தேடல் – 19
குணசேகரனின் வீட்டிற்கு சென்று நிலாவை பார்த்துவிட்டு வந்ததும் முத்தையாவிடம் நிலாவை பற்றியே புலம்பிக்கொண்டிருந்தார் முத்தழகி. அவரை சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்றானது வண்ணமதிக்கு.
முத்தையாவோ தன் மனைவியின் பேச்சில் முகம் கன்ற அமைதியாக அமர்ந்திருந்தார். இருவரையும் ஒருவழியாக சாப்பிட எழுப்பியவள் அவர்களோடே தனக்கும் சேர்த்து பரிமாறி உண்டுமுடித்தாள்.
முத்தையா பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலையிருப்பதாக கூறி வெளியேறியதும் தினகரன் வந்து சேர்ந்தான்.
“வாய்யா, ஏன் இம்பூட்டு நேரம்? கொஞ்சம் வெரசா வரவேண்டாமா? இவ்வளோ நேரம் செண்டு சாப்பிட்டா உடம்பு என்னத்துக்காவறது?…” என கனிவாக கண்டித்தவரை பார்த்தவன்,
“இனிமே நேரத்துக்கே வரேன்மா. இன்னைக்கு கொஞ்சம் வேலையாகிட்டு. அதான்…” என கூறிக்கொண்டிருக்கையில் வண்ணமதி தினகரனுக்கான உணவுகளை எடுத்து வந்துவிட்டாள்.
“சரி கைகால் அலம்பிட்டு போய் முதல்ல சாப்புடு. அவளும் செத்த தலை சாயட்டும். நான் போய் படுக்கறேன்…” என்றவர் தன் அறைக்கு சென்று படுத்துவிட்டார்.
சாப்பிட அமர்ந்ததும் அவனுக்கு பரிமாற ஆரம்பித்த வண்ணமதி ஒரு வார்த்தை கூட பேசாமல் அமர்ந்திருக்க தினகரனுக்குதான் இது அதிசயமாக இருந்தது.
தான் பேசாவிட்டாலும் ஏதாவது வளவளத்துக்கொண்டே இருப்பதுதான் வண்ணமதியின் வாடிக்கை. அதனால் இன்றைய இந்த மௌனம் அவனை உறுத்தியது. ஒருவேளை நிலாவை பார்த்துவிட்டு வந்து தனக்குள்ளே ஏதாவது நினைத்து கவலை கொள்கிறாளோ என நினைத்தான்.
நிலாவின் வரவை பற்றி அவனுமே அறிந்திருந்தான். அவனின் மனம் நிம்மதிகொண்டது. ஆனால் நிலாவின் வரவை எண்ணி வண்ணமதி கவலைப்பட என்ன இருக்கிறது இதில்? தன்னுடைய பழைய விருப்பத்தினால் விளைந்த பயமோ?
உண்டு முடிக்கும் வரை இப்படியான யோசனைகளில் தான் அவன் இருந்தான். ஆனால் வாயை திறந்து எதுவுமே கேட்கவில்லை. அவளாக சொல்கிறாளா என்று பார்ப்போமே என நினைத்திருந்தான்.
தினகரன் எழுந்ததும் பாத்திரங்களை அப்புறப்படுத்திவிட்டு சாப்பிட்ட இடத்தையும் சுத்தம் செய்துவிட்டு முற்றத்திற்கு வந்தவள் அங்கே ஈஸிசேரில் சாய்ந்திருந்தவனிடம் வந்து நின்றாள். அதன் மேலும் அமைதியாக இருக்காமல்,
“ஏதாவது கேட்கனுமா மதி?…” என வாயை விட,
“ஆமா நல்லா நாலு கேள்வி கேட்கனும். ஏன் என்னை கல்யாணம் செய்தீங்க?…” என கடுப்பாக கேட்டவளை பார்த்து அதிர்ந்தவன்,
“என்ன கேள்வி இது மதி? யோசிச்சு பேசு…” என அரட்டினான்.
“எல்லாம் யோசிச்சாச்சு. நீங்க அழுத்தக்காரர்னு எல்லாருக்கும் நல்லாவே தெரியும். ஆனா இப்படி ஒரு கல்லுமனசா இருப்பீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. கொஞ்சமாச்சும் மனசாட்சி இருக்குதா உங்களுக்கு?…”
“மதி கொஞ்சம் புரியிற மாதிரி அமைதியா பேசேன்? அம்மா எழுந்துக்க போறாங்க…” என அந்த சத்தத்தில் முத்தழகி விழித்துவிட்டார்.
“அத்தை எழுந்தா எழுந்துக்கட்டும். நானே அவங்ககிட்ட நியாயத்தை கேட்டுக்கறேன். இவ்வளோ பேசறேன் இன்னும் எப்படி உட்கார்ந்திருக்கீங்க?…” இதில் சலித்தே போனான்.
