நெஞ்சில் உறைந்த தேடல் – 12 (2)

திருமணத்தின் போதே ஆண்டனி அந்த வீட்டை வாங்கி அர்ஜூன் ஸ்டெபியின் பெயரில் ரிஜிஸ்டர் செய்துவிட்டார். முதலில் இவ்வீட்டிற்கு வரமாட்டேன் என்று பிடிவாதமாக மறுத்த கிருஷ்ணன் அர்ஜூனின் வேண்டுதலுக்காக மனம் இறங்கினார்.

இப்போது ஆரவ்வின் பேச்சில் தான் எவ்வளவு பெரிய அவமதிப்பிற்கு ஆளாகியிருக்கிறோம் என்று எண்ணி வெதும்பிப்போய் ஆக்ரோஷமாக ஆரவ்வை நோக்கியவர்,

“குறையுள்ள பெண்ணை என் பையன் தலையில கட்டிவச்சிட்டு உனக்கு இவ்வளவு பேச்சா? இனி ஒரு நிமிஷம் கூட  வீட்ல நான் இருக்கமாட்டேன். என்னோட சுயசம்பாத்யத்துல வாங்கின சொந்த வீடே அவ்வளோ பெருசா இருக்கும் போது யாருக்கு வேணும் அந்த மலடியோட வீடு?…” என வார்த்தையை விட கொதித்துப்போன ஆரவ் கொத்தாக அவரது சட்டையை பிடித்துவிட்டான்.

தன் தந்தையின் பேச்சில் குற்றுயிரான அர்ஜூன் ஆரவ்வின் செயலில் அதிர்ந்து ஒருமகனாக,

“ஆரவ் என்ன காரியம் செய்யற? விடு அவரை. என்னோட அப்பான்றதை மறந்துட்டியா?…” என ஆரவ்விற்கு சற்றும் குறையாத கோவத்தோடு அவனை விடுவிக்க முயல ஆரவ் முழுமூச்சாக அர்ஜூனை ஒரே தள்ளாக தள்ளினான்.

கார்த்திக் அப்போதும் அர்ஜூனை தான் பிடித்தானே தவிர ஆரவ்வை தடுக்கவில்லை.

“எவ்வளவு தைரியம் இருக்குனும் உங்களுக்கு. இதே வார்த்தையை இந்தம்மாவும் சொன்னதுக்காக கேட்க வந்தா நீங்களும் அதுவும் என் முன்னாலயே ஸ்டெபியை பேசறீங்க? கொன்னுபுதைச்சிடுவேன் ஜாக்கிரதை…”

“வயசுக்கு மரியாதை குடுத்து ஒதுங்கி போனா என்ன வேணும்னாலும் பேசுவீங்களா? தொலைச்சுக்கட்டிடுவேன். என்ன சொன்னீங்க குறையுள்ள பொண்ணா? அந்த குறை உங்க மகன்கிட்டையும் இருக்கலாமில்லையா? அப்போ நாங்களும் அவனை திரும்ப கேட்கட்டுமா?…”

இதற்கு பதில் சொல்லமுடியாமல் கல்பனாவும் கிருஷ்ணனும் தலை கவிழ அர்ஜூன் அடிபட்ட பார்வை பார்த்தான் ஆரவ்வை. அவனின் வலிதாங்கிய விழிகளை கண்டு கொஞ்சமும் இரக்கம் கொள்ளாமல் தீயென கொதித்து  நின்றான் ஆரவ்.

அர்ஜூன் தனக்குள்ளேயே மருக அப்போதுதான் ஆரவ்வின் பேச்சுக்கள் மீண்டும் எதிரொலிக்க துடித்துபோய் கல்பனாவை பார்த்தான் அர்ஜூன்.

“ஆஷாகிட்ட  நீங்க அந்த வார்த்தையை சொன்னீங்களா?…” அவனது குரலின் அழுத்தத்தில் கல்பனாவின் அடிவயிற்றில் ஜில்லிட்டது. மகனின் கோவம் அறிந்தவராகிற்றே.

பதில் சொல்லமுடியாமல் விழித்து நிற்க அவரை விடுத்து ஆரவ்வின் அருகில் வந்தவன்,

“என்ன நடந்ததுடா ஆரவ்? ஆஷாவை இவங்க என்ன சொன்னாங்க? அதுக்குத்தான் அவ என்னை விட்டு கிளம்பிட்டாளா?…”

ஆரவ்வின் கரங்களை பிடித்துகொண்டு கெஞ்சிய நண்பனை கண்டவனின் மனம் உருக தொடங்க பிடிவாதமாக முயன்று தன் கோவத்தை நிலைநிறுத்திய ஆரவ்,

“என்ன  சொன்ன? உங்கம்மாவுக்காகவா? டேய் மடையா, நீ அவளுக்கு ஆதரவா உறுதுணையா இருந்திருந்தா இந்த உலகமே அவளை அந்த வார்த்தையை சொல்லி பேசிருந்தா கூட அவ உன்னை விட்டு போய்ருக்க மாட்டா. நீ…. நீ ஒருத்த பேசின பாரு. அவ செத்துட்டாடா. இதுக்குத்தான் காதலிச்சு கல்யாணம் செஞ்சீங்களோ?…”

