அவனது செயலில் கானகம் சென்று அலைந்து திரிந்து வீடு திரும்பிய உணர்வை அவனது அணைப்பு அவளுக்கு அளித்தது. இத்தனை வருட அலைப்புருதல்கள் எல்லாம் ஓய்ந்து ஆசுவாசமாக இன்னும் சுகமாக அவனை நெருங்க,
“ஆஷா தூங்குன்னு சொன்னா கேட்கனும். நான் தெளிவா முழிச்சா உன்னோட தூக்கத்துக்கு இன்னைக்கு லீவ் விடவேண்டியது தான்…” விழிகளை திறவாமலே அவளை மிரட்ட,
“எனக்கு தூக்கம் வரலை அஜூ. என்னோட சந்தோஷத்தை சொல்ல வார்த்தையே இல்லை. இது நிஜமா? நீ என் பக்கத்தில இருக்கியா? இப்போ நினச்சாலும் உடம்பெல்லாம சிலிர்க்குது தெரியுமா?…” அதற்குமேல் அவளை பேசவிடாமல் அவளின் இதழ்களை சிறையிட்டவன்,
“நிஜம்னு மேடம்க்கு இப்போ பீல் ஆகுதா? இல்லை இன்னும்…” என கண்கள் சிரிக்க கூறியவனை பார்த்தவளின் விழிகளில் தொலைய இருந்தவன்,
“இன்னைக்கு என்னை ஒரு வலி ஆக்காம நீ விடமாட்ட. எனக்கு இந்த நிமிஷத்தை இந்த நொடியை இப்படியே ரம்யமா அனுபவிக்கனும்னு தோணுது. வேற எந்த சந்தோஷமும் வேண்டாம் ஆஷா…” என்றவனை ஸ்டெபி புரியாமல் பார்க்க,
“உன்னோட அருகாமையே எனக்கு அப்படி ஒரு நிறைவை கொடுக்குது. ஆனா உன்னோட இந்த பார்வையும் அதிலிருக்கும் ஈர்ப்பு சக்தியும் என்னை உன்னோட இந்த நொடி கலந்துவிட சொல்லுது…”
அவனின் பேச்சில் முகம் சிவந்தவள் இதிலென்ன தயக்கம் என்பது போல பார்த்திருக்க,
“இன்னைக்கு எனக்கு உன் அருகாமையை தவிர வேற எதுவும் வேண்டாம். என் மனம் முழுக்க இதை இந்த நாளை காதலோட மட்டுமே அனுபவிக்கனும்னு தோணுது…”
“சோ…” என குறும்புடன் ஸ்டெபி கேட்க,
“சோ நீ பேசாம என்னை டிஸ்டர்ப் பண்ணவேண்டாம்டா ஆஷா…” அவனின் கெஞ்சலை பார்த்து சிரித்தவளின் கண்களில் கொஞ்சல் இருந்தது. அதில் முறைத்தவன்,
“நீ சரிப்படமாட்ட. வா நம்ம வீட்டுக்கு போகலாம்…” என கூறியவாறே எழுந்துகொண்டு அவளையும் எழுப்ப அதில் அதிர்ந்தவள்,
“இதை எப்படி யோசிக்காமல் போனேன்? மீண்டும் அந்த வீட்டிற்கு சென்று தன்னால் வாழமுடியுமா? அதுவும் எந்தவிதமான குற்றவுணர்வும் இன்றி…”
இவளின் சிந்தனை இப்படி இருக்க அர்ஜூனோ அதை புரிந்துகொண்டு,
“நம்ம வீடு நமக்கு மட்டுமேயான வீடு. இப்போ அங்கதான் நான் திரும்ப உன்னோட நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கனும்…” என்றவனை முகம் முழுவதும் வெளிச்சம் பரவ பார்த்தாள் ஸ்டெபி.
