சிறிது நேரம் கழித்து மெல்ல எழுந்தவன் தர்ஷினியை நெருங்கி,
“மாம் போய் சாப்பிடுங்க. டைம் ஆச்சு பாருங்க. பிபி டேப்லெட் எடுத்துக்கனுமே நீங்க. டாடியையும் கூட்டிட்டு போங்க…” என,
“ஆரவ் சாரிடா…” என விட்ட அழுகையை தொடர முயல,
“ச்சோ மாம், நீங்க உங்களையே ப்ளேம் பண்ணிக்காதீங்க, ப்ளீஸ். நடந்ததை விடுங்க…” என்றவன் குணசேகரனையும் பார்த்துவிட்டு,
“அவங்களையும் கூட்டிட்டு போங்க…” என அவர்களை கை காண்பித்து கூறவும் தான் ராகவ் அவர்களை பார்த்தார். இதை தான் யோசிக்காமல் விட்டுவிட்டோமே என நினைத்தவர் குணசேகரனை நெருங்கினார்,
“வாங்க எதாச்சும் சாப்பிடலாம்…” என அழைக்க,
“இல்லைங்க, பரவாயில்லை. நாங்க பார்த்துக்கறோம்…” தயாளன் ராகவ்வை மறுத்து கூற வேகமாக அவர்களை நெருங்கிய அர்ஜூன்,
“இதுல நீங்க மறுத்து பேச என்ன இருக்கு? இப்போ நாம எல்லாருமே சொந்தமாகிட்டோம். இப்ப ஏன் இப்படி சொல்றீங்க? நம்ம நிலாவை பார்க்கும் போது நீங்க தைரியமா தெம்பா இருக்கவேண்டாமா? அதான் நிலாவுக்கு இருந்த ப்ராப்ளம் சரியாகிட்டதே…” என்றவன்,
“அதுவும் இல்லாமல் உங்களை நாங்க கவனிச்சுக்கலைனா உங்க வீட்டு மாப்பிள்ளை எங்களை உண்டில்லைன்னு பண்ணிடுவான். என்ன ஆஷா? சொல்லேன் அவங்கக்கிட்ட…”
இயல்புபோலே அர்ஜூன் பேசினாலும் உங்க வீட்டு மாப்பிள்ளை என்ற வார்த்தைக்கு அதிகளவில் அழுத்தம் இருந்ததை போல உணர்ந்தார் குணசேகரன். இப்போதைக்கு எதையும் மறுக்கவோ எதிர்த்தோ பேச அவருக்கு திறனும் இல்லை. மனமும் இல்லை.
அர்ஜூனின் பேச்சை கேட்ட தயாளன் அதை ஆமோதித்தவாறே குணசேகரனை எழுப்பி அழைத்துசென்றான். உடன் வள்ளியம்மையும். செல்லும் போது ஆரவ்வை ஒருமுறை திரும்பி பார்க்க அதை உணர்ந்த ஸ்டெபி,
“அவன் கூப்பிட்டாலும் வரமாட்டான். அவனுக்கு எப்போ தோணுதோ அப்போதான் சாப்பிடுவான். அவன் பிடிவாதம் அப்படி. மாத்தமுடியாது. அதனால நீங்க வாங்க அங்கிள்…”
இயல்பு போலே தான் இதை ஸ்டெபி கூறியது அதை மற்றவர்கள் எதார்த்தமாக எடுத்துக்கொண்டாலும் வள்ளியம்மையால் அப்படி விடமுடியவில்லை.
“பார்க்க அப்பாவியா தெரியிற இவனுக்கு இந்த பிடிவாதம் நிலாவின் விஷயத்திலும் இருக்குமோ? ஆபத்தாச்சே? தான் நினைப்பதை எப்படி சாதிக்க?” என யோசனை இருந்தாலும் தன்னை மிஞ்ச யாருமில்லை. எதுவாகினும் தான் நினைத்ததை நடத்தியே தீருவேன் என்று சூளுரைத்துகொண்டார் வள்ளியம்மை.
