நெஞ்சில் உறைந்த தேடல் – 13 (2)

“அங்கிள் காபி குடிச்சாச்சா?…” என்றபடி அவரருகில் சென்று அமர்ந்தவன் அன்றைய நாளிதழை எடுத்து படிக்க ஆரம்பிக்க ராகவ்வும் ஆண்டனியும் ஒருவித எதிர்பார்ப்போடு அவனை பார்த்திருந்தனர்.

அதை அர்ஜூனும் உணராமல் இல்லை. ஆனாலும் ஒன்றும் பேசவில்லை. ஆண்டனியே பேச வாய் திறக்கும் பொழுது ஆரவ் வந்து சேர்ந்தான்.

அவனிற்கு இன்னும் விஷயம் தெரிவிக்கப்படவில்லையே என்று நினைத்து ஆண்டனி பார்த்திருக்க,

“டேய் டக்கு. வா உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்…” என கூறி இழுத்துசென்றான்.

அவன் பின்னால் சென்றவன், “சொல்லுடா என்ன விஷயம்? நிலாவுக்கு ஒண்ணுமில்லையே?…” கொஞ்சம் பதட்டத்தோடே அர்ஜூன் கேட்க அதை ஆமோதிப்பது போல அதிகாலை நடந்ததை  கூறினான் ஆரவ்.

“என்னடா சொல்ற? யார் அந்த ஜீவா? ஒருவேளை?…” என இழுக்க அவனை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்த ஆரவ்,

“என்ன சொல்ல வர? முழுசா சொல்லி முடி…” அமர்த்தலாக பார்த்துக்கொண்டே கேட்கவும்,

“ஜீவான்னு சொன்னதா சொன்னியே. அப்போ நிலாவுக்கு நெருக்கமானவங்களா தானே இருக்கனும். அதான்…” என யோசனையாக ஆரவ்வை பார்க்க அவனோ அதில் சற்றும் அலட்டிக்கொள்ளாமல்,

“நிச்சயமா நெருக்கமானவங்களா தான் இருக்கனும். ஒரு ப்ரதர் இல்லை சிஸ்டரா, இல்லை க்ளோஸ் ரிலேஷனா, டியரஸ்ட் ப்ரெண்டா  இப்படி எதுவானாலும் இருக்கலாமே. இதுல என்னடா உனக்கு யோசனை…”

இப்போதும் அர்ஜூனுக்கு ஆரவ்வை நினைத்து கொஞ்சம் கவலையாகத்தான் இருந்தது.  தெளியாத முகத்தோடு தன்னை பார்த்த நண்பனை கண்டு,

“உன்னோட எண்ணவோட்டம் என்னனு எனக்கு புரியாமல் இல்லை அஜூ. என் நிலா ஆரவ்னு சொல்லும் போது அந்த குரல்ல தெரிஞ்ச காதல் ஜீவான்னும், அப்பான்னும் சொல்லுறப்போ தெரியலை. அதுல வெறும் பாசம் மட்டும் தான் தெரிஞ்சது…”

“அவளோட காதலனா என்னால அவளோட ஒவ்வொரு உணர்வுகளையும் புரிஞ்சிக்க முடியும். அதனால உறுதியா சொல்றேன்…” அவன் முகத்தில் தெரிந்த தீர்க்கத்தில் அசந்துவிட்டான் அர்ஜூன்.

“உன்னோட இந்த நம்பிக்கை எனக்கு வியப்பா இருக்கு ஆரவ். ரொம்ப பெருமையாவும் இருக்கு…”

ஆரவ்வின் முதுகில் தட்டிகொடுத்தவன், “சரி நிலா எழுந்தாச்சா?…” என் அகேட்க,

“ஹ்ம் மேடம் ரெடியாகிட்டு இருக்காங்க. நான் எதாச்சும் அவளுக்கு ஹெல்ப் பண்ணமுடியுமான்னு பார்க்கிறேன்…” குறும்பு சிரிப்போடு அர்ஜூனை கடந்து மாடிக்கு சென்றுவிட்டான்.

அவன் செல்லும் திசையை பார்த்தவாறே அர்ஜூன் நிற்க ஸ்டெபியும் வந்து சேர்ந்தாள் புத்துணர்ச்சியோடு.

“ஸ்டெபி கிளம்பியே வந்தாச்சு போல?…” என கேட்டுகொண்டே அவளுக்கு ஒரு காபி கோப்பையை கையில் கொடுத்துவிட்டு வடிவை தேடி சென்றார் தர்ஷினி.

“வாம்மா ஸ்டெபி. ஹாஸ்பிட்டல் போய்ட்டு இப்போதான் வர போல?…” ஸ்டெபியிடம் பேஷன்ட் பற்றி பேச்சுக்கொடுத்துகொண்டே அர்ஜூனை பார்த்தார் ராகவ்.

