நெஞ்சில் உறைந்த தேடல் – 1 (2)

ஆனால் தினகரனோ அதற்கு நேரெதிர். யாரிடமும் நெருங்கி பழகாதவன். வீட்டினர் கேள்விக்கு கூட ஒற்றை வரி பதில் தான். அளந்துபேசும் அளவிற்குதான் அவனது சுபாவம் இருந்தாலும் ஊரில் எந்த பிரச்சனை என்றாலும் ஒற்றை பார்வையில் அதை அடக்கிவிடும் வல்லமை கொண்டவன். அதுவே அவ்வூரில் அவனுக்கு தனி மரியாதையை பெற்று தந்திருந்தது.

எதையும் திறம்பட நடத்துபவன் அவ்வூர் பெண்களிடத்தில் வெகுவாக தள்ளியே நிற்கும் பழக்கமுடையவன் மனதில் நிலாமுகி எக்கணம் பதிந்தாள் என்பது அவனுமே அறியாத புதிர்தான்.

எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்காதவன் நிலாமுகியை மட்டும் யாருமறியாமல் பார்வையிடுபவன் அதையுமே ஒரு அளவோடு நிறுத்திக்கொள்வான். இத்தனைக்கும் குடும்பம் ஒன்றாக பழகினாலும் அவளிடத்தில்  ஒரே ஒருமுறை மட்டுமே பேசியவன். அதுவும் எதேர்ச்சையாக நடந்ததால்.

அந்த சம்பவம் மனக்கண்முன் விரிய அவனது முகத்தில் மெல்லிய முறுவல் படர்ந்தது.

அன்று காலை முத்தழகு கோவிலுக்கு சென்றிருக்க முத்தையாவும் தோப்பிற்கு கிளம்பியிருக்க வெளியில் அமர்ந்து அன்றைய தினசரியை புரட்டிகொண்டிருந்தான் தினகரன்.

வாசலில் கேட் திறக்கும் சப்தம் கேட்டு நிமிர்ந்துபார்த்தவன் அங்கே நிலாமுகி வந்துகொண்டிருக்க மனதில் மகிழ்ச்சி ஆர்ப்பரித்தது. ஆனால் அந்த சந்தோஷம்  எதையும் மனதோடு மறைத்தவன் அவளிடம் தானாக முன்வந்து பேசவில்லை.

கேள்வியான பார்வையோடு அவளை பார்க்க அவளோ தினகரனை எதிர்பார்க்கவில்லை என்றாலும் இதுவரை பேசியதில்லை என்பதாலும் முதலில் தடுமாறியவள் அவனாக எதுவும் பேசாமல் இருக்க பின் இயல்பு போலே,

“அத்தை இல்லையா?…” மிக மெல்லிய குரலில் தான் வினவினாள்.

ஆனால் அவனுக்கு அது லட்சாபலட்ச சுகந்தத்தை மனம் முழுவது பரப்பியது. அதை ஆழ்ந்து அனுபவித்துக்கொண்டே இல்லை என்பது போல தலையை மட்டும் அசைத்தான்.

எத்தனையோ முறை பார்த்திருந்தாலும் அவனாக யாரிடமும் சென்று பேசியதில்லை என நன்கு அறிந்தவள் நிலாமுகி. அவ்வூரின் பெண்களிடையே அப்படி ஒரு நன்மதிப்பை பெற்றவன் தினகரன். அதனால் அவனிடம் பேச அவளுக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை.

அவள் யோசனையாய் நிற்பதை கண்டு தினகரனின் இதழ்கள் புன்னகையில் மெலிதாக நெளிய,

“என்ன விஷயம்?…” என்ற அவனது கேள்வியில் வியந்துதான் போனாள் நிலாமுகி.

வியக்காமல் இருக்க முடியுமா? எத்தனையோ முறை அவனது வீட்டுக்கு வந்திருக்கிறாள் தான். அப்போதெல்லாம் நேருக்கு நேர் பார்க்க நேரிட்டாலும் வா என்பது போன்ற மெலிதான தலையசைப்புடன் கூடிய ஒற்றை பார்வையோடு கடந்துவிடுவான் தினகரன்.

