நெஞ்சில் உறைந்த தேடல் – 16 (2)

அதற்குள் அர்ஜூன் அவனை அழைத்திருக்க அவனிடமும் பேசிக்கொண்டே தன்னுடைய பேக்கை எடுத்துக்கொண்டு நிமிரவும் நிலா குளித்துமுடித்து வரவும் சரியாக இருந்தது.

“பை ஆரவ். போய்ட்டு வாங்க. திரும்பவும் சாரி. நான் அப்படி செஞ்சிருக்க கூடாது. உங்க மூட் ஸ்பாயில் ஆகிடுச்சுல…” ஆரவ்வின் கழுத்தை கட்டிக்கொண்டு பேசியவள் நிறுத்தாமல்,

“ஆனா அடுத்தமுறை நிஜமாவே நான் இது போல கேட்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டா இன்னைக்கு போல சும்மா திருதிருன்னு முழிக்காம டக்குன்னு பதில் சொல்லனும். சரியா?…” என சுட்டுவிரலை கணவனின் புறம் நீட்டி விழிகளை உருட்டியவாறு அவனை மிரட்ட அதில் வாய்விட்டு சிரித்தவன்,

“சரியான வாயாடி. நான் லவ் பன்றேன்னு சொன்னப்போ வாய்பேச தெரியாத ஊமையாட்டம் ஸீன் போட்டுட்டு இப்போ என்னம்மா பேசற நீ?…”

“பின்ன கல்யாணம் ஆகி இத்தனை மாசம் ஆகிடுச்சு. இன்னமும் நான் உங்களவுக்கு இல்லைனாலும் ஓரளவுக்கு பேசித்தானே ஆகனும். இல்லைனா இந்த சமுதாயம் உங்களை பத்தி என்ன நினைக்கும்?…”

“ஒஹ் மேடம் சொசைட்டில என்னோட பேர் கெட்டுடகூடாதுன்னு தான் இவ்வளோ பேசறீங்களா?…” என்றவனின் முகம் கேலியில் இருந்து கொஞ்சம் கவலையாக மாறியது. அதை உணர்ந்த நிலா,

“இன்னும் என்கூட பேச்சை வளர்த்துட்டே கேம்ப் போகாம மட்டம்போடனும்னு இருக்கீங்களா? இருங்க அர்ஜூன் அண்ணாக்கிட்ட சொல்றேன்…” என்றதும் தான் தன் பொறுப்புணர்ந்து,

“ஓகே டா பை. பார்த்துடா  கேர்ஃபுல். கவனமா இரு…” என மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்லியவன் நிலாவின் முகம் முழுவதும் முத்த ஊர்வலம் நடத்த அவனின் தவிப்பை உணர்ந்தவன் தானும் இசைந்துகொடுத்தாள்.

ஏனோ அவளை விட்டு ஒரு நொடிகூட அன்று அவனால் நகரமுடியவில்லை. இந்த மனோபாவமே அவனின் அச்சத்தை மேலும் மேலும் வளர்த்து உறுதியாக்கியது. என்றும் இதுபோல ஒரு தவிப்பை அவன் உணர்ந்ததே இல்லை.

இன்று அவளுள்ளே அப்படியே புதைந்துபோகவேண்டும் என்கிற எண்ணம் அவனின்  மேலோங்கியது.  

நேரம் செல்ல செல்ல நொடிகள் நிமிடங்களாக நீள இன்றைக்கு ஒருமுறை மட்டும் கேம்ப் செல்லாமல் நிலாவுடன் இருந்துவிட்டால் என்னவென்ற எண்ணம் அவனின் மனதினுள் வலுப்பெற துவங்கியது.

அவனின் இந்த அதிரடி செயலும் முதலில் தன்னை ஒப்புக்கொடுத்தாலும் அவனின் வன்மையால் அவனிடமிருந்து திமிற ஆரம்பிக்கவும் தான் சுயம் உணர்ந்தான் ஆரவ்.

“ஹேய் என்னாச்சுடா?…” என மீண்டும் அணைக்க வர அர்ஜூனின் அழைப்பு போனில் வரவும் தான் சுதாரித்தான்.

“ஓகே பை. டேக் கேர்…” என கூறிக்கொண்டே மீண்டும் நிலாவை பார்வையால் உள்வாங்கியபடி அறையை விட்டு வெளியேறியவனின் விழிகளில் இருந்த தவிப்பு முதல் நாள் மட்டுபட்டிருந்த நிலாவின் சந்தேகத்தை தட்டி எழுப்பியது.

யாரிடம் இதைப்பற்றி கேட்பது என சிந்தித்துக்கொண்டே ஆரவ்வுடன் கீழிறங்கி சென்றாள்.

