…”

“நானா? நான் என்ன சொன்னேன்?…” என்று கேட்டு மலங்க மலங்க விழித்தவளை பார்க்கவே பரிதாபமாக இருக்க,

“இல்லை எனக்கும் ஒன்னும் புரியலை. நீ தான் ஏதோ சொல்லிட்டு இருந்த. சரி நீ தூங்கு…” அவளை குழப்பவேண்டாம் காலையில் கேட்டுக்கொள்வோம் என விட்டுவிட்டாள் ஜீவா.

நிலாமுகி யோசனையோடு படுக்க இவர்களது பேச்சுக்குரல் கேட்டு அமுதா வந்துவிட்டார் இவர்களின் அறைக்கு.

“என்னாச்சு ஏன் சத்தம் போட்ட ஜீவா? என் பொண்ணுக்கு என்னாச்சு?…” என பதட்டமாக விளக்கை போட்டு நிலாவை எழுப்பி உடல் முழுவதும் தடவி பார்த்து சிறிது நேரம் அமர்ந்திருந்து ஒன்றுமில்லை என இருவரும் சத்தியம் செய்யாத குறையாக கூறியப்பின்னரே மனமில்லாமல் அங்கிருந்து சென்றார்.

error: Content is protected !!