அவஸ்தையாக நெளிந்துகொண்டிருந்தாலும் ஆரவ்வின் ஒற்றை பார்வையில் மீண்டும் நேராக அமர்ந்துவிடுவார். இருட்ட ஆரம்பித்ததும் கிருஷ்ணனும் வந்துவிட்டார். ஹாலில் கார்த்திக் அமர்ந்திருக்க,
“அம்மா எங்க கார்த்திக்?…” என கேட்டவர்,
“ஹோ கோவிலுக்கு போறதா சொல்லிருந்தாளே. அதுக்கு போய்ருப்பா…” தானே அதற்கு பதிலும் கூறியபடி கல்பனா இருந்த அறைக்குள் நுழைய அங்கே ஆரவ்வும் முகம் இருள அமர்ந்திருந்த தன் மனைவியையும் பார்த்து திகைத்தார்.
“என்ன கல்பனா, ஏன் ஒரு மாதிரியா இருக்க?…” ஆரவ்வை விடுத்து கல்பனாவிடம் கேட்க அவரோ அழுதுகொண்டே கணவனை நோக்கி எழ நினைக்க அவரை ஒற்றை பார்வையில் அடக்கினான் ஆரவ்.
“ஏய் நீ இங்க என்னடா பன்ற?…” என பதறியபடி கல்பனாவின் அருகில் செல்ல அப்போதும் அமைதியாக இருந்தான். கல்பனா கிருஷ்ணனிடம் கூறவும் அவருக்கோ கோவம் கட்டுக்கடங்காமல் பெருகியது.
கார்த்திக்கை அழைத்தவர், “தன்னிடம் முன்பே சொல்லியிருக்க வேண்டியது தானே, சீக்கிரம் வீட்டிற்கு வந்திருப்பேனே…” என்று அவனை பிடித்து திட்ட அப்போதும் ஆரவ் அந்த இடத்தை விட்டு நகரவில்லை. கல்பனாவும் அப்படியே இருந்தார்.
“உன்னோட அராஜகத்திற்கு ஒரு அளவே இல்லை ஆரவ். நான் உங்க அப்பாகிட்ட இதைபத்தி சொல்லித்தான் ஆகனும். முதல்ல அர்ஜூன் வரட்டும். அவனை வச்சு பேசிக்கறேன்…” என்றவர் அர்ஜூனுக்கு அழைக்க அதற்குள் அவனும் ஸ்டெபியோடு வீட்டிற்குள் வந்துவிட்டான்.
கல்பனாவின் அறையில் இருந்தபடியே அர்ஜூனை கத்தி அழைத்த கிருஷ்ணன்,
“இங்க பார்த்தியா அர்ஜூன் உன் ப்ரென்ட் பன்ற அநியாயத்தை. உன் அம்மா வயசானவ. அவளை இந்த பெட்டை விட்டு இங்கயும் அங்கயும் நகரவிடாம உட்கார்த்தி வச்சிருக்கான். அவசரத்தேவைக்கு கூட போகவிடாம. நீயே கேளு என்னனு…”
அதில் குழம்பிய அர்ஜூன் ஆரவ்வை விடுத்து கல்பனாவிடம், “அம்மா என்ன பண்ணுனீங்க நீங்க? ஏன் ஆரவ் இப்படி செய்றான்?…” என கேட்கவும் பொங்கிவிட்டார் கல்பனா.