இன்று அவன் பேசியதும் அதிசயித்துதான் போனாள் நிலாமுகி.

“இல்ல அம்மா இதை அத்தைக்கிட்ட குடுக்க சொன்னாங்க…” கையிலிருந்த கூடையை தூக்கி காண்பிக்க,

“அதைன்னா, அதுல என்ன இருக்குன்னு சொல்லவே இல்லையே?…”

கையில் வைத்திருந்த நாளிதழை மடித்து ஓரமாக வைத்தவன் நிதானமான பார்வையோடு சின்னசிரிப்போடு அவளிடம் அடுத்த கேள்வியை கேட்டுக்கொண்டே ஈஸிசேரில் சாய்ந்தமர நிலாமுகிக்கு மயக்கம் வராத குறைதான்.

அவள் வாயை திறந்து பதில் சொல்லுமுன் அங்கே முத்தழகு வந்ததும் கண்டது மகனது முகத்தில் குடிகொண்டிருந்த மந்தகாச புன்னகையையும் நிலாமுகியின் திகைத்த பார்வையையும் தான்.

அவருக்கும் முத்தையாவிற்கும் என்றைக்கோ தினகரனின் மனம் தெரிந்துவிட்டது. குணசேகரனிடம் பேசுகிறேன் என்று சொன்ன முத்தையாவை தடுத்தவன் நிலாமுகியின் படிப்பு முடியட்டும் என அடக்கிவைத்தான்.

நிலாமுகி டிகிரி முடிக்க இன்னும் இரண்டு வருடங்கள் இருக்க எப்போதடா அந்த நாட்கள் கடந்துசெல்லும் என்ற ஏக்கத்தோடு புலம்பும் மனதை யாருக்கும் தெரியாமல் பூட்டிவைத்தவன் வெளியில் மிடுக்காகவே நடந்துகொள்வான்.

இப்போது நிலாவோடு பேசிக்கொண்டிருந்த மகனது முகத்தில் தென்பட்ட ஒளிர்விற்காகவே நிலாவை எப்பாடுபட்டேனும் அவனது வாழ்க்கைக்குள் கொண்டுவந்தே தீரவேண்டும் என்ற எண்ணம் முத்தழகிற்கு வலுபெற்றது.

முன்பே நிலாமுகியை பிடிக்கும் என்றாலும், இன்று மகனது மனதில் அசையா இடத்தை பெற்றிருப்பவள் என்ற பிறகு நிலாமுகியே தனக்கு இனி எல்லாமுமாக இருப்பாள் என்று நினைக்க ஆரம்பித்துவிட்டார்.

“உள்ளே வாடாம்மா நிலா, ஏன் வாசல்லையே நிக்கிற?…”

“இல்லை அத்தை. நேரமாச்சு. காலேஜ் பஸ் வந்திடும். அம்மா இதை உங்ககிட்ட குடுக்க சொன்னாங்க. அதான். நான் கிளம்பறேன் அத்தை…” அவரது அழைப்பை மென்மையாக மறுத்தவள்,

“இன்னைக்கு நம்ம லட்சுமி கன்னுக்குட்டி போட்ருக்கு அத்தை. இந்த பாத்திரத்தில் சீம்பால் இருக்கு. அம்மா நேத்து தேன்குழலும் ரவாலட்டும் செஞ்சாங்க. அதான் உங்களுக்கு குடுத்திடலாமேன்னு என்கிட்ட குடுத்தனுப்பினாங்க…” என ஒப்பித்தவள் சிறுபுன்னகையோடு அங்கிருந்து சென்றுவிட்டாள்.

அவள் செல்லும் திசையையே பார்த்திருந்தவன் தாயின் பார்வையை உணர்ந்து தன்னை மீட்டுக்கொண்டு எழுந்து உள்ளே சென்றுவிட்டான்.

என்றைக்கும் தானாக சென்று யாரிடமும் பேசியிறாதவன் இன்று என்னவோ மனதை அடக்கமுடியாமல் அவளிடம் பேசி அவளின் திகைத்த பார்வையை கண்டதும் தான் சுதாரித்துகொண்டான்.

