தேடல் – 12
அர்ஜூன் வீட்டை விட்டு ஸ்டெபி வெளியே வந்த தகவலறிந்த தர்ஷினி ஆண்டனியின் வீட்டிற்கு செல்ல அவரோடு ஆரவ்வும், ராகவ்வும் சென்றனர்.
முதலில் யாரிடமும் எதுவும் பேசாமல் இருந்த ஸ்டெபி தர்ஷினி நெருங்கியதும் அவரை கட்டிக்கொண்டு ஓவென சப்தமிட்டு அழ ஆரம்பித்தாள்.
அவளின் வருகையின் காரணத்தையே அறியமுடியாமல் தவித்திருந்த ஆண்டனி மகளின் அழுகையில் சர்வமும் கலங்கி நின்றார். ஸ்டெபி தன்னை அர்ஜூனின் வீட்டிற்கு வந்து அழைத்துசெல்லுமாறு கூறியதிலே எதையோ உணர்ந்தவர் அங்கே சென்றார்.
அப்போதும் ஸ்டெபி ஒரு வார்த்தை கூட அங்கே என்ன நடந்தது என அவரிடம் கூறாமல் இனியும் இங்கே வாழ தான் விரும்பவில்லை என அவரின் தலையில் இடியை இறக்கினாள்.
முதலில் அதிர்ந்தாலும் அங்கே வைத்து மகளை குற்றவாளியை போல நிறுத்தி விசாரிக்க அவர் விரும்பவில்லை. அர்ஜூன் வரட்டும் என காத்திருக்க அவனாலும் ஸ்டெபியின் வெளிநடப்பை தடுக்கமுடியவில்லை.
வீட்டிற்கு வந்த பின்னாலாவது ஏதாவது கூறுவாள் என ஆண்டனி பார்க்க மகளோ வந்ததிலிருந்து வெறித்த பார்வையோடு அமர்ந்திருக்க பயந்துபோனார். அதனால் தர்ஷினிக்கு அழைத்து விவரத்தை கூறி வரவழைத்தார். இப்போது அவளது அழுகையில் திகைத்தவர்,
“என்ன இது இப்படி ஒரு அழுகை. அழும் அளவிற்கு என்ன நடந்திருக்கும்?…” என யூகிக்கமுடியாமல் அவரும் மற்றவர்களும் திகைத்து நிற்க தர்ஷினியோ,
“ஸ்டெபி மாமியார் மருமகள் பிரச்சனை யார் வீட்ல தான் இல்லை. இன்னைக்கு கல்பனா பேசினது ரொம்பவே அதிகம் தான். இதுக்காகவெல்லாம் இப்படி கிளம்பி வந்துடலாமா?…” எனவும்,
“என்ன சொல்கிறார் இவர்? ஸ்டெபியின் மாமியார் அப்படி எதை சொன்னார்? இவள் கிளம்பி வந்து அழும் அளவிற்கு?…” என யோசிக்க,
“மாம் நீங்க எப்போ பேப் வீட்டுக்கு போனீங்க? அங்க என்ன நடந்தது?…” கூர்மையாக அழுத்தமாக கேட்ட ஆரவ்வை பார்த்த தர்ஷினி,
“அடடா இவன் இருக்கையில் இப்படி வாயை விட்டுவிட்டோமே? சும்மாவே ஆடுவானே? கல்பனாவின் பேச்சு அறிந்தால் என்ன நடக்குமோ?…” என பதை பதைத்தபடி பார்க்க,
“இப்போ என்ன நடந்ததுன்னு சொல்ல முடியுமா முடியாதா?…”கிட்டத்தட்ட மிரட்டலே இருந்தது அவனின் குரலில்.
வேறு வழியில்லாமல் நடந்ததை அவர் கூறவும் அவன் ஸ்டெபியை பார்க்க அவளும் அவனின் கோவத்திற்கு பயந்து தனக்கும் அர்ஜூனிற்குமான வாக்குவாதத்தை கூற கிளம்பியேவிட்டான் ஆரவ் அர்ஜூனின் வீடு நோக்கி.
