நெஞ்சில் உறைந்த தேடல் – 16 (1)

தேடல் – 16

      நிலாவின் கெஞ்சலிலும் தர்ஷினியின் மனத்தாங்கல் கொடுத்த வருத்தத்திலும் மட்டுமே மனதை மாற்றி நாளை அவர்கள் வெளியில் செல்ல சம்மதித்தான். ஆனாலும் ஏனோ அவன் மனம் சமாதானம் ஆகவில்லை.

ஆரவ்வை பின்தொடர்ந்து வந்த நிலாவிற்கு அவனது முகமே அவனின் கவலையை வெளிப்படுத்தியது. ஆனால் எதனால் இந்தளவிற்கு கவலைகொள்ள வேண்டும்? என குழப்பமே நிலாவிற்கு மிஞ்சியது.

சற்றுமுன் ஆரவ் நடந்துகொண்ட முறையும் தன்னை அவன் அணைத்திருந்த விதமும் அவனின் விழிகளில் தென்பட்ட அச்சமும், துயரமும் ஏதோ ஒரு வித்தியாசத்தை காட்டியது.

தான் நன்றாகத்தானே இருக்கிறோம். பின் எதற்காக இந்த பயமும் பரிதவிப்பும் என புரியாமல் அவனின் முகத்தையும் செயல்களையும் அவதானித்தபடி ஆரவ்வை நெருங்கினாள்.

அவளின் எண்ணவோட்டங்களை கண்டுகொள்ளாமல் தன் யோசனையில் இருந்தவனின் தோள் தொட்டு திருப்பிய நிலா,

“நீங்க ஏன் இவ்வளவு டென்ஷனா இருக்கீங்க ஆரவ்? எதுவும் பிரச்சனையா?…” என்றவளின் குரலில் முதலில் அதிர்ந்து அடுத்து நொடியில் முகத்தை மாற்றிக்கொண்டவனின் முயற்சியும் நிலாவின் கண்களுக்கு தப்பவில்லை.

“ஏதோ விஷயம் இருக்கு போலவே? கண்டுபிடிப்போம்” அசையாமல் ஆரவ்வையே பார்த்திருக்க,

“நத்திங்டா. நாளைக்கு போகபோற மெடிக்கல் கேம்ப் பத்தி யோசிச்சுட்டு இருந்தேன். வேறொண்ணுமில்லையே…” என சிரித்தபடி சமாளித்தவனை நினைத்து மனம் வலித்தது நிலாவிற்கு.

“தென், நிலா நாளைக்கு ரொம்ப கவனமா போய்ட்டு வரனும்டா. எதுவானாலும் உடனே எனக்கு கூப்பிட்டுடு…”மிதமிஞ்சிய கவலைரேகைகள் அவனையும் மீறி முகத்தில் ஊர்வலம் வர அவனின் சொல்லிற்கேற்ப தலையசைத்தாள்.

அவளை நகர்த்தி கட்டிலில் அமரவைத்தவன், “நிலா கேட்கறேன்னு கோச்சுக்ககூடாது. கண்டிப்பா நாளைக்கு நீ மாம் கூட ஷாப்பிங் போகனுமா?…” எனவும் நிலா அவனை கூர்மையாக பார்க்க அதில் பதறியவன்,

“இல்லை இல்லை. நீ போய்ட்டுவா. சரியா. நான் ஒன்னும் சொல்லலை…” என தனக்காக யோசித்து தன் முடிவை மீண்டும் அவன் மாற்றிக்கொள்ள நிலாவிற்கு தான் அத்தனை வேதனையாக போய்விட்டது.

“நிச்சயம் ஏதோ இருக்கு. இல்லைனா அவங்க இப்படி வருத்தமா இருக்கமாட்டாங்க. நான் கேள்வி கேட்டதும் எப்படி வியர்க்குது?” என அவனை எண்ணி கவலைகொண்டாள்.

“இப்படி இவங்களை வருத்தி நாளைக்கு அந்த ஷாப்பிங் அவசியம் போய்த்தான் ஆகனுமா? பேசாமல் வரலைன்னு சொல்லிட்டு வீட்லயே இருந்தா இவங்க இப்படி கஷ்டபடமாட்டாங்க இல்லையா?”

