நெஞ்சில் உறைந்த தேடல் – 18 (2)

“ஆரவ் நீ சாப்பிடு. இந்த பைலை நான் முடிச்சிடறேன். கிளம்பிடலாம்…” என்றவர் அவனுடன் தனக்கும் ஒரு பிளேட்டை நகர்த்திக்கொண்டார். மறுக்காமல் எடுத்துக்கொண்டான் ஆரவ்.

உண்டு முடித்ததும் கிளம்பி நேராக அர்ஜூனின் வீட்டிற்கு சென்றார் தர்ஷினி. எதுவும் பேசாமல் அவருடன் சென்றவனுக்கு அவ்வப்போது இது வழக்கமாக நடப்பது தானே என்ற பாவம் தான் முகத்தில்.

அவர்களை வரவேற்கும் விதமாக வந்தான் அர்ஜூன், “ வாங்க தர்ஷிமா, வாடா சக்கு…” என ஆரவ்விடம் அர்ஜூன் வம்பிழுக்க அவனோ ஏதோ அருள்பாலிப்பவன் போல அளவாக புன்னகைத்தான்.

இந்த ஒருமாதமாக இதுதான். ஆரவ் வெளிப்பார்வைக்கு மட்டுமே தன்னை இயல்பு போலே காட்டிக்கொண்டாலும் புன்னகைத்தாலும் அதில் உயிர்ப்பே இல்லாதது அவனை சேர்ந்தவர்களை பெரிதும் கலங்க வைத்தது.

ஆரவ்வின் தொடுகையில் நிலா மயங்கியதுமே பதறிப்போய் மேத்தாவிற்கு அழைத்தனர். நொடியில் அந்த சூழ்நிலையே பதட்டத்தை பற்றிக்கொண்டது. நிலாவை பரிசோதித்த பின் அர்ஜூன் மூலமாக ஆரவ்விற்கு விஷயம் பக்குவமாக தெரிவிக்கப்பட்டது.

நிலாவால் ஆரவ்வின் அருகாமையை உணரமுடிந்தாலும் அவளின் ஆழ்மனத்தேடல் இப்போதைய நிலாவின் உடலாலும் மனதாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  

அதனால் உண்டான அழுத்தம் அவளை மயக்கநிலைக்கு கொண்டு செல்வதால் இது கோமாவில் கூட கொண்டு நிறுத்தலாம் என எச்சரித்ததும் உண்மையில் உள்ளுக்குள் செத்துப்போனான் ஆரவ்.

அவளுக்கு பலம் தரக்கூடியதாக மருந்து மாத்திரைகள் என தொடர்ந்து கொடுத்துவந்தால் நிலாவிடம் உண்மையை கூறும் போது அவளது உடலும் மனதும் அதை ஏற்றுக்கொள்ளும் வலிமையடைந்துவிடும்.  பாதிப்புகள் ஏற்படுவது குறைவாகவே இருக்கும் என்றும் கூறினார் மேத்தா.

ஆனால் ஆரவ்விற்கு தன்னுடைய தொடுகை அவளை இந்தளவிற்கு பாதிக்கும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அதிலேயே அதிர்ந்து போனான். சிறு பார்வைக்கும் தொடுகைக்குமே இப்படி தளர்ந்துபோகும் தன்னவளிடம் எவ்வாறு தன் காதலை புரியவைப்பது.

யோசிக்க யோசிக்க அவனால் நிலாவின் இப்போதைய நிலையே கண்முன் தோன்றி அவனை செயல்படவிடாமல் தேக்கியது. இதற்கே சோர்ந்துபோனால் எப்படி? தனக்குத்தானே தைரியம் கூட்டிக்கொண்டான். இனி தன் காதலுக்காக மட்டுமின்றி நிலாவின் காதலுக்காகவும் சேர்த்து அவளிடமே போராட தயாரானான்.

ஆனாலும் சிறு நம்பிக்கை. இன்னும் டிஸ்சார்ஜ் ஆக எப்படியும் இருபது நாட்கள் ஆகிவிடும். அதுவரை பொறுமையாக இருப்பது என ஒரு முடிவெடுத்தவனாக தெளிவாக சிந்திக்க ஆரம்பித்தான்.

அந்த முடிவு கொடுத்த தெளிவோ என்னவோ கொஞ்சம் இயல்பாகவே இருக்க ஆரம்பித்தான். நிலாவின் பார்வை ஆரவ்வை ஒரு டாக்டர் என்னும் அளவிலேயே வைத்திருக்க அவனோ அவளின் அருகாமையில் வெகுவாக தவித்துபோனான்.

இன்னும் சிறிது நாள் தானே? தங்களுடைய வீட்டிற்கு வந்ததும் பேசிக்கொள்ளலாம் என மனக்கோட்டை கட்டிக்கொண்டு கனவில் இருந்தான்.

அவள் உறங்கும் நேரம் அவளருகில் இருப்பதும் விழித்திருக்கும் நேரம் ஒரு மருத்துவனாக மட்டும் அவளிடம் காட்டிக்கொள்வதும் ரணவேதனையாக இருந்தது அவனுக்கு.

