நெஞ்சில் உறைந்த தேடல் – 15 (2)

அறையை விட்டு கிளம்பியவனின் கையை பிடித்து தடுத்து நிறுத்திய நிலா,

“அவங்க பீல் பன்றாங்க தான். ஆனா நீங்க சொன்னதுக்காக இல்லை. மாமா அவங்களோட கல்யாண நாளை மறந்துட்டதால தான் வருத்தமா இருக்காங்க…” நிலா கூறியதும் வாய்விட்டு சிரித்த ஆரவ்,

“ஹே லூஸு பொண்டாட்டி, டாடி இதுவரைக்கும் எத்தனையோ தடவை வெட்டிங்டே, மாம் பர்த்டே எல்லாம் மறந்திருக்காங்க. அப்போலாம் கோவப்படாதவங்க இப்போ பீல் பன்றாங்களாக்கும்? ஆனாலும் நீ ரொம்ப கற்பனை பன்றடா டார்லி…”

தன்னை கேலி செய்த ஆரவ்வை ஒரு ஆழ்ந்த பார்வை பார்த்த நிலா அங்கிருந்து நகர்ந்து பால்கனியில் கிடந்த ஊஞ்சலில் சென்று அமர்ந்துகொண்டாள். அவளின் பின்னே வந்த ஆரவ்,

“மேடம் பலமா யோசிக்கிறீங்க போல?…” அவளை இடித்துக்கொண்டு அருகில் அமர அவனை  திரும்பியும் பார்க்காமல்,

“ஏன் ஆரவ் நீங்க என்னை முதல் முதல்ல எப்போ எங்க பார்த்தீங்க?…” இப்போது எதற்கு இது என்பது போல நிலாவையே பார்த்தபடி இருக்க அவளோ,

“என்ன டாக்டர்? அதுக்குள்ளே மறந்துட்டீங்களா?…”

கேலிக்குரலில் கேட்டாலும் இதற்கு நீ பதில் சொல்லியே ஆகவேண்டும் என்ற பிடிவாதம் நிலாவின் குரலில் நிறைந்திருந்தது. அதில் ரோஷம் கொண்டவன்,

“யார்க்கிட்ட மறந்துபோச்சான்னு கேட்கற?…” என கொந்தளித்தவன்,

முதலில் நிலாவை எங்கு சந்தித்தான்? எப்படி பார்த்தான்? என்பதில் இருந்து எப்போது, என்ன  பேசினான், எவ்விடம், எந்நேரம்  என்பது வரை மனனம் செய்தவனாக ஒப்புவிக்க அவனையே காதலாக பார்த்திருந்தாள் நிலா.

“நான் ஆரவ். என்னோட காதல் ஒன்னும் அவ்வளவு சாதாரணம் கிடையாது நிலா. இந்த கேள்வியை நீ இப்போது இல்லை எப்போ கேட்டாலும் என்னால் பிசிறில்லாமல் பதில் சொல்ல முடியும். ஏன் நம் மேரேஜ்ல இருந்து இன்றை வரைக்கும் கூட ஒவ்வொரு நாளும் நீ என்ன செய்த என்ன பேசினன்னு கூட என்னால சொல்ல முடியும்…”

“ஒவ்வொரு நொடியும் உன்னோடான என் காதல் வாழ்க்கையை நான் அனுபவித்து வாழ்ந்துட்டு இருக்கேன். வாழும் அந்த நொடிகளையும் அது தரும் சந்தோஷத்தையும் எனக்குள்ள நான் பொக்கிஷமா பத்திரப்படுத்தி வச்சிருக்கேன். எந்த சூழ்நிலையிலும் இப்படி அபத்தமா மறந்திடுச்சான்னு கேட்டுவைக்காதே…”

நிலாவிடம் கூறிவிட்டு எழுந்தவன் பால்கனியிலிருந்து கீழே உள்ள தோட்டத்தை பார்வையிட ஆரம்பித்தான். தன் கோவத்தை அவளிடம் காட்டமுடியாமல் நிலையின்றி தவித்தவன் தன் பின்னந்தலையை அழுந்த கோதிவிட்டு மூச்சை ஆழ இழுத்துவிட்டு தன் உயிரானவளை திரும்பி பார்க்க நிலா அவனையே பார்த்திருந்தாள்.

தன் மீதான அவளவனின் காதல் நிலாவை பிரமிக்க செய்திருந்தது. நாளுக்கு நாள் அவன் மீதான காதல் தனக்குள் விஸ்வரூபம் எடுத்துகொண்டிருப்பதை நிலாவுமே சுகமாக உணர்ந்துகொண்டு தானே இருக்கிறாள்.

தான் விளையாட்டாக கேட்ட ஒரு கேள்வி எந்தளவிற்கு அவனின் மனதை பாதித்திருக்கிறது என புரிந்து வருந்தியவள் தன்னையே பார்த்தபடி இருந்த ஆரவ்வை நோக்கி இரு கைகளையும் நீட்டி அவனை வாவென அழைக்க நொடியும் தாமதிக்காமல் அவளை இறுக்கிக்கொண்டான்.

