தேடல் – 18
பூம்பொழில் கிராமமே குணசேகரனின் வீட்டில் தான் குழுமி இருந்தது. அமுதாவால் இன்னமும் நம்பமுடியவில்லை. தன் மகள் தன்னிடம் மீண்டும் வந்து சேர்ந்துவிட்டாள் என்பதை.
இதற்குதான் தன் கணவர் தன்னிடம் எங்கு செல்கிறேன் என்று ஒரு வார்த்தை கூட சொல்லாமல் சென்றிருந்தாரா? அவர் மேல் எத்தனை கோபத்தில் இருந்தேன் நான்? என எண்ணி அதற்கும் சேர்த்து விசும்பினார்.
“என்கிட்டே ஒத்த வார்த்த சொல்லியிருந்தா நானும் என் மவளை பார்த்துக்க ஒத்தாசைக்கு அங்க வந்திருப்பேன்ல. என் பொண்ணை இந்த கோலத்துல இப்படி கூட்டியாந்திருக்கீகளே? என் நெஞ்சுக்கூடே எரியுதே…” என அமுதா அழுத அழுகையில் அங்கிருந்த அனைவருக்குமே மனம் கனத்துப்போனது.
அமுதாவிடம் உண்மையை மறைக்கிறோமே என நினைக்கும் போதே தன் மீதே வெறுப்பானது குணசேகரனுக்கு. குடுத்த வாக்கிற்காகவும், ஊர் உலகத்திற்காகவும் தன்னை உண்மையாக நம்பும், தான் மீது நம்பிக்கை வைக்கும் ஒருவருக்கும் தான் உண்மையாக இல்லாமல் பொய்யாகி போனதை எண்ணி வெதும்பினார்.
அமுதாவோ நிலாவின் அருகில் அமர்ந்துகொண்டுபொங்கும் அழுகையோடு அவளை முகம், கை, கால் என வருடிக்கொண்டே இருந்தார்.
மகள் தன்னிடம் சேர்ந்ததற்கு சந்தோசம் கொள்ளவா? இல்லை ஒரு பெரிய கண்டத்திலிருந்து உயிர் பிழைத்து இப்படி ஒரு கோலத்தில் வந்திருப்பவளை எண்ணி வருந்தம் கொள்ளவா? என இருவேறு மனநிலையில் சிக்கி தவித்தார்.
வந்திருக்கும் அனைவருமே எப்படி இங்கிருந்து போனாய் என்பதிலிருந்து இதுநாள் வரை எங்கிருந்தாய் என்பது வரை நிலாவை கேள்விகளால் துளைத்தெடுத்துவிட்டனர். அதற்கு பதிலளிக்கும் வேலையை வள்ளியம்மை பார்த்துக்கொண்டார்.
நிலாமுகி பழைய ஞாபகங்களை இழந்திருந்ததாகவும், அவளை கடத்தியது யார் என்று அவளுக்கு ஞாபகமில்லை என்றும், இத்தனை மாதம் சென்னையில் ஒரு ஆசிரமத்தில் இருந்ததாகவும் அங்கே தன் மகன் தற்செயலாக நிலாவை பார்க்க நேர்ந்ததாகவும் தாங்கள் அழைத்துக்கொண்டு வர சென்ற நேரம் விபத்து ஏற்பட்டதாகவும் அதன் பின் ஞாபகங்கள் திரும்பியதென்றும் கூறி அவர்களின் வாயை அடைத்துவிட்டார்.
எப்போதும் தயாளனிடம் அளந்தே பேசும் அமுதாவும் ஜீவாவும் அவனுக்கு மாறி மாறி நன்றி தெரிவித்துக்கொண்டிருந்தனர். வள்ளியம்மையோ ஒருவித கர்வத்தில் அமர்ந்திருந்தார். ஆனால் அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை.
ஊரில் உள்ளவர்கள் அனைவரும் நிலாவை பார்த்து நலம் விசாரித்துவிட்டு செல்ல கூட்டம் குறையவும் வண்ணமதி, முத்தழகியோடு வந்துவிட்டாள். உடன் முத்தையாவுமே.
அத்தனைபேருக்கும் பதில் கூறி கூறி களைத்துப்போயிருந்த நிலாவுக்கோ வண்ணமதியை பார்த்ததும் அத்தனை சந்தோசம்.
“மதியக்கா நீங்க எப்படி இங்க?…” என அவளின் கைபிடித்து கேட்க,
“உன்ன பார்க்கத்தான் வந்தேன் புள்ள. வீடு முழுக்க ஆளுக இருந்தாகளா? அதான் எல்லாரும் போவட்டுமேன்னு பொறுத்து வந்தோம். நீ எப்படி இருக்க? என்ன இது தலையில முக்காடு போட்டுருக்க?…” என நிலாமுகியின் தலையை சுற்றி இருந்த துப்பட்டாவை காண்பித்து கேட்க அதை நிலா உருவியதும் அதிர்ந்து போனார்கள் அவர்கள்.