அவள் மேல் தான் கொண்ட காதல் தீயாக தகிக்க மனதின் வெம்மை தாளாமல் சிலநேரம் அவளிடம் சென்று உண்மையை கூறிவிட்டால் என்ன என்று ஒரு உந்துதல் சீறிக்கொண்டு கிளம்பும் நேரமெல்லாம் அவளின் மருண்ட விழிகள் அவனை கட்டுக்குள் நிறுத்திவிடும்.

என்ன ஒரு சுயநலம் எனக்கு? என்று தன்னையே பலமுறை கடுமையாக கண்டித்துக்கொண்டான். ஆனாலும் அவளை விலகமுடியாது விலகி நிற்பவனின் உள்ளம் அவ்வெம்மையில் கசிந்துருகி கரைந்துகொண்டிருந்தது.

எல்லாம் ராகவ் அவனிடம் பேசும் வரையில் தான். அவனின் வேகத்திற்கு அணைபோட்டு தடுத்து வைத்திருப்பதும் அவரே. எங்கே உணர்வுமிகுதியில் நிலாவிடம் எதையும் உளறிவிடுவானோ என்று அவனை கவனித்துக்கொண்டே தான் இருந்தார்.

ஆரவ் மேல் நம்பிக்கை இருந்தாலும் அவனின் காதல் மேல் சிறிதும் நம்பிக்கை இல்லை அவருக்கு. நிலாவின் அருகாமையில் தன் வசம் இழந்து நிற்கும் மகனை எண்ணி வேதனைகொண்டாலும் மருமகளின் உயிர் தான் கண்முன் தோன்றி அவரை அச்சுறுத்தியது.

எதுவாக இருந்தாலும் நிலாவின் நிலை சரியான பின்புதான் முடிவெடுக்க வேண்டும். அதுவரை பொறுமை காப்பதே சிறந்தது என மகனுக்கு கூறியவர் அதை தனக்கும் சேர்த்தே சொல்லிக்கொண்டார். ஆரவ்வின் தவிப்பை சிலநேரங்களில் அவரால் கண்கொண்டு பார்க்கமுடிவதில்லை.

நிலாவின் உடல்நிலையால் இவர்கள் கவலையோடு இருக்க வள்ளியம்மை அதை சாதகமாக எடுத்துக்கொண்டார். நிலாவை தனி அறைக்கு மாற்றியதும் முழுநேரமும் உடனிருப்பது வள்ளியம்மையின் வழக்கமானது.

அதனால் ஆரவ்வை சேர்ந்தவர்களை அவர் ஓரளவிற்கு மேல் அண்டவிடுவதில்லை. அவர்களும் நிலாவிற்காக கொஞ்சம் தள்ளியே நின்றனர். வள்ளியம்மையிடம் தனக்கு என்னவாகிற்று என நிலா கேட்டதும் மடமடவென ஒரு கொஞ்சம் உண்மை கலந்த பொய்யை அவிழ்த்துவிட்டார். அதுவும் நிலா நம்பும் படி.

நிலா ஒரு ஆசிரமத்தில் நினைவின்றி அடைக்கலமாக இருந்ததாகவும் அங்கே ஏற்பட்ட ஆக்ஸிடென்ட்டில் அவளுக்கு பழைய நினைவுகள் திரும்பியதாகவும் அதே நேரத்தில் தாங்களும் அவளை கண்டுபிடித்து அங்கு வந்து சேர்ந்ததாகவும், இந்த ஆப்பரேஷனுக்காக இங்கு வந்திருப்பதாகவும்  கொஞ்சம் கண்ணீரோடு கூற அப்படியே நம்பிவிட்டாள் பேதையவள்.

நிலாவிற்கு திருமணத்தின் முந்தைய நாள் வரை மட்டுமே ஞாபகத்தில் இருந்ததால் அவள் கடத்தப்பட்டதோ, ஆரவ்வை சந்தித்து உதவி கேட்டதோ  எதுவும் நினைவில் இல்லாமல் போக வள்ளியம்மைக்கு அது சாதகமாக போனது.

ஆனாலும் அவளுக்குள் உறுத்தல் ஏனோ இல்லாமல் இல்லை. அதை உணரத்தான் அவளால் முடியவில்லை. தயாளன் வந்து நிலாவிடம் இப்படி ஒரு பொய்யை கூறியதற்காக வள்ளியம்மையை சற்றே சப்தம் போட்டுவிட்டு சென்னை கிளம்பிவிட்டான்.

வள்ளியம்மையை பொறுத்தவரை ஆரவ் குடும்பத்தினர் இத்தனை வசதிபடைத்தவராக, நல்லவர்களாக இருப்பது ஒரு பொருட்டே இல்லை. தயாளன் மீதான அளப்பறியா பாசம் அவர் கண்ணை மறைத்தது.

யாருக்கு வேண்டும் இந்த பணமும் பகட்டும்? தனக்கு வேண்டியது தன்னுடைய மகன் மட்டுமே. அதை தாண்டி எதுவும் தனக்கு வேண்டாம் என்று நினைத்தார். அதற்கு அவருக்கு நிலா வேண்டும். அவள் கைவிட்டுப்போய்விடகூடாது.

