“தம்பி தவறா எடுத்துக்கக்கூடாது. நீங்க சொல்ற வசதி வாய்ப்பெல்லாம் பொதுவானதுன்னா எங்க ஊர்ல நாங்களும் ஓரளவுக்கு வசதிதான். எங்க வீட்லயும் எல்லா சவுகரியமும் இருக்குது. நானும் என் பொண்ணுங்களை ராணி மாதிரிதான் வளர்த்தேன். நீங்க சொல்ற வசதி உங்க வீட்டு வசதியை வச்சுத்தான்னா அது என் பொண்ணுக்கு இடையில வந்தது தான்…” கொஞ்சம் சுருக்கென்று கூறியவர் பின் மன்றாடும் குரலில்,
“புரிஞ்சுக்கோங்க. எங்க ஊர்ல என் பொண்ணு காணாம போனதுன்னு தெரியவுமே ஒருத்தரும் என் பொண்ணை பத்தி தப்பா சொல்லலைங்க. நிச்சயம் யாராச்சும் கடத்திருப்பாங்கன்னுதான் பேசினாங்க. அப்படி இருக்கிற நிலமையில இப்போ நான் பொண்ணோட உங்களையும் கூட்டிட்டு போனா பொண்ணோட பேர் கெட்டுடும். ஊர் தவறா பேசும்ங்க…” என குணசேகரன் தலைகுனிந்தவாறே கூற அவரையே வெறித்துப்பார்த்தான் ஆரவ்.
“புள்ளையும் கொஞ்சம் உடம்பு தேறட்டும். அதுக்கப்பறமா நேரம் பார்த்து சூதானமா நானே உங்களை பத்தி எடுத்து சொல்லிடறேன்…” என்றவர் மீண்டும்,
“என்னோட ஊருல இருந்து எல்லா விபரத்தையும் நான் தான் சொல்லிருக்கேனே? எங்க மேல நம்பிக்கை இல்லையா?…” என குற்றவுணர்ச்சியில் குணசேகரன் தழுதழுக்க அதை தவறாக புரிந்த ராகவ்,
“ச்சே ச்சே என்ன வார்த்தைங்க பேசறீங்க? உங்களுக்கும் உங்க பொண்ணோட நல்லது கெட்டதுல பங்கிருக்குதே. பெத்த தகப்பன் நீங்க. உங்க பொண்ணுக்கு ஒரு மரியாதை குறைவு வந்துடக்கூடாதுன்னு பேசறீங்க. எங்களுக்கு உங்கமேல் முழு நம்பிக்கை இருக்கு…”
ராகவ் கூறவும் அதை ஆமோதிக்கும் பாவனை அனைவரின் முகத்திலும் இருக்க ஆரவ் அப்போதும் அதை ஒப்புக்கொள்ளும் மனமின்றியே அமர்ந்திருந்தான்.
“எங்களோட மருமக, என் மகனோட இத்தனை மாசம் ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்திருக்கா. அவங்க வாழ்க்கைக்கு இது ஒரு திருஷ்டி போல நினச்சுப்போம். இதோட எல்லாம் கழிஞ்சு போய்டட்டும். இப்போ என்ன ஒரு நாலைந்து மாசம் தானே. அதுக்குள்ளே ஊர்ல என்ன சொல்றதுன்னு பொறுமையா முடிவு பண்ணிப்போம்…”
நொடியில் பிரச்சனைக்கு ஒரு முடிவை கூறி மேலும் மேலும் குணசேகரனை குன்ற வைத்தார் ராகவ். அவரை எண்ணி சேகரனால் வியக்காமல் இருக்கமுடியவில்லை.
‘என்ன மனிதர் இவர்? இவருக்கு நான் என்ன செய்யவிருக்கிறேன்? இவரானால் என் மேல் இத்தனை நம்பிக்கை வைத்திருக்கிறாரே? தான் செய்யபோவது நம்பிக்கை துரோகம் அல்லவா? அந்த துரோகம் என் பெண்ணுக்கும் தானே? இப்படி ஒரு பாவத்திற்கு என்னை ஆளாக்கிவிட்டாயே தெய்வமே?’ என மனதிற்குள் கூனிக்குறுகி உள்ளுக்குள் குமைந்துபோனார் சேகரன்.
