தண்ணீரை குடித்து முடித்தவர், “ஹ்ம் போயிட்டுத்தான் வந்தோம். அவரு இன்னைக்கு வேற ஒரு சோலியா கிளம்பினாரு. அதான் தகவலை சொல்லிட்டு கிளம்பிட்டோம்…” என்றவர் தினகரனை பார்க்க,
“மாமா எங்கே? வீட்டுக்கு போய்ட்டாரா? தைரியமா இருக்காரா? நீங்க பார்க்க போனவர் நம்பிக்கையா தானே சொன்னார்?…” என வரிசையாக அவன் கேட்க,
“தைரியமான்னு சொல்லமுடியாது. ஏதோ இருக்கான். எதை தின்னா பித்தம் தெளியும்னு நினைக்கிறது போல என்ன செஞ்சா பொண்ணு கிடைப்பாளோன்னு ஏங்கிட்டு இருக்கிறான். வர வழியில சேகரனுக்கு அவன் அக்காகிட்ட இருந்து போன் வந்துச்சுன்னு அவங்க ஊர்க்கிட்ட இறங்கிட்டான்…”
சொல்லிவிட்டு முத்தையா சேரில் சாய்ந்து கண்களை மூடிக்கொள்ள வண்ணமதியும் முத்தழகியும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டனர். சேகரன் அவ்வளவு சாமான்யமாக வள்ளியம்மை கூப்பிட்டவுடன் போய்விடும் ஆள் கிடையாது என்பது இவர்களுக்கு நன்கு தெரிந்த ஒன்று.
பின்கட்டிற்கு சென்ற மருமகளின் பின்னால் சென்றவர், “விஷயம் பெருசா இருக்கும் போலையே மதி?…” என்ற முத்தழகியிடம்,
“எதுவா இருந்தா நமக்கெதுக்கு அத்தை? அந்த வள்ளியம்மை அம்மா விஷயத்துல நாம தலையிடறது சரியில்லையோன்னு தோணுது. . அவங்க அக்கா தம்பிக்குள்ள ஆயிரம் இருக்கும். என்ன தான் ஒரே குடும்பமா பழகி இருந்தாலும் நாம மூணாவது மனுஷங்கதானே?…”
வண்ணமதி சொல்வதும் சரியெனப்பட அமைதியானார் முத்தழகி. ஆனாலும் உள்ளுக்குள் எதுவோ முரண்டிகொண்டு தான் இருந்தது.
அங்கே வள்ளியம்மை வீட்டில் இடிந்துபோய் அமர்ந்திருந்தார் குணசேகரன். முகமெல்லாம் வியர்த்துக்கொட்ட ரத்தபசையின்றி வெளிறிப்போய் இருந்தது. அவரது இந்த அதிர்ச்சியை ஒருவித குரூரத்துடன் ரசித்தபடி அமர்ந்திருந்தார் முருகேசன்.
நிலாமுகி வகிட்டில் குங்குமம் துலங்க கண்கள் சிரிக்க பூரிப்போடு ஆரவ்வுடன் ஜோடியாக நின்ற போட்டோவை பார்த்து “தன் மகளா இது? அய்யஹோ இது உண்மையாக இருந்திட கூடாதே…” என மனம் அரற்றியது.
கண்கள் கலங்க தொய்ந்துபோய் அமர்ந்திருந்தவர் தயாளனை நிமிர்ந்து பார்க்க, “நான் டெல்லிக்கு இரண்டுநாள் ட்ரெயினிங்க்காக போய்ருந்தப்போ அங்க பார்த்தேன் மாமா…”
தயாளன் சென்னையில் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருப்பவன். தாய் பேச்சிற்கு அடங்கி நடக்கும் அமைதியானவன்.