அவரின் எண்ணங்களுக்கும் வரையறைகளுக்கும் அப்பார்ப்பட்டவன் ஆரவ் என்பதை அவர் அப்போது உணரவில்லை. நிலாவின் விஷயத்தில் அவனின் பிடிவாதத்தையும் தாண்டி அவள் மீதான அதீதமான காதல் அவனை எந்த எல்லைக்குள்ளும் அடக்காது என்பதை உணராது போனார்.
உணவை தர்ஷினியின் பர்ஸ்னல் அறைக்கே தருவித்த அர்ஜூன் அனைவரும் அங்கேயே அமர்ந்து உண்ணும்படி ஏற்பாடு செய்துவிட்டான்.
ஏதோ பெயருக்கு உண்டுகொண்டிருந்த குணசேகரனை பார்த்த ராகவ் அவரிடம் எப்படி பேச என்று யோசித்துக்கொண்டே உணவை முடித்துக்கொண்டார். அங்கே ஒரு தர்மசங்கடமான நிலை சூழ்ந்துகொண்டு அனைவரையும் மௌனமாக்கியது.
மீண்டும் தான் அமர்ந்திருந்த இடத்திற்கே வந்தமர்ந்தார் ஆரவ்வின் மாமனார். அப்போது ஆரவ் அவரை பார்த்தான். பார்த்துக்கொண்டே தான் இருந்தான். ஆனால் பேசமுயலவில்லை.
அவனின் பார்வையில் என்ன இருந்தது என உணரமுடியாமல் அவனை பார்ப்பதும் பின் வேறு புறம் திரும்புவதுமாக இருந்தார் குணசேகரன். இதை கண்ட ராகவ்விற்கு மகன் தான் சென்று பேசினால் என்ன என்று தான் தோன்றியது.
அவனும் பேசாமல் தானும் பேசாமல் இருந்தால் நன்றாக இருக்காது என்று உணர்ந்தவர் மெல்ல குணசேகரனிடம் பேச்சை ஆரம்பித்தார்.
முதலில் தயங்கி தயங்கி பேசிய சேகரனிடம் அவர் யார்? எந்த ஊர் என்பது முதல் அனைத்து தகவல்களையும் ஒருவாறு அறிந்துகொண்டவர் அவரின் களைப்பை உணர்ந்து தங்கள் வீட்டிற்கு தங்க அழைக்க சேகரனோ அங்கிருந்த நகரமறுத்துவிட்டார்.
தன் மகளை விட்டு விலகமாட்டேன் என்பதுபோல இருந்தது அவரின் மறுப்பு. ஒருவித பிடிவாதமும் கூட அதில்.
இதை பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்த ஆரவ் எழுந்து வந்து, “டாடி அவங்களுக்கு நம்ம வீட்டுக்கு வர இஷ்டம் இல்லைனா இங்க ரூம் அரேஞ்ச் பண்ணிடுங்க. அவங்களை கம்பல் செய்யவேண்டாம்…” என்றவன் பின் கரகரத்த குரலில்,
“இத்தனை மாசம் பிரிந்து எப்படியெல்லாம் தேடினாங்களோ? அவங்க இஷ்டப்படியே விடுங்க. அவங்களுக்கு இங்க எந்த குறையும் இல்லாமல் பார்த்துக்கோங்க…” என்றவன் மீண்டும் தான் அமர்ந்திருந்த சேரில் சென்று மீண்டும் அதே நிலையில் அமர்ந்தான்.