“அஜூ நீங்க நிஜமாவே சொல்றீங்களா?…” உள்ளம் படபடக்க கேட்டவளின் அருகில் அமர்ந்தவன் அவளின் முகத்தை நெருங்கி,
“திரும்பவும் நிஜம்னு உனக்கு கன்ஃபார்ம் பண்ணிக்கனுமா ஆஷா?…”
அவன் கேட்கவருவது புரிந்த ஸ்டெபி அவனை படுக்கையில் தள்ளி தானும் அவனருகில் படுத்தவள்,
“எதுவானாலும் மார்னிங் பேசலாம். தூங்கலாம் அஜூ…”
“ஹ்ம் தூங்கலாம். நாளைக்கே நம்ம வீட்டுக்கு போகனும் ஆஷா. உன்னோட நான் கொண்ட முதல் கூடல் அந்த வீட்ல தான். நீ இல்லாத இந்த வெறுமையான நாட்கள்ல கூட என்னை உயிர்ப்போட வச்சிருந்தது அந்த வீட்ல நிறைஞ்சிருக்கும் உன்னோட நினைவுகளும் அங்கே நாம் வாழ்ந்த அழகான தருணங்களும் மட்டுமே…”
“அதே நேரம் என்னோட தனிமை என் கண்முன்னால நின்னு பூதாகாரமா என்னை மிரட்டும். போய் அவளை தூக்கிட்டு வந்து இங்க வச்சுக்கோன்னு என் மனசு என்னையே பாடாபடுத்தும் தெரியுமா?. என்னை, என் தனிமையில் மூச்சுவிட வைப்பதும், மூர்ச்சையாக்குவதும் உன்னோட நினைவுகள் மட்டும் தான்…”
“அந்த வீட்ல நினைவுகளுக்குள்ளேயும், நிஜத்திலும் நான் போராடும் களைச்சுட்டேன்டா. திரும்பவும் நான் உன்னோட இணையும் அந்த நொடி அந்த வீட்ல தான் நடக்கனும்னு நான் எப்போவோ முடிவெடுத்துட்டேன். சோ நாளைக்கே நம்ம வீட்டுக்கு போறோம். புதுசா நம்ம வாழ்க்கையை வாழறோம்…” என்றவனின் பேச்சில் குறும்பாய் இவள் புன்னகைக்க,
“ம்ஹூம் உன்னோட இந்த பார்வை, சிரிப்பு, உன் நெருக்கம் என்னை ரொம்ப டெம்ப்ட் பண்ணுது. அடங்கமாட்டியா நீ?…” என்றவன் அவனின் தோளில் இவளது முகத்தை புதைத்து தன்னுடைய விழிகளை மூடினான். அவளும் இன்பமாக அவனோடு ஒண்டிக்கொண்டாள்.
ஏனோ ஸ்டெபியின் மனதில் அர்ஜூனின் வார்த்தையில் எல்லையில்லா நிம்மதி வந்தமர்ந்தது. அதனால் உறக்கமும் வந்தது. அவாளி உணர்ந்தவன் ஒரு குறுநகையோடு அவளுடன் மீண்டும் உறங்கலானான்.
அயர்ந்த தூக்கத்தில் ஸ்டெபியின் மொபைல் வைப்ரேட் ஆக அதில் விழித்தவள் ஹாஸ்பிட்டலில் இருந்து போன் எனவும் எடுத்து பேசினாள்.
அவசர கேஸ் ஒன்றை தாங்கி வந்திருக்கும் செய்தியில் சுறுசுறுப்பானவள் மணியை பார்க்க அது நள்ளிரவு இரண்டரை என்றது. உடனே எழுந்து கிளம்பி சென்றாள் அர்ஜூனின் மொபைலில் குறுந்தகவலை பதிந்துவிட்டு.
கிளம்பும் போதே ட்ரைவரை அழைத்து காரை எடுக்க சொல்லியிருந்தவளுக்கு வாயிலில் காத்திருந்தார் டிரைவர். விரைந்து ஹாஸ்பிட்டல் சென்றாள்.
—————————————————-
ஆரவ்விற்கு விடியலுக்கு முன்பே விழிப்பு தட்ட எழுந்தமர்ந்தவன் அருகில் கலைந்த நிலையில் அழகாக துயில் கொண்டிருக்கும் மனைவியை பார்க்க பார்க்க அவனின் இதயத்தில் ஏதோ ஒரு நிறைவு.
இனி வாழவிருக்கும் மொத்த வாழ்க்கையையும் அன்றே வாழ்ந்துமுடித்த ஒரு திருப்தி புன்னகை அவனின் முகத்தில். ஜென்ம ஜென்மமாக வாழ்ந்துவிட்ட உணர்வு. தானா இப்படி ஒரு காதல் தீவிரவாதியானேன்? என தன்னை நினைத்தே அதிசயித்தான்.
“எங்கிருந்து வந்தாயடி…” என முணுமுணுத்துக்கொண்டே அவளை நெருங்கியவன் நெற்றியில் இதழ்பதித்து அவளை அணைத்து கொண்டு மீண்டும் படுத்துக்கொண்டான். இதை விட இனி இவ்வுலகில் தனக்கு வேறேதும் வேண்டாம் என்ற மனப்பான்மை.