பேச்சு எழாமல் அமர்ந்திருந்த மாமனை பார்த்து தானாகவே கூறியவன், “அடுத்த முக்கியமான விஷயத்தை இவரிடம் கூறினால் இவரால் தாங்கிக்கொள்ள முடியுமா?…” என யோசித்து தயங்கி நிற்க வள்ளியம்மை தான் சொல்லு என்பது போல சைகை காண்பித்ததும்,
“மாமா இன்னொரு முக்கியமான விஷயம்…” என்றவனை ஏறிட்டு பார்த்தவர்,
“என் பொண்ணுக்கு கல்யாணம் ஆகிருக்கு. அதுவும் இதுவரை அவ அறியாத ஊர்ல யாருன்னே தெரியாத ஒருத்தரோட. இதை விட முக்கியமா அப்படி என்ன இருக்கபோகுது மருமகனே…” என சோர்ந்த குரலில் கூற,
“இருக்குதுங்க மாமா. வந்து…. நம்…ம ……….. நம்ம நிலாவுக்கு பழசெல்லாமே மறந்து போச்சு. நாம யாருமே அவளோட நினைவில இல்லை…” என்றதும் துடித்துப்போய் படாரென எழுந்தவர் அவனின் அருகில் நெருங்கி,
“என்ன சொல்றீங்க? என் பொண்ணுக்கு யாரையும் ஞாபகமில்லைன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?…” என பரிதவித்து கேட்க,
“தெரியும் மாமா. நான் நிலாக்கிட்ட பேசினேன். என்னை யாருன்னே அவளுக்கு தெரியலை. ஒரு ப்ரெண்ட் மூலமா தான் ரொம்ப கஷ்டப்பட்டு இந்த விஷயத்தை தெரிஞ்சிக்கிட்டேன்…”
“இல்லை அப்படி எதுவும் இருக்காது. ஒருவேளை உங்களை அங்க பார்த்ததும் அதிர்ச்சியில பயத்துல யாருன்னு தெரியாதது போல நடந்திருக்கலாமே?…”
“மகளுக்கு பிரச்சனை எதுவும் இருக்கக்கூடாதே” என சேகரன் மனம் தவிக்க பேசியவரை பரிதாபமாக பார்த்தவன்,
“என்னை பார்த்து பயந்து நடிக்க அவ எந்த தப்பும் பண்ணலையே மாமா? அவ என்ன இங்கிருந்து நம்மளை ஏமாத்திட்டா போனா? நிச்சயம் இல்லை…” என்றவன்,
“புரிஞ்சுக்கோங்க மாமா. அவ இயல்பா தான் என்னிடம் பேசினா. என்னை பார்த்த பயமோ அதிர்ச்சியோ எதுவுமே அவகிட்ட இல்லை. நான் நிச்சயமா அடிச்சு சொல்லுவேன். நிலாவுக்கு ஏதோ நடந்திருக்கு. அதை நாம போய் அவ ஹஸ்பன்ட் கிட்ட, அவங்க குடும்பத்தோட பேசினாதான் தெரிஞ்சிக்க முடியும்…”
“அவங்க பத்தி எல்லாமே நான் விசாரிச்சுட்டேன். நிலா ஹஸ்பன்ட் ஒரு பேமஸ் டாக்டர். பெரிய ஹாஸ்பிட்டல் வச்சிருக்கார். அவங்க பேமிலி பத்தி நல்லா விசாரிச்சுட்டேன். எப்போ போகலாம்னு நீங்க சொன்னீங்கனா நான் ஆபீஸ்ல லீவ் சொல்லிட்டு வரேன்…”
குணசேகரனின் அருகில் அமர்ந்து அவரின் கைகளை ஆறுதலாக பற்றியபடி தயாளன் கூற அவனின் வாஞ்சையில் இன்னமும் மருகிப்போனார் குணசேகரன்.
“இவருக்கு போய் என் பெண்ணை கொடுக்க மறுத்தேனே?” என தன்னை நினைத்தே வெட்கினார்.