வேகமாக செல்லும் அவனை தடுக்கமுடியாமலும், அழுகையில் கரைந்துகொண்டிருக்கும் ஸ்டெபியை சமாதானம் செய்யமுடியாமலும் தவித்துபோயினர் பெரியவர்கள் மூவரும்.
ஸ்டெபிக்கு கல்பனாவின் மேலிருந்த கோவத்தை விட அர்ஜூன் கூறிய வார்த்தைகளினால் ஏற்பட்ட வலி பெரிதாக தெரிந்தது.
“இவன் திருமணமே செய்யாமல் இருந்திருந்தால் நிம்மதியாக இருப்பானாமாம்? அவனின் நிம்மதியை தான் எந்தவிதத்தில் பறித்தேன்?. தான் இல்லாமல் இனி அவன் மட்டும் நிம்மதியாக வாழட்டும்…”
இப்படித்தான் இருந்தது ஸ்டெபியின் எண்ணங்கள்.
அங்கே அர்ஜூனோ உயிரற்ற உடலாக சோபாவில் சரிந்து கிடந்தான். கல்பனாவிற்கும், கிருஷ்ணனுக்கும் இதயத்தில் ஒரே படபடப்பு. மகனின் நிலை கவலையளித்தாலும் அருகில் சென்று ஆறுதல் கூற தைரியம் வரவில்லை அவர்களுக்கு.
ஏதேனும் அவனுடன் பேச்சை வளர்த்தால் உண்மையில் நடந்தது என்னவென விசாரிக்க ஆரம்பித்து விடுவானோ என நினைத்தே ஒதுங்கி நின்றனர். கார்த்திக்கிற்கு பெற்றவர்களின் இந்த விட்டேற்றி தன்மை வெறுத்துப்போனது.
“என்ன மனிதர்கள் இவர்கள்? மகனை சமாதானம் செய்து தேற்றாமல் யாரோ போல தள்ளி நிற்கின்றனரே” என பொருமிக்கொண்டு அர்ஜூனிடம் பேச முயல அவனோ வாயை திறந்தால் தானே?
கார்த்திக் கல்பனாவிடம் நடந்ததை கேட்க அவரோ மூச்சு விடவும் இல்லை. தர்ஷினி வந்தபொழுது ஏதோ வேகத்தில் ஸ்டெபியை குதறவேண்டும் என்ற நோக்கத்தில் வாயை விட்டவர் அதன் பின் தான் யோசிக்கவே செய்தார்.
அவசரப்பட்டு பேசி மகன் வந்தபின் ஸ்டெபி என்ன சொல்வாளோ என பயந்து அர்ஜூனிடம் அவன் வந்ததுமே வாக்குமூலம் போல பூசிமொழுகி குழந்தை ஏக்கம் என்று மட்டும் கூறியவர் அதோடு பிரச்சனை முடிந்தால் போதும் என்று விட்டு விட்டார்.
அவரே எதிர்பாராதது ஸ்டெபியின் நடவடிக்கை. இப்படி வீட்டை விட்டு வெளியேறுவாள் என எதிர்பார்க்காதவருக்கு அப்போதும் கொஞ்சமும் உறுத்தல் இல்லாமல் மகனின் வாழ்விலிருந்தும் இவள் போய்விட்டால் நல்லது என்றுதான் நினைக்க தோன்றியது.
அர்ஜூன் அதிர்ச்சியிலேயே அமர்ந்திருக்க கார்த்திக்கை அழைத்து அர்ஜூனை சாப்பிட வர சொல்லிய கல்பனாவை சாப்பாடு இப்போ ரொம்ப முக்கியமா என்பது போல முறைத்தான் கார்த்திக். அதில் வாயை மூடிக்கொண்டார் அவர்.
