ராகேஷ் சரியாக… லயனிகாஸ்ரீயின் அறை முன் நின்று தான், சுதீப்புடன் கைபேசியில் பேசிக் கொண்டு இருந்தான்.
“டாக்டர்ஸ் பெயரில் புக் ஆன ரூம்ஸ் லிஸ்ட் வாங்கிட்டு வாடா!”
“நீ வேற! அந்த ரிஷெப்ஷனிஸ்ட் கேள்வியா கேட்கிறா.. ஏதோ என்னை இதுக்கு முன்னாடி உன்னுடன் பார்த்து இருப்பதால், இதுவரை பதில் சொல்லிட்டா…! ஆனா, லிஸ்ட் கேட்டா, சந்தேகம் வந்து, விஷயம் உன் பிரெண்ட் காதுக்கு போனாலும் போய் விடும்.”
“ப்ச்”
“எதுக்கும் ரெஸ்ட்ரூமில் தேடலாம்.. நீ பஸ்ட் ப்ளோரில் இருக்கும் ரெஸ்ட் ரூம் தேடு.. நான் கிரௌண்ட் ப்ளோரில் தேடுறேன்.”
அடுத்த ஐந்து நிமிடத்தில், ராகேஷ் எரிச்சலும் இயலாமை தந்த கோபத்துடனும், “இங்கே இல்லைடா” என்று கூறி மருத்துவனை, மீண்டும் திட்ட ஆரம்பித்தான்.
சரியாக அப்பொழுது லயனிகாஸ்ரீயை பார்ப்பதற்காக வெளியே வந்த நவீனா, மின்தூக்கி முன் நின்றிருந்த ராகேஷிடம் வழியை விடச் சொல்லும் பொருட்டு, “எக்ஸ்கியூஸ் மீ” என்றாள்.
“ஹும்ம்” என்றபடி நகர்ந்தவன், அவளை கண்டு கொள்ளவில்லை. விழாவில் அவனது கவனம் முழுவதும் லயனிகாஸ்ரீயிடம் இருந்ததால், இவள் முகத்தை அவன் கவனிக்கவில்லை என்றாலும், அவனது மூளையின் ஓரம் அவளது உடை மட்டும் பதிந்து இருந்தது தான்.
சுதீப், “இருடா.. கண்டுபிடிக்கலாம்.. நீ செகண்ட் ப்ளோர் வா.. நானும் வரேன்.” என்றபடி அழைப்பைத் துண்டித்து, இரண்டாவது தளத்திற்கு விரைந்தான்.
நவீனா இருந்த மின்தூக்கி மூடும் தருவாயில் கையை நீட்டி, “எக்ஸ்கியூஸ் மீ” என்றபடி உள்ளே சென்றவன், அப்பொழுதும் அவளை கண்டு கொள்ளவில்லை. அவனது யோசனை முழுவதும் லயனிகாஸ்ரீயை எப்படி கண்டுபிடிப்பது என்பதில் தான் இருந்தது.
மின்தூக்கி நின்று கதவு திறந்ததும், அவள் இடதுபுறம் செல்ல, இவன் வலதுபுறம் சென்றான்.
நவீனா லயனிகாஸ்ரீயின் அறையின் அழைப்பு மணியை அடித்தாள். கதவில் இருக்கும் குவி வில்லை(convex lens) வழியாக பார்த்த மருத்துவன், வெளியே நின்றவளைப் பார்த்ததும், கதவை திறப்பதா வேண்டாமா என்று சில நொடிகள் யோசித்தான். அதற்குள், நவீனா இன்னொரு முறை அழைப்பு மணியை அடித்து இருந்தாள்.
பின், ஒருவேளை இது ராகேஷ் வேலையாகவே இருந்தாலும் சமாளிக்கலாம் என்ற திடத்துடன் கதவை திறந்தான்.
புதியவனைக் கண்டு அதிர்ந்த நவீனா, “நீங்க யாரு? ல..லயா இருக்காளா?” என்று கேட்டாள்.
அவளது அதிர்ச்சி மற்றும் பேச்சில் இருந்து அவள் லயனிகாஸ்ரீயின் தோழியாக இருக்கலாம் என்று யூகித்தவன், “நான் டாக்டர் மகிழ் கொற்றவன்.. ஒரு ரோஃக் கிட்ட இருந்து உங்க பிரெண்டை காப்பாத்தி இருக்கிறேன்.. உள்ளே தான் படுக்க வச்சு இருக்கிறேன். ஆனா… அவங்களை உடனே ஒரு ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறது நல்லது.” என்றான்.
“என்.ன…! அவ..அவளுக்கு…” என்று பதறியவள் அவனையும் கூட சந்தேகமாகப் பார்க்க,
அவன் அவசரமாக, “நோ நோ.. எந்த விதமான ஹரஸ்மென்ட்டும் நடக்கலை.. ஜஸ்ட் மயக்கம் தான்.. அவன் லயனிகாஸ்ரீயை கடத்தும் போது தான், ரெஸ்கியூ செய்தேன்.. மயக்கத்துக்கு அவன் என்ன கொடுத்தான்னு தெரியாதே! அதான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறது பெட்டர்னு சொன்னேன்.. அண்ட் நிஜமாவே நான் ஹெல்ப் தான் செய்து இருக்கிறேன்.. உங்க பிரெண்ட் மயக்கம் தெளிந்தால், உங்களுக்கே அது தெரியும்.” என்றான்.