அவளது படிப்பு முடியும் வரை எந்த வகையிலும் தன் ஒரு பார்வை கூட அவளுக்கு தொந்தரவை தந்துவிட கூடாதென உறுதியாக இருந்தான். அவள் மீதான தன்னுடைய அளப்பறியா காதலை மனதினுள்ளேயே அடக்கி அது கொடுத்த சுகத்தில் வாழ்க்கையை நகர்த்திகொண்டிருந்தான்.

அவளோடு தான் உருவாக்க நினைத்த உறவு யுகங்களை கடந்ததாக இருக்கவேண்டுமென கனவு கொண்டிருந்தவனது மனது அவளின் திருமண செய்தியால் சுக்குநூறாக நொறுங்கிவிட்டது.

படிப்பு முடியட்டும் என தினகரனின் குடும்பத்தினர் காத்திருக்க குணசேகரனை தேடி நிலாமுகியை கேட்டு வெளியூரில் இருந்து சம்பந்தம் பேசி வர நல்ல இடம், கைவிட்டு போய்விட வேண்டாம் என்று இரண்டாம் வருடம் முடித்த நிலையில் அவளுக்கு மாப்பிள்ளை முடிவு செய்தாகிற்று.

திடீரென்று பெண்பார்க்க படையோடு வந்தவர்கள் அப்போதே நிலாமுகிக்கு பூவையும் வைத்து நிச்சயித்து, உறுதிசெய்துவிட்டு போக அன்று பார்க்க முத்தையாவும், முத்தழகும் வெளியூர் சென்றிருக்க அனைத்தும் கைமீறி இன்று தினகரனின் காதலும் அவனின் கைவிட்டு போனது.

இதை கேள்வியுற்ற தினகரன் முத்தையாவிடம் எந்த சூழ்நிலையிலும் குணசேகரனிடம் தனது காதலை பற்றி பேச கூடாதென தடை போட்டுவிட்டான்.

அவனுக்கு இதில் நிலாமுகிக்கு சம்மதமா என தெரியவேண்டி இருந்தது. கல்யாண பூரிப்பு கூடிய முகப்பொலிவு அவளின் மனதை படம்பிடித்து காட்ட இனி இதை பற்றி பேச தன் தாயையும் தந்தையையும் அவன் அனுமதிக்கவில்லை.

இப்போது போய் பெண் கொடுங்கள் என கேட்டு போய் நின்றாலும் ஒன்றாக பழகிய இரு குடும்பத்தினரின் பிரிவு நிச்சயம் என்பது தினகரனின் திண்ணம்.

தன்னுடைய காதலுக்கு காலங்காலமாக பழகிவரும் இந்த சொந்தத்தை அறுத்தெறிய தினகரன் சம்மதிக்கவில்லை. அவனின் பேச்சை மீறி அவர்களால் எதுவும் செய்யமுடியவில்லை.

வாய்வார்த்தையாக அமுதாவிடம் கூட குறைபடுவதை போல முத்தழகி கேட்டு பார்த்தார்.

“என்ன அமுதா இது? படிக்கிற பிள்ளைக்கு கல்யாணம் பேசி முடிவுபன்றது? கொஞ்சம் யோசிச்சிருக்கலாமே?…” என்று.

ஆனால் அமுதாவோ, “நாங்க என்ன மதினி செய்ய? திடீர்னு வந்தாங்க. நல்ல சம்பந்தம் தட்டி போய்டவேண்டாம்னு உங்க அண்ணன் சொல்லிட்டாரு. அவுகளே கல்யாணத்துக்கு பின்னால படிப்பை நிறுத்தாம படிக்கவும் வச்சிடறதா சொல்லிட்டாங்க. இதுக்கு மேல என்ன வேணும்?…” என பெருமைப்பட்டுகொண்டார் அமுதா.

ஆனாலும் என்னதான் தங்கள் மனதை மறைக்க முயன்றாலும் முன்புபோல அமுதாவிடம் முத்தழகால் பழகமுடியவில்லை. ஏதாவது ஒரு காரணத்தை கூறி அமுதாவிடம் தனது விருப்பமின்மையை காண்பித்துகொள்ளாமல்  இருக்க படாதபாடுபட்டுப்போனார்.