கடந்த சில நாட்களில் அவனது வாழ்க்கையில் தான் எத்தனை மாற்றங்கள்? நினைத்துப்பார்க்கவே பிரமிப்பாக இருந்தது.
நிலாவை சந்தித்ததிலிருந்து அவளை காதலித்து அவளையும் தன்னை நேசிக்க வைத்து இருவருக்கும் திருமணம் செய்ய என்னவெல்லாம் செய்து அவளின் உடல் பிரச்சனையை நினைத்து கலங்கி இன்று அவளோடு வாழ்ந்தும் விட்டான்.
முந்தைய இரவில் அவளுக்கு பாதிப்பு ஏற்படாதவகையிலும் அவளை அதிக கஷ்டத்திற்குள்ளாக்காமல் ஒவ்வொரு நிமிடத்திலும், அவளின் முகம் பார்த்து பார்த்து அவளுக்கு ஏதேனும் கஷ்டமாக இருக்கிறதா என கேட்டு கேட்டு நிலாவை ஒரு வழியாக்கி அவளோடு ஒன்றாக கலந்தான்.
இப்போது நினைத்தாலும் சிரிப்பாக இருந்தது அவனுக்கு. தனது கேள்விகளுக்கு பதில் கூறமுடியாமல் அவள் திணறி திமிறிய அழகில் மொத்தமாக அவளிடம் தன்னை அர்ப்பணித்தான்.
நேற்றைய கனவுகளில் இவன் மிதக்க அவனின் நிலவோ, “ஆ…ரவ்… ஜீவா…” என மெல்ல முணங்கியது.
அதில் முதலில் திகைத்தவன், “ஜீ…வா…. தலை….. வ…லிக்குது… அப்…பா…. அவங்க… அடி…க்காங்க…” மூச்சுக்கு திணறுவது போல நிலா கூற நிறுத்தி நிறுத்தி சடாரென எழுந்தமர்ந்தான் ஆரவ்.
“நிலா, என்னடா. என்னை பார் இங்கே…” என பதறியவன் ஒரு நிமிடம் தன்னை ஆசுவாசப்படுத்தி அங்கே டீப்பாயின் அருகில் இருந்த சிறு பெட்டியை எடுத்தான்.
ஏற்கனவே நிலாவிற்கு போடவேண்டிய டேப்லட்ஸ், இன்ஜெக்ஷன் அனைத்தையும் தன்னுடைய அறையில் வைத்திருந்தான்.
உடனடியாக செயல்பட்டு இதுபோன்ற நேரங்களில் அவளுக்கு தரவிருக்கும் சிகிச்சையை அளித்தவன் இன்ஜெக்ஷன் உதவியால் மீண்டும் அவள் உறக்கத்திற்குள் செல்ல இவன் அவளை நன்றாக படுக்கவைத்துவிட்டு கட்டிலில் இருந்து கீழே இறங்க முயன்றான்.
அவனின் கைகளை பிடித்து தடுத்த நிலா அரை மயக்கத்தில்,
“என் கூடவே இருங்க ஆரவ்…” என வேண்ட நொடியில் நெருங்கியவன் அவளை அள்ளி தன் மார்பில் போட்டுக்கொண்டான். சிறிது நேரத்தில் அவள் மயக்கத்திற்குள் செல்ல அவளின் நிலையில் கண் கலங்கினான் ஆரவ்.
முதல் முதலில் தன் பேரை கூறி அழைத்ததை நினைத்து மகிழவிடாமல் தடுத்தது அவனுள் மருக வைத்தது அவளின் துடிப்பும் வேதனையும்.
அடுத்து என்னவென யோசித்துகொண்டிருந்தவனுக்கு அப்போதுதான் உரைத்தது நிலாவின் பேச்சு.
“என்ன சொன்னாள்? …. ஜீவாவா?… அவளின் அப்பாவையும் அழைத்தாளே?…” அவளின் நியாபகங்கள் அவளை நெருங்க ஆரம்பித்துவிட்டதோ என நினைத்தவன் கொஞ்சமும் கவலை கொள்ளவில்லை.
“யார் அந்த ஜீவா?…” என்ற யோசனைகளில் தான் இருந்தான்.
எந்த சூழ்நிலையிலும் நிலா தன்னை தன் காதலை மறக்கமாட்டாள். தன் மீது அவள் கொண்டிருக்கும் காதலை நேசத்தை உறுதியாக நம்பினான்.
அவனின் நம்பிக்கை பொய்த்து போகப்போவதை அறியாமல் திடமாக நின்றான்.