
கீதம் 2
லயனிகாஸ்ரீ பேச இயலாத, மயக்கம் அல்லாத அரை மயக்க நிலையில்.. ராகேஷின் தோளில் சாய்ந்து இருக்க, அவனோ தனது இடது கரத்தில் அவளது கைபையையும், வலது கரத்தில் அவளது இடையையும் பற்றியபடி, தனது அறையை நோக்கி வேகமாக நடந்து கொண்டு இருந்தான்.
லயனிகாஸ்ரீ விலகப் பார்க்க, அவளது இடையை இறுக்கமாகப் பற்றிய படி, “பார்டா! உன்னோட வில்பவர் கொஞ்சம் ஜாஸ்தி தான் போல! இல்லனா, இந்த நிலையிலும் போராடுவியா? ஆனா இன்னும் கொஞ்ச நேரத்தில், நீ என்ன தான் முயற்சி செய்தாலும், உன்னால எதுவும் முடியாது.” என்றவன் பின் எகத்தாளக் குரலில்,
“பெருசா பேசுனியே! இப்போ யாரையும் கூப்பிடுடி பார்க்கலாம்! உன்னால ஒன்னும் கிழிக்க முடியாது.. இன்னும் அஞ்சு நிமிஷத்தில் என் ரூமுக்கு போய், உன்னை நான் அணு அணுவா ரசிச்சு ருசிக்கப் போறேன்.. நான் உன்னை அனுபவிக்கிறது உனக்கு தெரிந்தாலும், உன்னால் என்னை தடுக்க முடியாது.. என்னை எதிர்த்து உன்னால ஒரு விரலைக் கூட அசைக்க முடியாது.. எஸ், உன்னோட ஷார்ப்பான மூளை விழித்து இருக்கும். ஆனா உன்னோட உடம்பு உனக்கு ஒத்துழைக்காது.” என்றபடி சிரித்தான்.
பின், “நீ ரொம்ப நேரத்துக்கு மட்டை ஆக மாட்ட.. அப்படி தான் டோஸ் கொடுத்து இருக்கிறேன்.. ஏன் தெரியுமா?” என்று கேட்டு சிரித்தவன், “நீ கொஞ்சம் கொஞ்சமா தெளிய ஆரம்பிக்கும் போது, முழுசா என் கட்டுபாட்டிற்கு கீழ் வந்து இருப்ப.. எஸ், ஒரு கட்டத்தில் உன் உடம்பு எனக்கு ஒத்துழைக்கும்.. எப்படினு யோசிக்கிறியா? திரும்ப திரும்ப நான் உன்னை அனுபவிக்கும் போது, அய்யோவோட பெர்ஃபார்மென்ஸ்ஸில், ஒரு கட்டத்தில் உன் உடலே என்னை விரும்பி ஏற்க ஆரம்பித்துவிடும்.. நீ எனக்கு ஸ்பெஷல்.. அதான் என்னவோ என் மனசு உன்னோட ஒரு இணைவான இணைவை எதிர்பார்க்குது.. அதான், இந்த ஏற்பாடு.” என்று சிரித்தவனின் சிரிப்பில், இப்போது காமமும் கலந்து இருந்தது.
அப்பொழுது, அவளது அரை விழிப் பார்வையில் எதிரில் யாரோ வருவது போல் ஒரு உருவம் மங்கலாகத் தெரிய, பெரும் சிரமத்துடன் தனது சக்தியெல்லாம் ஒன்று திரட்டி, அந்த நபர் அருகில் வரவும், இவனை விட்டு விலகி அந்த நபரை லேசாக உரசியபடி கீழே விழுந்தாள்.
அதை சற்றும் எதிர்பார்த்திராத ராகேஷ் பதறியபடி, “ஹே! பார்த்து” என்றபடி அவளைத் தூக்கினான்.
