திருமணம் முடிந்து வந்ததிலிருந்து நேரடி தாக்குதல் அதிகம் இல்லாவிட்டாலும் குத்தல் பேச்சுக்களும் ஜாடைமாடையாக தீயை வாரி இறைப்பது போன்ற வார்த்தைகளால் சுடுவதுமாக கல்பனா என்னனவோ செய்து பார்த்துவிட்டார்.
அர்ஜூனிற்காக அனைத்தையும் சகித்தவள் எதிர்த்து பேசாமல் நகர்ந்துவிடுவாள். வரைமுறை பற்றி தெரியாதவர்களிடம் தானும் பதிலுக்கு பேசி தனது தரத்தை குறைத்துக்கொள்ள ஸ்டெபி தயாராக இல்லை.
ஆனால் இன்றைக்கு அவர் செய்ததோ ஸ்டெபியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன்னை பழிவாங்கவென்றே இப்படி கோவிலுக்கு அழைக்கிறார் என்று தெரியாமல் இல்லை. இதை எப்படி தவிர்க்க என்ற குழப்பத்திலேயே ஹாஸ்பிட்டல் கிளம்பி சென்றாள்.
ஹாஸ்பிட்டலில் நுழைந்த பத்தே நிமிடத்தில் ஆரவ்விடம் இருந்து மெசேஜ் வந்திருப்பதை பார்த்தவள் அதை படித்துவிட்டு மேஜையை பார்க்க அதில் இரண்டு நாட்களுக்கு முன்னால் அட்மிட் ஆன ஹார்ட் பேஷன்ட் கேஸ் ஃபைல் இருந்தது.
நேற்றைய ரிப்போர்டையும் அவரது கண்டீஷனையும் அதில் ஆரவ் குறிப்பிட்டிருக்க அதை முழுவதுமாக படித்து முடித்தவள் உடனே அவனுக்கு அழைத்தாள்.
“சொல்லு பேப்…” என சோம்பலாக பேசியவனிடம் அந்த பேஷன்ட் சம்பந்தமான சில விஷயங்களை கேட்டு தெளிவாகிவிட்டு,
“நீ தூங்கு ஆரவ். நான் உன்கிட்ட நைட்ல பேசறேன்…” என்றவளது குரலில் இருந்த சோர்வை கண்டவன்,
“என்ன விஷயம் பேப்? எதுக்கு உன்னோட வாய்ஸ் இவ்வளோ டல்லா இருக்கு? ஹாஸ்பிட்டல்னு வந்துட்டா எப்போவும் மேடம் ப்ரிஸ்க்கா இருப்பீங்க? இன்னைக்கு ஓவர் டோஸ் ஆகிடுச்சா?…” என்று கிண்டலடிக்க,
“நானே டென்ஷன்ல இருக்கேன். நீ வேற ஏன்டா?. போனை வை…” என கத்த எப்போதும் இப்படி பேசியிறாத ஸ்டெபியின் குரலில்,
“என்னன்னு இப்போ சொல்லபோறியா இல்லையா?…” அவளுக்கு மேல் எகிறினான் ஆரவ். ஸ்டெபி விஷயத்தை கூறவும் இவனுக்கு இங்கே சுறுசுறுவென கோபம் கிளம்பியது.
“உன் புருஷன்கிட்டே சொல்லவேண்டியது தானே? எங்க அவன்?…”
“ஐயோ ஆரவ், அஜூக்கு தெரிஞ்சா பெரிய சண்டை ஆகிடும். ஏற்கனவே எதுக்கெடுத்தாலும் என்னோட தலை உருளுது. இதுல இது வேறையா?…”
“சரி விடு. அந்த லேடி ஹாஸ்பிட்டலுக்கு வந்தா நீ கோவிலுக்கு வரமாட்டேன்னு சொல்லிடு…”
“யாரு?… நான் சொல்லி அவங்க கேட்டுக்கற ஆளா? வீட்ல பேசறது பத்தாதுன்னு இங்கயும் உடனே எல்லோரையும் கூப்பிட்டு பெரிய பஞ்சாயத்தாகிடும். அசிங்கபடுத்திடுவாங்க. அஜூ பப்ளிக்ல எல்லோர் முன்னாலயும் அவங்களை ஒன்னும் சொல்லமுடியாதே ஆரவ்…”
“இப்போ என்ன செய்யலாம்னு இருக்க? கோவில்லு போகனும்னா போ. எனக்கென்ன?…” அவனது கோவம் புரிந்தவளாக,
“அதெல்லாம் தானா தோணனும் ஆரவ். எனக்கு தோணலை. அவங்களுக்காக போலியா அங்க போக விருப்பமில்லை. என்ன பண்ணனு தெரியலை. சரி விடு. நீ போய் ரெஸ்ட் எடு. நைட் பேசறேன். பை டா …”
அழைப்பை துண்டித்தவள் அவளது வேலையில் மூழ்கிவிட அங்கே ஆரவ் ஒரு முடிவெடுத்துவிட்டு உறங்க சென்றான். மீண்டும் அவன் கண் விழிக்கும் போது மதியம் இரண்டாகிற்று. வேகமாக எழுந்தவன் நிதானமாக தயாராகி கீழே வர தர்ஷினி அப்போதுதான் ஹாஸ்பிட்டலில் இருந்து வந்திருந்தார்.