இப்படியாக இவள் யோசனை இருக்க உடனே அதையும் தர்ஷினியின் முகம் நிழலாக வந்து அவளின் முடிவை தகர்த்தது. ஆரவ்வின் வியர்த்த முகம் மீண்டும் மீண்டும் விழிகளின் முன் தோன்றி அவளை இம்சிக்க தலைவலிப்பது போல உணர்ந்தாள்.

“ஆஆஆஹ்…” என தலையை பிடித்துக்கொண்டு அலற ஆரவ் பயந்துவிட்டான். அப்போதுதான் இதையும் கவனித்தாள் நிலா.

தான் தலைவலிக்கிறது என கூறும் அனைத்து நேரங்களிலும் ஆரவ்வின் முகத்தில் அளவில்லா பதற்றமும் தான் வலியில் துடிக்கும் பொழுதுகளில் அவனின் விழிகள் கலங்கியதும் இதுவரை தன் மீதான காதலாலும் அன்பாலும் என நினைத்திருந்தவள்.

இன்று ஏனோ இவை அனைத்தையும் தாண்டி அவளின் கண்களுக்கு வேறொரு பிம்பத்தை ஏற்படுத்தியது. விஷயம் பெரிதாக இருக்கவேண்டும். அதுவும் தன் உடல்நிலை சம்பந்தப்பட்டதாக இருக்கவேண்டும் என அனுமானித்து இறுதியில் முடிவுக்கு வந்தாள்.

எப்படி இத்தனை நாள் இதை கவனியாமல் விட்டேன்? அந்தளவிற்கு ஆரவ்வின் காதல் தன்னை வேறேதும் யோசிக்கவிடாமல் ஆக்கிரமித்துக்கொண்டிருந்ததே. அப்போதுதான் ஆரவ்வின் குரலும் அவளின் செவிப்புலன்களை அடைய தன்னையே நொந்துகொண்டு,

“ஒண்ணுமில்லைங்க, ஒரு மாதிரி தலைசுற்றல் போல இருந்தது. அதான்…” என கூறியும் அவன் சமாதானம் ஆகவில்லை. ‘நிஜமாவா?’ என ஓராயிரம் முறை கேட்டு உறுதி செய்த பின் தான் அவளை விட்டான்.

“எதுவும் முடியலைனா சொல்லிடுடா நிலா. ப்ளீஸ்…” என கெஞ்சல் குரலில் அவளிடம் கேட்க இப்போது நிலாவிற்கு தான் தொண்டையடைத்து அழுகை வரும் போல இருந்தது.

“ஹைய்யோ ஏன் இத்தனை தடவை கேட்கறீங்க? எனக்கு சாதாரண தலைவலி வரது இன்னிக்கென்ன புதுசா? என்னமோ எனக்கு பெருசா வியாதி ஏதோ இருக்கிறது போல இருக்கு உங்க பில்டப்…”

வரவழைத்துக்கொண்ட கலகலப்பான குரலில் அவனை வம்பிழுத்தாள் வேண்டுமென்றே. வலி மிகுந்த அவனின் முகத்தை பார்க்க பார்க்க எங்கே அழுதுவிடுவோமோ என அஞ்சி அவனின் மனநிலையை மாற்றவே பேசினாலும் அவளின் பேச்சில் ஆரவ்விற்கு சினம் ஏற,

“ஆர் யூ மேட் நிலா?  உளறதே. உனக்கென்ன வெறும் தலைவலி தானே. அதுக்கென்னமோ வியாதி அது இதுன்னு பேசிட்டு இருக்க?…” என கடிய,

“அதைத்தான் நானும் சொன்னேங்க. தலைவலி மட்டும் தான். அதுக்கு இந்த ஸீன் வேண்டாம்னு…” என அவனை ஆராயும் பார்வை பார்த்துக்கொண்டே கேலியாக கூறவும் அதில் தலைகவிழ்ந்தவன்,

“ஆமாம் ஆமாம் தலைவலி மட்டும் தான். உனக்கு வேற எந்த ப்ராப்ளமும் இல்லை…” என கூறியவாறே அவளை அணைத்துக்கொண்டவனின் உள்ளம் முழுவதும் துக்கமெனும் வெம்மையால் தகித்துக்கொண்டிருந்தது.

என்றுமில்லாத அளவிற்கு இன்று ஆரவ்வின் உடலும் விரல்களும் நடுங்க அதை நிலாவால் அப்பட்டமாக உணரமுடிந்தது.