“நல்லா இருக்குடா நியாயம். பெத்த தாயை இவன் கைதி மாதிரி உட்கார்த்தி வச்சிருக்கான். அதுவும் வயசுக்கு கூட மரியாதை இல்லாம. நீ என்னனா அவனை கேட்கிறதை விட்டுட்டு என்னை விசாரிச்சுட்டு இருக்க. இது கொஞ்சமும் நல்லா இல்லை சொல்லிட்டேன்…”
அர்ஜூனோ, “அப்பா எனக்கு ஆரவ்வை பத்தி தெரியும். அவன் இப்படி செய்கிற அளவுக்கு அம்மா என்ன பண்ணினாங்க? அதைத்தானே கேட்டேன். அதுல என்ன தப்பு? பிரச்சனையோட ஆரம்ப புள்ளி எதுன்னு தெரிஞ்சுக்கனுமே?…”
அர்ஜூனும் கிருஷ்ணனும் மாற்றி மாற்றி வார்த்தையாட ஸ்டெபி இதற்கு மேலும் விட்டால் பிரச்சனை பெரிதாகும் என எண்ணி காலையில் நடந்ததை அர்ஜூனிடம் கூற அவன் கல்பனாவை முறைத்தான்.
“ஆரம்பிச்சு வச்சதே அம்மாதானே, இதுக்கு என்ன சொல்றீங்கப்பா?…”
“காலையில இது நடக்கும் போது நானும் தான் இருந்தேன். உன் அம்மா ஆசைபட்டதுல அப்படி எந்த தப்பும் இருக்கிறதா எனக்கு தோணலை. முதல்ல இவனை கண்டிச்சு வை. ஏற்கனவே பட்டாசை கொழுத்தி போட்டதுக்கு நீ சின்னபையன். விளையாட்டா செஞ்சிட்டான்னு சொன்ன. இப்போ செஞ்சதுக்கு பேரு என்ன?…” எனவும் ஆரவ் அவரை முறைக்க அவர் வேறுபுறம் திரும்பிக்கொண்டார்.
“டேய் நீ கிளம்பு. நான் பார்த்துக்கறேன். நீ நைட் ஹாஸ்பிட்டல்ல ஸ்டே பண்ணணும்ல…” என ஆரவ்வை கிளப்ப,
“கல்யாணம் செய்தா மட்டும் போதாது. அவளை எப்படி கலங்கவிடாம வச்சுக்கனும்னு யோசிக்கனும்…” என அர்ஜூனை தாக்கியவன் கல்பனாவின் புறம் திரும்பி,
“இன்னொரு தடவை அவளை அழவிட்டீங்க நடக்கிறதே வேற. இது உங்களுக்கு ரெண்டாவது வார்னிங். புரியுதா?…” என்று மிரட்டிவிட்டே நகர்ந்தான் ஸ்டெபியை பார்த்தபடி.
ஆரவ்வின் பின்னால் சென்ற அர்ஜூன், “ஆரவ் கோவப்படாதடா, இது போல பேசாம நான் அம்மாவை கண்டிச்சு வைக்கிறேன். அதே போல நீயும் கொஞ்சம் கோவத்தை குறை. அவங்க வயசானவங்கடா. ஒரு டாக்டரா இருந்துட்டு நீ இப்படி செய்யலாமா?…”
“எனக்கு முதல்ல என்னோட பேப் தான் முக்கியம். அதுக்கப்பறம் தான் யாருமே. முதல்ல உன்னோட பொண்டாட்டியை நல்லபடியா வக்சுக்கபாரு. என்னை விட அவ உனக்குத்தான் முக்கியம்…” என்றவன் அதற்குமேல் தாமதிக்காமல் கிளம்பிவிட்டான்.
“அம்மாடியோவ், இவனுக்கு நாளுக்கு நாள் கோவம் என்னைவிட கூடிட்டே போகுதே?…” என நினைத்து சிரித்துக்கொண்டே உள்ளே செல்ல அங்கே தாயும் தந்தையும் தன்னை முறைத்தவண்ணம் நிற்கவும் காலையில் பேசிக்கொள்ளலாம் என்று கூறி ஸ்டெபியோடு மாடியேறிவிட்டான்.
அவர்கள் சென்றதும் கல்பனாவை சமாதானம் செய்த கிருஷ்ணன் மறுநாள் ராகவனை சந்தித்து தான் பேசுவதாக கூறிய பின்பே சாப்பிட அமர்ந்தார் கல்பனா. கார்த்திக் இதையெல்லாம் பார்த்தவாறே இருந்தான். பேச முயலவில்லை.
