நெஞ்சில் உறைந்த தேடல் – 11 (1)

தேடல் – 11

                அர்ஜூன் ஸ்டெபி திருமணம் முடிந்த ஒரு வாரத்திலேயே ஆண்டனி தனது பெயரில் இருந்த சொத்துக்களையும் ஹாஸ்பிட்டல் நிர்வாக உரிமையையும் அர்ஜூன் ஸ்டெபி இருவரது பெயருக்கு மாற்றி எழுதிவிட்டார்.

அவன் எவ்வளவோ எடுத்துக்கூறியும் கேட்டுகொள்ளாதவர் பிடிவாதமாக இருந்துவிட்டார். இந்த பெருந்தன்மையான செயல் கூட அர்ஜூனின் பெற்றோரை மகிழ்விக்கவில்லை. மாறாக மகனை தங்களிடமிருந்து பிரிக்க நினைக்கின்றனர் என்றே குற்றம் பேசினர்.

அர்ஜூனின் வீட்டிற்கு ஸ்டெபி வாழ வந்து அன்றோடு முழுதாக ஒரு மாதம் முடிந்தது. காலையில் முக்கியமான கன்சல்டிங் இருக்கிறது என அர்ஜூன் பரபரப்பாக கிளம்ப அவனுடனே கிளம்பவேண்டிய ஸ்டெபி அவனை சீண்டி வம்பிழுத்துகொண்டிருந்தாள்.

“ப்ளீஸ் ஆஷா, என்னை கிளம்பவிடேன். மனுஷனை ரொம்ப படுத்துற நீ…” ரசனையாக அவளிடம் பார்வையை செலுத்திக்கொண்டே தன் காரியத்திலும் கண்ணாக இருந்தான்.

“ஹனிமூன் போக என்ன ப்ளான் பண்ணிருக்கீங்கன்னு தர்ஷிமா ரெண்டு நாளா கேட்டுட்டே இருக்காங்க அஜூ. நாம பிளேஸ் சொன்னா அவங்க அதுக்கு ஏற்பாடு பண்ணுவாங்களாம். நீங்க அதை பத்தி பேசவேமாட்டேன்றீங்க?…” என சலித்துகொண்டவளிடம்,

“எல்லாம் தெரிஞ்சுமா நீ கேட்கற ஆஷா? இன்னும் ஒரு த்ரீ டேய்ஸ்டா. ப்ளீஸ். அதுக்கப்றமா போகலாம். நீயே இடத்தை டிஸைட் பண்ணு. ஆனாலும் அதுவும் ஃபைவ் டேய்ஸ் தான்…” கறாராக கூறியவனை முறைத்தவளை கண்டு தன்னருகில் இழுத்தவன்,

“ஆஷா மேடம் கோவமா இருக்கீங்களா?…”

“பின்ன உங்களை கோச்சுக்காம கொஞ்சுவாங்களா?..”

“ம்ஹூம் இப்போ கோச்சுக்கவோ கொஞ்சவோ எனக்கு டைம் இல்லைம்மா. எதுவா இருந்தாலும் நைட் பார்த்துக்கலாம்…” என அவளை பார்த்து கண்ணடிக்க,

“நீங்கலாம் லவ் பண்ணி மேரேஜ் பண்ணினதா வெளில சொல்லிடாதீங்க. சிரிப்பாங்க…”

“நான் எதுக்கு வெளில சொல்லபோறேன்? நீ வேணும்னா சொல்லிக்கோ. எதுவானாலும் நைட் பார்த்துக்கலாம்…” மீண்டும் அதையே திருப்பி படிக்க அதிக கடுப்பானவள்,

“அப்போவும் நான் கோவமாகத்தான் இருப்பேன். கோவப்பட மட்டுமே செய்வேன்…” என முறுக்கிக்கொள்ள,

“ஓகே கோவமாகவே இரு. நோ ப்ராப்ளம் ஆஷா பேபி. எதுவானாலும் நான் பார்த்துப்பேன்…” என்று கண்கள் சிரிக்க கூறிவிட்டு மீண்டும் ஒருமுறை அவளை அணைத்து அவள் திமிற திமிற முத்தமிட்டு விட்டே அவளை விடுவிக்க அவனின் செயலில் கோவித்த ஸ்டெபி கட்டிலில் இருந்த தலையணையை எடுத்து அவன் மீது எறியும் முன்னால் அங்கிருந்து பறந்துவிட்டான் அர்ஜூன்.

