தேடல் – 17
உறைந்த நிலையில் உணர்வற்று போய் ஆப்பரேஷன் தியேட்டர் முன்பு அமர்ந்திருந்த ஆரவ்வை ஒருவராலும் நெருங்க முடியவில்லை. தர்ஷினியோ குற்றவுணர்வில் துடித்துக்கொண்டிருந்தார்.
முதல் நாள் தன்னிடம் நிலாவை அனுப்பமுடியாது என்று மறுத்த மகனிடம் அவன் பயந்தது போலவே நடந்தபின் இப்போது என்னவென கூறி சமாதானம் செய்வது? நிலாவை கவனியாது பொறுப்பற்று தான் நடந்துகொண்ட விதமே அவரை மகனை விட்டு தள்ளி நிற்கவைத்தது.
ராகவ் எவ்வளவு எடுத்துக்கூறியும் மகனருகில் செல்லமறுத்துவிட்டார் தர்ஷினி. ஸ்டெபி தான் ஆரவ்வின் கைகளை பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். ஆனால் அதை உணரும் நிலையில் ஆரவ் இல்லை.
மருத்துவ முகாமிற்கு ராகவ் மூலம் விஷயம் தெரியப்படுத்தப்பட ஆரவ்வோடே ஸ்டெபியும் உடன் கிளம்பிவிட்டாள். மற்றவர்களோடு இருந்து பணியாற்றும்படி அர்ஜூனிடம் கூறிவிட்டு அவள் கிளம்பிவிட அர்ஜூனால் வேறேதும் கூறமுடியாத நிலை.
ஹாஸ்பிட்டல் வந்து சேர்ந்த ஆரவ் முதலில் பார்த்தது தன் தந்தையை தான். அவனை ஆறுதல் படுத்தும் விதமாக அணைக்க முயன்ற ராகவ்வை தள்ளி நிறுத்தியவன்,
“டாடி நிலாவுக்கு என்னாச்சு? சின்ன அடி, மயங்கி விழுந்துட்டான்னு சொன்னீங்க? ஆனா இங்க நின்னுட்டு இருக்கீங்க?…” என ஆப்பரேஷன் தியேட்டரை காண்பித்து கேட்கவும்,
“சொல்றேன், சொல்றேன் ஆரவ். நீ முதல்ல ரிலாக்ஸ் பண்ணு…” என,
அவரின் கைகளை ஆக்ரோஷமாக தட்டிவிட்டவன், “ரிலாக்ஸா? உங்க ஷர்ட் முழுக்க இவ்வளோ ப்ளட்? நிலாவுக்கு என்ன ஆச்சுன்னு இப்போ சொல்லபோறீங்களா இல்லையா?…”
இருக்கும் இடம் புரிந்து தனது பொறுமையை இழுத்துபிடித்து அடிக்குரலில் சீற அவனின் கோபாவேசமான முகம் அங்கிருந்த மற்றவர்களை மிரளவைத்தது. தர்ஷினியோ அழவே ஆரம்பித்துவிட்டார்.
“சாரி ஆரவ், எல்லாம் என்னாலதான்…” என்று முகத்தை மூடிக்கொண்டு அழுதவர் மேலும் கூற ஆரவ்வை நெருங்க அவரை பார்த்தபடி என்ன சொல்கிறார் இவர்? என்பது போல அப்படியே நின்றிருந்தான் அவன்.
“ஜஸ்ட் ஷட்அப் தர்ஷி. நான் தான் சொல்லிட்டு இருக்கேன்ல. ஸ்டே ஆஃப் ஹியர்…” என்று கடுமையாக கூறியவர் மெதுவாக நடந்ததை கூற கூற ஆரவ் அதிர்ந்துபோய் நின்றான். அதனால் உடனடியாக மேத்தா வரவழைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி பின்,
“ஆரவ் இவர் நிலாவோட அப்பா…” என தர்ஷினிக்கு பின்னால் தள்ளி அமர்ந்திருந்த ஒருவரை காண்பித்து கூறவும் உள்ளுக்குள் என்ன உணருகிறான் என்றே அவனே அறியமுடியாத நிலைக்கு ஆளானான்.
“நிலாவுக்கு பழைய நினைவு திரும்பிடுச்சுன்னு நினைக்கிறேன் ஆரவ். அவ இவரை அப்பான்னு கூப்பிட்ட பின்னால தான் அவளோட கான்ஷியஸ் போய்டுச்சு. உள்ளே இப்போ ட்ரீட்மென்ட் நடந்துட்டு இருக்கு…”
விழிகளில் வழிய இருந்த கண்ணீர் வற்றி நிராசையை நிரப்பிக்கொண்டது. ஏனோ காலையில் நிலா பேசிய அனைத்தும் நியாபகத்திற்கு வர உயிர் வரை உறைந்து போனான். இனி தன்னுடைய நிலாவாக அவள் இருப்பாள் என்பதில் அவனுக்கு நம்பிக்கையே இல்லை.