வண்ணமதி அதை கண்டு அழ அமுதாவும் சேர்ந்துகொண்டார். குணசேகரன் அருகில் அமர்ந்திருந்த முத்தையாவுக்கும் கண்கள் கலங்கிவிட்டன. தன்னால் தானே இந்த நிலை என்ற எண்ணமே அவரை கொன்றது.
“பார்த்தீகளா மதினி என் பொண்ணை? எத்தனை அருமை பெருமையா வளர்த்தேன். இப்படி வந்து நிக்கிறா பாருங்க…” என பெருங்குரலெடுத்து அமுதா கூற முத்தழகி அரட்டினார்.
“போதும் அமுதா. என்ன நடந்ததுன்னு சொல்லு. நீ போடற கூச்சல் வெளில வேற அர்த்தத்தை கொடுக்கப்போகுது ஊர்ல. அமைதியா இரு. அவளே தைரியமா இருக்கா நீ அவளை கோழையாக்கிடாதே. நம்ம நிலாவுக்கு எதனால இப்படி ஆச்சு?…” என கேட்டவருமே உள்ளுக்குள் கலங்கிப்போனார் தான்.
அவர்களிடமும் அதே கதையை வள்ளியம்மை கூறவும் வண்ணமதிக்கும், முத்தழகிக்கும் நெருடியது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள உடனே சுதாரித்த வள்ளியம்மை பேச்சின் போக்கை மாற்றினார்.
“ஆமா, நான் கேட்டதுக்கு பதிலே சொல்லலையே?…” என்ற நிலா அப்போதுதான் வண்ணமதியின் கழுத்தில் கிடந்த தாலிச்சரடை பார்த்து,
“மதியக்கா உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா?…” என விழிகள் விரித்து மகிழ்ச்சியாக கேட்க,
“ஆமா நிலா. உன் மாமாவைத்தான் கட்டியிருக்கேன்…” என வெட்கத்தோடு வண்ணமதி கூற நிலாவிற்கு உடனடியாக எதுவும் விளங்காமல் முழிக்க,
“அக்கா நம்ம தினகரன் மாமாவை சொல்றாங்க…” என ஜீவா விளக்கவும்,
“ஓ அதான் அத்தை மாமாகூட சேர்ந்து வந்தீங்களா?…” என்று நிலா வாழ்த்து தெரிவித்தாள்.
“வாழ்த்துக்கள் மதியக்கா, இனிமே எங்க ஊர்லதான் இருப்பீங்களா? அப்போ அடிக்கடி வீட்டுக்கு வருவீங்க தானே? ஏனா என்னாலதான் இப்போதைக்கு வெளில எங்கயும் வரமுடியாதே…” என தன் தலையை காண்பித்து கூறவும் அமுதா அடுத்தக்கட்ட அழுகைக்கு தயாராக முத்தழகி அவரை பார்வையிலேயே அடக்கிவைத்தார்.
அதன் பின் சிலநிமிடங்கள் இருந்துவிட்டு அமுதாவிடம் நிலாவை கவனிக்க சொல்லிவிட்டு நாளை வருவதாக கூறி சென்றனர். அவர்கள் சென்றதும் மீண்டும் ஆரம்பித்தார் அமுதா.
“நம்ம நிலா இருந்தது எந்த ஆசரமம்? நாம ஒருவாட்டி போய் அங்க இருக்கிறவங்களுக்கு ஏதாவது உதவிட்டு வரலாம்ங்க. அந்த பொண்ணு கூட வந்து கொஞ்ச நேரம் கூட இருக்கலை. சீக்கிரமே கிளம்பிடுச்சு. நீங்க சரியாவே பேசவிடலை. அந்த பொண்ணை ரெண்டு நாள் இங்க இருக்க சொல்லி நல்ல மரியாதை பண்ணி அனுப்பிருக்கனும் நாம. அதுகிட்ட போன் நம்பராச்சும் வாங்கிருக்கீங்களா?…”
“ஆமா ஆப்பரேஷன் நடந்தது எங்க வச்சு? நிலா ஏதோ ஒரு ஊரை சொன்னா. கூட்டமா இருந்ததுல நானும் சரியா காதுல வாங்கிக்கலை. அதுக்கு செலவெல்லாம் எவ்வளவு ஆச்சு? செலவென்ன செலவு? என் பொண்ணு வந்துட்டா அதுவே போதும். ஆமா வந்த பொண்ணு ஆசரமத்துல வேலை பார்க்கற பொண்ணா? நீங்க பேசவே விடலை. அதோட போன் நம்பரு இருக்கா?…”
வரிசைகட்டி வந்த கேள்விக்கணைகளில் குணசேகரன் விழிபிதுங்கி நின்றார். ஸ்டெபியை பற்றி கேட்டுக்கொண்டும் அவளிடம் பேசவேண்டும் என நைத்துக்கொண்டும் இருக்கும் அமுதாவை என்ன சொல்லி சமாளிப்பது என புரியாமல் நின்றார்.