அதன்பின் குணசேகரன் அமைதியை கைவிட்டவராக,
“தவறா நினைக்கவேண்டாம். எங்களுக்கு இவ்வளோ நாள் கழிச்சு பொண்ணு கிடைச்சிருக்கா. அவளை விட்டு எங்களால இனியும் தள்ளி இருக்கமுடியலை. அதான் கொஞ்சம் தயக்கமா இருந்துச்சு…” என்று மெல்ல கூற,
“பரவாயில்லைங்க. உங்க சூழ்நிலை எங்களுக்கு புரியுது. இது நம்ம ஹாஸ்பிட்டல் தான். உங்களுக்கு ரூம் இங்கயே ஏற்பாடு செஞ்சிடறோம். அதையும் மறுத்துட வேண்டாம்…”
ராகவ்வின் பெருந்தன்மையும் கொஞ்சமும் யோசிக்காமல் இருக்குமிடத்தை உரிமையுடன் உணரசெய்துவிட்ட அவரின் நல்ல மனதும் சேகரனை வியப்படைய செய்தது. அதன் பின்னும் மறுக்கவில்லை அவர்.
தயாளனும் அவரின் கூற்றுக்கு ஒப்புக்கொடுத்து ஹோட்டலில் இருந்து தங்களுடைய உடைமைகளை எடுத்துவர சென்றான்.
அதன் பின் சிறிதுநேரம் அவ்விடத்தில் அமைதி ஆக்ரமித்திருக்க தர்ஷினியை தேடி நர்ஸ் வரவும் ஒரு அவசர கேஸ் விஷயமாக அவர் அகன்றுவிட்டார். ஸ்டெபியும் அர்ஜூனும் கூட ரவுண்ட்ஸ் போய்விட்டு வருவதாக கூறி செல்ல அங்கே நிலாவின் குடும்பத்தினரும் ஆரவ் ராகவ் மட்டுமே இருந்தனர்.
மெல்ல குணசேகரன் தன் மகள் எவ்வாறு இங்கு வந்து சேர்ந்தால் என மிக தயக்கத்தோடே கேட்க அவரின் நிலை ராகவ்விற்கு பரிதாபத்தை வரவழைத்தது. கேள்வியை கேட்ட சேகரனோ ராகவ் பதில் கூறும் முன் தங்களை பற்றி ஒவ்வொன்றாக கூற ஆரம்பித்தார்.
தாங்கள் யார் என்பதிலிருந்து நிலாவின் திருமண ஏற்பாடு, அவள் காணாமல் போனது வரை அனைத்தையும் கூறிமுடித்தவர்,
“எப்படியெல்லாம் வளர்த்தேன் என் பொண்ணை. அவளை இப்படி ஒரு நிலையில நான் பார்ப்பேன்னு நினைக்கவே இல்லைங்க. அவளுக்கு அதிர்ந்து கூட பேசத்தெரியாது. அவளுக்கு ஏன்தான் இப்படில்லாம் நடந்ததோ?…” என முகத்தை மூடிக்கொண்டு அழுதவரை ஆறுதலாக அணைத்துக்கொண்டார் ராகவ்.
குணசேகரனின் பேச்சை ஆரம்பத்திலிருந்து கேட்டு தனக்குள் கிரகித்துக்கொண்டிருந்தவன் அவளுக்கு ஏற்பாடு செய்திருந்த திருமணத்தை பற்றி கூறும் போது கொஞ்சம் துணுக்குறத்தான் செய்தான். இதை நிலாவின் வாய் மொழியிலும் கேட்டிருக்கிறான் தான்.
ஒருவேளை நிலாவிற்கு அவன் மீது ஏதாவது அபிப்ராயம் இருந்திருந்தால் என்ற யோசனையை மேலும் தொடரவிடாமல் அவசரமாக அதற்கு ஒரு முற்றுப்புள்ளியையும் வைத்தான்.
தன்னை தவிர அவளுக்கு யாரையும் பிடிக்காது, பிடிக்கவும் கூடாது. என்ற அவனின் எண்ணம் விழிகளில் பிரதிபலித்ததோ? அப்படி ஒரு தீவிரத்தை தன்னை அறியாமல் கண்கள் வழியே சிந்தினான்.