“என்ன மாம் இன்னைக்கு டெலிவரி கேஸ் இருந்ததா?…” என்றவனிடம் தலையசைத்தவர் வேகமாக தனதறைக்கு செல்ல,
“என்ன பேபின்னு சொல்லாமலே போறீங்க?…” என்ற கத்தலோடு சாப்பிட அமர்ந்தவன் தர்ஷினி வரும் போதே உண்டு முடித்திருந்தான்.
“இன்னைக்கு பையன் தான் ஆரு. உன்னை போலவே சரியான வாலா இருப்பான் போல. அவன் அம்மாவை பாடாக படுத்திதான் பிறந்தான். ஆனா செம க்யூட் தெரியுமா?…” புன்னகையோடு கூறியவரை முறைத்தவன்,
“நான்…. வாலு…. இருக்கட்டும்… வந்து பேசிக்கறேன். டயர்டா இருப்பீங்க. போய் ரெஸ்ட் எடுங்க. நான் வெளில கிளம்பறேன் மாம். வர நைட் ஆகிடும்…”
“நீ நேத்து நைட் டியூட்டில இருந்தியே ஆரு? ரெஸ்ட் எடுக்காம எங்க கிளம்பற?…”
“மாம் வந்து சொல்றேன். தேவையான ரெஸ்ட் எடுத்தாச்சு. பை. டைம் ஆகிடுச்சு…”
அதற்கு மேலும் தாமதிக்காமல் அங்கிருந்து புறப்பட அவனையே பார்த்தவண்ணம் அமர்ந்திருந்த தர்ஷினிக்கு ஆரவ்விற்கு விரைவில் பெண் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அர்ஜூனும் ஆரவ்வும் சம வயதினர் என்பதால் அவனுக்கும் சீக்கிரம் திருமணம் முடித்தால் என்னவென்று யோசிக்க ஆரம்பித்திருந்தார் சிறிது நாட்களாக.
“ராகவ் வரவும் இதை பற்றி பேசி ஒரு முடிவிற்கு வரவேண்டும்…” என்று நினைத்துக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தார்.
சரியாக மூன்றரை மணியளவில் அர்ஜூனின் வீட்டை அடைந்த ஆரவ் அப்போதுதான் கார்த்திக்கும் வந்திருப்பதை பார்க்க கார்த்திக்,
“வாங்க அண்ணா. அர்ஜூன் அண்ணா வீட்ல இல்லையே…”
“ஏன் நான் இங்க வந்தா அவனை தான் பார்க்க வரனுமா?…” முறைப்போடு கேட்ட ஆரவ்வின் விழிகளில் தெரிந்த கோபச்சிவப்பில் எச்சிலை கூட்டி விழுங்கியவன்,
“நான் அப்படி சொல்லலையே. உள்ளே வாங்கண்ணா. அப்பா ஆபீஸ் போய்ருக்காங்க. அம்மா கீழே உள்ள அந்த ரூம்ல இருக்காங்க. சும்மா டிவி தான் பார்த்துட்டு இருக்காங்க…”
ஆரவ் கேட்பதற்கு முன்பே அனைத்து தகவல்களையும் தந்தவன் கல்பனா இருக்கும் அறையையும் காண்பித்துவிட்டு சோபாவில் அமர்ந்துகொண்டான்.
கார்த்திக் காட்டிய அறையில் எட்டிப்பார்க்க கல்பனா கட்டிலில் அமர்ந்தவாறு காலை நீட்டிக்கொண்டு எதையோ கொறித்துக்கொண்டே டிவியில் மூழ்கி இருக்க ஆரவ் சென்று அவருக்கு முன்னால் இருந்த ஒற்றை சோபாவில் அமர்ந்துகொண்டான்.