“அட என்னம்மா நீங்க? இப்போதானே வந்திருக்காங்க. அப்பா நாளைக்கு சொல்லுவாங்க. பாருங்க எல்லாரும் எப்படி அசதியா இருக்காங்கன்னு. போங்க போய் நிலாவுக்கு புடிச்சதா சமையல் பண்ணுங்க…” என ஜீவா அமுதாவிடம் கூறிக்கொண்டிருக்கும் போதே வெளியில் யாரோ குரல்.
தினகரன் தோட்டத்து வேலையாள் நின்றிருந்தான் கையில் இரண்டு வெடக்கோழிகளுடன்.
“பெரியவீட்டு அம்மா இதை உங்ககிட்ட குடுக்க சொன்னாங்க. நிலாம்மா வந்துட்டாங்கன்னு சொல்லி குடுத்துவிட்டாங்க…” என்றவன் அதை அமுதா வாங்கியதுமே சென்றுவிட்டான்.
முத்தழகியின் அன்பில் என்றும் போல் இன்றும் பெருமிதம் கொண்ட அமுதா அதை சமைக்க உள்ளே சென்றார்.
————————————————
பிற்பகல்வேளையில் ஹாஸ்பிட்டல் வழக்கமான பரபரப்போடு இயங்கிக்கொண்டிருந்தது.
லேபர் வார்டில் ரவுண்ட்ஸ் முடித்துவிட்டு வந்துகொண்டிருந்த தர்ஷினி தனக்கெதிரே வந்துகொண்டிருந்த ஸ்டெபியை பார்த்ததும் புன்னகையோடு எதிர்கொண்டார்.
“என்னடா ரொம்ப பிஸியோ? இந்த வாரம் முழுக்க உன்னை சரியாவே பார்க்க முடியலையே?…” என வாஞ்சையோடு கேட்க,
“எஸ் தர்ஷிமா. ரொம்ப வேலைதான். நீங்க உங்க ரவுண்ட்ஸ் முடிச்சாச்சா? வீட்டுக்கா கிளம்பிட்டீங்க?…” என மென்னகையோடு கூற,
“ஆரவ்க்காக வெய்ட்டிங் ஸ்டெபி. அவன் வரவும் சேர்ந்தே ரெண்டுபேரும் கிளம்பனும். அர்ஜூன் ஆரவ்வை கூட்டிட்டு வெளில போகனும்னு சொன்னான்…” எனவும்,
“தர்ஷிமா, அவன் இப்போ சர்ஜரில இருக்கான். எப்டியும் இன்னும் ஒன் ஃஹவர் ஆகுமே?…”என்றபடி ஸ்டெபி தன் கைகடிகாரத்தை பார்க்க,
“ஹ்ம் தெரியும் ஸ்டெபி. அவன் வரட்டும். சேர்ந்தே கிளம்பனும். ஓகே நான் ரூம்க்கு போறேன்…” ஸ்டெபியிடம் விடைபெற்று சென்ற தர்ஷினியிடம் அதுவரை இருந்த முகமலர்ச்சி போய் கொஞ்சம் கவலை வந்தமர்ந்தது.
செல்லும் அவரையே பார்த்துக்கொண்டு நின்ற ஸ்டெபி பின் தன் வேலையை பார்க்க விரைந்தாள். ஆப்பரேஷன் தியேட்டரிலிருந்து வெளியில் வந்த ஆரவ்,
“ஆப்பரேஷன் சக்ஸஸ்ஃபுல்லா முடிஞ்சது. உங்க அப்பா நல்லபடியா இருக்கார். இனி கவலைப்பட எதுவும் இல்லை…” என வெளியில் நின்றுகொண்டிருந்த பேஷண்டின் மகனிடம் கூறியவன் அவனின் தோளில் தட்டிக்கொடுத்துவிட்டு அவர்களின் நன்றியை ஏற்று ஒரு சிறு புன்னகையோடு அங்கிருந்து நகர்ந்தான்.
கையில் மாட்டியிருந்த உறைகளை உருவியபடி அங்கிருந்து தனதறைக்கு விரைந்தான். தர்ஷினி காத்திருப்பார் என்பதை ஆரவ்வும் அறிவான். அதனாலே வேகமாக சென்று ப்ரெஷ் ஆனவன் தனது பேக்கையும் மொபைலையும் எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
“மாம் போலாமா?…” முக்கியமான பைலில் ஆழ்ந்திருந்த தர்ஷினி அவனின் அழைப்பில் நிமிர்ந்தவர்,
“ஆரவ் ஒரு டென் மினிட்ஸ். நீ உட்கார்…”என்றுவிட்டு மீண்டும் அந்த கோப்பில் மூழ்கினார். அடுத்த பத்து நிமிடத்தில் காபியும், லைட் டிபனும் வந்து சேர அது தனக்காக வரவழைக்கப்பட்டது என்பதை உணர்ந்தான் ஆரவ்.