எத்தனை பொறுமையாக இருந்தும் கல்பனா ஏற்றிவைத்த வெறுப்பு என்னும் நெருப்பு கொஞ்சம் கொஞ்சமாக ஸ்டெபியை சூழ ஆரம்பித்தது.
அதன் தாக்கம் அர்ஜூனை சுட்டெரிக்க ஆரம்பித்தது. எப்போவாவது ஒருமுறை என்று ஆரம்பித்த குற்றப்பத்திரிக்கை தினமும் என்று வாடிக்கை ஆனது. ஸ்டெபி கொஞ்சம் கொஞ்சமாக தனது இயல்பிற்கு மாறாக மாற ஆரம்பித்தாள்.
எப்போதும் வீட்டில் இறுக்கமான முகத்தோடே வலம் வர ஆரம்பித்தாள். அர்ஜூனும் கல்பனாவிடம் எவ்வளவோ எடுத்துக்கூறியும் அவரும் மசிவதாக இல்லை.
“என் வயதென்ன? நான் ஏன் ஒதுங்கி செல்லவேண்டும்…” என்று அவரின் பங்கிற்கு விறைத்துக்கொள்ள அர்ஜூனிற்கு தான் மூச்சு முட்டியது.
இப்படியே சிலநாட்கள் காதலோடும் பலநாட்கள் சண்டையும் சச்சரவுமாக வருடங்கள் கடக்க இரண்டாம் வருட திருமணநாளை தங்கள் வீட்டில் கொண்டாடவேண்டும் என்று பேச வந்திருந்தார் தர்ஷினி.
அதைப்பற்றி அவரோடு ஸ்டெபி பேசிக்கொண்டிருக்க அப்போதுதான் கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்குள் நுழைந்தனர் கிருஷ்ணனும், கல்பனாவும். அவர்களை பார்த்ததும் எழுந்து நின்ற தர்ஷினி தான் வந்த விஷயத்தை பற்றி கூறவும்,
“ஆமாமா கல்யாணமாகி ரெண்டு வருஷம் ஆச்சு. வயித்துல ஒரு புள்ளை, பூச்சி உண்டாகலை. அவசியம் இவளுக்கு கல்யாணநாள் கொண்டாடவேண்டியது தான். இவளை என் மகனுக்கு கட்டிவச்சு இப்படி அவன பட்டமரமா நிக்கவச்சுட்டேனே?…” என ஏக வசனத்தில் மூக்கை உறிஞ்சியபடி கல்பனா பேச அதிர்ந்தார் தர்ஷினி.
ஸ்டெபியை திரும்பி பார்க்க கண்ணீரை அடக்கிக்கொண்டு தலை குனிந்தபடி நின்றிருந்தாள். அவளது நிலை புரிந்த தர்ஷினி,
“என்ன கல்பனா பேசறீங்க? அர்ஜூனுக்கும், ஸ்டெபிக்கும் என்ன வயசாகிடுச்சு? ரெண்டு வருஷம் குழந்தை வேணாம்னு அவங்க தள்ளி கூட போட்டிருக்கலாமே? வாய்க்குவந்தபடி பேசாதீங்க கல்பனா…”
“என்ன தள்ளி போட்ருக்காங்களா? ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. அவ ஒவ்வொரு மாசமும் குழந்தை தங்கும்னு எதிர்பார்க்கிறது எனக்கு தெரியாதுன்னு நினைக்கிறீங்களா?…”
ஒருமுறை அர்ஜூனிடம் தனக்கு ஏன் இன்னும் கர்ப்பம் தரிக்கவில்லை என்றும், ஒரு செக்கப் செய்து பார்க்கவேண்டும் என்றும் கூற அதற்கு அர்ஜூன் மறுப்பு தெரிவித்ததற்காக ஆஷா அவனிடம் குறைபட்டுகொண்டதை எத்தேர்ச்சையாக கேட்டதை வைத்து கல்பனா கூறவும் தர்ஷினி குழம்பி நின்றார். இப்படி பேசுபவரிடம் என்ன பேச என புரியாமல் பார்க்க,
“ஒரு புள்ளைக்கு தாயாக துப்பில்லாதவளுக்கு காதல் ஒரு கேடு. கல்யாணநாள் கொண்டாட்டம் ஒரு குறையாக்கும்? வந்துட்டாங்க பெருசா பேச. முதல்ல இவளை எங்களுக்கு ஒரு வாரிசை பெத்து தர சொல்லுங்க…”
“எங்களுக்கும் எங்க பேரன் பேத்தியை கொஞ்ச ஆசை இருக்காதா? இவளை எங்களுக்கு இப்பவும் பிடிக்காதுதான். ஆனா என் மகன் ஆசைப்பட்டதுக்காக தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். ஆனா அவனோட வாழ்க்கையே பட்டுபோய்டும் போல இருக்கே?. இவளால தாயாக முடியுமா? இல்லை இவ ஒரு ம…”
வார்த்தைகளை முடிக்கும் முன் ஸ்டெபி அவர்களை கையமர்த்தி போதும் என்று தடுத்துவிட கல்பனா முகம் திருப்பிகொண்டார்.
