நிலாவோ கணவனின் நேசத்தை நெஞ்சில் சுமந்தபடி அவனின் காதலை கண்களால் பருகியபடி அவனின் சிறு பார்வையையும் சிந்தாமல் சிதறாமல் இதயம் முழுக்க அவனின் மீதான காதலை அள்ளி அள்ளி நிரப்பிக்கொண்டிருந்தாள்.
அவனோடு தான் கழிக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் மனப்பெட்டகத்தினுள் பத்திரப்படுத்திக்கொண்டு வாழ ஆரம்பித்திருந்தாள்.
தனது பழைய நினைவுகள் மீண்டு வந்து அவனை மறக்கவைத்தாலும் அவனோடு தான் நகர்த்திய பொன்னான நொடிகள் அனைத்தும் அவனின் நேசத்தை தனக்குள் உயிர்ப்போடு வைத்து அவனை அடையாளம் காட்டும் என்று நம்பினாள்.
ஆரவிற்கும் அவளின் நிலை புரியாமல் இல்லை. “கலக்கம் ஏனடி பெண்ணே?எந்த சூழ்நிலையானாலும் உன்னை விடேன் பெண்ணே” என்பது போல ஆரவ் வார்த்தையால் இல்லாமல் செயல்களில் அவளை நொடி பொழுதும் விலகாமல் உயிரென காத்தான்.
——————————————————
“மதி, போகலாமாம்மா?…” என கேட்டபடி கூடையில் சில பலகார பாத்திரங்களை அடுக்கிக்கொண்டே உள் நோக்கி சத்தமிட்டு அழைத்தார் முத்தழகி.
“வந்துட்டேன் அத்தை. பெரிய மாமா, சேகரன் அப்பா கூட நிலா விஷயமா வெளியூர் கிளம்பறாங்களாம். மாமா பேங்க் போறாங்க. அதான் மறக்காம மாமாவோட பாஸ்புக் எடுத்து குடுக்க போனேன். கிளம்பற அவசரத்துல விட்டுட்டு போய்டுவாங்களே…”
அவசரமாக வந்தவள் முத்தழகியுடன் பேசிக்கொண்டே அடுக்கறைக்குள் சென்று அங்கு சமைத்து வைக்கபட்டிருந்த உணவுகளை எடுத்து கேரியரில் போட்டுகொண்டிருந்தாள் வண்ணமதி.
“அங்கயே நாம மதிய சாப்பாடும் சாப்ட்டுக்கலாம் அத்தை. பெரிய மாமாவும், மாமாவும் வர சாயங்காலம் ஆகிடும்ல. அங்க சேகரப்பாவும் இல்லை. இங்க நாம அமுதாம்மாவை கூப்பிட்டா கண்டிப்பா வரமாட்டாங்க. ஜீவாவால அவங்களை தனியா விட்டுட்டு வரமுடியாது…”
“அதுக்கு பதிலா நாம அங்க இருக்கலாம். அதான் சாப்பாட்டை டிபன்ல அடைச்சுட்டிருக்கேன்…” என கூறியவளை வாஞ்சையாக பார்த்த முத்தழகி வண்ணமதியை தன் புறம் திருப்பி அவளின் முகத்தை நெட்டிமுறித்தவர்,
“நீ போய் உன் புருஷனை அனுப்பிட்டு வா. இதை நான் கூடைல எடுத்து வச்சிடறேன்…” என அவளை அனுப்பிவிட்டு அவள் வேலையை தான் பார்க்க ஆரம்பித்தார்.
தினகரன் உள்ளிருந்தபடி இவையனைத்தையும் கேட்டுக்கொண்டு தான் இருந்தான். வண்ணமதி வந்ததிலிருந்து தன் வீட்டில் இன்றியமையாதவளாக எப்படி ஒன்றிவிட்டாள் என நினைக்கும் போதே தினகரனின் மனம் கனிந்தது.
திருமணம் முடிந்து இந்த ஐந்து மாதங்களில் மெல்ல மெல்ல தினகரனின் மனதை வண்ணமதி அவளறியாமலே ஆக்ரமிக்க ஆரம்பித்தாள். அதையும் தினகரன் உணரத்தான் செய்தான். அவளின் செயல்கள் தன்னை கவருவதை விருப்பத்துடனே ஏற்றான்.
முத்தழகிக்கும் முத்தையாவிற்கும் இப்போது எல்லாமே வண்ணமதி தான். அவளில்லாமல் அங்கே எதுவும் நடக்காது என்னும் அளவிற்கு அந்த வீட்டின் வேராக மாறிவிட்டாள்.