நெஞ்சில் கை வைத்தபடி நிம்மதி மூச்சை வெளியிட்டவள், “தேங்க்ஸ்” என்றாள்.
சுதீப், “டேய்.. இவ்ளோ நேரம் மூக்கை நேரே தொடாம, தலையை சுத்தி தொட்டுட்டு இருக்கோம்.”
“என்னடா? கடுப்பை கிளப்பாம விஷயத்தை நேரா சொல்லு.”
“டேய்! நீ தான் சிசிடிவி மெயின்டெனன்ஸ் டீமில் ஒரு ஆளை பிடிச்சி வச்சு இருக்கியே! அவனைக் கேட்டா நிமிஷத்தில் ரூம் நம்பரை சொல்லிடப் போறான்.”
“மச்சி” என்றபடி குதூகலத்துடன் நண்பனை அணைத்தவன், “வா போகலாம்.” என்றான்.
பின் அதீத மகிழ்ச்சியுடன், “அவனை கேட்காமலேயே ரூம் தெரிந்து போச்சுடா.. அந்த டாக்டர் அவன் ரூமுக்கு போகலை.. லயனிகா ரூமுக்கு போய் இருக்கான்.” என்றான்.
“யாருடா லயனிகா?”
“அதான், அந்த பிகரோட பேரு”
“எப்படி கண்டுபிடிச்ச?”
“அதோ” என்றபடி நண்பனின் முகத்தை திருப்பினான்.
இவர்கள் ஒரு மூலையில் இருந்தார்கள் என்றால், லயனிகாஸ்ரீயின் அறை எதிர்மூலையில் இருந்தது. இவர்களுக்கு நவீனாவின் பின் பக்கமும் மருத்துவனின் முகமும் தெரிந்தது.
“அதான் லயனிகாவா?”
“அவ பிரெண்டா இருக்க வாய்ப்பு இருக்குது.”
“எது! வாய்ப்பு இருக்குதா!”
“ஆமா.. அவ பக்கத்துல இருந்த பொண்ணு, இப்படி ஒரு ட்ரெஸ் போட்டு இருந்த மாதிரி தான் தோணுது.. இப்போ அதுவா முக்கியம்! வா போகலாம்.. எப்போதும் செய்ற மாதிரி முன்ன பின்ன தெரியாதது போல, நீ போலீஸ்ஸாவும், நான் கம்ப்ளைண்ட் கொடுத்த ஆளாவும் போய் தெறிக்க விடுவோம்.. வா.. வா.” என்றபடி வேகமாக நடக்க ஆரம்பித்தான்.
அங்கே மகிழ் கொற்றவனோ, நவீனாவை உள்ளே அனுப்பும் முன், நூறு சதவிதம் அவள் லயனிகாஸ்ரீயின் தோழி தான் என்பதை உறுதி செய்துக் கொள்ளும் எண்ணத்துடன், “உங்க நேம்? அண்ட் நீங்க யாருனு நான் தெரிந்துக்கலாமா?” என்று கேட்டான்.
“நான் நவீனா. லயா.. ரிதன்யா நான் எல்லாம் ஸ்கூலில் ஒன்னா படிச்ச க்ளோஸ் பிரெண்ட்ஸ் அண்ட் பெஸ்டீஸ்.. இந்த ஹோட்டல் ஓனர் ராஜீவ் கிருஷ்ணா அண்ட் ரிதன்யாக்கு இன்னும் டூ டேஸில் மேரேஜ். அதுக்கு தான் லயனிகாஸ்ரீ வந்திருக்கா.. அண்ட் அவங்க இன்னைக்கு பேச்சிலர் பார்ட்டி கொடுத்துட்டு இருக்காங்க.. இந்த டீட்டேல்ஸ் போதுமா என்னை நீங்க நம்ப? இல்ல, பார்ட்டியில் போய் கிருஷ்ணா கிட்ட விசாரிக்கனுமா?”
“சாரி.. பெட்டர் கிளாறிஃபிகேஷன் நல்லது தானே!”
சிறு புன்னகையுடன், “ஷுர் அண்ட் தேங்க்ஸ் அகேன்” என்று கூறியவள், “அவன் யாருனு தெரியுமா?” என்று கேட்டாள்.
“கொஞ்சம் பெரிய ஆள்னு தான் நினைக்கிறேன்.. அவனும் பேச்சிலர் பார்ட்டிக்கு வந்தது போல் தான் பேசினான்.. பேரு நித்தின்னு சொன்னான்.”
“எனக்கு தெரியலை.. மே பி கிருஷ்ணாக்கு தெரிந்து இருக்கலாம்.” என்றவள் கோபத்துடன், “அவனை சும்மா விடக் கூடாது” என்றாள்.
அப்பொழுது, “மிஸ்டர் நித்தினின் வருங்கால மனைவியை கடத்திய குற்றத்திற்காக, நான் உங்களை கைது செய்கிறேன்” என்றபடி சுதீப் நிற்க, அவன் அருகில் ராகேஷ் எகத்தாளப் புன்னகையுடன் நின்று இருந்தான்.
நவீனா அதிர்ந்து திரும்பிப் பார்க்க, மகிழ் கொற்றவனோ… சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் தான் நின்றிருந்தான்.
கீதம் இசைக்க காத்திருப்போம்…