தனக்கு என்னவாக இருக்கும்? இப்படி தன்னவன் தவித்து துடிக்கும் அளவிற்கு என்னும் யோசனையிலேயே அவனின் மார்பில் சாய்ந்திருந்தவள் மனதின் போராட்டத்தில் களைப்படைந்து அவனின் மென்மையான வருடலில் உறங்கிப்போனாள்.

ஆரவ்விற்கு தான் உறக்கமில்லாமல் போனது. நிலாவை மெல்ல கட்டிலில் சாய்த்து படுக்க வைத்தவன் தானும் அவளருகில் சாய்ந்து அமர்ந்துகொண்டான்.

எப்படி இவள் மீது இத்தனை காதலானேன்? எத்தனை யோசித்து யோசித்து விடை தெரியாமல் மனைவியவளை பார்வையால் வருடிக்கொண்டிருந்தான்.

யார் என்னவென விசாரிக்காமல், யோசிக்காமல் அவளை பார்த்த நொடியில் அவள் மீது மையலாகி  காதலால் உருகி உடனடியாக திருமணம் செய்யுமளவிற்கு தன்னை பாதித்து இருக்கிறாள்.

இப்போது நினைக்க நினைக்க அவனுக்கே ஆச்சர்யமாக இருந்து.  நிலாவின் மீதான தன் காதல் இந்தளவிற்கு தன்னை பலவீனமாக்கும் என அவன் நினைத்தும் பார்த்ததில்லை. அதை எண்ணி வருந்தவும் இல்லை.

நாளை தான் இல்லாமல் நிலா செல்வது சரியா என்னும் கலக்கமும் குழப்பமுமாக விழிமூடியவன் தானும் கண்ணயர்ந்துபோனான். வெகுநேரம் கழித்து உறங்கியவன் விடியும் முன்பே விழித்தும் விட்டான்.

இன்னமும் துயில் கலையாமல் புரண்டுபடுத்தவளை பார்வையிட்டுக்கொண்டே கேம்பிற்கு கிளம்பிகொண்டிருந்தவனை நிலாவின் குரல் அதிர்ச்சிகொள்ள செய்தது. நிலா என்ன கேட்கிறாள் என புரிவதற்கே சில நிமிடங்கள் பிடித்தது. அதிர்ந்துபோனான்.

“உங்களைத்தான் கேட்டேன், யார் நீங்க? நான் எப்படி இங்க வந்தேன்?, இது யாரோட வீடு?…”

கேள்வி மேல் கேள்வி கேட்டு கூச்சலிடும் குரலில் கத்தியவளை கண்டு சர்வாங்கமும் ஒடுங்க அந்த நொடியை எப்படி சமாளிக்கவென தெரியாமல் விக்கித்துநின்றான்.

“நிலா, நா……..ன், எ…..ன்னை…. நி…….லா, நிலா…” அதற்கு மேல் வார்த்தை வராமல் குரல் நடுங்க உடல் முழுவதும் தெப்பலாக நனைந்துபோனது வியர்வையில்.

ஆரவ்வின் நிலை கண்ட நிலா தன்னையே நொந்துகொண்டவள்,

“அச்சோ, சாரி….. சாரிங்க. சும்மா நான் இப்படி உங்களை தெரியாதது போல நடந்துட்டா நீங்க என்ன செய்வீங்கன்னு பார்க்கத்தான் அப்படி பேசினேன். சாரி, ப்ளீஸ்…” என கூறிக்கொண்டே அவனருகில் வர ஆரவ் அப்போதும் சிலையாக நின்றான்.

ரத்தபசையின்றி வெளிறி இருந்த அவனின் முகத்தில் தெரிந்த உணர்வற்றதன்மையில் வாயடைத்துபோனாள். தனக்கு நினைவு திரும்பினால் ஆரவ்வின் நிலை என்னவென காணவே அவள் இவ்வாறு விளையாடிப்பார்த்தது.

முதலில் அதிர்ந்து பின் தான் யாரென புரியவைப்பான், இல்லை தன்னுடைய நடிப்பை  கண்டுகொள்வான் என நினைத்தால் இப்படி ஒரு ரியாக்ஷனை அவள் எதிர்பார்க்கவில்லை.

ஆரவ்வின் முகம் செத்திருந்தது. நிலாவினால் அவளுடைய கணவனை இந்நிலையில் காண சகிக்கவில்லை. என்ன காரியம் செய்துவிட்டேன்? என மீண்டும் மீண்டும் தன்னை திட்டிக்கொண்டாள்.