அவளின் அணைப்பில் தனக்குள் ஆறுதல் தேட முயன்றவனின் உள்ளமெல்லாம் ஏதோ இனம் புரியாத பயம் வியாப்பித்திருந்தது. இன்னும் பதினோரு நாளில் நிலாவின் சர்ஜரி. சர்ஜரிக்கு பின் அவளின் சுயநினைவில் தான் நினைவில் இல்லாமல் போனால் எந்தளவிற்கு தன்னால் அதை தாங்கமுடியும் என எண்ணி உள்ளுக்குள் சிதைய ஆரம்பித்திருந்தான் ஆரவ்.

அதுவும் அவள் மறந்துட்டீங்களா? என்று கேட்ட நொடியில் இருந்து. ஒரு கேள்வியை அதுவும் அவளை கண்ட நொடியை மறந்துவிட்டதாக கேட்டதிலிருந்து அவனால் தாங்கமுடியவில்லை.

நிலா விளையாட்டாக தான் கேட்டாள், ஆனாலும் தான் எப்படி அந்நாளை மறப்பேன்? என மனதிற்குள் சிறுபிள்ளை போல புலம்பினான்.  அவளின் கேள்வியே தன்னை அடிவரை அசைக்கிறதே.

ஒருவேளை சர்ஜரிக்கு பின் தன் நினைவுகளை இழந்து அந்நியமாக ஒரு பார்வை தன்னை பார்த்துவிட்டால் அக்கணம் தான் மரித்து போய்விடமாட்டோமா? என கலங்கினான்.

அந்த நிலையை தனக்கு கொடுத்துவிடாதபடி நிலாவின் நினைவுகளும் திரும்ப வேண்டும், அதே நேரம் தன் நினைவுகளும் நிலாவுக்குள் உயிர்ப்புடன் இருக்கவேண்டும் என்று இறைவனை மனமார வேண்டிக்கொண்டான்.

மனதில் கவலை மேகங்கள் பல சஞ்சலங்களுடன் உலாவர நிலாவை அணைத்ததிலிருந்து ஆரவ்வின் பிடி கொஞ்சம் கொஞ்சமாக இறுகி அவளை மூச்சிற்கு திணற வைத்தது. அவள் திமிர ஆரம்பித்ததும் தான் தன் தவறு புரிந்து அவளை விலக்கி நிறுத்தினான்.

“நிலா, நிலாடா. ஆர் யூ ஓகே?…” மனம் பதற அவளை பார்த்து,

“சாரிடா…..நான்…… சாரி….. ஏ….தோ யோசனையில….. நான்தான் …. சாரிடா நிலா…”

நொடியில் தன்னை நிதானித்துகொண்ட நிலா ஆரவ்வின் அதிகப்படியான பதற்றம் என்னவென  புரியாமல் அவனை பார்க்க அவனின் முகத்தில் திடீரென பூத்திருந்த வியர்வை துளிகள் வேகமெடுத்து ஆறாக பெருக்கெடுக்க திகைத்துபோனாள்.

“ஆரவ் உங்களுக்கு ஏன் இப்படி வேர்க்குது? எனக்கொண்ணுமே இல்லை. பாருங்க நான் நல்லா தானே இருக்கிறேன்? உங்களுக்கு என்னாச்சு?…”

நிலாவின் கேள்வியில் சுதாரித்தவன் வியர்வையை துடைத்துவிட்டு, “நத்திங்டா, நீ மூச்சுவிட சிரமப்பட்ட இல்லையா? அதான் கொஞ்சம் பயந்துட்டேன்…” என கூறி அவளை பூவாக அணைக்க அவனையே புரியாது பார்த்திருந்தாள் நிலா.

நிலாவிற்கு செய்யவிருக்கும் சர்ஜரி பற்றி இன்னும் யாரும் அவளிடத்தில் கூறியிருக்கவில்லை. இப்போது வரை நிலாவிற்குமே அது தெரியவில்லை. சொல்லும் தைரியம் ஆரவ்விற்கும் இல்லை. யாரையும் அதை பற்றி நிலாவிடம் கூறவும் அவன் அனுமதிக்கவில்லை.

ஏற்கனவே எங்கே தனக்கு பழைய நினைவு திரும்பினால் ஆரவ்வை மறந்துவிடுவோமோ என அஞ்சி அவ்வப்போது ஆரவ்விடம் அழுது புலம்புபவள் எங்கே இதைப்பற்றி கூறி சர்ஜரிக்கு சம்மதிக்காமல் போகவும் வாய்ப்புள்ளது.

அதுபோன்ற சமயங்களில் தனக்குள் கரைபவளை தேற்ற ஆரவ் தான் மனதளவில் உடைந்துவிடுவான். அத்தகைய நேரங்களில் ஆரவ்வின் மீதான நிலாவின் காதல் மென்மையில் இருந்து வன்மையாக மாறிவிடும். அவளை சமாளிக்க ஆரவ்வே திணறிபோவான்.

