சிறிது நேரத்தில் டாக்டர் மேத்தா வெளியில் வந்து ஆரவ்வின் தோள்களில் தட்டி, “ஹேய் ஆரவ். டோன்ட் வொரி. சியரப் மேன்…” என புன்னகையுடன் கூறிவிட்டு அவனை கடந்துவிட பின்னால் வந்த ராகவ்வை பிடித்துகொண்டான் ஆரவ்.
“டாடி இப்போ நிலா எப்படி இருக்கிறா? நார்மலா தானே இருக்கிறா? ஒன்னும் பிரச்சனை இல்லையே?. மேத்தா ஒண்ணுமே சொல்லாம போறாரு…”
அவனை புன்னகையோடு பார்த்த ராகவ்வை முறைத்த ஆரவ், “கேட்டுட்டே இருக்கேன். கொஞ்சமும் பொறுப்பில்லாம அமைதியா இருக்கீங்க?.இப்போ சொல்லபோறீங்களா இல்லை நான் அவர்க்கிட்டையே கேட்டுக்கட்டுமா?…”
கோபமாக பேசிய மகனிடம் என்னவென கூற வாய் திறந்த ராகவ்வை இடைமறித்து, “வாட் இஸ் திஸ் ஆரவ். என்ன பிஹேவியர் இது? வர வர நீ சரியில்லை. உனக்கு எல்லா விஷயத்தையும் காரிடார்ல வச்சே சொல்லனுமா என்ன? ஏன் ரூம்க்கு போற வரைக்கும் பொறுமை கிடையாதா உனக்கு?…” கண்டிப்போடு பேசியவனை முறைத்த ஆரவ்,
“ப்ச் போதும்டா, உன்னோட ரூல்ஸ் லெக்சரை கேட்க எனக்கு நேரமில்லை. இதுக்குத்தான் நானும் வரேன்னு சொன்னேன்…” என்றவனை இழுத்துகொண்டு அறைக்குள் நுழைந்த அர்ஜூன் ராகவ்வை மட்டும் தன்னோடு அழைத்துகொண்டான்.
“ஆஷா நீ உன் பேஷன்ட்ஸ் எல்லோரையும் போய் பார்த்துட்டு வா…”
“நான் தான் ரவுண்ட்ஸ் முடிச்சுட்டேனே அஜூ…” என்றவளிடம்,
“அவங்க உன்னோட பேஷன்ட்ஸ். அவங்களை இந்த நேரம் தான் பார்ப்பேன்னு டைம் பிக்ஸ் பண்ணி பார்க்கிறேன்னு சொல்றது ரொம்பவே தப்பு. இன்னொரு முறை ரவுண்ட்ஸ் போகக்கூடாதுன்னு எந்த சட்டமும் இல்லைங்க மேடம். போங்க போய் பாருங்க…” என அவளை அனுப்பிவிட்டு தானும் உள்ளே நுழைந்துகொண்டான்.
அர்ஜூன் எப்போதுமே ஒரு தனித்துவமான மனிதன் தான். தன்னுடைய டியூட்டி டைம் மட்டும் தான் வேலை செய்வேன் என்று கூறாமல் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் ரவுண்ட்ஸ் சென்றுவிடுவான்.
அவனின் இந்த செயல் அசமந்தமாக இருக்கும் மத்த டாக்டர்ஸ், நர்ஸ் அனைவரையும் சுறுசுறுப்புடன் விழிப்போடு இருக்க செய்தது. எந்நேரம் வந்து எதை கேட்பானோ என்று பயத்துடனே தங்கள் கடமையை சரியாக செய்வார்கள். இதற்கு ஆரவ்வையும் பழக்கபடுத்திவிட்டான்.
அறைக்குள் நுழைந்ததும் மயக்கத்தில் ஆழ்ந்திருந்த நிலாமுகியை சென்று பார்த்தவன் அவளை பார்த்தபடி சிறிது நேரம் அப்படியே நின்றுவிட்டான். உள்ளே வந்த அர்ஜூன்,
“இவன் உள்ளே வந்த வேகம் என்ன? இப்போ பாருங்க. வொய்ப் பக்கத்துல நின்னு அவளை ரசிக்கிறதை. சரி வாங்கப்பா நாம கொஞ்ச நேரம் கழிச்சு வருவோம்…” என அர்ஜூன் கூறவும் ராகவ்வும் அதை ஆமோதித்து கிளம்ப முயல இருவரையும் பிடித்து இழுத்து நிறுத்தினான் ஆரவ்.