அறைக்குள் நுழைந்ததுமே உடையை கூட மாற்றாமல் ஸ்டெபி சென்று படுத்துவிட ஏற்கனவே தாயின் மேல் கோவத்தில் இருந்த அர்ஜூன்,
“ஆஷா என்ன பழக்கம் இது? ஹாஸ்பிட்டல்ல இருந்து வந்ததும் ப்ரெஷ் ஆகாம இப்படி படுத்துட்ட? எழுந்துக்கோ. போய் குளிச்சுட்டு வா…” கையை பிடித்து எழுப்பியும் அவள் நகரவில்லை.
“என்னதான் ஆஷா உன்னோட ப்ராப்ளம்? என்கிட்டே எதுவுமே சொல்லமாட்டேன்ற? பாரு ஆரவ்க்கிட்ட சொல்லி பாவம் அவன். கோவத்துல என்ன பண்ணிட்டான் பாரு. அம்மாவும் வயசானவங்க தானே?…”
அவனது பேச்சில் துள்ளி எழுந்தவள், “இப்போ கூட உங்க அம்மாவுக்கு தானே பார்க்கறீங்க? இந்த ஒரு மாசமா இங்க என்ன நடக்குதுன்னு உங்களுக்கு தெரியுமா? தெரியாதா? நான் கஷ்டபட்டா உங்களுக்கு பரவாயில்லையா?…”
எப்போதும் அத்தை என்று கூறுபவள் இன்று உங்களின் அம்மா என்று கூறவும் திகைத்தான். இப்படி பிரித்து பேசியிறாதவள் இன்றைக்கு வெடிக்கவும் அதிர்ந்துவிட்டான் அர்ஜூன்.
“நான் அப்படி சொல்லலைடா ஆஷா. ஆரவ்க்கு சிரமம் குடுக்க வேண்டாம்னு தான் சொல்றேன். காலையில நடந்ததை நீ என்னிடம் சொல்லியிருக்கலாமேன்னு சொல்லவரேன். புரிஞ்சுக்கோ…”
“நான் ஒன்னும் அவனுக்கு போன் பண்ணி சொல்லலை. அவனா தான் என்னோட வாய்ஸ் வச்சு கண்டுபிடிச்சான். அவன் கேட்டதும்தான் சொன்னேன். அப்போ எனக்கு என்ன செய்யன்னு தெரியலை. அவன் இப்படி உங்கம்மாவை அரஸ்ட் பண்ணிவைப்பான்னு எனக்கு தெரியாது…”
“அவன் என் குரலை வைத்தே கண்டுகொண்டான். நீ அப்படி இல்லை” என்னும் செய்தி அதில் பொதிந்திருந்ததை அர்ஜூன் உணர்ந்தான். அதில் அவனது கோவம் சீண்டப்பட,
“வார்த்தைக்கு வார்த்தை என்னோட அம்மான்னு ஏன் சொல்ற? அவங்க உனக்கு யாரு?…” அர்ஜூனின் குரலிலும் சூடு கிளம்பியது.
“அம்மா இல்லாத பொண்ணுக்கு அம்மாவா அவங்க இருக்கலையே. எனக்கு மாமியாரா கூட அவங்க நடக்கலை. நான் எதுக்கு அத்தைன்னு கூப்பிடனும்?…” விதண்டாவாதமாக பேசுபவளை என்ன செய்யவென தெரியாமல் விழி பிதுங்கி நின்றான்.
