நெஞ்சில் உறைந்த தேடல் – 14 (1)

தேடல் – 14

             திடீரென்று வந்து நின்ற வள்ளியம்மை குடும்பத்தினரை கண்டதும் அமுதாவிற்கு ஒன்றும் விளங்கவில்லை. அவரின் குழப்பமான முகத்தை பார்த்த முத்தழகி அவரை இடித்து,

“அமுதா வந்தவங்களை முதல்ல வாங்கன்னு கேளு. இப்படியா மசமசன்னு நிக்கிறது?…” என கடிய உடனே சுதாரித்த அமுதா அவர்களை வரவேற்றார்.

உள்ளே வந்தவர்கள் வரவேற்பறையில் அமரவும் முத்தழகி வண்ணமதியை அழைத்து வந்திருப்பவர்களுக்கு குடிக்க எடுத்துவரும் படி கூறிவிட்டு ஜீவாவையும் உடன் அனுப்பிய பின்  வள்ளியம்மையை பார்த்தார்.

சொந்த வீட்டில் உபச்சாரம் செய்வது போல ஆளுமையுடன் நடந்துகொள்ளும் முத்தழகியை காண காண வள்ளியம்மைக்கு பற்றி எரிந்தது. ஆனாலும் வாயை திறக்கமுடியாதே? தன் காரியம் நடக்க அமைதியாகத்தான் இருந்தாகவேண்டும் வள்ளியம்மைக்கு.

முத்தழகியின் கண்ணசைவில் பேச்சை தொடங்கினார் அமுதா.

“சொல்லுங்க மதினி. திடீர்ன்னு வந்திருக்கீங்க?…” என மெதுவாக கேட்க,

“ஏன் வந்தீங்கன்னு கேட்ப போல அமுதா? என் தம்பியை பார்க்க வந்தேன். ஏன் வரக்கூடாதா?…” குத்தலாக பேசியவரை கண்டு பதறிய அமுதா வாயை திறக்கும் முன்,

“இந்தா வள்ளியம்மை, காரணம் தெரியாத அளவுக்கு பச்சப்புள்ளையா நீ? என்னைக்குமில்லாம உன் புள்ளை, வீட்டுக்காரரோட வந்திறங்கினா அவளுக்கு அதிசயமா இருக்காதா? அதான் திகைச்சு போய் கேட்கிறா?…”

“என்னைக்கும் வராத மனுஷன் உன்னோட புருஷன். உன் பிள்ளையை கேட்கவே வேண்டாம். உன்னோட வந்துட்டு உன் கூடவே கிளம்பிடுவான். ஏன் நீயும் கூட தான் ஐஞ்சு மாசம் முன்னாடி வந்தவ. அன்னைக்கு போனவ திரும்ப இப்போதான் வந்திருக்க?…”

திடீரென்று அமுதாவை இடைமறித்து இடக்காக முத்தழகி கூறவும் இன்னமும் கொதித்துபோனார் வள்ளியம்மை.

“இவரிடம் யார் கேட்டது? எதற்கு இவர் பேசுகிறார்?. என்ன உரிமை இவருக்கு?. ஒரே குடும்பமாக பேசும் பொழுது ஒதுங்கி நிற்கவேண்டியது தானே?” இப்படித்தான் இருந்தது அவரது நினைப்பு.

பதிலின்றி அமைதியாக இருந்த மனைவியை பார்த்த முருகேசன்,

“வள்ளி வந்த வேலையை மட்டும் பார்த்துட்டு கிளம்புவோம். தேவையில்லாத பேச்சு எதுக்கு உனக்கு…” என முடித்துக்கொள்ள வள்ளியம்மையும் அதை ஆமோதித்து தலையாட்டினார்.