“கொஞ்சம் எமோஷனல் ஆகிட கூடாதே. என்னை காலி பண்ணிடுவீங்க…” என்றவன் முகத்தை தீவிரமாக்கி கொண்டு இருவரையும் பார்த்தான்.
“நாம் அங்க போய் பேசலாம்…” என நிலா உறங்கிகொண்டிருந்த அறையை சாத்திவிட்டு அதை ஒட்டி இருந்த அறைக்குள் சென்றனர்.
“சொல்லுங்கப்பா, நிலாவுக்கு சர்ஜரில எந்த ஆபத்தும் இல்லைன்னு உங்க ரெண்டுபேரோட ரியாக்ஷன்ல நல்லாவே தெரியுது…” என்றவன் அங்கே வைத்திருந்த நிலாவின் ரிப்போர்ட்ஸ் பைலை எடுத்தவன் தன் பார்வையை ஓடவிட்டான்.
வெளியில் இருக்கும்போது இருந்த எந்த பதட்டமும் படபடப்பும் இன்றி தெளிவான முகத்தோடு அமர்ந்திருக்கும் ஆரவ்வை பார்த்து வியக்கத்தான் செய்தார் அவனின் தந்தை.
“நீ சொல்றது சரிதான் ஆரவ். சர்ஜரியில எந்த ப்ராப்ளமும் இல்லைதான். அந்த ப்ளட்க்ளாட் அபாயமான அந்த பகுதியை விட்டு நகர்ந்திருக்கு. அதனாலதான் லாஸ்ட் டூ டைம்ஸ் வந்த தலைவலியும் நிலாவுக்கு அளவுக்கதிகமா தாங்கமுடியாததா இருந்திருக்கு…”
“இப்போ சர்ஜரி ரொம்ப கஷ்டமா இருக்காதுன்னு மேத்தா சொல்றாரு. ஆனா சர்ஜரிக்கு பின்னால நிச்சயம் பழைய நினைவுகள் நிலாவுக்கு திரும்ப 90% சான்ஸ் இருக்குன்னு சொல்றாரு. அதான் கொஞ்சம் கவலையா இருக்குது…”
யோசனையான முகத்தோடு அர்ஜூன் கூறவும் அவனை இதமாக பார்த்த ஆரவ்,
“இதுல யோசிக்க என்ன இருக்கு? ஒரு கவலையும் வேண்டாம். நிச்சயமா என்னோட நிலாவுக்கு பழைய நினைவுகள் திரும்பினாலும் அவளோட ஆழ்மனசுல இருக்கும் என் காதல் என்னை அவளோட இணைக்கும்னு நான் நம்பறேன் அஜூ…”
“என்னை விட அவ என் மேல வச்சிருக்கிற காதல் இருக்கு பாருங்க, அதை அதனோட வலிமையை அது கொடுக்கும் உணர்வுகளை வெறும் வார்த்தையால் சொல்லமுடியாது. என்னை விட நிலா என்னை அதிகமா நேசிக்கிறா டாடி…”
அர்ஜூனிடம் ஆரம்பித்து தன் தந்தையிடம் முடித்தவனை பெருமையாக பார்த்தார் ராகவ். மகன் அவனின் காதல் வாழ்க்கையை உணர்வுபூர்வமாக வாழ்கிறான் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை அவருக்கு.
அவர் தான் வீட்டில் தினமும் பார்க்கிறாரே. நிலா போல ஒரு மருமகள் கிடைக்க தாங்கள் நிச்சயம் அதிர்ஷ்டம் புரிந்திருக்க வேண்டும் என அவ்வப்போது நினைத்துகொள்வார். அவளை இதே போல ஆரவ்வின் மீதான நேசம் சற்றும் குறையாமல் தங்களிடம் திருப்பி கொடுத்துவிடுமாறு ப்ராத்தித்துக்கொண்டார்.
அவரின் கவலை புரிந்தவனோ, “ப்ளீஸ் டாடி. நத்திங் வொரி டாடி…” என்றவன்,
“நீங்க தான் எனக்கு தைரியம் சொல்லனும். நீங்களே இப்படி உடைஞ்சு நின்னா நா…..ன்…. நான் என்ன பண்ணுவேன்?…” வேறு திசையில் பார்த்தபடி பேசியவனின் குரல் அவனையும் மீறி தழுதழுத்தது.