எதிரில் வந்த நபர், “என்னாச்சு?” என்று வினவ,
ராகேஷ் தனது பதற்றத்தை மறைக்க முயற்சித்த படி, “ஒன்னுமில்லை.. கொஞ்சம் ட்ரிங்க்ஸ் ஜாஸ்தி ஆகிருச்சு” என்றான்.
அந்த நபர் சிறு சந்தேகப் பார்வையுடன், “உங்க நேம் என்ன? இவங்க யார்?” என்று கேட்டான்.
சிறு எரிச்சல் கலந்த குரலில், “அதிகமா குடிக்காதனு சொன்னா கேட்கிறியா ஹனி!” என்று லயனிகாஸ்ரீயை திட்டிய ராகேஷ், அந்த நபரைப் பார்த்து எரிச்சலும் சிறு கோபமும் கலந்த குரலில், “இதெல்லாம் உங்களுக்கு எதுக்கு? உங்க வேலையை மட்டும் பாருங்க சார்.” என்று விட்டு நகரப் போக,
அந்த நபரோ, “எதுக்கு இப்போ இவ்ளோ டென்ஷன்? ஜஸ்ட் உங்க நேம் தானே கேட்டேன்.. அண்ட் நான் என் வேலையைத் தான் பார்க்கிறேன்.”
ராகேஷின் பார்வையில், “என்ன பார்க்கிறீங்க! நான் ஒரு டாக்டர், அதான் என்னால் எதுவும் உதவ முடியுமா என்ற நோக்கத்தில் கேட்டேன்.” என்றான்.
அவ்விடத்தை விட்டு சென்றால் போதும் என்ற மனநிலையில் இருந்த ராகேஷ், விவாதத்தை தவிர்க்கும் நோக்கத்துடன் இயல்பான குரலில், “ஓ! சாரி டாக்டர்.. எப்பவாது இப்படி அதிகமா குடிச்சிடுவா.. நானே மனேஜ் செய்துப்பேன்.. அண்ட்.. என்னோட நேம் நித்தின்.. இவங்க என்னோட வைஃப்.. எங்க பிரெண்டோட பச்சிலர் பார்ட்டிக்கு தான் வந்தோம்.”
“சாரி, மிஸ்டர் நித்தின்.. இப்பலாம் பொண்ணுங்களுக்கு எவ்வளவோ நடக்குதே.. அதான்…”
“யா.. புரியுது.. தேங்க்ஸ்.”
“ஓகே.. டேக் கேர்” என்றபடி இருவரும் எதிர் திசையில் விலக, அந்த நபர் நகர முடியாதபடி, அவனது ஆடை இழுபடவும், திரும்பிப் பார்த்தான்.
சிரமத்துடன் கண்களை சிமிட்டி, அரை கண் திறக்க முயற்சித்த படி, ராகேஷின் பிடியில் நின்றிருந்த லயனிகாஸ்ரீ, தன் இரு விரல்கள் கொண்டு அவனது மேல் அங்கியின்(coat) ஓரத்தை இறுக்கமாகப் பற்றி இருந்தாள்.
நடையை நிறுத்தி இருந்த ராகேஷ் கோபக் குரலில், “ஹே விடுடி.” என்றபடி அவளது கையை உதறி, மேல் அங்கியை விடுவித்து, அவளது கையை பிடித்து இழுத்துக் கொண்டான்.
“சாரி டாக்டர்” என்றபடி ராகேஷ் நகரப் போக, அவனை மறித்து கையை நீட்டிய அந்த நபர்,
“பார்ட்டி கொடுக்கிறது யாரு?” என்று கேட்டான்.
எரிச்சலை மறைத்தபடி, “என் பிரெண்ட், ஏன்?”
“அவருக்கு பெயர் இல்லையா?” என்றவனின் தொனி மாறி இருக்க,
ராகேஷும் அதே தொனியில், “தெரிந்து என்ன செய்ய போறீங்க?” என்று கேட்டான்.
“அவர் பெயருடன் போன் நம்பரும் சொன்னீங்கனா, நீங்க சொன்னது உண்மையானு கிராஸ்-செக் செய்வேன்.”