முருகேசனுக்கு எப்போதும் வீட்டு மாப்பிள்ளை செருக்கு குறையாமல் இருப்பதில் அலாதி ப்ரியம். கொஞ்சம் மமதையோடே நடந்துகொள்வார். விரல்நுனியில் மற்றவர்களை ஆட்டிவைக்க நினைப்பவரிடம் குணசேகரன் ஓரளவிற்கு தழைந்து போனாலும் எல்லா விஷயங்களிலும் இறங்கி செல்லாமல் இருப்பதில் பெரும் குறை முருகேசனுக்கு.

எப்போதாவது தேவையென்றால் மட்டுமே தவிர்க்கமுடியாமல் குணசேகரன் வீட்டிற்கு வந்து செல்பவர் நிலாமுகியின் திருமணத்திற்கு கூட வருவதை தவிர்த்துவிட்டார். அதுவும் நிலாமுகியை தயாளனுக்கு பெண் கேட்டும் தரமறுத்ததால் உண்டான சடவு.

நிலாமுகி காணாமல் போன இத்தனை மாதங்களில் என்ன ஆகிற்று என்று கூட விசாரிக்க வராதவர் இன்றைக்கு மனைவி மகனிற்காக மட்டுமே வந்து நின்றார் காரணகாரியத்தோடு.  

வள்ளியம்மையை பார்வையால் துரிதபடுத்த அவரும்  புரிந்துகொண்டு, “அமுதா என் தம்பிக்கிட்ட முக்கியமான விஷயம் பேச வந்திருக்கோம். எங்க போயிருக்கான் அவன்?…”

“முத்தையா அண்ணன் கூட  நிலா விஷயமா யாரையோ பார்க்க போய்ருக்காங்க மதினி. வர சாயங்காலம் ஆகிடும்னு சொல்லிட்டுதான் போய்ருக்காங்க. என்ன விஷயம்னு என்கிட்டே சொல்லுங்க. அவுக வரவும் விவரத்தை சொல்லிடறேன்…”

அவர் கூறும் பொழுதே காபியுடன் வண்ணமதி வந்துவிட்டாள். ஜீவாவிடம் காபியை கொடுத்துவிட்டு அவள் முத்தழகியுடன் நின்றுகொண்டாள்.

“இல்லை சேகரன் வரட்டும். அவன்கிட்ட தான் சொல்லனும்…” கத்தரித்தது போல வெட்டி பேசிய வள்ளியம்மையை கடுப்போடு பார்த்தார் முத்தழகி.

காபியை வாங்கி குடித்துவிட்டு எழுந்துகொண்டவர் வெட்டும் பார்வையொன்றை செலுத்திவிட்டு தயாளனை பார்க்க அவனோ சத்தமின்றி எழுந்து வாசலை நோக்கி விரைந்தான். உடன் முருகேசனும்.

“விஷயத்தை நான் தம்பிக்கிட்டையே பேசிக்கறேன்…” என்றவர் கிளம்பிவிட்டார்.

எதற்கு வந்தார்கள் என்னும் விவரம் புரியாமல் முத்தழகி யோசிக்க அமுதா விடுதலை உணர்வுடன் நிம்மதியானார். எங்கே வந்தவர்கள் நிலாமுகியை பற்றி பேசி மனதை நோகடித்துவிடுவார்களோ என பயந்துவிட்டார்.

அதனால் அமுதாவிற்கு என்ன விஷயமாக வந்தார்கள் என சிந்திக்கும் எண்ணமில்லாமல் போனது. மகளை பற்றிய செய்தியோடு வந்திருக்கிறார்கள் என தெரிந்திருந்தால் இப்படி பேசாமல் விட்டிருக்க மாட்டார் தான்.