இரண்டாம் முறையாக கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள முடிவாக இருந்தார். அதற்காக அவர் எதுவும் செய்ய தயாராகவும் இருந்தார். அவர் மனம் முழுவதும் இந்த எண்ணம் மட்டுமே வியாப்பித்திருந்தது.

தயாளன் கேள்வி கேட்டது போல  குணசேகரனால் அதை செய்யமுடியாமல் போனது. அவருக்கு தெரியும் எதற்கு தனது அக்கா இப்படி ஒரு கதை புனைந்தார் என்று.

அதன் பின் ராகவ்விடமும் இதைப்பற்றி தெரிவிக்க அவரோ இப்போதைக்கு நிலாவிடம் மாற்றி எதுவும் கூறவேண்டாம் இதுவும் நல்லதிற்குதான் என்று கூறிவிட்டார். வள்ளியம்மையின் வேலை சுலபமாகிவிட குணசேகரன் தான் கலங்கிபோனார். ராகவ்வின் நம்பிக்கை அவரின் மனதை அறுத்தது.

குணசேகரனுக்கே பேசாமல் தன்னுடைய அக்காவிடம் தெரியாமல் வாக்களித்துவிட்டதாக கூறி மகளின் வாழ்க்கைக்காக மன்னிப்பை யாசித்துவிட்டு ராகவ்விற்கு உண்மையாகிவிட்டால் என்ன என்றுகூட அவ்வப்போது தோன்றியது.

அங்கிருக்கும் வரை அனைவரையும் தள்ளிநிறுத்த முடிந்த வள்ளியம்மைக்கு ஊருக்கு கிளம்பும் நேரம் உடன் வருவேன் என்று கூறும் ஆரவ்வின் வருகையை தடுக்கமுடியவில்லை. அதற்கும் ஒரு திட்டத்தை தீட்டியவர் ராகவ்விடமே நேரடியாக பேசியும் விட்டார்.

அவரும் அதற்கு சம்மதித்தது தான் உட்சபட்ச அதிர்ச்சி ஆரவ்விற்கு. குணசேகரனின் சொந்த ஊருக்கு நிலாவை அழைத்து செல்வதாக கூறியதில் ஆரம்பித்தது வாக்குவாதம்.

“அவங்க சொல்றதிலும் தப்பில்லை ஆரவ். பாவம் உன் மாமனார். ஊர்ல ஒரு செல்வாக்கான மனுஷனா வாழ்ந்தவர். இங்கேயே பிறந்து வளர்ந்த உனக்கு அந்த கிராமத்து கட்டுதிட்டங்கள் தெரியாதுப்பா. புரிஞ்சுக்கோ…” என ராகவ்வும்,

“ராகவ்ப்பா சொல்றதுல எந்த தப்புமே இல்லைடா. இப்போ நிலாக்கிட்ட எந்தவிதமான அதிர்ச்சியான விஷயங்களையும் சொல்லவேண்டாம்னு மேத்தாவும் சொல்லிருக்கார். அதுவுமில்லாம இந்த பிரிவு கூட உன்னோட ஞாபகங்கள் நிச்சயம் அவளுக்கு வர வாய்ப்பிருக்குன்னும் சொல்லிருக்கார்…” என அர்ஜூனும்,

“இத்தனை மாசம் பொண்ணை காணாது தவிச்சவங்க. இப்போ திரும்ப கிடைச்சதும் அவளோட கொஞ்சநாள் இருக்கனும்னு ஆசைப்படறாங்க. இந்த நிலமையில நிலாவை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போனா யார் வீடு, ஏன் இங்க வந்தோம்னு அவ கேட்கற கேள்விக்கு பதில் சொல்லமுடியாது ஆரவ்…” என தர்ஷினியும் கூறினர்.

அவனை மாற்றி மாற்றி சமாதானம் செய்ய பேசிப் பேசியே அவனை கரைத்தனர். தன்னிலையில் இருந்து யோசிக்க ஒருவரும் இல்லையே என்று மனம் வெதும்பியவன் வேறுவழியின்றி நெஞ்சம் வலிக்க ஒப்புக்கொண்டான் ஆரவ். தன் நிலவை பிரிந்து சிறிதுகாலம் வாழ.

“சரி அவங்க நிலாவை கூட்டிட்டு போகட்டும். கொஞ்சநாள் தான்…” என்றதும் அனைவருக்கும் கொஞ்சம் ஆசுவாசமானது. அதை நீட்டிக்கவிடாமல்,

“ஆனா நானும் கூட போவேன். நானே அவங்க கிளம்ப எல்லா ஏற்பாடும் செய்யறேன். நான் கூடவே போய் நிலாவுக்கு அங்க தங்க வசதிப்படுமா, பக்கத்துல என்னமாதிரி ஹாஸ்பிட்டல் இருக்கு என்னனு எல்லாம் பார்த்துட்டு தான் வருவேன்…”

ஆரவ் பிடிவாதமாக பேச அதுவரை அவனிடம் நேரடியாக பேசாத குணசேகரன் தானே வழிய சென்று பேசினார்.

error: Content is protected !!