“சீக்கிரமா ஹாஸ்பிட்டல் வந்து சேரு ஆஷா…” என்னும் கட்டளையோடு.

அவன் சென்ற பின்னும் அந்த அறையில் அவன் வாசம் இவள் நாசியில் நுழைந்து நெஞ்சை நிறைக்க அந்த சுகந்தத்தை ஆழ்ந்து அனுபவித்தவள் ஆரவ்வின் அழைப்பில் மீண்டாள்.

“என்ன பேப், உன் மாமியார் இன்னைக்கு சுப்ரபாதத்தை பாடலையா உனக்கு?…” என்றவனது உற்சாககுரல் அவளையும் தொற்ற,

“உனக்கு எவ்வளோ தைரியம் என் மாமியாரை பேச?…” என்று போலியாக மிரட்ட,

“ஆமாமா அப்டியே மாமியார் மெச்சும் மருமகள் தான் நீ. உன்னையெல்லாம் அந்த ஓல்ட்லேடி  கண்டுக்காத போதே இவ்வளோ ஏத்தம் உனக்கு.  கைல வச்சு தாங்கினா நான்லாம் உன் கண்ணுக்கே தெரிவேனா?…”

“ஏன்டா காலையிலேயே ஆரம்பிச்சுட்ட? இதே வேலையா போச்சு உனக்கு. அவங்க என்னை ஏத்துக்கிட்டாலும் நீ விடமாட்ட போல…” என்றவள்,

“இன்னும் கீழ போகவே இல்லை. போனா தான் தெரியும் இன்னைக்கு கோட்டாவுக்கு என்ன கிடைக்கும்னு. ஹாஸ்பிட்டல் வந்து சொல்றேன். இந்த அஜூ வேற சீக்கிரமா கிளம்பிட்டாங்க. தனியா தான் ஹாஸ்பிட்டல் வரனும்…”

ஸ்டெபி சாதாரணமாக கூற அவள் குரலில் தெரிந்த வருத்தத்தில் ஆரவ் அமைதியானான். என்ன முயன்றாலும் மாறாத ஒன்று அர்ஜூன் பெற்றோர் ஸ்டெபியை ஏற்பது. கல்பனாவையும் கிருஷ்ணனையும் இன்று நேற்றா பார்க்கிறான். தன் நினைவில் இருந்து வெளிவந்தவன்,

“ஓகே பேப் நைட் பார்க்கலாம். நீ ஹாஸ்பிட்டல் போனதும் எனக்கொரு கால் பண்ணு. மறந்திடாதே…” என்று கூறிவிட்டு அவன் போனை வைத்த பின் தான் ஸ்டெபிக்கு ஞாபகமே வந்தது. ஆரவ் முதல் நாள் இரவு பணியில் ஹாஸ்பிட்டலில் இருந்தது.

மொபைலை சார்ஜில் போட்டுவிட்டு கிளம்ப ஆரம்பித்தவள் அடுத்த அரைமணி நேரத்தில் ரெடியாகி கீழே வர அங்கு கிருஷ்ணன் டைனிங்டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுகொண்டிருந்தார். இவளை பார்த்ததும் முகத்தை திருப்ப கல்பனாவோ முறைத்தபடி நின்றார்.

எப்போதும் முறைப்பார் தான். ஆனால் இன்று அதன் உக்கிரம் அதிகமாக இருக்க யோசனையோடே கை கழுவ வாஸ்பேஷன் சென்றாள். கழுவிவிட்டு தற்செயலாக கண்ணாடியை பார்க்க அதில் தெரிந்த வெறுமையான தனது நெற்றியில் துணுக்குற்றாள்.