“நேசிக்கிறவளோட முகத்தை வச்சு அவ மனசுல என்ன இருக்குன்னு சொல்றவன் தான்டா உண்மையான கணவனும் காதலனும். அவ முகத்தை கூட பார்க்காம உனக்கு தோணினதை பேசிட்டு போய்ருக்க. உனக்கெதுக்குடா கல்யாணம்?…”

“நீ உங்கப்பாம்மா மேல பாசமா இரு. யாரும் உன்னை தடுக்கலை. அதே நேரம் என்ன நடந்ததுன்னு அவகிட்ட ஒரு வார்த்தை கேட்டு ஆறுதலா அவளுக்கு ரெண்டு வார்த்தை பேசிருக்கலாமே. உன்னோட ஒரு பார்வை போதுமேடா அவ மனசை அமைதிப்படுத்த. அதை செஞ்சியா நீ?…”

“இப்போ சொல்றேன் கேட்டுக்கோ. இனிமேலும் ஸ்டெபி இங்க வரமாட்டா. நானும் அனுமதிக்கமாட்டேன். உன்னால என்ன செய்யமுடியுமோ செஞ்சுக்கோ…” என்றவன்,

“உங்க ரெண்டு பேரையும் இப்போ நான் சும்மா விட்டுட்டு போறது கூட இதோ இங்க மரம் மாதிரி நிக்கிறானே அவனுக்காக மட்டும் தான். இனியும் என்னோட ஸ்டெபியை பத்தி உங்க வாய்ல இருந்து ஒரு வார்த்தையாவது வரட்டும் அன்னைக்குத்தான் உங்களோட கடைசி நாள்…”

அதற்கு மேலும் நிற்காமல் அங்கிருந்து கிளம்ப அவனை பாவமாக பார்த்த அர்ஜூனிடம்,

“உனக்கு எது தெரிஞ்சிக்கனும்னாலும் உன்னோட தர்ஷிமாகிட்ட கேட்டுக்கோ. திரும்ப என் முன்னால வந்து நின்னு எதாச்சும் கேட்ட நான் மனுஷனா இருக்கமாட்டேன் பார்த்துக்கோ…” மிரட்டிவிட்டே சென்றான்.

அதன் பின் தலையில் கை வைத்து அப்படியே அமர்ந்துவிட கார்த்திக் தான் அவனருகில் அமர்ந்து கையை தொட அதை உதறிய அர்ஜூன்,

“இங்க என்னடா நடந்தது?. எல்லோரும் சேர்ந்து என்னை பைத்தியக்காரனா ஆக்கிட்டுருக்கீங்கள்ள?…”

வேதனையோடு மொழிந்தவனிடம் இன்று நடந்த எதுவும் தனக்கு தெரியாதென்றும் ஓரளவிற்கு தெரிந்தவை அனைத்தையும் சிறு தயக்கத்தோடு அர்ஜூனிடம் கார்த்திக் கூற கூற கல்பனாவின் முகம் வெளிறியது.

ஆரவ் கிளம்பிய ஒருமணி நேரத்தில் தர்ஷினியே அர்ஜூனை அழைக்க,

“தர்ஷிமா நீங்க கூட என்கிட்ட எதுவும் சொல்லலை. உங்களுக்கும் நான் வேண்டாமா?…” என உடைந்துபோய் கேட்க மறுபுறம் தர்ஷினி பதறிவிட்டார்.

“அஜூ அப்டிலாம் நினைக்காத. ஸ்டெபி நிச்சயம் மனசு மாறி உன்னோட வாழ்வா. நம்பிக்கை இழக்காதே…” அவருமே அழுகையோடு கூற,

“அப்போ பெருசா நடந்திருக்குன்னு தானே அர்த்தம். எனக்கு இப்போ நீங்க சொல்லனும்…” என பிடிவாதமாக கேட்டு அவரிடம் நடந்தவைகளை தெரிந்துகொண்டவன் கல்பனாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு வீட்டை விட்டு வெளியேற கிருஷ்ணன் செய்வதறியாமல் நின்றார்.

நேராக ஹாஸ்பிட்டல் சென்ற அர்ஜூன் தனக்கென உள்ள அறையில் சென்று அமர்ந்தவன் அடுத்த இரண்டு நாட்களும் வீட்டிற்கே செல்லவில்லை. அதன் பின் ஸ்டெபியிடம் தான் பேசியதற்கு மன்னிப்பை வேண்டியும் நிற்க அவளோ அவனை கண்டுகொள்ளாமலே கடந்து சென்று அவனை துடிக்கவைத்தாள்.

அதை புரிந்த ஆரவ் அவனை விட்டு தள்ளியே நின்றான். ஆனால் ஆண்டனியும் ராகவ்வும் அர்ஜூனிற்கு பக்கத்துணையாக நிற்க ஆரவ் கிடைக்கும் சமயங்களில் அர்ஜூனை அவனின் தவறை சுட்டிக்காட்டி வாட்டி எடுப்பதும், ஸ்டெபிக்கு எதிர்காலத்தை விளக்கி அர்ஜூனுடன் வாழ வைக்கவுமென  போராடிக்கொண்டிருந்தான்.