மொபைலில் எதையோ பார்த்துகொண்டிருந்த அர்ஜூன் நிமிரவும் இல்லை. எதுவும் பேசவும் இல்லை. இதை கண்டு ஆண்டனி வாயே திறக்கவில்லை.

நாராயணனும் வடிவும் கூட வந்துவிட அனைவரும் ஆரவ் நிலாவிற்காக காத்திருக்க தொடங்கினார்கள்.

அறைக்குள் நுழைந்த ஆரவ் நிலாவை தேட அவள் புடவையில் தயாராகி அங்கிருக்கும் சேரில் இவனின் வரவை எதிர்பார்த்து அமர்ந்திருந்தாள்.

“அதுக்குள்ளே நீ தயாரா? என்ன பொண்ணு நீ?…” கொஞ்சம் சலிப்போடு  கேட்டவனை பார்த்து,

“ஏன்? நான் சீக்கிரமே ரெடியானதால என்னாகிடுச்சு? பாட்டி இன்னைக்கு கோவிலுக்கு போகனும்னு சொன்னாங்க. போகலாமா?…” எழுந்து நின்று புடவையை சரிசெய்துகொண்டே கேட்க,

“ஹ்ம் நேத்து கல்யாணம் ஆனது போலவா இருக்கு உன்னோட ஆக்டிவிட்டீஸ்? நான் என்னென்னவோ எதிர்பார்த்து வந்தேன். ப்ச்…”

அவனின் பாவனைகளை சிறு சிரிப்போடு பார்த்துக்கொண்டிருந்தவள்,

“அதுக்கு நான் என்ன செய்யமுடியும்? நீங்க வரவரை வெய்ட் பண்ண சொல்றீங்களா? அக்கறை இருக்கிற நீங்க தான் சீக்கிரமா வரனும். தப்பு என் பேர்ல இல்லைப்பா…”

கொஞ்சம் கொஞ்சமாக கதவின் அருகில் சென்றவள் வெட்க சிரிப்போடு அவன் கேட்கும் படியே முணுமுணுத்துவிட்டு ஆரவ் பிடிப்பதற்குள் அறையை விட்டு வெளியேறியும் விட்டாள்.

“மிசஸ் ஆரவ் என்னை எதிர்பார்த்திருப்பா போலையே, யாஹூ…” என உற்சாக குரலெழுப்பியவன் அவளை துரத்தியபடி பின்னால் வர அதற்குள் கீழே இறங்க ஆரம்பித்திருந்தாள் நிலா. அவளோடு இணைந்து நடந்தவன்,

“அச்சோ நீ ரொம்ப பீல் பன்ற போல? தப்பு செஞ்ச நானே சரி பண்ணவும் செய்வேன். டோன்ட் வொரி பேபி…” என கண் சிமிட்டி அவளிடம் கூறவும் நிலாவிற்கு கூச்சமாகிவிட்டது.

மௌனமாக அவனோடு இணைந்து நடந்தவள் பெரியவர்களை நெருங்கியதும் ஆரவ்வின் சமிஞ்சையால் இருவரும் சேர்ந்து தாத்தா பாட்டியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டனர். ஆண்டனியிடமும் ஆசிர்வாதத்தை பெற்றுக்கொண்டனர்.

ராகவ், தர்ஷினி காலில் விழுகையில் நிலாவை தடுத்து தன்னோடு அணைத்துகொண்டார் தர்ஷினி. ஆரவ்வை தழுவிக்கொண்ட ராகவ் அனைவரையும் சாப்பிட அழைக்க,

“அதென்ன சீனியர் நான் இருக்கும் போது இவன் என்கிட்டே ஆசிர்வாதம் வாங்காம போகலாம். நான் சாப்பிட வரமாட்டேன். என் கால்ல முதல்ல அவனை விழ சொல்லுங்கப்பா…” என ஸ்டெபி வம்பிழுக்க,

“ஆஷா, ஆரம்பிக்காதே. அவனும் உன்னோட சேர்ந்தா நிலைமை மோசமாகிடும். முதல்ல சாப்பிடுவோம். நிலாவுக்கு டேப்லட்ஸ் குடுக்கனும்…” ஸ்டெபியின் தோளை சுற்றி கை போட்டு அணைத்தவாறே புன்னகையோடு கலந்த மெலிதான கண்டிப்பில் ஸ்டெபியிடம் அர்ஜூன் கூறினான்.