“ஆஷா இத்தோட இந்த பிரச்சனையை விட்டுடு. அம்மாகிட்ட நான் பேசிக்கறேன். இனிமே இப்படி நடக்காம நான் பார்த்துக்கறேன்…”
“நானும் இனிமே என்ன நடந்தாலும் யார்க்கிட்டயும் காட்டிக்கலை. உங்ககிட்ட கூட இனி சொல்லமாட்டேன். எதுவானாலும் என் மனசுக்குள்ளயே நான் வச்சுக்கறேன். போதுமா?…”
மீண்டும் பேச்சு. மீண்டும் அவன் சமாதானம். மீண்டும் அவளின் பிடிவாதம் என வார்த்தை போர் வலுப்பெற ஒரு சராசரி பெண்ணாக மாறி தன்னிடம் மல்லுக்கு நிற்கும் மனைவியை நினைத்து கவலைகொண்டான் அர்ஜூன்.
தன் தாயின் நடவடிக்கை ஒரு மாதத்திலேயே தன்னவளது இயல்பை மாற்றிவிட்டதே என பெரும் ஆயாசமாக ஆனது. எப்போதும் கனிவாகவும் கலகலப்பாகவும் இருக்கு ஸ்டெபியின் இயல்பு இப்படி மாறிவிட்டதே என்ற வருத்தம் தான் அவனுக்கு மேலோங்கியது.
“ஓகே ஆஷா. இனிமே எது நடந்தாலும் என்னிடம் சொல். நான் கேட்கிறேன். சரியா பேபி. ப்ளீஸ் இப்டி டென்ஷன் ஆகாதடா…” என அவளை கெஞ்சி கொஞ்சி சமாதனம் செய்யவே அவனுக்கு விடிந்துவிட்டது.
மறுநாள் தாயையும் தந்தையும் தனியாக அழைத்து தனது வாழ்வில் நிம்மதி இருக்கவேண்டும் என்றால் இனியும் இப்படி பிரச்சனைகளை செய்யாமல் அமைதியாக இருக்குமாறு எச்சரித்தே விட்டான். அதிலும் அவர்களது கோபம் ஸ்டெபி மீதே திரும்பியது.
தங்கள் மகனை தனக்கு எதிராக திருப்பிய ஸ்டெபியை ஒரு கை பார்க்காமல் விடமாட்டேன் என்று சபதம் எடுத்துகொண்டார் கல்பனா. கிருஷ்ணனோ ராகவ்விடம் ஆரவ்வின் செயலை கூற தான் கண்டிப்பதாக அவரை அனுப்பிவைத்தார் ராகவ்.
ஆனால் அவனிடம் இதுபற்றி பேசவே இல்லை. பேசினால் எங்கே அதற்கும் சேர்த்து அவர்களிடம் மீண்டும் பிரச்சனை செய்வானோ என்று எண்ணி அப்படியே விட்டுவிட்டார்.
அடுத்த இரண்டு நாட்களில் ஹனிமூன் கிளம்பிய அர்ஜூனும் ஸ்டெபியும் அடுத்த ஒரு வாரம் தங்களை சூழ்ந்துள்ள பிரச்சனைகளை மறந்து குலுமணாலியில் மகிழ்வாக கழித்துவிட்டு திரும்பி வந்தனர்.
அதன் பின்னர் தான் கல்பனா கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் தன் வேகத்தை காட்டினார். ஸ்டெபியும் அர்ஜூனுக்காக பொறுமையாக தான் இருந்தாள். அதனால் பல விஷயங்களை கூறாமலும் சில விஷயங்களை மனம் பொறுக்காமல் கூறியும் அவனிடம் தன் மனத்தாங்கலை வெளிப்படுத்தினாள்.
அவனுக்கு தெரியும் தவறு நிச்சயம் மனைவியின் மேல் இருக்காது என்று. வேறு மதத்து பெண்ணை திருமணம் செய்ய தன் பெற்றோர் ஒப்புக்கொண்டதே பெரிய விஷயமாக தோன்றியதால் தனக்காக கொஞ்சம் அனுசரித்து பொறுமையாக போக ஸ்டெபியிடம் கூறினான்.