அர்ஜூன் அவனது பெற்றோர்களிடம் பேசுவதையே குறைத்துகொண்டதை விட கல்பனாவை அம்மா என்று அழைப்பதை அறவே நிறுத்திவிட்டான்.

அதனால் பொறுமையிழந்த கிருஷ்ணன் ஒதுங்கியே நின்றால் தாங்கள் வீட்டை விட்டு வெளியேறி தன் சொந்தவீட்டிற்கு செல்கிறேன் என மிரட்டிப்பார்க்க அர்ஜூன் கிளம்புங்கள் என ஒற்றை வார்த்தையில் பதிலளித்துவிட்டான். அதன் பின்னும் அங்கிருக்க விரும்பாமல் வெளியேறினார் கல்பனா, கார்த்திக்கோடு.

“தான் என்ன தவறாக பேசினேன்? குழந்தை ஏக்கம் இருக்காதா? கேட்டது தவறா?…” என்றவரிடம்,

“கேட்டது தவறில்லை கேட்கப்பட்ட  விதம் தான் தவறு…” என விளக்கி  விலகி நின்றான்.

ஆனால் அவனது ஆஷாவிடம் அவனால் விலகி நிற்கமுடியவில்லை. அவளிடம் வார்த்தையாடுவதை நிறுத்தி பார்வையால் தன்னை புரியவைக்க முயன்றான். ஸ்டெபியோ எதையும் ஏற்றுகொள்ளபோவதில்லை என பிடிவாதமாக இருந்தாலும் யோசிக்காமல் இல்லை.

வெறும் வறட்டு பிடிவாதத்திற்காக மட்டுமே முதலில் அர்ஜூனை விட்டு வீட்டை விட்டு வெளியேறினாள். தனது உடலின் நிலை தெரியும் வரையில் அவன் மீதான அவளின் கோவம் அப்படியே தான் இருந்தது.

என்று தன்னால் ஒரு குழந்தையை சுமக்கமுடியாது என்று தெரிந்ததோ அன்றே முடிவெடுத்தாள். அர்ஜூனை விட்டு விலகியது விலகியதாகவே இருக்கட்டும் என்றும் முடிவெடுக்க என்னவோ சுலபமாக இருந்தது.

ஆனால் தன்னையே வட்டமிடும் அர்ஜூனின் விழிகளில் வழியும் காதலிலும் ஏக்கத்திலும் ஸ்டெபியின் உள்ளம் அந்த முடிவை செயலாக்கவிடாமல் தடுமாறியது. தறிகெட்டு அவன் பின்னே ஓடும் மனதை மிக சிரமத்தோடு தான் இவளால் கட்டிவைக்க முடிந்தது.

ஆனால் அர்ஜூனை விட்டு பிரிவதற்கான காரணத்தை எக்காரணம் கொண்டும் யாரிடமும் அவள் கூறவில்லை. அவன் மீதும், அவன் குடும்பத்தின் மீதும் கோவமாக இருப்பதாகவே காட்டிகொண்டாள். ஆரவ்விடம் கூட.

எத்தனை முயன்றும் அவளது பழைய நினைவுகளின் தாக்கத்திலிருந்து விடுபடமுடியவில்லை. இதுநாள் வரை அனுபவித்த துயரங்களும் தனிமையின் தவிப்புகளும் அவளை கொன்று தின்று கொண்டிருந்தன.

இன்றுவரை யாருக்கும் தெரியாது என்று நினைத்த தனது ரகசியம் தன் திருமணத்திற்கு முன்பே அவளின் ஆருயிர் காதல் கணவனுக்கு தெரிந்திருக்கிறது. அதையும் தாண்டி அதே காதலோடு தன்னை கைபிடித்தவனின் காதலில் ஸ்டெபியின் நெஞ்சம் விம்மியது.

அருகில் துயில் கொண்டிருக்கும் கணவனை திரும்பி பார்த்த ஸ்டெபியால் இப்போதும் நம்மமுடியாத ஒரு உணர்வு. இவனருகில் இந்த நெருக்கத்தில் இருப்பது நிஜம் தானா என நினைத்து நினைத்து சந்தோஷித்தாள்.

நடக்கவே நடக்காது, மீண்டும் இணையவே போவதில்லை என்று இரண்டு வருடங்களாக கனவுலகில் மட்டுமே அவனோடு வாழ்ந்துகொண்டிருந்த ஸ்டெபியின் பிரமிப்பு சற்றும் அகலாமல் இருக்க அர்ஜூனை நெருங்கி அவனது நெற்றியில் இதழ் பதித்து நிதர்சனத்தை உணர்ந்துகொண்டாள்.

அவளது இதழ் தீண்டலை உணர்ந்த அர்ஜூன், “ஆஷா தூங்குடா…” என உறக்கத்திலேயே அவளை இன்னமும் இறுக்கிக்கொண்டு மீண்டும் விட்ட தூக்கத்தை தொடர்ந்தான்.

error: Content is protected !!