நெஞ்சில் உறைந்த தேடல் – 17 (3)

இரண்டு கதவுகளை தாண்டி அந்த கண்ணாடி அறைக்குள் நுழைந்தவன் படுக்கையில் வாடிய மலராக கிடந்த மனைவியை பார்த்ததுமே உடைந்துபோனான்.  ஏனோ மனதைரியத்தையும் மீறி அவனின் கண்களில் கண்ணீர் வடிய ஆரம்பித்தது அவனை அறியாமலேயே.

மெல்ல அவளின் அருகில் நெருங்கியவன் ஆழ்ந்த மயக்கத்தில் இருந்தவளை அள்ளி அணைத்துக்கொள்ளவேண்டும் என உள்ளுக்குள் எழுந்த ஆவேசத்தை அடக்கிக்கொண்டு அமைதியாக அவளையே பார்த்திருந்தான்.

ஆப்பரேஷனில் தலை மொட்டையடிக்கபட்டிருக்க முகமெல்லாம் வெளுத்து உதடுகள் காய்ந்து முகத்தில் எப்போதும் இருக்கும் ஒருவித ஒளிர்வை இழந்தது போல சோபையின்றி காட்சியளித்தாள் நிலா.

அந்தநிலையிலும் ஆரவ்விற்கு அவள் சோக சித்திரமாக தான் தெரிந்தாள். தூசுபடிந்த ஓவியம் போலே. அதுவும் அவளிற்கு ஒருவித முகலட்சணத்தை கொடுத்தது. அவளின் கைகளில் தன்னுடைய முகத்தை புதைத்தவன் அழுத்தமான முத்தங்களை எண்ணிக்கையின்றி தந்துகொண்டிருந்தான்.

அவள் எப்போது எழுந்து வருவாள்? தன்னை பார்த்து பேசுவாள்? என நிலாவின் முகத்தில் எப்போதும் இருக்கும் புன்னகைக்காக ஏங்க ஆரம்பித்திருந்தான். இந்த சிலமணி நேரங்களே அவளில் பிரிவை தன்னால் தாங்க இயலவில்லையே என்பதை அவனின் மனம் வலியோடு  உணர்ந்தான்.

இன்னும் தனக்கு என்னவெல்லாம் வலிகள் தாங்கிய வழிகள் காத்துநிற்கிறதோ? என எண்ணி வெதும்பியவன் அதன் மேலும் அங்கிருக்கமுடியாமல் எழுந்து வெளியில் நகர நர்ஸ் அழைத்தாள்.

“டாக்டர் அவங்க எதோ சொல்றாங்க…” எனவும் திகைத்தான்.

எப்படியும் இன்னும் சிலமணி நேரங்கலேனும் நிலா ஆழ்ந்த மயக்கத்தில் தான் இருப்பாள். அப்படி இருக்கையில் அதற்குள் மயக்கம் தெளிய வாய்ப்பில்லையே என எண்ணியபடி அவளருகில் மீண்டும் அமர்ந்து காதுகளை கூர்மையாக்கினான்.

அவளில் இதழ்களில் இருந்து உதிர்ந்த முத்துக்கள் இவைதாம்.

ஆரவ்…….. ஆரவ்……. ஆரவ் ………..

தன் காதுகளையே நம்பமுடியாமல் மீண்டும் எதிர்பார்ப்போடு அவளின் உதடுகளில் தன் காதுமடல்கள் உரசும் படி வைத்து கேட்க அவனின்  எதிர்பார்ப்பை கொஞ்சமும் பொய்யாக்காமல் மீண்டும் மீண்டும் கணவனது பெயரையே மந்திரம் போல உச்சரித்துக்கொண்டிருந்தாள்.

அதுவே ஆரவ்வை அந்தரத்தில் மிதக்கச்செய்தது. ஆக அவள் தன்னை மறக்கவில்லை. தன்னவளுக்கு தன்னுடைய ஞாபகம் அவளின் மனதை விட்டு அகலவில்லை என்பதே அவனுக்கு பெரும் பலத்தை கொடுத்தது.

அதில் சிலிர்த்துப்போனவன் மீண்டும் மீண்டும் கேட்க ஆரம்பித்தான். அவள் கூற கூற அவளின் கைகளில் தன் அதரங்களை அழுந்த பதித்துக்கொண்டே இருந்தான்.