‘இதிலிருந்து மீண்டுவிட தனக்கொரு வழி கிடைக்காதா?’ என மனதிற்குள் கடவுளிடம் வேண்டுதல் வைத்தார் அவசரமாக.
அதன் பின் வேலைகள் துரிதமாக நடக்க தயாளனும் வந்துவிட நிலாவோடு ஸ்டெபி மட்டும் அவர்களோடு பயணித்தாள்.
அதுவும் ஆரவ்வின் பிடிவாதத்தின் பெயரில். ஏனோ நிலாவை தனியாக அனுப்பவேமாட்டேன் என்று ஒரேடியாக மறுத்து ஒருவரின் பேச்சுக்கும் காதுகொடுக்க மறுத்துவிட்டான்.
‘ஒன்று, தான் செல்லவேண்டும். இல்லையென்றால் என் சார்பில் ஸ்டெபியை அனுப்பிவைப்பேன். இரண்டில் ஒன்று நடந்தே ஆகவேண்டும்’ என்று கூறியவனுக்கு குணசேகரனின் மீது நம்பிக்கை இல்லாமல் இல்லை. ஏனோ அவனின் மனதால் ஒப்புக்கொள்ளமுடியவில்லை.
வேறு வழியின்றி அவர்கள் சரி என்றனர். இதற்கு மேலும் மறுத்தால் வீண் விவாதமும் சந்தேகமும் தோன்றும் என்று நினைத்த வள்ளியம்மை,
“அட என்ன தம்பி நீ. நமக்கு ஒத்தாசையா தான இந்த புள்ள வருது. நம்ம வீட்டுக்கு வரவங்க. வராதீங்கன்னு சொல்றது நல்லாவா இருக்கு. நீ சரின்னு சொல்லுய்யா. நான் தான் இருக்கேன்ல…” தன்னை மீறி எதுவும் நடந்துவிடாது என்னும் விதத்தில் மறைமுகமாக சேகரனை தூண்டினார்.
ஸ்டெபியை அங்கிருந்து திருப்பி டெல்லிக்கு அனுப்பும் பொறுப்பை தயாளனே முன்வந்து ஏற்றுக்கொண்டான்.
பின் கிளம்பவேண்டிய ஆயத்தங்களை அர்ஜூன் கவனித்துக்கொள்ள ஆரவ் முடிந்தளவிற்கு நிலாவை தன் கண்பார்வையிலேயே வைத்திருந்தான். நேரம் நெருங்க நெருங்க துக்கம் தொண்டையை அடைத்துகொண்டு வந்தது.
நிலா கிளம்பும் வரையிலும் கூட தன்னை அடக்கிக்கொண்டவனால் அவள் அந்த அறையை விட்டு வெளியேறியதும் ராகவ்வின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துகொண்டவன் வேகமாக அவளை வழிமறித்து நின்றான். ஒருகணம் அனைவருமே ஸ்தம்பித்து போயினர்.
திடீரென முன்னால் வந்து ஆரவ் நிற்கவும் அதிர்ந்து நின்ற நிலாவின் முன்னால் தன் வலதுகையை நீட்டியவன் புன்னகையோடு, “கெட் வெல் சூன் நிலா…” என்றான். நிலாவும் தெரிந்த டாக்டர் தானே என்னும் விதத்தில் கையை குலுக்கினாள்.
ஒருநொடிதான். நிலா உணரும் முன் தானே கையை உருவிக்கொண்டு சிறு தலையசைப்போடு விலகி நிற்க அவனை பார்த்த்துக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தவள் ஏனோ அவனை திரும்பி பார்க்க தோன்ற திரும்பியும் பார்த்தாள்.