அங்கே தர்ஷினியும் ராகவ்வும் ஏற்கனவே டைனிங்டேபிளில் காத்திருக்க அர்ஜூனும் வந்துவிட்டான் ஆரவ்வை திட்டிக்கொண்டே.

“எத்தனை தடவை உனக்கு கால் செய்யறது ஆரவ்? ஆன்ஸர் பண்ணாம என்ன பண்ணிட்டு இருந்த?…” என கடுகடுத்துக்கொண்டே அவர்களோடு அமர்ந்துகொண்டான்.

அர்ஜூனின் பேச்சிற்கு எந்தவிதமான எதிர்வினையும் இல்லாமல் போக அப்போதுதான் ஆரவ்வின் வாடியமுகம் கருத்தில் பதிந்தது.

“என்ன டாக்டர் சக்கு? முகம் இப்படி பியூஸ் போன பல்ப் போல இருக்குது?…” என்று சீண்ட அர்ஜூனை முறைத்துக்கொண்டே பெயருக்கு உண்டுமுடித்தவன் தன் பெற்றோரிடமும், நிலாவிடம் மீண்டும் அறிவுரை மூட்டையை கொட்டி கவிழ்த்துவிட்டு வெளியேறிவிட்டான்.

அர்ஜுனும் அவனோடு எழுந்து வந்து நிலாவிடம் தன் பங்கிற்கு அறிவுரையை அள்ளிவழங்க நிலாவிற்கு தலையே வெடித்துவிடும் போல ஆகிவிட்டது. அவளின் முகமாற்றம் அர்ஜூனின் கண்களில் விழ,

“நிலா உன்னோட நல்லதுக்குதான் சொல்றோம். இதுக்கெல்லாம் நீ சலிச்சுக்ககூடாது. புரியுதா?…” எனவும் தலையை சரி என்பதுபோல உருட்ட,

“தட்ஸ் குட். பை…” என அவளின் உச்சந்தலையில் தன் கரத்தால் ஒரு அழுத்தம் கொடுத்துவிட்டு அவளிடமிருந்து விடைபெற்றவன் ராகவ்விடம் வந்து,

“அப்பா இன்னைக்கு மார்னிங் டயாபடீஸ் பேஷன்ட்ஸ்க்கான ந்யூ மெடிசின்ஸ் பத்தின மீட்டிங் இருக்கு. நீங்களும் ஆண்டனி அங்கிளும் பார்த்துக்கோங்க. ஏற்கனவே ஒருமுறை இந்த மீட்டிங்  தள்ளிபோய்டுச்சு…”

“நான் பார்த்துக்கறேன் அர்ஜூன். நீங்க பத்திரமா போய்ட்டுவாங்க. நிலாவை நாங்க பார்த்துப்போம்…” என்றுவிட்டு சிறு தலையசைப்போடு விடைபெற்று தர்ஷினியை பார்த்தால் அவரோ வாசலில் பார்வையை வைத்தவண்ணம்  தலையில் கைவைத்து அமர்ந்திருந்தார்.

இருவரும் பார்வையை வாசலுக்கு திருப்ப ஆரவ் நிலாவின் கைகளை பிடித்துக்கொண்டு தீவிரமாக எதையோ கூறிக்கொண்டிருந்தான். நிலாவும் அவனுக்கு தலையை அசைத்து அசைத்து ஓய்ந்த நிலையில் நின்றிருந்தாள்.

“இப்படி அவசியம் அவனோட பொண்டாட்டியை நாம கூட்டிட்டு போகனுமாங்க? இது கொஞ்சமில்லை ரொம்பவே ஓவரா தெரியுது…” என கூறி பல்லைகடித்தார் தர்ஷினி.

அதற்குள் ஆரவ்வை நெருங்கிய அர்ஜூன், “டேய் அடங்குடா, அங்க தர்ஷிமா டென்ஷன் ஆகிட்டாங்க. நீ கிளம்பு. அவங்க எல்லாம் பார்த்துப்பாங்க. இல்லை மனசில்லைனா நீ கேம்ப்க்கே வரவேண்டாம்…” தடாலடியாக அர்ஜூன் கூறிய பின்னே ஆரவ் அமைதியானான்.

ஒருவழியாக இருவரும் கிளம்பிவிட ராகவ்வும் சிறிதுநேரத்தில் ஹாஸ்பிட்டல் சென்றுவிட தர்ஷினி ஒரு போன்காலில் அமர நிலாவிற்கு தான் பெரும் சோதனையாக போனது.

இதைப்பற்றி யாரிடம் கேட்க? சொல்ற விஷயமா இருந்தா சொல்லியிருக்கமாட்டாங்களா? ஆனா ஏன் சொல்லலை? தான் தான் தவறாக புரிந்துகொண்டோமோ?