அதில் இருக்கையை விட்டு உடனே எழுந்த ராகவ் தன் வயிற்றோடு சேர்த்து ஆரவ்வை அணைத்துக்கொள்ள அவனும் தந்தையின் இடையை கட்டிக்கொண்டான். அர்ஜூன் தான் இப்படியே இவர்களை விட்டால் சரியில்லை என எண்ணி,
“அட போதும்ப்பா. டேய் சக்கு முதல்ல நீ நிலாவை போய் பாரு. இப்போ எழுந்துடுவா. போ…” என அவனை அனுப்பிய பின் ராகவ்வின் புறம் திரும்பியவன்,
“என்னப்பா நீங்க? நீங்களே அவனை கோழையாக்கிடாதீங்க. அவனை இப்படியே இருக்கவிடுங்க. அவனை பார்க்கும் போது நமக்கே ஒரு எனர்ஜி கிடைக்குது. இப்போ பாருங்க ஒரு நிமிஷம் எவ்வளோ பீல் பண்ணிட்டான். அவன் எப்போவும் போல இருக்கட்டும்…”
அர்ஜூனின் கூற்றை ஆமோதித்தவர் கலங்கிய கண்களை துடைத்துக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியேறவும் அர்ஜூன் அங்கேயே அமர்ந்துவிட்டான்.
இன்னும் பதினைந்து நாளில் சர்ஜரியை வைத்துகொள்ளலாம் என்று மேத்தா கூறி சென்றிருக்கிறார். இதை ஆரவ்விடம் கூறவேண்டும் என்று அமர்ந்திருந்தான்.
நிலா எழுந்துகொள்ளும் அறிகுறி தெரியாததால் மீண்டும் அர்ஜூனிடம் வந்தவன் அவன் அமர்ந்திருக்கும் விதத்தை பார்த்து,
“என்னடா ஏன் இப்படி டல்லடிக்கிற? சத்தியமா பார்க்கமுடியலை. கொஞ்சம் முகத்தை நல்லாத்தான் வைக்கிறது?…” குரலில் கேலி இழையோட பேசியவனை முறைத்தவன்,
“இனிமே நிலாவை கொஞ்சம் இன்னும் கேர் எடுத்து பார்த்துக்கோடா. அவளோட தலையில் இருக்கிற பிளட்க்ளாட் கொஞ்சம் தள்ளி மூவ் ஆகிருக்கிறது நல்லதுக்குன்னும் எடுத்துக்க முடியாது. கெட்டதுக்குன்னும் எடுத்துக்க முடியாது…”
“இன்னும் பிஃப்டீன் டேய்ஸ்ல சர்ஜரி பிக்ஸ் பண்ணிருக்காரு மேத்தா. அதுக்கிடையில மறுபடியும் தலைவலி வந்தா இங்கயே அட்மிட் பண்ணிடலாம். நாம பக்கத்துலையே இருந்துப்போம்…”
இவ்வளவு பேசிய பின்னும் ஏனோ அர்ஜூனின் முகமும் மனமும் தெளிவில்லாமலே இருந்தது. அதை கண்ட ஆரவ் தன்னையும் நிலாவையும் எண்ணி கவலை கொள்கிறான் என நினைத்து ஆறுதலாக புன்னகைத்து அவனின் தோளில் தட்டிவிட்டு,
“ஓகேடா, நான் நிலாவை கூட்டிட்டு வீட்டுக்கு கிளம்பறேன். நீ முதல்ல உன் ஆஷாவை பாரு. அப்போதான் இந்த பீல்ல இருந்து நீ வெளில வருவ. நானே தெளிவா இருக்கும்போது நீ ஏன்டா. உனக்கு இது சூட் ஆகவே இல்லை…”
ஆரவ் கூறிவிட்டு சென்ற பின்னும் அர்ஜூனின் மனம் சமாதானம் அடையவில்லை. ஏதோ தவறாக நடக்கப்போவதாக அவனின் உள்மனம் அறிவுறுத்திக்கொண்டே இருந்தது.
காரணமில்லாமல் இப்படி உள்ளம் அடித்துகொள்வதா? இதற்கு என்ன அர்த்தம்? ஏன் ஆரவ்வையும், நிலாவையும் எண்ணி இந்த அர்த்தமில்லா பயம்? இது சரியில்லையே? அர்ஜூனிற்கு யோசிக்க யோசிக்க தலைவலிக்க ஆரம்பித்தது.
அவன் எண்ணியது போலவே அடுத்த நான்கு நாட்களில் அவனின் பயம் மெய்யாகும் படியான நிகழ்வுகள் நடந்தேறி ஆருயிர் நண்பனான ஆரவ்வை நிலைகுலைந்த நிலையில் காண வேண்டியதாகிவிட்டது.