“வாட்?”
“எஸ் மிஸ்டர் நித்தின்”
“நான் யாருனு தெரியுமா?”
“அதை தானே கேட்டுட்டு இருக்கிறேன்.. சொல்லுங்க.. நீங்க யாரு? உங்க பேக்கிரௌண்ட் என்ன?”
“என்ன நக்கலா?”
“சச.. ஜி.கே”
“என்ன…!”
“ஜெனரல் நாலெட்ஜ்”
“அது ஒன்னும் ஜி.கே இல்லை.”
“ஓ! அந்தளவிற்கு நீங்க பெரிய பருப்பு இல்லைனு, நீங்களே சொல்றீங்களா.. ஓகே, அந்த வேகாத பருப்பை விடுவோம்..”
“ஏய்!”
“அட! அதை விடுங்க பாஸ்.. இந்த பிகர் யாரு?”
ராகேஷ் பதில் கூறாமல் முறைக்க, அவன் நக்கல் கலந்த உதட்டோர மென்னகையுடன், “உங்களுக்கே தெரியாதா?” என்றான்.
“டேய்..!”
“ஹெலோ பாஸ்.. கிவ் ரெஸ்பெக்ட் அண்ட் டேக் ரெஸ்பெக்ட்”
“ப்ச்.. இப்போ உனக்கு என்ன தான் வேணும்?”
“சிம்பிள்.. இந்த பிகர் யாரு?”
“அதான் சொன்னேனே!”
“என்னனு?”
“என் வைஃப்”
லேசாக சிரித்தவன், “நம்புறது போல் இல்லையே!” என்றான்.
“ஏன்?”
“என் மனைவியை எவனும் பிகர்னு சொல்லி இருந்தா, முதல் முறை சொன்னப்பவே, இப்படி ஒரு குத்து விட்டு இருப்பேன்.” என்றபடி ராகேஷின் மூக்கில் ஓங்கி ஒரு குத்து விட, வலியில் அலறிய ராகேஷ், அனிச்சை செயலாக லயனிகாஸ்ரீயை விட்டபடி, கையை இரத்தம் வடிந்த மூக்கிற்குக் கொண்டு சென்றான்.
அவனது செயலை.. அனுமானித்து இருந்த அந்த நபர், லயனிகாஸ்ரீயை பற்றிக் கொண்டான். அவளை இடது கையில் தாங்கியவன், “ஹே மிஸ்!” என்றபடி அவளது கன்னத்தில் தட்டினான். கண்களை மூடிய நிலையில் இருந்தவளிடம், எந்த எதிர்வினையும் இல்லை. அவளுக்கு, அவன் பேசுவது கேட்டாலும், எதிர்விணை ஆற்றும் நிலையில் அவள் இல்லை என்பது தான் உண்மை.
ஆனால், அப்பொழுது தான் அவளது முகத்தைப் பார்த்தவனுக்கு… அவளது முகம் பரிச்சயமானதாக இருக்கவும், எங்கே எப்போது பார்த்தான் என்று யோசித்தபடி, ராகேஷை கவனித்தான்.
ராகேஷோ கோபத்துடன், “நான் யாருனு தெரியாம கை வச்சிட்ட.. உன்னை சும்மா விட மாட்டேன்டா” என்று மிரட்டினான்.
“யாரா வேணாலும் இருந்துட்டு போ.. இப்போ இடத்தை காலி செய்!” என்றான் அலட்சியத்துடன்
ராகேஷ் கடும் கோபத்துடன், “உன்னை நிஜமா சும்மா விட மாட்டேன்டா.” என்று கத்தினான்.
“சரிடா.. மேடமோட பர்ஸை கொடுத்துட்டு போ”
“ஏய்!” என்றபடி இவனை அடிக்க அவன் எகிறிக் கொண்டு வர, இவனோ சிறிதும் அலட்டிக் கொள்ளாமல், ஓங்கி அவனது செவிலில் அறைந்து, அவளது கைபையை பற்றிக் கொண்டான்.