வார்த்தையால் தீக்கங்குகளை வாரி இறைக்க அதில் துடித்துபோனாள் ஸ்டெபி. இதுவரை சாஸ்திரம் சம்பிரதாயம் என்று குறை கூறி வந்தவர்கள் இன்று அவளது தாய்மையை பற்றி பேசவும் ஒரு முடிவெடுத்துவிட்டாள் ஸ்டெபி. மனம் தாளாமல் தர்ஷினி ஏதோ கூற வர,
“தர்ஷிமா நீங்க கிளம்புங்க. இதுக்கு மேலையும் எதுவும் பேசவேண்டாம். நான் அப்றமா உங்ககிட்ட போன்ல பேசறேன்…” என கூறி அவரை அனுப்பிவைத்தவள் கல்பனாவையும் கிருஷ்ணனையும் தீர்க்கமாக் ஒரு பார்வை பார்த்துவிட்டே மேலே சென்றாள்.
சிறிது நேரத்தில் அர்ஜூனும் வந்துவிட அவனுக்காக மாடியில் காத்திருந்தாள் ஸ்டெபி. வீட்டிற்கு வந்தவன் மாடிக்கு பத்துநிமிடங்கள் கழித்தே வந்தான். இங்குமங்குமாக நடைபயின்றுகொண்டிருந்தவள் தன்னை கண்டுகொள்ளாமல் பாத்ரூமிற்குள் நுழைந்த கணவனையே வெறித்து பார்க்க அவனோ சிறிது நேரத்தில் வெளியே வந்தவன்,
“ஆஷா நாளைக்கு நான் ஹைதராபாத் போகனும். மெடிக்கல் கான்பரென்ஸ். நீ இங்க இருக்கிறாயா? இல்லை உன்னோட அப்பா வீட்டுக்கு போகலாம்னு நினைக்கிறையா?…” என இலகுவாக கேட்டுகொண்டே லேப்டாப்பில் எதையோ ஆராய அவனின் முதுகிற்கு பின்னால் நின்ற ஸ்டெபி,
“இன்னைக்கு வீட்ல என்ன நடந்ததுன்னு தெரியுமா?…” அடக்கப்பட்ட கோவத்தில் கேட்க,
“ஹ்ம் வந்ததுமே அம்மா சொல்லிட்டாங்க. ப்ளீஸ் அதைப்பத்தி பேசாதயேன். எனக்கு இப்போ இருக்கிற மூட் ஸ்பாயில் ஆகிடும்…” அத்தோடு முடித்துகொண்டான்.
“அப்போ நான் என்ன கஷ்டபட்டாலும் உங்களுக்கு பரவாயில்லையா? உங்களோட மூட் தான் இப்போ முக்கியமா?…” அழுகையை அடக்கிய குரலில் கேட்க,
“பெருசா என்ன நடந்தது? தர்ஷிமாக்கிட்ட நமக்கு குழந்தை இல்லைன்னு அம்மா பேசிருக்காங்க. இது ஒரு விஷயமா? நான் தான் உன்கிட்ட குழந்தை பத்தி இப்போ எதுவும் பேசவேண்டாம்னு சொல்லிருக்கேன்ல. திரும்ப திரும்ப அதையே பேசி என்னை டென்ஷன் பண்ணாத ஆஷா…”
“உங்கம்மா பேசினது சரின்னு சொல்றீங்களா?…” அப்போதும் விடாமல் ஸ்டெபி பேச,
“அவங்க இடத்திலிருந்து பார்த்தா அவங்களோட எதிர்பார்ப்பு தப்பில்லை. அவங்க பேசறதென்ன புதுசா? விட்டுத்தள்ளு. எனக்கு வேலை நிறைய இருக்கு…”
நடந்த விவரம் எதுவும் முழுவதும் தெரியாமல் அர்ஜூனும் அதைப்பற்றி பேச விரும்பாமல் விஷயத்தை தள்ளிபோட அதில் ஸ்டெபியின் ஆத்திரம் அதிகமாகியது. தன்னிடம் என்ன நடந்தது என்று கேட்காமல் கல்பனாவின் பேச்சை கேட்டு நடந்துகொண்டதில் மேலும் கொதித்தாள்.