அவளை இன்னுமே அதிகமாக நேசித்தான். இந்த சந்தோஷத்தில் அவனின் மன உணர்வுகள்  சொல்லொண்ணா பரவசத்தில் நிலைகொள்ளாமல் உள்ளுக்குள் ஆர்ப்பரித்து பேயாட்டம் போட்டது.

அதை அடக்கும் வகை புரியாது மூச்சு முட்டியது ஆரவ்விற்கு. தன்னை இப்படி ஆகர்ஷித்து அலைகழிக்கும் இந்த காதலின் வேகத்தை தாங்கமுடியாமல் ஏனோ அழுகை வெடிக்கும் போல தோன்றியது அந்த ஆண்மகனிற்கு. இதை வீட்டினரிடமும் பகிர்ந்துகொள்ள வேகமாக வெளியேறினான்.

இவனின் வரவை எதிர்பார்த்து ராகவ்வும் சேகரனும் விழிகளை கதவுகளை நோக்கியே நிலைபெற விட்டிருந்தனர். புயல்போல கதவை திறந்த ஆரவ் ராகவ்வை கட்டிக்கொண்டு,

“நிலா என்னை மறக்கலைப்பா. அவ என்னோட பேரை தான் இப்போ சொல்லிட்டு இருக்கா. இப்போ எனக்கு எப்படி இருக்கு தெரியுமா?…” என கேட்டுக்கொண்டே அவரை தூக்கி ஒரு சுற்று சுற்றி இறக்கியவன் அப்போதுதான் சேகரனை பார்த்தான்.

தன்னையே பார்ப்பவரை கண்டு கொஞ்சம் வெட்கமும் தலைதூக்க பின்னந்தலையை அழுந்த கோதிவிட்டு தன்னை ஆசுவாசப்படுத்தியவன்,

“டாடி நான் போய் மாம்கிட்ட விஷயத்தை சொல்லிட்டு வரேன். நீங்க இவங்களை கூட்டிட்டு போய் நிலாவை பாருங்க…” குணசேகரனை கைகாட்டிவிட்டு வேக எட்டுக்கள் வைத்து தர்ஷினி காண சென்றான் ஆரவ்.

ஆரவ்வை நிலாவை காண அனுப்பும் போதே சேகரனுக்கு பரபரப்புதான். மயக்கம் தெளிந்த பின் தான் பெண்ணை பார்க்கமுடியும் என்ற நினைத்து இவர் அமர்ந்திருக்க ராகவ் ஆரவ்வை அனுப்பியதும் தானும் உடன் சென்றால் என்ன என்று மனம் முரண்டியது.

ஏனோ ஒரு தயக்கம். அவனாவது தன்னை பார்த்து அழைப்பானா? என நினைத்தால் அதுவும் இல்லை. இப்போது நிலா ஆரவ்வை மறக்கவில்லை என்று மிகுந்த மகிழ்வுடன் தன் தந்தையிடம் பகிர்ந்துகொண்டதை பார்க்கையில் அவருக்கு திடுக்கென்று தான் இருந்தது.

பின்னே வள்ளியம்மை தன்னிடம் கூறியதென்ன? இங்கே நடப்பதென்ன? அவருக்கு கொடுத்த வாக்கை தன்னால் காப்பாற்றாமல் போய்விடுமோ என்று இருதலைக்கொள்ளி எறும்பாக தவித்துப்போனார்.

ஆனால் அவரை போல வள்ளியம்மை எண்ணவில்லை. அதனால் அவரின் மனம் அதிராமல் அமைதியாக இருந்தது. அவர்தான் என்ன நடந்தால் எப்படியெல்லாம் காய் நகர்த்துவது என்று கச்சிதமாக திட்டம் தீட்டி வைத்திருக்கிறாரே.

ராகவ் சேகரனை அழைத்துக்கொண்டு உள்ளே செல்லவும் நிலாவை பார்த்து அவர் அதிர்ந்துபோனார். இப்படி ஒரு கோலத்தில் தான் தன் மகள் கிடைப்பாள் என்று கற்பனையும் செய்துபார்த்ததில்லையே என உள்ளம் ஊமையாக அழுதது.