“மாமா கிளம்பியாச்சா?…” என கேட்டபடி கைகளை துடைத்துக்கொண்டு தன் முன்னால் வந்துநின்ற மனைவியை பார்த்தவன்,
“நான் கிளம்பிட்டேன். அம்மாகிட்ட நான் சொல்றதுக்குள்ள எல்லாமே நீயே சொல்லிட்ட போல. சரி அமுதாத்தையை பார்த்துக்கோ. ஜீவாக்கு எக்ஸாம் வருது. நிச்சயம் அவ படிச்சிருக்கமாட்டா. நீ கொஞ்சம் கண்டிச்சு சொல்லு. தயங்காதே…”
“சொல்றது வரைக்கும் சரிதான் மாமா. அதென்ன கண்டிச்சு சொல்றது? கேட்கமாட்டாளா என்ன?…”
“நிச்சயம் கேட்கமாட்டா. அவ நிலா மாதிரி கிடையாது. படிக்காம இருந்தா என்னிடம் சொல்லிடுவேன்னு மிரட்டு. கண்டிப்பா படிப்பா…” என்றவனை பார்த்து வாய்விட்டு அவள் சிரிக்க அவளின் எண்ணம் புரிந்தவனாக தானும் இதழ் விரியாமல் புன்னகைத்தான்.
“நீங்க தான் ஜீவாவுக்கு பூச்சாண்டியா? இத்தனைநாள் தெரியாமல் போச்சே?…” என போலியாக கவலை கொள்ள,
“உனக்கு வாய் ஜாஸ்திதான். என்னை பார்த்தா பூச்சாண்டி போலவா இருக்கு?…”
“இல்லைன்னு நான் சொல்லலாம்னு நினைக்கேன். ஆனா எதுக்கும் ஆதாரம் வேணுமே மாமா. நிரூபிச்சு தான் காமிங்களேன். நீங்க பூச்சாண்டி இல்லை. என்னோட புருஷன்னு…”
பேசி முடித்தபின் தான் தான் பேசியதன் அர்த்தம் விளங்க திருதிருவென விழித்தாள் வண்ணமதி. எதுவும் திட்டிவிடுவானோ என தினகரனை பாவமாக பார்க்க அவனோ சிறு மென்னகையோடு அவளின் கன்னத்தில் மெல்ல தட்டிவிட்டு தலையசைத்தபடி கிளம்பிவிட்டான்.
“ஆனாலும் மதி புள்ள உனக்கு இம்பூட்டு வாய் ஆவாது…” என தன்னையே கடிந்தபடி வேறு புடவைக்கு மாற ஆரம்பித்தாள்.
தினகரன் முத்தழகியிடம் கூறிவிட்டு முத்தையாவை தேடி செல்ல அவர் கிளம்பி தயாராக இருந்தார். மகனின் வருகை அறிந்து,
“கவலைபடாதே தம்பி. கண்டிப்பா என்னோட மருமகளை கண்டுபிடிச்சிடலாம். தலைவரு வேற ஒரு ஆளை பார்த்து பேச சொல்லி சொல்லிருக்காரு. அதனால தான் சேகரனையும் கூட்டிட்டு போறேன். நீ மனசுக்குள்ளயே விசனப்பட்டுட்டு இருக்கவேண்டாம்…” என்றவரை பார்த்தவனின் பார்வை புரிந்து,
“உனக்கு மனைவியா வந்தாதான் மருமவளா? என்னைக்குமே நிலா எனக்கு இந்த வீட்டுக்கு மருமகதான் ஐயா. என்னோட மருமக தான்…” என்றவரை புரிதலோடு பார்த்தவன்,
“போறது எல்லாம் சரி. எந்த காரணத்தை கொண்டும்…” என்பவனை இடைமறித்து,
“என் நண்பனோட நட்பை நான் இழக்கமாட்டேன். நான் பண்ணின முட்டாள்தனம் சேகரனுக்கு தெரியாம பார்த்துக்கறேன். அதுவும் கூட என்னை காப்பாத்திக்க இல்லை. அவனுக்காகத்தான். அவன் மனசு உடைஞ்சிட கூடாதுன்னு தான்…”
கரகரத்த குரலில் பேசிவிட்டு துண்டை எடுத்து தோளில் போட்டவர் மகனிடம் விடைபெற்று மனைவியிடம் சொல்லிக்கொண்டு வண்ணமதியை எதிர்பட வரச்சொல்லி கிளம்பினார் முத்தையா. அவர் கிளம்பியதும் வண்ணமதி அடுக்கறைக்குள் நுழைந்துகொண்டாள்.