அதனாலே அவளிடம் இன்றுவரை உண்மையை மறைத்து தனக்குள் மட்டுமே வேதனையை சுமந்து அதன் வலியில் வெதும்பி அவளின் காதலில் தொலைந்து தன் காதலை காப்பாற்ற வழி தெரியாமல் வெளியில் தைரியமாக இருப்பது போல வேஷம் கட்டிக்கொண்டிருக்கிறான். ஆம் வேஷேமே.

நிலாவோ தனக்கு செய்யும் பரிசோதனைகள் அனைத்துமே நடந்த விபத்தினால் தன்னுடைய ஆரோக்யத்தை பற்றிய பரிசோதனைகள் என்றும், அடிக்கடி வரும் தலைவலிக்காகவும் என்றும் மட்டுமே என இன்று வரை நம்பிக்கொண்டிருக்கிறாள்.

இப்போதும் நொடியில் நிதானமிழந்து தன் மனக்கட்டுப்பாட்டை மீறி தன் பயத்தை வெளிப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் நிலாவை திசைதிருப்ப தன் உற்சாகத்தை வலிய முகத்தில் கொண்டுவந்தவன்,

“ஆமா எதுக்காக  திடீர்னு இப்படி ஒரு கேள்வி டார்லி? உனக்கு தெரியாதா நான் உன்னை பார்த்த நாளை மறப்பேனா இல்லையான்னு? உனக்கே இந்த கேள்வி அபத்தமா இல்லையா?…”

நிலாவை அணைத்த தன் கைகளால் அவளை சீண்டியபடி கேட்க அவளும் அவன் சற்றுமுன் இருந்த நிலையை மறந்து,

“காரணமாகத்தான் கேட்டேன் ஆரவ். இப்போ நீங்க என்னை பார்த்த அந்த நொடியில இருந்து இந்த நிமிஷம் வரைக்கும் அச்சுபிசக்காம அப்படியே சொல்லும் போது இந்த உலகத்திலேயே மிகப்பெரிய அதிர்ஷ்டசாலி நான் தான்னு ஒரு கர்வம் எனக்குள்ள…”

“எனக்கு கிடைச்சது போல ஒரு கணவன் இந்த உலகத்தில உண்டா? அப்டின்னு பெருமைபட்டுட்டு இருக்கேன். உங்க மனசுக்குள்ள நான் எந்தளவுக்கு பதிஞ்சுபோய் இருக்கேன்னு நினைக்க நினைக்க அப்படி  ஒரு சந்தோஷம்…” என நிலா கனவில் மிதந்தபடி கூற,

“சத்தியமா புரியலைடா நிலா?…” என பரிதாபமாக கேட்ட கணவனை பார்த்தவள்,

“ஹைய்யோ ஆரவ். நான் இப்படி நினைக்கிறது போல தானே அம்மாவும் நினைப்பாங்க? இத்தனை நாள் அப்பா மறந்ததை விடுங்க. ஆனா இன்னைக்கு அதுவும் புதுசா வந்த என் முன்னால அவங்களோட கல்யாணநாள் பத்தின ஞாபகமே இல்லாம அப்பா முழிச்சது அம்மாவுக்கு எந்தளவுக்கு காயத்தை எற்படுத்திருக்கும்னு தெரியுமா?…”

நிலா கூற வருவது புரிந்த ஆரவ்வும் அந்த திசையின் தன் எண்ணவோட்டத்தை பயணித்துப்பார்த்து அதில் உள்ள உண்மையை உணர்ந்துகொண்டான்.

“மாம் இப்படித்தான் நினச்சிருப்பாங்கன்னு நீ எப்படி கரெக்டா சொல்ற நிலா?…”

“அம்மா மட்டுமில்லை எந்த ஒரு பொண்ணுக்குமே கணவனிடத்தில் சில தனிப்பட்ட ஆசைகள், விருப்பங்கள், எதிர்பார்ப்புகள் எல்லாமே இருக்கும். அதுக்கு யாருமே விதிவிலக்கு கிடையாது. இதை கண்டுபிடிக்க பெருசா டாக்டருக்கு படிச்சிருக்கனும்னு ஒண்ணும் தேவையில்லை…”

ஆரவ்விடமிருந்து நான்கடி தள்ளி நின்று கூறியவள் அவன் முறைத்ததும் அறைக்குள் ஓட அவனும் அவளை துரத்திப்பிடித்து,

“வர வர வாய் ஜாஸ்தி ஆகிடுச்சு உனக்கு…” அவளின் இதழ்களை வருடியபடி கூற,

“வடிவு பாட்டி பேத்தியாச்சே? இவ்வளவு கூட பேசலைனா எப்படி?…” என மீண்டும் கலகலத்துகொண்டே வாயாட அவளை ரசனையாக மெய்மறந்து பார்த்தவன் ஏனோ அந்த நொடி இன்னமும் இன்னும் அவளை அதிகமாக நேசிக்க விரும்பினான்.

error: Content is protected !!