திடீரென்று உணர்ந்த அரவத்தில் கார்த்திக் என நினைத்து திரும்ப அங்கே ஆரவ்வை கண்டதும் திக்கென்று ஆனது. இவன் எதற்கு வந்திருக்கிறானோ என எண்ணிக்கொண்டே அவனை பார்த்து வரவேற்பாக புன்னகைத்தவர்,
“வாப்பா ஆரவ், எப்படி இருக்க?…” என சம்பிரதாயமாக விசாரித்து வைக்க அவனோ தலையை மட்டும் ஆட்டினான். அவனது அமைதி அவரை உறுத்த,
“இருப்பா நான் உனக்கு குடிக்க ஏதாவது எடுத்துட்டு வரேன்…” என கூறியபடி கட்டிலைவிட்டு இறங்க முயல,
“கார்த்திக்…” சப்தமிட்டு அவனை அழைத்த ஆரவ் அவன் வரவும்,
“ப்ரிட்ஜ்ல ஜூஸ் இருந்தா எனக்கு எடுத்துட்டு வா…” எனவும் கார்த்திக் வேகமாக சென்று ஒரு க்ளாஸில் ஜூஸை ஊற்றி கொண்டுவந்து கொடுக்கவும் அதை வாங்கி பருகியவன்,
“நீ போய் உன்னோட வேலையை பாரு கார்த்திக். உன் அம்மாகூட நான் கொஞ்சம் பேசிட்டு இருக்கேன்…”
பேச்சு கார்த்திக்கிடம் இருந்தாலும் பார்வை கல்பனாவிடம் இருந்தது ஆரவ்விற்கு. அதிலேயே கார்த்திக்கிற்கு புரிந்து போனது, தன் தாய் எதையோ இன்று இழுத்துவைத்திருக்கிறார் என்று.
கார்த்திக் அமைதியாக அங்கிருந்து நகர, “அர்ஜூனுக்கு போன்…” என ஆரவ் ஆரம்பிக்க,
“இல்லைண்ணா. நான் எதுவும் போன் பண்ணலை…” பதறியவனை பார்த்து புன்னகைத்த ஆரவ்,
“நோ ப்ராப்ளம் கார்த்திக். பண்ணியிருந்தாலும் எனக்கு பிரச்சனை இல்லை. அவனும் வரட்டுமே. ஆனா நான் இந்த ரூமை விட்டு வெளில போற வரைக்கும் உன் அம்மாவாலையும் எங்கயும் போகமுடியாது…”
அழுத்தம் திருத்தமாக கூறவும் சர்வமும் ஆடிவிட்டது கல்பனாவிற்கு. எதனால் இப்படி பேசுகிறான் என்றும் புரிந்தது. மனதிற்குள் ஸ்டெபியை வசைபாடியபடி,
“கோவப்படாதே ஆரவ். இன்னைக்கு நானே எங்கையும் போகலை. பாரு எனக்கு காலெல்லாம் வலிக்குது. அதனால கோவிலுக்கு போகலை…”
திக்கி திணறி கூறியவரை கண்டுகொள்ளாமல் அருகில் இருந்த டீப்பாயை இழுத்து போட்டு அதில் கால்களை வைத்துக்கொண்டு, கல்பனாவிடம் இருந்த ரிமோட்டை வாங்கி சேனல்களை மாற்றியபடி நிதானமாக ஜூஸை குடித்து கொண்டிருந்தான்.
இனி எத்தனை கூறியும் அவன் அசையமாட்டான் என உணர்ந்த கல்பனாவிற்கு ஒருமணிநேரம் கூட அந்த இடத்தில் தாக்குபிடிக்கமுடியவில்லை. அவன் லேசாக அசந்த நேரத்தில் இறங்கி அறையை விட்டு வெளியேறிவிடலாம் என நினைத்து காலை கட்டிலை விட்டு கீழே வைக்க,
“பட்டாசு வெடிக்கனுமா?…” பார்வையை டிவியில் வைத்துக்கொண்டே கல்பனாவிடம் ஆரவ் கேட்க அதிர்ந்துவிட்டார்.
பின்னே ஸ்டெபியை விளக்கேற்றியதற்காக திட்டி வெளியே அனுப்பிய அன்று அர்ஜூன் கோபத்தில் திட்டிவிட்டு வெளியே சென்றுவிட ஆரவ் அப்போது கல்பனாவின் மேல் இருந்த கோவத்தில் அவர் தனியாக இருக்கும் நேரத்தில் பட்டாசை கொழுத்தி அறைக்குள் போட்டுவிட அலறியடித்துக்கொண்டு வெளியில் வந்து துள்ளிவிழுந்தார்.
அன்றைக்கே ஆரவ் எச்சரித்துவிட்டான். ஸ்டெபியிடம் இதே போல் நடந்துகொண்டால் அர்ஜூனுக்கு மட்டுமல்ல, யாருக்கும் பயப்படமாட்டேன் என்றும், தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியே விட்டான்.
இன்று நினைத்தாலும் பயத்தில் வெடவெடத்தது கல்பனாவிற்கு. அவருக்கு பட்டாசு என்றாலே பயம். முன்பே அலறியவர் இன்று வயோதிகதன்மையில் அவரால் என்ன செய்யமுடியும்?
அதற்கு பயந்தே அவ்விடம் விட்டு நகராமல் அமர்ந்திருக்க ஆரவ் மேல் அவருக்கு கோவம் கொந்தளித்தது. நேரம் ஆக ஆக இயற்கையின் அழைப்பில் மேலும் அசூயை ஆனார் கல்பனா.