முதலில் நிலாமுகியை கேட்டு வள்ளியம்மை குணசேகரனிடம் பேச்சை துவங்க சேகரனோ மறுத்துவிட்டார்.
சொந்தத்தில் திருமணம் சரியில்லை என்பது அவரது கருத்து. அதைவிட தன் அக்காவின் அடாவடி குணமும், நிலாவின் அமைதியான குணமும் அவரை யோசிக்கவைத்தது. நிச்சயம் நிலாவினால் வள்ளியம்மையை தாக்குபிடிக்க முடியாதென நம்பினார்.
அதை முன்னிட்டே அவர் அந்த சம்பந்தத்தை மறுத்துவிட்டார். அதிலும் இப்படி ஒரு பேச்சுவார்த்தை நடந்ததையே அமுதாவிடம் கூட அவர் சொல்லிக்கொள்ளவில்லை.
இதில் வள்ளியம்மைக்கு பெரிய ஏமாற்றம். அதை மனதினுள் வைத்துக்கொண்டே நேரம் கிடைக்கும் போதெல்லாம் மெல்ல மெல்ல குத்திக்காட்டிகொண்டிருந்தார். இதை வைத்தே நிலாமுகி திருமணத்திற்கு வர முருகேசன் மறுத்துவிட்டார்.
இன்று தன்னுடைய ஆசை ஈடேற கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தை நழுவவிட வள்ளியம்மைக்கு மனதில்லை. அவரின் காதுகளில் அசரீரி ஒலிப்பது போல அந்த குரல் மீண்டும் மீண்டும் அந்த வார்த்தைகள் ரீங்காரம் இட்டது.
“உன் மகனின் எதிர்காலம் செழிக்க அந்த பெண்ணை இழந்துவிடாதே” என்னும் குரல் அவருக்கு இப்போதும் கேட்டுக்கொண்டே இருந்தது. அவரின் பேராசைக்கு முருகேசனும் தூபம் போட நினைத்ததை நடத்திக்காட்ட அடுத்த ஆயுதத்தை கையில் எடுத்தார் வள்ளியம்மை.
எப்போதும் வள்ளியம்மையின் பேச்சையும் வார்த்தைகளையும் ஆராயும் சேகரன் இப்போது அதை செய்யத்தவறி முழுமையாக வள்ளியம்மையின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டார்.
அதன் விளைவு அமுதா, ஜீவா, தினகரன் குடும்பத்தினரிடமும் நண்பரை சந்திக்க செல்வதாக பொய்யுரைத்துவிட்டு தயாளன் வள்ளியம்மையோடு டெல்லிக்கு கிளம்பிவிட்டார்.
அவர் இப்படி திடீரென சென்றதில் முத்தழகியை தவிர வேறு யாருக்குமே சந்தேகம் எழவில்லை. அவருக்கோ வள்ளியம்மையின் வரவும், சேகரனை அவசரமாக அவர் வீட்டிற்கு அழைத்ததும், பின் மறுநாளே சேகரனின் திடீர் பயணமும் எதையோ உணர்த்தியது. அவரால் என்னவாக இருக்கும் என்பது தான் அறியமுடியாமல் போனது.
——————————————————————————
ஹாஸ்பிட்டல் காரிடாரில் ஒரு இடத்தில் நிற்காமல் நிலையில்லாமல் நடந்துகொண்டே இருந்தான் ஆரவ். அதில் கடுப்பாகிவிட்டாள் ஸ்டெபி.