அவளையே பார்த்து நின்ற ஆரவ்வின் விழிகளில் தெரிந்த உணர்வுகள் அவளை கட்டிப்போட முயல வலிய விழிகளை திருப்பிக்கொண்டு சென்றுவிட்டாள். அவளுக்கு ஆரவ் அங்கு பணிபுரியும் மருத்துவன் என்றளவில் தான் தெரிந்திருந்தது.
அதுவும் அவனின் உடையை வைத்து. அவனின் பெயரை அவள் கூட தெரிந்துகொள்ளாமல் போனதுதான் விதி. தெரிவிக்க அவனும் முயலவில்லை.
ஹாஸ்பிட்டல் வளாகத்தை விட்டு வெளியேறியதும் வெறுமையான உணர்வொன்று வந்து அவளை ஒட்டிக்கொண்டது. தன் கண்ணிலிருந்து மறையும் வரை அக்கட்டிடத்தையே திரும்பி திரும்பி பார்த்தாள்.
ஆரவ் கண் பார்வையிலிருந்து தன்னவள் மறைந்ததும், “டாடி வீட்டுக்கு போகலாமா?…” அடக்கப்பட்ட விம்மல் அவனின் குரலில்.
ராகவ்வும் அவனின் பேச்சிற்கு மறுபேச்சு பேசாமல் கிளம்பிவிட வீட்டிற்கு சென்றவன் அவரை கட்டிக்கொண்டு அப்படியே சிலநிமிடம் நின்றிருப்பான்.
அங்கிருக்கும் தண்ணீர் குவளையை எடுத்து தொண்டைக்கு சரித்துக்கொண்டவன் குடித்துவிட்டு, “டாடி நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கறேன் ப்ளீஸ்…” அவரின் முகம் பார்க்காமல் கூறி சென்றவன் தான் பின் தன்னுணர்வுகள் எதையும் யாரிடமும் காண்பிப்பதை நிறுத்திக்கொண்டான்.
ஸ்டெபி அங்கு சென்று வந்த பின் அனைத்தையும் கேட்டறிந்தவன் அதன்பின் அமைதியாகிவிட்டான். ஆனால் இன்றுவரை ராகவ், தர்ஷினி, ஸ்டெபி, அர்ஜூன் என தினம் ஒருவர் குணசேகரனிடம் பேசிக்கொண்டுதான் இருக்கின்றனர்.
நிலா எப்படி இருக்கிறாள் என்பதை கூட கேட்க மறுத்தான். அவர்களாக வந்து நிலாவின் நலனை கூறி செல்வதை வாடிக்கையாக கொண்டனர். கேட்டுக்கொள்வானே தவிர முகத்தில் எதையும் பிரதிபலிக்கமாட்டான்.
வார்த்தைகளை அளந்தான். தேவைக்கு மட்டும் பேசினான். அதற்கு மேலும் ஏனோ அவனால் முன்பு போல் கலகலப்பாக இருக்கவே முடியவில்லை. ஆனால் உள்ளுக்குள் நிலாவிடம் பேசிக்கொண்டே தான் இருந்தான். விழித்திருக்கும் நேரம் முழுவதும் விடாமல் பேசினான். ஏனோ அவளே தன்னிடம் தன் பேச்சுக்கு பதில் கூறுவது போல.
தன்னுணர்வோடு தான் நிலா சென்றிருக்கிறாள். தன் உணர்வில் கலந்த உயிரான காதலை மறக்காமல் ஆரவ்வின் நினைவுகளோடு அங்கே சென்றிருந்தால் இந்தளவிற்கு தவித்திருக்க மாட்டானோ?
அவனுக்கு நிலா சென்றுவிட்டதை விட தன்னை மறந்து சென்றிருப்பது தான் வேதனை அளித்தது. அவள் திரும்பி வருவாள் என்ற நம்பிக்கை இப்போதும் இருந்தாலும் அவளின் பிரிவு அவனை வறுத்தெடுத்தது. அப்பிரிவை ஏற்றுக்கொள்ள முடியாமல் தனக்குள்ளே அவளின் நினைவுகளோடு ஒடுங்க ஆரம்பித்தான்.