கல்பனாவின் கோவத்திற்கான காரணம் புரிந்தது. மடமடவென மாடிக்கு சென்றவள் நெற்றிக்கு பொட்டை  வைத்துவிட்டு கீழே வந்து பூஜையறையில் இருந்த குங்குமத்தை எடுத்து வகிட்டிலும் வைத்துவிட்டு சாப்பிட அமர,

“இப்படி ஒண்ணு ஒண்ணுக்கும் சொல்லி சொல்லித்தான் செய்யனுமா? ஒரு கல்யாணமான புது பொண்ணு நெத்தில வைக்கிற பொட்டை மறக்கிற கொடுமை எங்கயாச்சும் நடக்குமா? வரைமுறை தெரியாம வளர்ந்தவங்ககிட்ட இதை எதிர்பார்க்கமுடியுமா?…”

சுருக்கென குத்தலாக பேசிவிட்டு ஸ்டெபியின் முகத்தை பார்க்க அவளோ கருமமே கண்ணாக ப்ளேட்டில் வைத்திருந்த பொங்கலை காலி பண்ணிகொண்டிருந்தாள். அதில் மேலும் எரிச்சலான கல்பனா,

“சாஸ்திரம் சம்பிரதாயம் தெரிஞ்ச இந்து பொண்ணா இருந்தா அவளுக்கு தெரிஞ்சிருக்கும். புருஷன் ஆயுசு மேல ஆசையிருந்தா எந்த பொண்ணாவது இதை மறப்பாளா? இவளுக்கெல்லாம் அதெங்க புரியபோகுது?…” என நொடிக்க ஸ்டெபி அதிர்ந்துபோய் பார்த்தாள்.

“இன்று ஒரு நாள் பொட்டு வைக்க மறந்ததற்கு இத்தனை பேச்சா? இதற்கும் அர்ஜூனின் ஆயுளுக்கும் என்ன சம்பந்தம்?” என்று மனம் குமைந்தவள் சாப்பிடாமல் பாதியிலேயே எழுந்துவிட்டாள்.

அதையெல்லாம் கண்டுகொள்ளாத கல்பனா வாயிலுக்கு சென்ற மருமகளை மறித்து நிற்க, “சொல்லுங்க அத்தை. ஏதாவது மறந்துட்டீங்களா?…” என கடுப்பை மறைத்துக்கொண்டே பேச,

“நீ வீட்டுக்கு எத்தனை மணிக்கு வருவ?…” என்றவரிடம்,

“ஈவ்னிங் ஆறு மணி ஆகிடும்…”

“இன்றைக்கு என் மனதிற்கு ஏதோ உறுத்தலா இருக்கு. அதனால நீ வீட்டுக்கு வரவேண்டாம்…”

கல்பனா என்னதான் சொல்ல வருகிறார் என புரியாத பார்வை அவரை பார்க்க கிருஷ்ணனோ காதை இங்கேயும் கண்ணை சாப்பாட்டிலும் வைத்திருந்தார்.

“நானே சாயங்காலம் ஹாஸ்பிட்டலுக்கு வரேன். நாம ரெண்டுபேரும் கோவிலுக்கு போகனும். தயாரா இரு…” என கட்டளையாக கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.  அதிர்ச்சியில் கல்லென சமைந்து நின்றாள் ஸ்டெபி.

அர்ஜூனுக்கு பிடிக்கும் என்பதற்காக பூ பொட்டு மற்ற அணிகலன்கள் அனைத்தையும் விரும்பியே ஏற்றவள் திருமணம் முடிந்த அன்று சம்பிரதாயத்திற்காக அர்ஜூன் வீட்டின் பூஜையறையில் விளைக்கை ஏற்றிவைத்தாள். அதுவுமே வடிவின் உத்தரவு.

அதன் பின் ஏனோ அந்த பூஜையறைக்குள் செல்ல அவளுக்கு தோன்றியதே இல்லை. கல்பனா வேண்டும் என்றே அவளை விளக்கேற்ற வைப்பதும் அதற்கு ஆயிரம் குறை கூறுவதுமாக இருப்பார்.

கடவுள்களிடம் எந்தவிதமான வேறுபாடும் இல்லை ஸ்டெபிக்கு. ஆனால் ஏனோ அவளுக்கு தோன்றவில்லை. இன்றுவரை கோவிலுக்கு சென்றதில்லை. அர்ஜூனும் வற்புறுத்தியதில்லை.

error: Content is protected !!