அர்ஜூனோ குழந்தை பற்றிய பேச்சு வந்தால் எங்கே ஸ்டெபிக்கு இருக்கும் குறையை தன்னை மீறி அவளிடம் உளறிவிடுவோமே என்று எண்ணியே அதை தவிர்க்க நினைத்தான். அதை புரிந்துகொள்ளாத ஸ்டெபி,
“அப்போ உனக்கு உன்னோட வேலையும், உன் அம்மாவும் தானே முக்கியம். அவங்க சொல்றதை சரின்னு சொல்றல. அப்போ நான் எதுக்கு? நான் உனக்கு தேவையில்லையா?…”
“என்ன ஆஷா நானும் பார்த்துட்டே இருக்கேன் எப்போ பார்த்தாலும் நான் முக்கியமில்லை, நான் தேவையில்லைன்னு சும்மா அதையே பினாத்திட்டு இருக்க? உனக்கு என்னை நிரூபிக்க நான் உன் பின்னாலையே சுத்திட்டு இருக்கனுமா? இல்லை நீ சொல்றதை கேட்டு என்னோட பெத்தவங்களை விட்டு நான் உன்னோட வந்திடனும்னு நினைக்கிறயா?…”
“வீட்டுக்கு வந்தாலே எனக்கு நிம்மதியே இல்லை. ச்சை…” வேலைப்பளுவும் தன் தாய் கொடுக்கும் நெருக்கடியும், குழந்தை குழந்தை என ஸ்டெபி பாடும் புராணமும் அவனை நிதானம் இழக்க செய்ய வார்த்தைகளை விட்டான்.
“இப்படி நிம்மதி இல்லாமல் இருக்கறதுக்கு நான் கல்யாணமே பண்ணாம இருந்திருப்பேன். என்ன வாழ்க்கையோ இதெல்லாம்…” என அவனையறியாமல் ஸ்டெபியை வதைக்க அவள் அடியோடு சாய்ந்தாள்.
அவளின் முகத்தை பார்க்காமலே வீட்டை விட்டு வெளியே சென்றவன் மீண்டும் இரவு திரும்பி வரும் வேலையில் ஹாலில் தனது பெட்டியோடு நின்றிருந்தாள் ஸ்டெபி. அவளருகில் ஆண்டனியும் இறுகிய முகத்தோடு. அதில் பதறியவன்,
“ஆஷா, என்ன இதெல்லாம்? ஏன் இப்படி பன்ற? எதுவானால் பேசி தீர்த்துக்கலாம். ப்ளீஸ்…”
“இனிமே பேசறதுக்கு என் கிட்ட எதுவுமே இல்லை மிஸ்டர் அர்ஜூன். இந்த வீட்ல இனி ஒரு நிமிஷம் கூட நான் இருக்கமாட்டேன். யார் என்ன பேசினாலும் பொறுத்துக்கிட்ட போக நான் ஒன்னும் சராசரி பெண் இல்லை. இனி உங்க வாழ்க்கையில் இந்த ஸ்டெபிக்ஷா இல்லை…” என நிமிர்வாக கூறிவிட்டு தனது ட்ராலியை இழுத்தபடி வெளியேறிவிட்டாள்.
ஆண்டனியும் அர்ஜூனின் தோளில் ஆறுதலாக தட்டிகொடுத்துவிட்டு கலங்கிய முகத்தோடு வெளியேறிவிட்டார். ஸ்டெபியிடம் இதை எதிர்பார்க்காத அர்ஜூன் மொத்தமாக செத்துவிட்டான்.
வீட்டை விட்டு சென்ற ஸ்டெபி தன்னவனின் மனதை கொன்று கூறாக்கிவிட்டு வந்திருப்பதை அறியாமல், அறிய விரும்பாமல் மனம் முழுவதும் கல்பனாவின் பேச்சுக்களை சுமந்துகொண்டு சென்றாள்.
கோவமும் ஆத்திரமும் அவளது அறிவையும் அர்ஜூன் அவள் மேல் கொண்ட காதலையும் மேகமென மூடி மறைக்க வறட்டு பிடிவாதத்தில் பெரும் தவறொன்றை செய்துவிட்டு நிமிர்வாகவே சென்றுவிட்டாள்.
அதை அடுத்த சில நாட்களிலே எதற்கும் பார்த்துவிடுவோம் என யாரும் அறியாமல் தன்னை செக்கப் செய்துகொள்ள அதில் வந்த ரிப்போர்ட்டால் நிம்மதியிழந்து அர்ஜூனிடம் மன்னிப்பை யாசிக்கமுடியாமல் தவிக்கவும் ஆரம்பித்தாள்.
எங்கே மன்னிப்பை கேட்டால் மீண்டும் தன்னை வாழ அழைத்து விடுவானோ என அஞ்சியே அவனுக்காக அவன் மீது கொண்ட காதலுக்காகவே அவனிடம் இருந்து ஒதுங்க ஆரம்பித்தாள்.
அவனை விலகவும் முடியாமல் நெருங்கவும் முடியாமல் ஒவ்வொரு நாட்களையும் நரகமென கழித்து அதில் தனக்குள்ளாகவே உருகிகொண்டிருந்தாள்.