இருவரின் நெருக்கத்தையும் இணக்கத்தையும் பார்த்த ஆரவ்விற்கு இப்போது மகிழ்ச்சியில் முகம் மின்னியது. காலையில் அர்ஜூனின் கண்களின் ஒளிர்வில் கொஞ்சம் சந்தேகம் தான். இப்போது அது தெளிவான உற்சாகத்தில் இருவரையும் பாய்ந்து அணைத்துக்கொண்டவன்,

“எனக்கு சந்தோஷத்துக்கு மேல சந்தோஷமா கிடைக்குதே இன்னைக்கு. எப்படி இது பாஸிபிள்னு கேட்கமாட்டேன். ஆனா இந்த வேதாளத்தை எப்படி மரம் இறங்க வச்சன்னு தான் புரியலை…”

ஆரவ் கூறியதை கேட்டு அர்ஜூன் வாய்விட்டு சிரிக்க ஸ்டெபியோ,

“யாரை பார்த்துடா வேதாளம்னு சொன்ன?…” என்று அவனை துரத்த ஆரம்பித்தாள். தொலைந்து போன நிம்மதியும் சந்தோஷமும் வீடு சேர்ந்த நிம்மதியில் அங்கே அனைவரின் மனமும் குதூகலித்து இருந்தது.

நிலாவிற்கு ஸ்டெபியும் அர்ஜூனும்  கணவன் மனைவி என்றும் அவர்கள் பிரிந்து வாழ்கின்றனர் என்னும் அளவிற்கு மட்டுமே  ஏற்கனவே ஸ்டெபியின் மூலம் அறிந்திருந்தாலும் இப்போது இருவரும் இணைந்துவிட்டனர் என்ற மகிழ்ச்சியோடு தானும் அவர்களின் சந்தோஷத்தில் கலந்துகொண்டாள்.

எத்தனை துரத்தியும் ஸ்டெபியால் ஆரவ்வை பிடிக்கமுடியாமல் போல அவனோ அவளுக்கு போக்குகாட்டியபடி மீண்டும் நிலாவின் அருகே வந்து,

“லவ் யூ நிலா…” என அவளை அணைத்து கண்ணிமைக்கும் நொடியில் அவள் கன்னத்தில் ஒரு முத்தத்தையும் பதித்துவிட்டு டைனிங் ஹாலிற்கு சென்றுவிட்டான்.

அவனின் செயலில் நிலாவுடன் சேர்த்து அனைவரும் அதிர்ந்து பின் ஆரவ்வை எண்ணி தலையில் அடித்துக்கொண்டு சாப்பிட சென்றனர்.

வடிவிற்கும் நாராயணனுக்கும் கண்கள் கலங்கியே விட்டது. அவர்கள் எப்போது டெல்லி வரும் போதும் ஆரவ்  இறுக்கத்துடனும் கோபத்துடனுமே வலம் வருவான். இப்படி அவன் சீண்டி விளையாடி சிரித்து அவர்கள் பார்த்ததில்லை.

பார்க்கும் அளவிற்கு அவனும் நடந்துகொண்டதில்லை என்பதே உண்மை. இப்போது நடந்த நிகழ்வை கண்டதும் ஏக்கத்தில் கலங்கி நின்றனர். அதை பார்த்த நிலா,

“கவலைப்படாதீங்க தாத்தா. சீக்கிரமே நானும் அவரும் நம்ம ஊருக்கு வரோம். என்ன பாட்டி?…” என வடிவிடமும், நாராயணனிடமும் நிலா ஆறுதலாக புன்னகையோடு கூறவும் வடிவு அவளை அணைத்துகொண்டார்.

“உன்னோட வார்த்தை பலிக்கட்டும். உன்னோட வரவு எங்க பேரனை முழுமனசோட எங்ககிட்ட கொண்டுவந்து சேர்த்திடும்ன்ற நம்பிக்கையை கொடுத்திடுச்சும்மா…” என நாராயணன் கூறவும்,

“போதுமே, தாத்தா முதல்ல சாப்பிடலாம். பிறகு உங்க பேத்திகூட எவ்வளோ நேரம் வேணும்னாலும் பேசுங்க…” என ஸ்டெபி கூறிக்கொண்டே சென்றுவிட,

“அதானே…” என வடிவும் ஆமாம் போட,

“அதை நீங்களே முடிவு பண்ணினா எப்படி? நம்ம சக்கு அதுக்கு ஒத்துக்கனுமே? அவன் என்ன ப்ளான்ல இருக்கானோ…” அர்ஜூனும் வடிவிடம் பேசியபடி நிலாவையும் அழைத்துகொண்டு சாப்பிட சென்றான்.

அனைவரும் ஒன்றுகூட ஆரவ் பழைய கோபதாபங்களின்றி இயல்பாக தனது தாத்தா பாட்டியிடம் பேச ஆரம்பிக்க பேச்சும் சிரிப்புமாக உணவறையே சந்தோஷத்திலும் ஆராவாரத்திலும் கிடுகிடுத்தது.

இரண்டொரு நாளில் வடிவும், நாராயணனும் கிளம்பிவிட அடுத்து வந்த நாட்களும் மகிழ்ச்சி வெள்ளம் அருவியென ஆர்ப்பரித்து கொட்டியது அவர்கள் வாழ்வில்.

error: Content is protected !!