இப்படியாக பல கேள்விகள் அவளை அலைகழிக்க அனைத்திற்கும் விடையாக ஆரவ்வின் தவிப்பு கண்முன் நிழலாடியது.

“இல்லை, இல்லை.  இது தன் மனபிரம்மை இல்லை. நிச்சயம் ஏதோ இருக்கிறது. சீக்கிரம் கண்டுபிடிக்கனும்”என தனக்குத்தானே கூறியபடி நிலா அமர்ந்தவாக்கில் ஹாலிலேயே உறங்கிவிட தர்ஷினி தான் அவளை எழுப்பி அறைக்கு அனுப்பிவைத்தார்.

போகும் வழியெல்லாம் ஒருநிலையில் அமராமல் தலையை கோதுவதும், இதயப்பகுதியை தன்னையறியாமல் வருடுவதுமாக தன்னோடு அமர்ந்திருந்த ஆரவ்வை பார்த்த அர்ஜூனுக்கு ஏனோ மனம் பிசைந்தது. கேம்ப் போட்டிருக்கும் இடத்திற்கு செல்லும் வரையிலும் இதே நிலை நீடிக்க அர்ஜூனால் தாங்கமுடியவில்லை.

“ஆரவ் ஆர் யூ ஓகே?…” என்று அர்ஜூன் கேட்டதும் சுற்றிலும் திரும்பி பார்த்து தான் இருக்குமிடம் உணர்ந்தவன் காரைவிட்டு இறங்கினான்.

“நில்லுடா. நான் கேட்டுட்டே இருக்கேன். பதில் பேசாம இறங்கி நடந்தா என்ன அர்த்தம்?…” என அர்ஜூன் அவனை வழிமறிக்க,

“நத்திங் அஜூ. ஏற்கனவே நாம லேட்.  நின்னு பேசிட்டு இருக்கவா இங்க வந்தோம்?…”

“இல்லை ஆரவ். நீ ரொம்ப டிஸ்டர்ப் மைண்ட்ல இருக்கியோன்னு தோணுது. நீ பேசாம வீட்டுக்கே கிளம்பு. இதோட நீ சர்வீஸ் பண்ணவேண்டாம்…” என்றவனை முறைத்த ஆரவ்,

“அஜூ. ஐ’ம் ஆல்ரைட். கோ நவ்….” என அழுத்தமாக கூறிவிட்டு மூச்சை இழுத்து தன்னை நிதானப்படுதிவிட்டு அர்ஜூனோடு சேர்ந்து நடக்கத்தொடங்கினான். அங்கே ஏற்கனவே ஸ்டெபியோடு இன்னும் சில மருத்துவர்கள் தங்கள் பணியை ஆரம்பித்திருந்தனர்.

தன்னுடைய சஞ்சலங்கள் அனைத்தையும் ஓர ஒதுக்கிய ஆரவ் தானும் அவர்களோடு இணைந்துகொண்டான். எப்போதும் மருத்துவத்தை தொழிலாக பார்க்காமல் சேவையாக உணர்ந்து செயல்படும் ஆரவ் இப்போதும் முழுமனதையும் தன்னுடைய பணியில் செலுத்தியிருந்தான்.

ஆரவ்வின் வீட்டில் நிலாவோ வெளியில் கிளம்பும் வரை இப்படியும் அப்படியுமாக யோசித்து மறுநாள் ஸ்டெபியிடம் அனைத்தையும் எப்படியாவது கேட்டு தெரிந்துகொண்டுவிட வேண்டும் என்று ஒரு முடிவுக்கு வந்திருந்தாள்.

அதற்கு பிறகாவது அவளுடைய மனம் சமாதானம் அடைந்ததா? இல்லை. தனக்கு என்னவாக இருக்குமோ? என்னும் பயத்திலேயே உள்ளுக்குள் நடுங்கிக்கொண்டு வெளியில் தர்ஷினியிடம் அதை காட்டிவிடாமல் இருக்க படாதபாடுப்பட்டுபோனாள்.

பிற்பகல் இரண்டுமணியளவில் வீடு திரும்பிய ராகவ் தானும் தயாராகி ஏற்கனவே தயாராக இருந்த நிலாவையும் தர்ஷினியையும் அழைத்துக்கொண்டு அந்த பெரிய ஷாப்பிங் மாலிற்கு சென்றார்.

முதலில் தர்ஷினிக்கு பார்க்கலாம் என ராகவ் கூற அவரோ நிலாவிற்கு வாங்கிவிட்டு அதன் பின் தங்களுக்கு வாங்கிக்கொள்ளலாம் என முடிவெடுத்து அதன்படியே அதிகமாக அலையாமல் விரைவிலேயே தங்களுடைய ஷாப்பிங்கை முடித்துவிட்டனர்.