அவர் சென்றதுமே தினகரனும் சாமி கும்பிட்டுவிட்டு முத்தழகியை அழைத்தவன் அவர் வரவும், “நான் தோப்புக்கு போய்ட்டு அப்படியே கிளம்பறேன் அம்மா. வர ராத்திரி ஆகிடும். வரட்டுமா…” எனவும் தலையசைத்தவர் மருமகளை காணாது,
“மதி…” என அழைக்க அவளோ கணவனிடம் பேசிய பேச்சை எண்ணி தினகரனின் முன்னால் வர வெட்கப்பட்டு உள்ளேயே இருந்துகொண்டாள்.
அவளின் எண்ணம் புரிந்தவனாக, “விடுங்கம்மா, வேலையா இருப்பா போல. நான் கிளம்பறேன். சொல்லிடுங்க…” என்றவன் அடுப்படி வாயிலை ஒரு பார்வை பார்த்துவிட்டு புன்னகை முகமாக கிளம்பினான்.
மகனின் புன்னகை நிறைந்த முகமும் மருமகளின் தயக்கமும் முத்தழகிக்கு எதையோ உணர்த்த தன் மகன் வாழ ஆரம்பித்துவிடுவான் என்ற நிம்மதி அவரை மகிழ்ச்சி கொள்ளச்செய்தது.
இருவரின் நடவடிக்கைகளை தான் பார்த்துக்கொண்டிருக்கிறாரே. ஆனாலும் எதிலும் தலையிடாமல் தள்ளியே இருந்துகொண்டார். தினகரனின் மேல் கொண்ட நம்பிக்கை அது.
மீண்டும் வண்ணமதியை தேடி உள்ளே சென்றவர் அவளை அழைத்துக்கொண்டு நிலாமுகியின் இல்லம் நோக்கி சென்றார்.
முத்தையாவோடு குணசேகரன் வெளியூர் சென்றிருக்க அமுதாவும் ஜீவநிலாவும் மட்டுமே வீட்டில் இருப்பதாக தெரியவும் வண்ணமதியையும் அழைத்துக்கொண்டு முத்தழகி வந்துவிட்டார். வண்ணமதியின் கலகலப்பு அமுதாவை கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற ஆரம்பித்தது.
நிலாமுகி காணாமல் போன இத்தனை நாட்களில் அமுதா கலகலப்பான தன் சுபாவத்தை விடுத்து இறுகிப்போயிருந்தார். வெளியில் எந்த ஒரு விசேஷங்களுக்கும் செல்வதில்லை.
தினகரன் வண்ணமதி திருமணத்திற்கு கூட ஒப்புக்கு வந்துவிட்டு உடனே சென்றுவிட்டனர். முத்தழகி கூட அமுதாவை தன்னோடு இருக்க சொல்லிப்பார்த்தார்.
ஆனால் ஊரார் முன்னால் மகளை பற்றிய கேள்விகளுக்கும், பரிதாபமான பார்வைகளுக்கும் ஆளாக வேண்டியாதயிருக்கும் என எண்ணி கிளம்பிவிட்டார். இப்போது வரை கொஞ்சமும் மாறாமல் அப்படியே இருந்தார் அமுதா.
காலையில் வந்தவர்கள் கொண்டுவந்த மதிய உணவை சாப்பிட்டு அமுதாவையும் சாப்பிட வைத்து பேச்சில் கவனமாக இருக்க அமுதாவும் கொஞ்சம் கொஞ்சமாக பதிலுக்கு பேசிவைத்தார்.
ஜீவாவை தினகரன் கூறியபடி உருட்டி மிரட்டி புத்தகத்தை கையில் கொடுத்து படிக்க செய்த வண்ணமதி தானும் துணையாக அவளோடே அமர்ந்துகொண்டாள்.
அமுதாவும் கொஞ்சம் பேச ஆரம்பிக்கவும் பேச்சுக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வண்ணமதியின் தாலி பிரித்து கோர்க்கும் சடங்கில் வந்து நின்றது.
விரைவில் அதை செய்ய இருப்பதாக முத்தழகி கூறவும் அமுதாவும் ஆமோதித்தபடி இருந்தவர் வாசலை கண்டு திகைத்தார்.
அமுதாவின் பார்வை சென்ற திக்கில் தானும் பார்த்த முத்தழகி அங்கே நின்றிருக்கும் வள்ளியம்மை குடும்பத்தை பார்த்து யோசனையானார்.
அதற்குள் வள்ளியம்மையும் அவர் மகன் தயாளனும் கணவர் முருகேசனும் உள்ளே வந்துவிட்டனர். முத்தழகி அன்று திட்டி அனுப்பிவைத்த பின் இன்றைக்குத்தான் வந்திருக்கிறார் வள்ளியம்மை.
நிலாமுகியை எங்கிருக்கிறாள் என்பது பற்றிய தகவலோடு…