அமுதாவிற்கும் முத்தழகின் ஒதுக்கத்தை ஆராய நேரமில்லாமல் கல்யாண வேலைகள் வரிசைகட்டி நின்றது.

நேரம் போவது தெரியாமல் பழைய நினைவுகளின் தாக்கத்தில் அமிழ்ந்திருந்தவன் முகத்தை கொஞ்சம் சமன்படுத்திக்கொண்டு தந்தையை தேட அவர் எப்போதோ கிளம்பி சென்றிருந்தார்.

எங்கே சென்றிருப்பார் என அறிந்தவன் தாயை தேடி பின்கட்டிற்கு விரைந்தான்.

“அம்மா…” இயல்பான குரலில் அழைத்ததுமே திரும்பிய முத்தழகிற்கு மகனை பார்க்கவும் அதுவரை மட்டுப்பட்ட கண்ணீர் வரவா என முட்டிக்கொண்டு நிற்க,

“ப்ச். என்னம்மா நீங்க? இப்போ என்ன நடந்துபோச்சுன்னு சும்மா அழுதுட்டு. பசிக்குது எனக்கு. சாப்பாடு போடுங்க…” என கொஞ்சம் அதட்டலோடு கூற அவனுக்கு பசி என்றதும்,

“நீ போய் உக்காருய்யா, முகத்தை அலம்பிட்டு வரேன்…” அவனை அனுப்பிவிட்டு தன்னை நிதானப்படுத்திகொண்டே சாப்பாட்டறைக்கு விரைய வாசலில் சத்தம் கேட்டு அங்கே சென்றார்.

அங்கே குணசேகரன் தோட்டத்து பண்ணையாள் பெரிய டிபன்கேரியருடன் நின்றுகொண்டிருந்தான்.

“அம்மா, உங்களுக்கு சுகமில்லைன்னு சேர்மன் அய்யா சொன்னாங்க போல. அதான் அமுதாம்மா உங்களுக்கும் சின்னைய்யாவுக்கும் விசேஷ சாப்பாடு கட்டி என்க்கிட்ட குடுத்துவிட்டாங்க…” கையிலிருந்த கேரியரை முத்தழகியிடம் சேர்ப்பித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

மனம் கடுகடுக்க  கேரியரை தூக்கிக்கொண்டு உள்ளே வந்தவர் அதை மேஜை மீது வைக்க தினகரனின் இதயத்தில் குருதி கசிந்தது. குரல் கரகரக்க,

“அம்மா, எ…ன…க்…கு…….. எனக்கு…….” கண்கள் ரத்தமென சிவக்க, முகம் வியர்க்க, பேசமுடியாமல் நெஞ்சம் அடைக்க, தொண்டையை செருமியபடி,

“அம்மா நம்ம…..நம்ம….. வீட்டு சாப்பாடு இருக்கா?…” என்ன முயன்றும் அவனது குரலில் தென்பட்ட வலியை மறைக்கும் வழியை செயல்படுத்தமுடியவில்லை.

அதற்குமேல் தாங்கமாட்டாமல் பாய்ந்துவந்து மகனை நெஞ்சோடு அணைத்து கதறிவிட்டார் முத்தழகு. அவனது இந்த துன்பத்தை தன் கண்ணீரால் துடைக்கமுடியாமல் இன்னுமின்னும்  அழுது தீர்த்தார்.

தாயின் அணைப்பில் ஆறுதல் தேடமுனைந்தவன் முடியாமல் போக உடல் இறுகி தனக்குள் தன்னை அடக்கிகொண்டிருந்தான்.

இவர்களின் நிலை இப்படியென்றால் அங்கே நிச்சயதார்த்தம் நடந்துகொண்டிருக்கும் மண்டபத்தில் அடுத்து தான் செய்யவேண்டிய திட்டத்தை செயல்படுத்த ஆயத்தமாகிவிட்டார் முத்தையா.

error: Content is protected !!