வள்ளியம்மை முதலில் லேசாக திகைத்தார் தான். அவருக்கு நிலாவின் மீது கொஞ்சமே பாசமும் இருந்தது தான். முடிதானே இன்னும் ஓரிரு மாதங்களில் வளர்ந்துவிட போகிறது. தனக்கு அதுவா முக்கியம் என்று நிலாவை பார்த்தபடியே நின்றாள் முகத்தில் பாசத்தையும் பரிதாபத்தையும் கொஞ்சம் அதிகமாக செயற்கையாக படரவிட்டபடி.

அங்கே சேகரன் உணர்ச்சியின் பிடியில் இருக்க ராகவ்வோ அங்கிருந்த நிலாவின் கேஸ் பைல்களை பார்வையிட்டார். பின் அங்கிருந்த நர்ஸிடம் மெதுவாக பேசியவர் பின் நிலாவை மீண்டும் பார்த்துவிட்டு மற்றவர்களை அழைத்துக்கொண்டு வெளியே வந்தார்.

ராகவ்விற்கு இது சகஜம். அதனால் அவர் இதை எதிர்பார்த்துதான் சென்றார். ஆனாலும் நிலாவை பார்த்த நொடி கொஞ்சம் கலங்கித்தான் போனார். பின் தான் யார் என்பதை ஞாபகம் கொண்டு நிதானித்துக்கொண்டு அடுத்ததை கவனிக்க ஆரம்பித்தார்.

அடுத்த சிலமணி நேரத்தில் நிலாவிற்கு சுயநினைவு திரும்ப அனைவரிடமும் நர்ஸ் வந்து சொல்லிவிட்டு செல்லவும் முதலில் ஆரவ் தான்  செல்லத்துடித்தான். பின் ஏதோ ஒரு யோசனையில் சேகரனை திரும்பி பார்த்து,

“முதல்ல நீங்க போய் பாருங்க…” என அவருக்கு வழிவிட்டு நிற்க ராகவ்வும் தர்ஷினியும் திகைத்து பார்த்தனர். பின் ராகவ்,

“வாங்க, அவனே சொல்றானே. உங்க பெண்ணை பார்க்கலாம்…” என அழைத்துக்கொண்டு உள்ளே செல்ல அவரோடு வள்ளியம்மையும் தர்ஷினியும் சேர்ந்தே சென்றனர்.

கொஞ்சம் பின் தங்கி நின்ற ஆரவ்விற்கு ஏனோ அடிவயிற்றில் பயப்பந்துகள் காரணமின்றி சுழன்றுகொண்டிருந்தது.  ஓரிரு நிமிடம் விழிகளை மூடி  தன்னை ஆசுவாசப்படுத்தினான்.

“நிலா தான் தன்னை மறக்கவில்லையே. பின் எதற்கு இந்த பயமும், பரிதவிப்பும்?” என தன்னையே  கேட்டுக்கொண்டவன் நிலாவை பார்க்க சென்றான்.

அங்கே சேகரனும் வள்ளியம்மையும் நிலாவின் அருகில் நிற்க தர்ஷினியும் ராகவ்வும் பின்தங்கி நின்றனர்.

தன் தந்தையை பார்த்து கண்ணீர் சொரிந்தவள் முகத்தில் அத்தனை சந்தோசம் நிரம்பிவழிந்தது. ஏனோ அலைந்து திரிந்து வீடு சென்ற உணர்வை நிலாவின் முகம் பிரதிபலித்தது. அப்படி ஒரு பிரகாசம்.

அதிகமாக பேசமுடியாமல் இருந்தாலும் அத்தனை பாசம் முகத்தில் ஒளிர்ந்தது நிலாவிடம். அவளை விழி எடுக்காமல் பார்த்துக்கொண்டே முன்னே சென்ற ஆரவ் தனது தாயையும் தந்தையையும் திரும்பி பார்க்க அவர்களின் முகத்தில் கவலையையும் தாண்டிய ஒரு உணர்வு.

ஆரவ்வின் வரவை அறிந்து அவர்கள் இவனை திரும்பி பார்க்க தர்ஷினியோ சத்தமில்லாமல் அழுகையை அடக்க போராடிக்கொண்டிருந்தார். ராகவ்விடம் இருந்து எதையும் கண்டுகொள்ளமுடியவில்லை.