“ஆரவ், ஆரவ், சும்மா விளையாட்டுக்குத்தான் பேசினேன். ப்ளீஸ் பேசுங்க…” என அவனை கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டாள்.

அவளின் தொடுகையில் தந்நிலை மீண்டவன் நிலாவை விலக்கி நிறுத்தி பாதாதிகேசம் வரை பார்வையிட்டு,

“நிலாடா, ஏன்டா?…” வேறெதுவும் கூறாமல் அவளை காற்று கூட புகமுடியாதவாறு இறுக்கிக்கொண்டான்.

நேற்றிலிருந்தே அவனது மனநிலை அலைபாய்ந்துகொண்டே தான் இருந்தது. அமைதியின்றி ஆழிப்புயலென ஆர்ப்பரித்து அவனின் உறுதியான மனநிலையை ஆட்டம் காண வைத்தது.

சிறிதுநேரமே அவளை காதலாய் அணைத்திருந்தவன், “உனக்கென்ன பைத்தியமா நிலா? ஒரு நிமிஷம் என்னை உயிரோடு கொன்னுட்ட…” எனவும் அவனின் வார்த்தைகளினால் வேதனைகொண்டவள் பின் ஆரவ்வின் அணைப்பிலிருந்து சிலிர்த்துக்கொண்டு விட்டுபட்டு,

“என்ன நான் கொன்னுட்டேனா? நான் சொல்லவும் பட்டுன்னு நான் உன்னோட புருஷன்னு சொல்லாம பேச்சுமூச்சில்லாம நின்னுட்டு என்னை குறை சொல்லுவீங்களா நீங்க?…” என மல்லுக்கு நிற்க அதில் இலகுவான ஆரவ்,

“அதுக்கு இப்படித்தான் மனுஷனுக்கு பயம்காட்டுவியா நீ? நான் எவ்வளோ பயந்துட்டேன் தெரியுமா?…” உண்மையாக மனதை வெளிப்படுத்த,

“அப்போ எனக்கு நினைவு திரும்பறதுல உங்களுக்கு விருப்பம் இல்லைன்னு சொல்றீங்க. அப்படித்தானே?…” நிலாவின் கேள்விக்கு பதிலளிக்காமல் அவளையே ஆழ்ந்து பார்த்தவன்,

“நிச்சயம் பயம்தான் நிலா. ஏனோ எனக்கு உன்கிட்ட எப்படி சொல்லன்னு தெரியலை. பேசாம உனக்கு உன் பழைய ஞாபகங்கள் திரும்பாமலே போய்டட்டுமேன்னு கூட சில நேரம் எனக்கும் ஆசை வருது தான். ஆனாலும் அது உனக்கு நான் செய்யும் அநியாயம் இல்லையா?…” என்றவன்,

“என்னுடைய நினைப்பு கூட உன்னோட ஆசைக்கு குறுக்க நிற்காது. கண்டிப்பா உன்னுடைய ஞாபகங்களை நீ மீட்டெடுக்கும் போது என்னுடைய காதலை நான் நிச்சயம் உனக்கு புரிய வைப்பேன்” என மனதிற்குள்ளேயே பேசிக்கொண்டிருக்க,

“ஆரவ், ஆரவ்…” என்று அவனின் காதுக்கருகில் நின்று கத்த,

“ஆங் என்னடா வேணும்?…”

“ம்ம்ம். பதில், பதில் வேணும். நான் கேட்டதை கூட மறந்துட்டு என்ன கனவா டாக்டர் சாருக்கு?…” என்று சீண்ட,

“கனவு காண நேரமில்லை மிசஸ் ஆரவ் அவர்களே. நீ குடுத்த ஷாக் ட்ரீட்மென்ட்ல ஆடிப்போயிருந்த நான் கேம்ப்க்கு கிளம்பறதை கூட மறந்துட்டேன். டைம் ஆச்சுடா…”

“ஓகே நீங்க கிளம்புங்க…” அவனை விட்டு விலகி குளியலறைக்குள் செல்ல அவளையே பார்த்திருந்தவன் ஒரு பெருமூச்சோடு வேறொரு ஷர்ட் மாற்ற ஆரம்பித்தான்.

error: Content is protected !!