தர்ஷினி நிலாவை எங்கேயும் தனியே நகரவிடவில்லை.  நிலாவும் அவரின் எண்ணம் புரிந்தவளாக அவரோடே ஒட்டிக்கொண்டு திரிந்தாள். ஒருவாறாக அனைத்தையும் முடித்து அங்கிருக்கும் ஷாப்பில் மாலை சிற்றுண்டியையும் முடித்துக்கொண்டு வெளியில் வந்தனர்.

“ஹாய் டாக்டர் தர்ஷினி மேடம்…” என்ற உற்சாக குரலில் திரும்பிய தர்ஷினி முதலில் யாரென பார்த்து பின் தன்னிடம் மந்த்லி செக்கப் வரும் நேத்ராவின் தாயும் தன்னுடைய தோழியுமான பிரபாவதி என்பது புரிந்தது.

அவரிடம் பேச ஆரம்பித்ததும் நேத்ராவை பற்றி முதலில் விசாரித்தவர் பின் நிலாவிடம் அறிமுகப்படுத்த அவர்களது பாஷை ஹிந்தியில் என்பதால் சிறு புன்னகையோடு நிலா அமைதியாக அவர்களை வேடிக்கைபார்க்க ஆரம்பித்தாள்.

சிறிதுநேரம் நின்றுபார்த்த ராகவ், “ஓகே தர்ஷி, நீ பேசிட்டு இரு. இன்னைக்கு ரொம்ப ரஷ்ஷா இருக்கு. நான் காரை எடுத்துட்டு எக்ஸிட் கேட்க்கு வந்திடறேன். நீயும் நிலாவும் அங்க வந்திருங்க…” என்றவர் நிலாவிடம் இருந்த பேக் கவர்களை வாங்கிக்கொண்டு கார் பார்க்கிங் இடத்திற்கு சென்றுவிட்டார்.

தர்ஷினியும் நிலாவின் கையை பிடித்துக்கொண்டே கேட் அருகில் வந்து நின்றவர் பேச்சு சுவாரஸ்யத்தில் நிலாவின் கையை எப்போதோ விட்டிருந்தார்.

அவர்களின் பேச்சு புரியாமலும் சுற்றி இருக்கும் இடத்தை வேடிக்கை பார்ப்பதிலும் கவனத்தை செலுத்திய நிலாவின் பார்வை எதிர்புறம் இருந்த சாலையில் கூர்மைபெற்றது.

ஒரு வயதான பெரியவர் சாலையை கடந்து வர முயற்சித்தபடியே அங்கே தடுமாற நொடியில் நிலா அவளையறியாமல் நகர்ந்துவிட்டாள். அவள் முன்னோக்கி வருவதை கண்டு அவரும் சென்றுகொண்டிருக்கும் வாகனங்களையும் பொருட்படுத்தாமல் ஓடிவந்தார்.

தன்னை நெருங்கிய பெரியவரை சுற்றம் மறந்து பார்த்துக்கொண்டே வந்தவளை கார் ஒன்று உரசி செல்ல அதில் தடுமாறிய நிலா கீழே விழ போக்குவரத்து நிமிடத்தில் ஸ்தம்பித்தது.

விழுந்த வேகத்தில் அங்கிருந்த மின்கம்பத்தூணில் மோதி தலை சாய்ந்தவளை ஓடி வந்து தன் மடியில் தாங்கிக்கொண்டார் அப்பெரியவர்.

தர்ஷினியும் அங்கிருக்கும் பதட்டமான சூழ்நிலை உணர அதற்குள் காருடன் ராகவ்வும் வந்துவிட அப்போதுதான் அருகில் நிலா இல்லாதது புரிந்தது. தர்ஷினிக்கு உடலெல்லாம் வெடவெடத்துபோனது.

போதாதற்கு ராகவ்வும் கடிந்துகொள்ள பதட்டத்தோடு சுற்றிலும் பார்த்துவிட்டு அக்கூட்டத்தை நோக்கி செல்ல அங்கே நிலா இருந்த கோலம் அவர்களை உலுக்கிப்போட்டது.

தலையில் வழியும் உதிரத்தோடு அரை மயக்கநிலையில் இருந்தவளை அணைத்துகொண்டு அழுதுகொண்டிருந்தவரிடம் நெருங்கி நிலாவை தூக்க முயற்சிக்க அவளோ தன்னை தாங்கியிருந்தவரின் சட்டையை விடாமல் பிடித்துகொண்டு அவரின் முகம் பார்த்து,

“அ…ப்பா…” என அழைத்தாள்.

அதிர்ந்து நின்றனர் ராகவ்வும் தர்ஷினியும்.

error: Content is protected !!