கட்டிலை நெருங்கியவன் நிலாவை பார்த்தான். அவளும் தான் இவனை பார்த்தாள். அந்த பார்வையில் கண்ணாடி துகள்களாக சிதறிப்போனான்.

எது நடக்ககூடாது, எதை தன்னால் எதிர்க்கொள்ள முடியாது  என்று பயந்தானோ இப்போது அந்த நொடியை கடக்கமுடியாமல் சிலையாக நின்றான்.

நிலா அவனை ஒரு அந்நியனை போல முன் பின் அறியாதவனை போல பார்த்துக்கொண்டிருந்தாள். அதன் பின்னும் அங்கே நிற்கமுடியாமல் திரும்பியவனிடத்தில் ஒருவித தள்ளாட்டம் குடிகொண்டது.

மகனின் மனதை படித்த ராகவ், “ஆரவ்…” என மெல்ல அழைத்ததும் மீண்டும் திரும்பியவன் அவரை பார்க்காமல் தன் மனைவியை ஆராயும் பார்வை பார்த்தான்.

ஒருவேளை காலையில் போல தன்னிடம் விளையாடுகிறாளோ என்னும் ஒருவித பேராசையில் காலை நிகழ்வுகளை கண்முன் நிறுத்தி பார்த்தான்.

காலையில் நிலாவின் விழிகளில் வரவழைக்கப்பட்ட அந்நியத்தனத்தோடு கொஞ்சம் குறும்பும் மிச்சமிருந்ததை அப்போது அவன் இருந்த நிலையில் உணராமல் விட்டுவிட்டான். ஆனால் இப்போது அவனால் உணர்ந்துகொள்ள முடிந்தது.

ஆனால் இந்த நிலாவின் விழிகளில் இருந்த அந்நியத்தனம் நூறு சதவீதம் உண்மை மட்டுமே. அவள் தன்னிடம் விளையாடவில்லை என்று புரிந்துகொண்டாலும் சிலமணி நேரம் முன்னால் தன்னை பெயர் சொல்லி அழைத்தது பொய்யில்லையே? குழம்பி தவித்தான் ஆரவ்.

மீண்டும் நிலாவின் விழிகள் சொருகுவது போல தோன்ற வேகமாக அவளருகே சென்று அவளின் கைகளை பிடித்து நாடித்துடிப்பை பரிசோதித்து பார்க்க அவனின் தொடுகை நிலாவிடம் பலவித மாற்றங்களை ஏற்படுத்தியதோ?

அவனுக்கே உரிய பிரத்யோக மணம் அவளின் நாசிக்குள் நுழைந்து சுகந்தத்தோடு மணம் பரப்பினாலும் அதையும் தாண்டி வார்த்தைகளால் விவரிக்கமுடியா தாக்கத்தில், இனம்புரியா தேடலில் பெண்ணவள் மனம் நிலைகுலைந்து தான் போனது.

தன்னவனின் தொடுகை. சட்டென அவளிடம் மாற்றங்கள். விழிகள் அலைப்புற, இருதயம் தாறுமாறாக துடிக்க அவனை கண்டுகொண்ட பாவனையையும் அவனின் பார்வை வீச்சை முழுவதும் கண்டுகொள்ள தவிக்கும் ஆவலையும் மனதில் ஒருங்கே சுமந்தபடி அவனையே பார்த்தவள் மூச்சுவிடவே திணறினாள். அதில் பதட்டமான ஆரவ்,

“ நிலா…….. நிலா…” என கன்னம் தட்டி அழைக்க அவனின் குரல் அவள் செவிகளில் மிக தீனமாக சென்று சேர்ந்தது. அதற்குள் அவள் நினைவலைகள் அறுந்து அவளை மீளா மயக்கத்திற்குள் அடைத்தது.

நொடியில் பரபரப்படைந்தது ஐ ஸி யு.

மேத்தாவோடு அர்ஜூனும் இன்னொரு மருத்துவரும் அங்கே வந்துசேர உடனடியாக வெளியேறினர் மற்ற அனைவரும்.

அதிர்ச்சியை தாண்டிய வெறுமையோடு உயிரற்ற உடலாக ஆரவ்.

error: Content is protected !!