அவனை மறந்து அவள் சென்றிருக்க வாழ்வே அவள்தான் என இருப்பவனுக்கு அதை தாங்கமுடியவில்லை. அவனின் நிலை கண்டு பழைய ஆரவ்வை எப்படியாவது மீட்க தங்களால் முடிந்த அளவிற்கு அவனை தேற்ற பார்த்தனர் குடும்பத்தினர். ஒரு கட்டத்திற்கு மேல் அவனது பொறுமையும் எல்லை மீறியது.
“என்னை என்ன பைத்தியம்னு முடிவே பண்ணிட்டீங்களா? ஏன் இப்படி டார்ச்சர் பன்றீங்க? நல்லாதானே இருக்கேன்? இல்லை என் பொண்டாட்டிக்கு என்னோட ஞாபகமே இல்லைன்னு சட்டைய கிழிச்சிட்டு ரோட்ல சுத்தனும்னு எதிர்பார்க்கறீங்களா?…” என்று வெடித்துவிட்டான்.
அதன் பின்னால் அவனின் போக்கில் தான் விடவேண்டியதானது. இன்றுவரை அவன் அவனின் அமைதியிலிருந்து வெளிவரவே இல்லை.
மகனையே பார்த்தபடி தர்ஷினி பழைய நினைவுகளில் ஆழ்ந்திருக்க அர்ஜூனின் வீட்டில் ஆரவ் மேகஸினை புரட்டிக்கொண்டிருக்க ஜூஸ் க்ளாஸ் மூன்றை எடுத்துக்கொண்டு வந்த அர்ஜூன் தர்ஷினியிடமும் ஆரவ்விடமும் அவர்களுடன் அமர்ந்தான்.
சிறிது நேரம் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தவர்கள் ஆரவ்வையும் அதில் இழுக்க அவனும் இடையிடையே பதிலளித்துக்கொண்டிருந்தான்.
“தர்ஷிமா நானும் ஆரவ்வும் ஒரு பர்த்டே பார்ட்டிக்கு போய்ட்டு வறோம். உங்களை வீட்ல ட்ராப் பண்ணிட்டு கிளம்பறோம். ஆஷாவை நேரா உங்க வீட்டுக்கே வரசொல்லிருக்கேன். நைட் அங்கதான் நாங்க இருப்போம்…” என்றவன் ஆரவ்வின் புறம் திரும்ப ஆரவ் எழுந்துகொண்டான்.
மறுத்தும் கூறவில்லை. வருகிறேன் என்றும் கூறவில்லை. அவனின் எண்ணம் புரிந்தது போல் இருவரும் எழுந்து வீட்டை பூட்டிக்கொண்டு கிளம்பினர் ஆரவ்வின் வீட்டை நோக்கி.
எதெற்கெடுத்தாலும் மறுத்து கூறி வார்த்தையாடி வம்பை வளர்க்கும் அந்த பழைய ஆரவ் எப்போது கிடைப்பான் என்ற ஏக்கம் அர்ஜூனை வாட்டியது. தனக்கே இப்படியென்றால் பெற்றவர்கள் நிலை.
தர்ஷினியை பார்த்தான். அவர் தன் மகனையே வெறித்துக்கொண்டிருந்தார். இதற்குத்தானே இத்திருமணம் வேண்டாம் என்றேன் என நினையாமல் இருக்கமுடியவில்லை அவரால்.
நிலா தங்களிடம் என்று வந்து சேர்வாளோ? ஒரு மாதத்திற்கே தங்கள் பிள்ளை இப்படி ஆகிவிட்டானே?
இனியும் காலம் தாழ்த்தவேண்டாம். குணசேகரனிடம் இதுபற்றி பேசியே ஆகவேண்டும் என முடிவெடுத்துக்கொண்டார்.
மனிதர்கள் நிலைப்பதெல்லாம் நடந்துவிட்டால் விதிக்கு என்ன வேலை?