இலகுவாக காதலில் ஜெயித்து திருமணத்தை முடித்துக்கொண்டவன். நிறைவான ஒரு வாழ்க்கையை எந்தவிதமான சங்கடங்களும் இடைஞ்சல்களும் இன்றி திகட்ட திகட்ட வாழ்ந்தவன். இனி போராடவேண்டிய காலமோ? அந்த போராட்டம் நிலாவோடா? இல்லை அவளின் குடும்பத்தினரோடா?
குணசேகரனை நிமிர்ந்து பார்த்தான். தன் கைகளில் இருந்த துண்டில் நிலாவின் குருதியை பார்த்து பார்த்து கண்ணீர் விட்டுகொண்டிருந்தவரின் பரிதாபமான நிலை அவனை உலுக்கியது. குணசேகரனின் அருகே அமர்ந்திருந்த தயாளன் அவருக்கு ஆறுதல் கூறிக்கொண்டு அமர்ந்திருப்பதையும் கண்டான்.
அதற்கு மேல் எதையும் பார்க்கவோ ஆராயவோ ஆரவ்வின் மனதிற்கு சக்தி இல்லை. கண்களை மூடிக்கொண்டு அமர்ந்துவிட்டான். மனம் முழுவதும் பிராத்தனைகள். நிலாவிற்கு எந்தவிதமான பாதிப்பும் இன்றி நல்லபடியாக மீண்டு வந்துவிட வேண்டும் என்பது மட்டும் தான்.
அது ஆரவ்வின் மனைவி நிலாவாக இருந்தாலும் சரி. குணசேகரனின் மகள் நிலாவாக இருந்தாலும் சரி. எதுவானாலும் என் மனைவியை நான் விட்டுவிடமாட்டேன். அவள் எந்த குறையும் இன்றி முழு உடல்நலத்தோடு திரும்பி வந்தால் போதும் என்பது மட்டுமே.
சிறிதுநேரத்தில் அர்ஜூனும் வந்துவிட அங்கு நடந்த விபரங்கள் அறிந்து ஆரவ்வை பார்த்தான். அவன் அமர்ந்திருந்த கோலமே அர்ஜூனின் மனதை வாள் கொண்டு அறுத்தது. ராகவ்விடம் கேட்டு நடந்ததை தெரிந்துகொண்டான்.
அதற்கு மேல் உணர்வுகளுக்கு இடமளிக்காமல் நிலாவின் தற்போதைய உடல்நிலை எப்படி இருக்கிறது யார் அவளுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள் என்பது முதல் அனைத்தையும் கேட்டுக்கொண்டு ஒரு மருத்துவனாக தான் என்ன செய்யவேண்டும் என யோசித்தவன் அப்போதுதான் ஒதுங்கி நின்ற தர்ஷினியை பார்த்தான்.
“என்ன தர்ஷிமா நீங்க? இதுதான் நடக்கனும்னு விதி இருக்கும் போது நீங்க கவலைப்பட்டு ஒன்னும் ஆகபோறதில்லை. நீங்களே இப்படி ஒதுங்கி நின்னா ஆரவ்வை யார் பார்த்துப்பாங்க? போய் அவனோட பேசுங்க…” எனவும்,
“இல்லை அஜூ. அவன் என்னை திரும்பி கூட பார்க்கலை. நிலாவை எங்களோட அனுப்பமாட்டேன்னு நேத்து ஒரே ஆர்கியூமென்ட் தெரியுமா? அதையும் மீறி கடைசில எனக்காக அனுப்பினதா சொன்னான்…”
“நீங்க இருக்கீங்களேம்மா, அப்டின்னும் சொன்னான். அவன் வச்ச நம்பிக்கையை என்னால காப்பாத்த முடியலையே? எனக்கு ரொம்ப கில்டியா இருக்கு அஜூ. அதுவும் இல்லாம நிலாவோட பேமிலி வந்துட்டாங்க அவளை தேடி. அவளை கூட்டிட்டு போய்டுவாங்களோ?…” என பரிதாபமாக கேட்டார்.
டெல்லியிலேயே மகப்பேறு மருத்துவத்தில் புகழ்பெற்ற கைராசியான சிறந்த மருத்துவரான தர்ஷினி, தைரியத்திற்கும் தன்னம்பிக்கைக்கும் பெயரெடுத்த தர்ஷினி மகனின் விஷயத்தில் குழந்தையாகி போனார்.
இது அர்ஜூனுக்கு புது செய்தி. ராகவ் நடந்த விபரத்தை மட்டும் கூறியவர் நிலாவின் குடும்பம் வந்துவிட்டதை கூறாமல் இருந்தார். இப்போது தர்ஷினி கூறியதும் அவர்களை காட்டியதும் தான் அவன் பார்த்தான்.