“நிலாவிற்கு நடக்கும் ஒவ்வொரு செக்கப்பிலும் இவனுக்கு இதே வேலையா போச்சு. இவனை என்னதான் செய்ய?” என அவனையே பார்த்திருந்தாள். பின் பொறுமை பறக்க,
“ஆரவ், சும்மா இங்கைக்கும் அங்கைக்குமா நடந்து நடந்து இந்த இடத்தையே தேய்ச்சிடாதே. என்னமோ பொண்டாட்டியை டெலிவரிக்கு அனுப்பிட்டு ரூம் வாசல்ல நின்னு தவிக்கிறது போல இருக்கு உன் ஆக்ஷன்ஸ் எல்லாம். தாங்க முடியலை…”
முகத்தில் பதட்டத்தோடு நடந்துகொண்டிருந்த ஆரவ்வை கேலி செய்தாள் ஸ்டெபி. அவளை முறைத்தவன்,
“வேணும்னா நீயும் உள்ளே போய் உன் ஹஸ்பன்ட் கூட இரு. அவனை விட்டுட்டு இருக்கமுடியாம தனியா இருக்கிற என்னை படுத்திட்டு இருக்காதே?…” எனவும் ஸ்டெபியின் முகம் சிவந்துவிட்டது.
ஆரவ் கூறியது போல இப்பொதெல்லாம் அர்ஜூன் எங்கிருக்கிறானோ அங்கே தான் ஸ்டெபியின் வாசம். ஆரவ் திருமணம் முடிந்த மறுநாளே தங்கள் வீட்டிற்கு சென்ற அர்ஜூன் அன்றைக்கே அவர்களது வாழ்க்கையையும் தொடங்கிவிட்டான்.
தானும் தன் மனைவியும் சேர்ந்துவிட்டதை கூட கிருஷ்ணனிடம் ஒரு தகவலாகவே தெரிவித்தவன் மேலும் பேச்சை வளர்க்காமல் நிறுத்திக்கொண்டான். அவ்வப்போது கல்பனா பேசினாலும் ஓரிரு வார்த்தைகளில் முடித்துவிடுவான்.
இப்போதெல்லாம் மகனுக்காக வேணும் தாங்கள் ஸ்டெபியை ஏற்றுகொண்டிருக்களாமோ என எண்ண தொடங்கியிருந்தார் கல்பனா. ஆனாலும் ஸ்டெபியை பார்த்து பேச அவருக்கு விருப்பமில்லை.
மகன் நன்றாக இருந்தால் போதும் என ஒதுங்கிக்கொண்டார். கிருஷ்ணன் அப்போதும் அதே கர்வத்தோடு அர்ஜூனை கண்டுகொள்ளாமல் இருந்துகொண்டார். கார்த்திக் மட்டுமே இரண்டு வீட்டிற்கும் பொதுவாக அங்குமிங்குமாக அலைந்துகொண்டிருந்தான்.
அர்ஜூனும் ஸ்டெபியின் குறை எதுவும் அவளை பாதிக்காதவாறு தங்களின் வாழ்க்கையை நிறைவாக வாழ ஆரம்பித்தான். அவ்வப்போது குழந்தை இல்லாதது ஸ்டெபியின் மனதை அழுத்தினாலும் அர்ஜூனிற்காக அதை வெளிக்காட்டாமல் தனக்குள்ளேயே வைத்துகொண்டாள் ஸ்டெபி.
மாதம் இரண்டு முறை என நிலாவிற்கு செக்கப் செய்தனர். சர்ஜரி செய்யுமளவிற்கு அவளின் உடல் தேறியுள்ளதா என பரிசோதிக்க வரும் வேளைகளில் எல்லாம் தர்ஷினி, இல்லையென்றால் ஸ்டெபி என ஆரவ்விற்கு சப்போர்ட்டிவாக உடன் இருப்பார்கள்.
இன்றைக்கு தர்ஷினி ஓபியில் பிஸியாக இருக்க ஸ்டெபி வந்துவிட்டாள். உள்ளே அர்ஜூன், ராகவ், டாக்டர் மேத்தா என அனைவரும் நிலாமுகியை பற்றிய ஆலோசனையில் இருக்க நேரம் செல்ல செல்ல ஆரவ்விற்கு தான் இங்கே பொறுமை பறந்தது.