“மதி முதல்ல விஷயத்தை சொல்லு. எதுக்காக இந்த கோவம்?…”
“இன்னுமா புரியலை. நிலா புள்ளைய பார்க்க ஒரு எட்டு அந்த வீட்டுக்கு வந்தா குறைஞ்சா போய்டுவீங்க? வந்து ரெண்டு வார்த்தை ஆறுதலா பேசறதுக்கு என்ன வந்துச்சாம்?. அவ பாவம் தெரியுமா?…” என கூறும் போதே அழுகை முட்டிக்கொண்டு வந்தது.
“மதி என்ன பேசற நீ? நான் அங்கலாம் வந்ததில்லை. புதுசா எதுக்கு? சரி விடு அதான் நல்லபடியா வந்து சேர்ந்துட்டாள. நான் சாயங்காலம் வெளில மாமாவை பார்த்து விசாரிச்சுக்கறேன்…”
பிரச்சனையோ என்று நினைத்து எழுந்து வர இருந்த முத்தழகி தான் கேட்க இருப்பதை அப்படியே மருமகள் கேட்டதும் மகன் என்ன சொல்வான் என்று பார்க்க அமைதியாக இதை கேட்டபடி அங்கேயே அமர்ந்துவிட்டார்.
“புதுசா எதுக்கா? நிலாவை கட்டிருந்தா எல்லாம் போய் வந்து இருந்திருப்பீங்க தானே? ஊடால நான் வரப்போய் தானே? எல்லாம் என்னால…” என மதி சொல்லி தினகரனின் இதயம் ஒருகணம் நின்று துடித்தது.
“பைத்தியமா உனக்கு? எதை போய் இப்போ பேசிட்டு இருக்க? தேவையில்லாத பேச்சுக்கள் எனக்கு பிடிக்காது மதி…”
“உங்களுக்கென்ன சுலபமா பேசறீங்க. அவளை நேர்ல பார்த்தா தானே உங்களுக்கு தெரியும்…” என்றவள் அங்கே சென்றுவந்ததில் இருந்து அனைத்தையும் சொல்ல நிலாவை எண்ணி வருந்தத்தான் செய்தான் தினகரன்.
“இது நடக்கனும்னு விதி இருக்குறப்போ நாம ஒன்னும் செய்யமுடியாது மதி…”
“நீங்க மட்டும் அவசரப்படாம நிலாப்புள்ளைக்காக கொஞ்ச நாள் காத்திருந்தா இப்போ அவளை நீங்களே கட்டிருக்கலாம். எல்லாம் அவசரம் உங்களுக்கு. இப்போ அவளோட இந்த நிலமையில யார் அவளை கல்யாணம் செய்ய முன் வருவாங்க?. அதுவும் இத்தனை மாசம் அந்த பொண்ணு காணாம வேற போய்ருக்கா…”
வண்ணமதி சொல்லவருவது தினகரனுக்கும் புரியத்தான் செய்தது. அதற்காக மனைவியின் பேச்சை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நிலாவை இப்போது ஒரு நொடி கூட அப்படி நினைத்துப்பார்க்க மனம் மறுத்தது.
“மதி போதும் விடு இந்த பேச்சை. நிலாவுக்கு ஒரு நல்ல பையனா நாமலே தேடுவோம்…”
“என்னத்தை தேடுவீங்க? வரவன் கொஞ்சமும் சந்தேகம் இல்லாம முழுமனசா அவளை ஏத்துப்பானா? நிச்சயம் கிடையாது. ஆனா நீங்க ஏத்திட்டு இருந்திருப்பீங்க. நீங்க அவளை அப்படி விரும்புனீங்க தானே?. எனக்கு எங்க ஊர்ல எதாச்சும் ஒருத்தன்..” என முடிக்கவில்லை,
“மதீஈஈஈ…” என கத்தியவனை பார்த்து அதிர்ந்து நின்றாள்.
எப்போதும் குரலுயர்த்தாமல் அமைதியாக பேசுவதே தினகரனின் குணம். இப்போது அவனின் இந்த கோவம் மதியை பயமுறுத்தியது. இவனுக்கு இப்படியெல்லாம் கோவம் கொள்ள தெரியுமா? ஒரு கணம் தான் நினைத்தாள். நொடியில் தன்னை சிலுப்பிக்கொண்டு,
“சும்மா கத்தாதீங்க. உள்ளதை சொன்னேன். உடனே கோவம் மட்டும் வருதாக்கும்?…” என முறைத்தவளை பார்த்து அருகில் அழைத்தான்.
வரமாட்டேன் என்பது போல அமர்ந்த இடத்தை விட்டு கொஞ்சமும் நகராமல் சட்டமாக இருக்க இவன் தான் இறங்கி போகவேண்டியதானது.