இரவை நெருங்கியதும் ஆரவ்வின் பைக் சத்தத்தில் கல்பனாவிற்கு கைகாலெல்லாம் உத்தர தொடங்கியது. கிருஷ்ணன் கல்பனாவை அறைக்குள் செல்லுமாறு சைகை காண்பிக்க அர்ஜூனை நினைத்து தேங்கியவர் மெதுவாக உள்ளே செல்லும் முன் புயல் போல உள்ளே நுழைந்தான் ஆரவ்.
அவனை பார்த்த அர்ஜூன், “டேய் ஸ்டெபி எங்கடா? நீ அவளை கூட்டிட்டு வரலயா? சரி வா நாம போய் கூட்டிட்டு வருவோம்…” ஆரவ்வை பிடித்து கேள்விகேட்டு பதிலையும் கூறிய அர்ஜூனை தன்னிடமிருந்து பிரித்து தள்ளி நிறுத்திய ஆரவ் கல்பனாவை பார்த்து,
“நீங்க எங்க வீட்டு பொண்ணை என்ன சொன்னீங்க?…” அவனது உறுமலில் மிரண்ட கல்பனா கிருஷ்ணனின் பின்னால் மறைய,
“அவ என்ன பேசினான்னு அர்ஜூனுக்கு தெரியும். அவன்கிட்ட எல்லாம் சொல்லியாச்சு. பெரியவங்களுக்கு மரியாதை குடுக்காம தான்தோன்றிதனமா முடிவெடுத்து யாரோட பேச்சையும் கேட்காம வீட்டை விட்டு வெளில போனவ இனி எங்க குடும்பத்துக்கு வேண்டாம்…”
“மரியாதையா பேசுங்க மிஸ்டர் கிருஷ்ணன்…” ஆரவ்வின் கோவம் எல்லையை கடக்க ஆரம்பித்தது. அர்ஜூன் எதற்கு இந்த ஆவேசம் என்பது போல பார்த்திருக்க,
“அப்படித்தான்டா பேசுவேன். வீட்டுக்கு வாரிசை பெத்துகுடுக்க முடியலையான்னு கேட்டதுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா? இப்படி திமிரா நடக்கிற பொண்ணு எங்க குடும்பத்துக்கு ஒத்துவராதுன்னு தான் முதல்லையே வேண்டாம்னு சொன்னோம். ஏதோ என் பிள்ளைக்காக பொறுத்து போனோம்…”
“யாருக்கு பொறுமை? அதை பத்தி நீங்க பேசாதீங்க சார். வீட்டுக்கு வாழ வந்த பொண்ணை நல்லவிதமா நடத்த துப்பில்லை. உங்களுக்கு மரியாதை ஒரு கேடா?…”
“ஆரவ் நீ அதிகமா பேசற. வேண்டாம். நீ கிளம்பு நான் நாளைக்கு வீட்டுக்கு வரேன்…” அர்ஜூனும் கொஞ்சம் அமைதியாகவே எடுத்து கூறி அவனை கிளப்ப முயல,
“உன் வேலையை நீ பார்டா. இவங்க பேசினது உன் பொண்டாட்டியை. நியாயமா இந்த கோவம் உனக்கு வந்திருக்கனும். நான் என்னனு கேட்க வந்தா இப்படி தான் பதில் பேசுவாரா இந்த பெரிய மனுஷன்?…”
“யாரை பார்த்து யார் கேள்வி கேட்கறது? எங்க குடும்ப விஷயத்துல தலையிட நீ யார்? ஒழுங்கு மரியாதையா வீட்டை விட்டு வெளில போய்ரு…” என்ற கிருஷ்ணனிடம்,
“அதை சொல்ல உங்களுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு? இது என் ப்ரெண்ட்ஸ் வீடு. அர்ஜூன் ஸ்டெபி பேர்ல என்னோட அங்கிள் வாங்கி குடுத்த வீடு. இந்த வீட்டை விட்டு வெளில போக சொல்ற எந்த அதிகாரமும் உங்களுக்கு இல்லை…” தெனாவெட்டாக பதில் கூறியவனின் வார்த்தைகளில் இருந்த உண்மையில் சிறுத்துப்போனார் கிருஷ்ணன்.