“சரி இப்போ இதையெல்லாம் நினச்சு அழ டைம் இல்லை. நீங்க ஒரு டாக்டர். இந்த மாதிரி நேரத்துல நீங்களே இப்படி எமோஷனல் ஆகலாமா? சொல்லுங்க. போங்க முதல்ல ஆரவ்க்கு தைரியம் சொல்லுங்க. நிலா நம்மை விட்டு எங்கயும் போய்டமாட்டா…”
“இல்லை அஜூ. நிலாவுக்கு மறந்த எல்லாம் நியாபகம் வந்திடுச்சுன்னு நினைக்கிறேன்…” என்றவர் நடந்ததை கூற அவர்களது பேச்சுவார்த்தை ஹிந்தியில் இருந்ததால் குணசேகரனை சேர்ந்தவர்களுக்கு புரியவில்லை.
அர்ஜூன் அனைவரையும் ஒருமுறை தீர்க்கமாக பார்த்தவன் பின் அழுத்தமான குரலில்,
“தர்ஷிமா, நிலா நம்ம வீட்டு பொண்ணு. ஆரவ் மனைவி. நம்மை விட்டு எங்கயும் போய்டமாட்டா. போக யாரும் விட்டுடவும் மாட்டோம்…” என்று அழுத்தம் திருத்தமாக தமிழில் கூற குணசேகரன் தயாளன் மற்றும் வள்ளியம்மை மூவரும் திடுக்கிட்டு பார்த்தனர்.
அனைத்திற்கும் மேலாக வள்ளியம்மைக்கோ எங்கே தான் நினைத்து வந்தது நடவாமல் போய்விடுமோ என்ற பயம் கவ்வ ஆரம்பித்தது.
“நிலாவை விட்டுவிடாதே. அவள் தான் உன் எதிர்காலம்” என்றொரு முரட்டுக்குரல் மீண்டும் வள்ளியம்மையின் காதில் ஒலித்தது. வஞ்சகமான பார்வையோடு அங்கிருந்தவர்களை முறைத்தார் வள்ளியம்மை.
இதையெல்லாம் உணரும் நிலையில் ஆரவ் இல்லை. அவனின் எண்ணம் முழுவது நிலா மட்டுமே நிறைந்திருந்தாள்.
சிறிது நேரத்தில் மேத்தா வரவுமே நிலாவை பரிசோதித்துவிட்டு,
“டோன்ட் வொரி டாக்டர் ராகவ். நடந்தது நல்லதுக்குன்னு எடுத்துக்கோங்க. ரொம்ப க்ரிட்டிக்கல் ஆபரேஷனா இருந்திருக்கவேண்டியது. இப்போ அந்தளவுக்கு காம்ப்ளிக்கேட்டட் ஸ்டேஜ்ல இல்லை. சோ பயப்பட எதுவும் இல்லை. ஹண்ட்ரட் பர்சன்ட்…”
அவரின் பேச்சில் கொஞ்சம் தெளிந்தாலும் முழுமையாக நிம்மதிகொள்ள முடியவில்லை. உடனடியாக ஆப்பரேஷனுக்கு துரிதகதியில் செயலாற்ற ஆரம்பித்தனர். ராகவ்வை தடுத்துவிட்டு ஆண்டனியும் அர்ஜூனும் மேத்தாவுடன் சென்றனர்.
ஆரவ் அமர்ந்திருந்த இடத்தை விட்டு எங்கும் நகரவில்லை. யாரோடும் வாயை திறந்து பேசவும் இல்லை. ஆனால் மனதால் ஆத்மார்த்தமாக பேசிக்கொண்டிருந்தான் நிலாவோடு. விடாமல் அவளிடம் ஏதேதோ பேசியபடியே இருந்தான். தனது உள்ளத்தின் உணர்வுகள் அவளை அடையும் என்ற நம்பிக்கையோடு.
ஆரவ்வின் மனப்போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக மேத்தா வெளியில் வரவும் அவரை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தானே தவிர என்ன ஏதென்று கேட்க முயலவில்லை. அவரின் முகத்தை வைத்தே புரிந்துகொண்டதை போல அமைதியாக பார்த்திருந்தான்.
“நத்திங் வொரி ராகவ். இன்னும் டூ டேய்ஸ் அப்ஸர்வேஷன்ல இருக்கனும். அப்றமா ரூம்க்கு ஷிப்ட் பண்ணிடலாம். மத்த எதுவும் உங்களுக்கு நான் சொல்லவேண்டியதில்லை. கான்ஷியஸ் திரும்பவும் உங்க டாட்டர்-இன்-லாவை நீங்க போய் பாருங்க…” என கூறிவிட்டு ஆரவ்வை பார்த்து புன்னகைத்துவிட்டே நகர்ந்தார்.