அடுத்து அவர் கூறியதை ஞாபகப்படுத்தியவன், என்ன அவளுக்கா பேசதெரியாது? என நினைத்தவன் உதடுகளில் மந்தகாச புன்னகை அவளின் வார்த்தையாடல்களை எண்ணி.
‘சரியான ஆளா இருப்பா போல என் பொண்டாட்டி. வாயை திறந்தா என்ன பேச்சு அவளுக்கு. இங்க இருக்கிறவங்க யார்க்கிட்ட கேட்டாலும் சொல்லுவாங்களே நிலாவின் இடைவிடா கலகல பேச்சுக்களை’
‘இத்தனை வருஷமா உங்களை ஏமாத்தியிருக்கா மாமா. இப்படி அப்பாவியா இருந்திருக்கீங்களே?’ என அவரை உறவுமுறை வைத்தே அழைத்துக்கொண்டான் மனதினுள்.
எதிரே சென்று மாமா என அழைத்தால் அவரின் முகம் எப்படி மாறும்? ஒருகணம் எண்ணிப்பார்த்தான். சிரிப்புதான் வந்தது. பாவம் கொஞ்சநாள் ஆகட்டும் என போனால் போகுதென்பது போல விட்டுகொடுத்தான். ஏனோ இதயம் இலகுவாக இருப்பதாக தோன்றியது அவனுக்கு.
இவனின் சிந்தனை இப்படி இருக்க அதற்குள் ராகவ் தங்களுக்கு நிலா எவ்வாறு கிடைத்தால் என்பதிலிருந்து இன்றுவரை அனைத்தையும் கூறிமுடித்திருந்தார். ஏனோ சேகரனுக்கு ரகவ்வை கைகூப்பி வணங்க தோன்ற அப்படியே அதை செய்ய ராகவ் பதறிப்போனார்.
“என்னங்க நீங்க? எங்களுக்கு ஒரு அருமையான மருமகளை குடுத்ததுக்கு நாங்கதான் நன்றி சொல்லனும்…” என்ற ராகவ்வை விட்டு வள்ளியம்மையை பார்த்தார் சேகரன். அவரின் பார்வையில் இருந்ததை சரியாக படித்துக்கொண்டவர் பின் அமைதியாகிவிட்டார்.
நேரம் கழிய கழிய ஆரவ்விற்கு இருப்புக்கொள்ளவில்லை. அமரமுடியாமல் எழுந்து நடப்பதும் அங்கங்கே நிற்பதும் பின் மீண்டும் அமருவதுமாக இருந்தவனது அலைப்புருதலை கவனித்த ராகவ்,
“ஆரவ் நீ தான் உள்ள போய் நிலாவை பாரேன். எதுக்காக இப்படியே நின்னுட்டு இருக்க?…” அவனின் மனநிலை உணர்ந்தே இதை அவர் கூறினார்.
போகலாம் தான். யாரும் ஏனென்று கேட்கபோவதில்லை. தடுக்கவும் போவதில்லை. ஆனாலும் மனம் முரண்டியது. அவளை இந்த கோலத்தில் தன்னால் பார்க்கமுடியுமா?
பார்க்கவேண்டும் என ஒரு மனமும், பார்த்தால் உன்னால் தாங்க இயலாது என்று இன்னொரு மனமும் அவனை அலைகழித்துகொண்டு இருந்தது. ஆசையும் அறிவும் அவனுக்குள் பெரும் போராட்டத்தையே நடத்திக்கொண்டிருக்க இறுதியில் ஆசையே வென்றது.
என் நிலா எப்படி இருந்தாலும் அவளை என்னால் பார்க்கமுடியும் என காதலாக நினைத்தவன் ஆழமாக மூச்சை இழுத்து சுவாசித்தவன் ஐ ஸி யு உள்ளே நுழைந்தான்.