“எதுக்கு வந்தான்னு ஒரு வார்த்தை சொல்லிட்டு போனா குறைஞ்சா போய்டுவாங்க. என்ன மனுஷி இவங்க? ச்சீ. இவங்கலாம் எப்படித்தான் எங்கப்பாகூட வந்து பிறந்தாங்களோ?…” என ஜீவா கோபம் கொள்ள,

“ஜீவா பெரியவங்களை அப்படி பேசக்கூடாது. பொறுமை வேணும். அதுவும் அவங்க உன்னோட சொந்த அத்தை. விட்டுக்குடுக்காம பேசி பழகு…” என வண்ணமதி கடிந்துகொள்ள,

“நீங்களும் பார்த்தீங்க தானே மதி அக்கா. அவங்களுக்கு எங்கம்மா என்ன எதிரியா? எப்படியெல்லாம் நடந்துக்கறாங்க பாருங்க. இதுல பொறுமை எப்படி இருக்கும்?…”  

“அவங்களோட இயல்பு அதுவாக இருந்தாலும் அதனால உன் இயல்பும் குணமும் மாறக்கூடாது. கோபத்தில் எதுவும் யோசிக்காமல் பேசாதே…” மீண்டும் அதையே கூறினாள் வண்ணமதி.

அதை பார்த்த அமுதா, “மதினி நீங்க ரொம்ப குடுத்துவச்சவங்க, இதுபோல ஒரு பொண்ணு கிடைக்கிறதுக்கு. என்ன அழகா பேசுது…” என வண்ணமதியின் கன்னத்தை தடவியபடி கூற பெருமையாக பார்த்தார் முத்தழகி.

வண்ணமதிக்கும், முத்தழகிக்கும் மேலும் சிலமணி நேரம் அங்கேயே பேச்சில் கழிந்தது. தினகரன் மொபைலில் அழைக்கும் வரை. அதன் பின் அமுதா, ஜீவாவிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினர். அவர்கள் சென்றதும் மீண்டும் வெறுமையை நிரப்பிக்கொண்டது நிலாமுகியின் இல்லம்.

முத்தழகியும் வண்ணமதியும் வீடு வந்து நுழையவும் தினகரன் வரவும் சரியாக இருந்தது.  அதுவரை முத்தையா வந்திருக்கவில்லை. முகம் கழுவி உடை மாற்றிவிட்டு முற்றத்தில் வந்து அமர்ந்தவன்,

“என்னம்மா அமுதாத்தை எப்படி இருக்காங்க? ஜீவா படிச்சாளா?…” என தாயிடம் கேட்டபடி மனைவி குடுத்த காபியை வாங்கிக்கொண்டான்.

“இம்புட்டு அக்கறை இருக்கிற மவராசன் இந்தா இருக்கிற வீட்டுக்கு ஒரு எட்டு வந்து பார்த்துட்டு ரெண்டு வார்த்தை ஆறுதலா பேசிட்டு வரது. அவுகளுக்கும் கொஞ்சம் நிம்மதியா இருக்குமில்ல…”

முத்தழகியை ஒரு பார்வை பார்த்தவன் பதில் பேசாமல் அமைதியாக காபியை பருக வண்ணமதியோ இதை கண்டுகொள்ளாமல் அங்கிருந்த நாளிதழை புரட்டிகொண்டிருந்தாள்.

மகனின் இந்த அழுத்தத்தில் முத்தழகிக்கு அலுப்பு தட்ட, “எப்போதுதான் எல்லோரோடும் ஒட்டி வாழ போறானோ?” என அவர் மனம் ஆயாசமானது. சிறிது நேரத்தில் முத்தையாவும் வர முத்தழகி பரபரப்பானார்.

துண்டை உதறிக்கொண்டு சேரில் அமர்ந்தவரை பார்த்தவர், “என்னங்க போன விஷயம் என்னாச்சு?…” என ஆர்வமாக கேட்டார் முத்தழகி.

தினகரன் ஒன்றும் கேட்காமல் பார்த்தபடி அப்படியே இருக்க முத்தையாவிற்கு தண்ணீரை கொண்டுவந்து கொடுத்துவிட்டு குடித்து முடிக்கும் வரை அவரருகிலேயே நின்றாள் வண்ணமதி.

error: Content is protected !!