“சொல்றதை கேள் மதி. நீ பேசறதால எதுவும் மாறிடாது. நீ என்னுடைய மனைவி. இதுதான் நிஜம். உனக்கு மனசு தாங்கலைன்னு வாய்க்கு வந்தபடி வார்த்தைகளை விட்டுடாதே. என்னால அதை சகிச்சுக்க முடியலை…”
“நிலாவோட நிலை மனசுக்கு கஷ்டமா தான் இருக்கு. அவளுக்கான சந்தோஷமான வாழ்க்கையை நாம நிச்சயமா ஏற்படுத்தி கொடுப்போம். அதுக்காக நீ பேசறதை எல்லாம் நான் பொறுத்துப்பேன்னு நினைக்காதே. எப்போவும் இதே போல அமைதியா பேசிட்டு இருக்கமாட்டேன். புரியுதா?…”
“மிரட்டுனீங்களாக்கும்? பயந்துட்டேன். அட போங்க நீங்க வேற. நீங்க வந்ததும் அவளை பத்தி எதாச்சும் விசாரிச்சிருந்தா கூட எனக்கு இம்புட்டு கோவம் வந்திருக்காது. அதான் வார்த்தைகளை கொட்டிட்டேன். ஆனா நீங்க என்னனா ஒரு வார்த்தை கூட அவ எப்படி இருக்கான்னு கேட்கலையா, அதான் சுருக்குனு கோவம் வந்துடுச்சு…”
அவளின் நியாயத்தில் தலையிலடித்துக்கொண்டு மீண்டும் சென்று அமர்ந்துவிட்டான். ஆனால் மதியின் புலம்பல் அவனை தொடர்ந்துகொண்டே தான் இருந்தது.
அவனை நிலாவின் வீட்டிற்கு வர சொல்லி வாய் ஓயாமல் அழைத்துக்கொண்டே தான் இருந்தாள். இவனும் கண்டுகொள்ளாத பாவனையோடு கண்களை மூடிக்கொண்டு சாய்ந்தவாக்கில் அமர்ந்திருந்தான்.
“முடிவா என்ன சொல்லுறீங்க? வருவீங்களா மாட்டீங்களா?…” எனவும் அவளை பார்த்து முறைக்க,
“எனக்கென்ன? உங்க மாமா பொண்ணை பார்க்க உங்களுக்கே அக்கறை இல்லாதப்போ எனக்கென்ன வந்துச்சு. உங்ககிட்ட போய் இம்புட்டு நேரம் கூவுனேன் பாருங்க? என்னை சொல்லனும்…”
தனக்குத்தானே திட்டியபடி செல்லும் தன்னவளை பார்த்தபடி இருந்தவனின் விழிகளில் இருந்து அளவில்லா அன்பு வழிந்தது.
“ஊருக்குள்ளதான் தான் பெரியாளுன்னு சவடாலு. வீட்டுக்குள்ள அந்த புள்ளைய நேர்ல பார்க்க பயந்துட்டு இப்படி சப்பைக்கட்டு கட்டிட்டு இருக்காரு…” போகிற போக்கில் இப்படி தாக்கிவிட்டு போக தினகரனுக்கு சிரிப்புதான் வந்தது.
“என்ன பேச்சு? இவளுக்கு நிகர் இவள் தான்…” என பெருமையாக கூறிக்கொண்டான்.
மகன் மருமகளின் வாக்குவாதத்தை கேட்டுக்கொண்டிருந்த முத்தழகி கொஞ்சம் திகைத்துத்தான் அமர்ந்திருந்தார். வண்ணமதிக்கு தினகரன் நிலா மேல் விருப்பம் கொண்டதை எப்படி அறிந்திருப்பாள்?
மகன் சொல்லியிருப்பானோ? என்ற சிந்தனையை ஓரம் தள்ளியவர் நிலாவுக்காக கணவனிடமே மல்லுக்கு நிற்கும் அவளை எண்ணி பெருமிதம் கொண்டார் முத்தழகி. இப்பேற்பட்ட ஒருத்தியை மகனிற்கு தேர்ந்தெடுத்ததற்காக தன்னையே மெச்சிக்கொண்டார்.
தினகரனும் எந்தளவிற்கு மதியிடம் தழைந்து செல்கிறான் என பார்க்கையில் மகனை எண்ணி வியாக்காமலும் இருக்கமுடியவில்லை அவரால். அவனிடம் இப்படி இலகுவாக யாரும் பேசிவிட முடியாது.
மதியின் பேச்சை உண்மையில் ரசித்தார் என்றுதான் சொல்லவேண்டும். இவளை விட தன் மகனுக்கு வேறு பொருத்தம் நிச்சயம் இல்லை என நினைத்தார் மகிழ்வாக.
அதன் பின் தினகரன் அவ்வப்போது அங்கு சென்றுவரும் மதியிடம் அவ்வீட்டு நிலவரங்களை கேட்டு வைத்துக்கொண்டான். இல்லை என்றால் அதற்கும் குதிப்பாளே என்று. மதியும் நிலாவின் வேண்டுதலுக்காக தினகரன் இல்லாத நேரமனைத்தும் அவளுடனே இருந்தாள்.